என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்று மாலை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை
- நாளை மாலை 4 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
- பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து அங்குள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதனிடையே நாடு முழுவதும் முக்கிய இடங்கள், பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள பகுதிகளில் மத்திய அரசு போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்திட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் அறிவித்தது.
அதன்படி இன்று மாலை 4 மணிக்கு கூடங்குளம் அணுமின்நிலையம், வட சென்னை அனல்மின் நிலையம் அலகு-2 ஆகிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்படுகிறது. நாளை(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
இந்த பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எந்தவிதமான அவசர கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்பட உள்ளது. இந்த ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையை சரிபார்த்து கொள்வதற்கான ஒத்திகை ஆகும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல் இயங்கும். இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






