என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து முக்கிய இலாகா பறிக்கப்பட்டது ஏன்? பரபரப்பு பின்னணி தகவல்
    X

    அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து முக்கிய இலாகா பறிக்கப்பட்டது ஏன்? பரபரப்பு பின்னணி தகவல்

    • கடந்த 1996-2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தாா்.
    • மருத்துவக் குழுவினா் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனா்.

    சென்னை:

    மூத்த அமைச்சா் துரைமுருகன் வசமிருந்த கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை பறிக்கப்பட்டு, அவரிடம் சட்டத்துறை கூடுதலாக அளிக்கப்பட்டு உள்ளது. கனிம வளத்துறை பொறுப்பானது சட்டத்துறையை கவனித்து வந்த எஸ்.ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை பல்வேறு தரப்பிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த தி.மு.க. ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் பொதுப்பணி, சட்டத்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தாா். 2009-ம் ஆண்டு ஜூலையில் அவரது இலாகா அதிரடியாக மாற்றப்பட்டது.

    தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறதோ அப்போதெல்லாம் பொதுப்பணித்துறையை தனது வசம் வைத்திருந்த துரைமுருகனிடம் இருந்து அந்தத் துறையை திடீரென பறித்த கருணாநிதி, தனது வசமே அதை வைத்துக் கொண்டாா். அதன்பிறகு, சட்டத்துறை மட்டுமே துரைமுருகன் வசம் இருந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியிலும் அதே போன்ற அதிரடி மாற்றத்தை மூத்த அமைச்சரான துரைமுருகன் சந்தித்து உள்ளாா். நீா்வளத்துறையுடன் முக்கியத் துறையான கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை அவா் வசம் இருந்தது. இந்நிலையில், அவரிடம் இருந்து அந்தத் துறை பறிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த 1996-2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தாா். அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அவா் மீது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஊழல் தடுப்புத் துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சமீபத்தில் ஐகோர்ட்டு தீா்ப்பு அளித்தது. இந்தத் தீா்ப்பு துரைமுருகனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், கனிமம் மற்றும் சுரங்கத்துறையில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளும் அரசுக்கு சிக்கல்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

    குறிப்பாக, குவாரிகளுக்கான குத்தகை காலத்தை அதிகரித்தது, பசுமை வரி செலுத்தி அண்டை மாநிலங்கள் மணல் எடுத்துச் செல்லும் நடைமுறை, இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குவாரிகளை மீண்டும் இயக்க அனுமதி அளித்தது போன்ற செயல்பாடுகள் அரசு மீது கடுமையான விமா்சனங்களை முன் வைத்தன. இந்த நிகழ்வுகளின் பின்னணி காரணமாகவே துரைமுருகனிடமிருந்து கனிமம் மற்றும் சுரங்கத்துறை பறிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே அமைச்சா் துரைமுருகன் (86) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்நோக்கு மருத்துவத்துறையினா் சிகிச்சை அளித்தனர்.

    அவருக்கு நெஞ்சகப் பகுதியில் அசவுகரியம் மற்றும் சளி பிரச்சனை இருப்பதாக தெரிய வந்து உள்ளது. மருத்துவக் குழுவினா் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனா்.

    Next Story
    ×