என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அரசின் முடிவை ஏற்று ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- 2024ம் ஆண்டு மட்டும் 1,693 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தம் செய்யப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வந்த ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர். மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கும் படிப்படியாக பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் முடிவை ஏற்று ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.2024ம் ஆண்டு மட்டும் 1,693 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் 4 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.14,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுவிட்டது என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
- தன்னம்பிக்கை, ஒழுக்கத்தை கற்பிப்பது விளையாட்டுதான்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தமிழக இளைஞர்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனி நம்பிக்கை உண்டு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விளையாட்டு துறையின் சாதனை புரிந்த இளம் வீரர், வீராங்கனைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவுடன், வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
அதில்,"Champion-ஓட True Strength பதக்கங்கள்ல மட்டும் இல்ல, அவங்ககிட்ட இருக்குற Discipline, Pressure-ஐ handle பண்ணுற விதம், விடாமுயற்சி இது எல்லாத்துலயும்தான் இருக்கு!
தமிழ்நாடு முழுக்க இருந்து வந்திருந்த நம்ம Young Athletes-கூட பேசினப்போ, அவங்களோட Clarity-ஐயும் Confidence-ஐயும் பார்த்து மிரண்டு போயிட்டேன். Next Level Focus!
இவங்க வெறும் விளையாட்டை மட்டும் விளையாடல, நம்ம தமிழ்நாட்டோட Future Legacy-யை உருவாக்கிட்டு இருக்காங்க. இதனால்தான் நம்ம இளைஞர்கள் மேல எனக்கு எப்பவும் ஒரு தனி நம்பிக்கை உண்டு!" என்றார்.
- பஞ்சுகள், மின்விளக்குகள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவம் உள்ளிட்டவைகள் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கும் காட்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
- சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் தனியார் விடுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கிரைண்டல்வால்ட் கிராமத்தில் அமைந்திருக்கும் வீடுகள் போல வடிவமைக்கப்பட்டுள்ள ஜிஞ்சர் பிரட் ஹவுஸ் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுவதும் கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது. இதனையடுத்து கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 100 கிலோ மைதா, 15 கிலோ பிரவுன் சுகர், 15 லிட்டர் தேன், ஜிஞ்சர் 1 கிலோ பட்டர், 10 லிட்டர் கீரிம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு கடந்த 5 தினங்களாக 4500 ஜிஞ்சர் பிஸ்கட்கள் உருவாக்கப்பட்டது.
3 நாட்கள் வேலைப்பாடுகளை கொண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கிரைண்டல்வால்ட் கிராமத்தில் அமைந்திருக்கும் வீடுகளை போன்று ஜிஞ்சர் பிரட் ஹவுஸ்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்படும். அப்போது பனிப்பொழிவு வீட்டின் மீது படர்ந்து வெண்மையாக காணப்படும். அது போலவே ஜிஞ்சர் பிரட் ஹவுஸ் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பஞ்சுகள், மின்விளக்குகள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவம் உள்ளிட்டவைகள் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கும் காட்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் விடுதியில் தங்கியுள்ள சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த ஜிஞ்சர் பிரட் ஹவுஸ் தற்போது வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் புத்தாண்டு வரை விடுதியின் நுழைவு வாயில் மற்றும் ரெஸ்டாரண்ட் வளாகத்திலேயே சுற்றுலாப்பயணிகள் பார்வைக்காக வைக்கப்படும் எனவும் விடுதி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொடைக்கானலில் தொடரும் பனிப்பொழிவு மற்றும் மூடுபனிக்கு இடையே கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அவர்கள் இங்கு நிலவும் ரம்யமான சீதோசனத்தை உற்சாகமாக கண்டு மகிழ்கின்றனர்.
- இது ஒரு வலிமையான எஃகு கோட்டை. எந்த கொம்பனாலும் துரும்பை கூட அசைத்துப் பார்க்க முடியாது.
- அதே நேரத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் கெடுபிடிகள் வந்திருக்கிறது.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
எம்.ஜி.ஆர். ஒரு மாபெரும் தலைவர் என்றும் அவரது புகழ் ஒருபோதும் குறையவே குறையாது.
ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோரை கூட்டணியில் இணைப்பது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வார்.
எடப்பாடி பழனிசாமியுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது அவர்களுடைய கருத்தாகும். எங்கள் கருத்தை பொறுத்தவரை பொதுச்செயலாளர் உரிய நேரத்தில் சொல்வார் என்றார்.
குரங்கு கையில் இருக்கும் பூமாலை போல அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி பிய்த்து போட்டுக் கொண்டிருக்கிறார் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்த கருத்து பற்றி ஜெயக்குமார் கூறும்போது, அவர் சொல்வார்
இது (அ.தி.மு.க.) பூமாலை கிடையாது, இது கட்டி முடிக்கப்பட்ட கோபுரம். உதிர்ந்த செங்கற்கள் பற்றி பேச முடியாது. செங்கற்கள் என்பது வேறு. கட்டி முடிக்கப்பட்ட கோபுரம் என்பது வேறு. இது ஒரு வலிமையான எஃகு கோட்டை. எந்த கொம்பனாலும் துரும்பை கூட அசைத்துப் பார்க்க முடியாது.
100 நாள் வேலை திட்டத்திற்கு பெயர் மாற்றம் உள்ளிட்ட காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
மகாத்மா காந்தியின் பெயரை மாற்றக்கூடாது என்பதை தெளிவுபடுத்தி விட்டோம், எங்கள் பொது செயலாளர் சொல்லி விட்டார். அதே நேரத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் கெடுபிடிகள் வந்திருக்கிறது. ஏழை மக்களுக்கு அது சிரமம் அதை மத்திய அரசாங்கம் மீண்டும் பரிசீலனை செய்து, முன்பு இருந்தது போல ஆக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு இல்லாத ஏழை எளிய மக்களுக்காகவே அந்த திட்டம் இருக்கிறது. அதை முழுமையாக சிதைக்காமல் உள்ளதை உள்ளபடி இருக்க வேண்டும் என்றார்.
- சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி.
- எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,
சமூக நீதியின் முன்னோடி,
சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி, எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் திருவுருவப் படத்திற்கு எமது அலுவலகத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன்.
தந்தை பெரியார் அவர்கள் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.
- நிகழ்ச்சிக்கான முன்னேற்பாட்டு பணிகளை தி.மு.க. நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு முடிவுற்ற கட்டிடங்களை திறந்து வைக்கவும், பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கவும் நாளைமறுநாள் (26-ந் தேதி) சென்னையில் இருந்து புறப்பட்டு கள்ளக்குறிச்சி வருகை தருகிறார்.
அதனை முன்னிட்டு (26-ந் தேதி) காலை 10 மணி அளவில் தியாகதுருகம் எல்லையான திம்மலை ரோடு பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் முதலமைச்சருக்கு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து 10.30 மணி அளவில் கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தொடர்ந்து 11 மணி அளவில் ஏமப்பேர் ரவுண்டானா சேலம் புறவழிச்சாலை சந்திப்பில் மாவட்ட தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து 11.15 மணி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடைக்கு முதலமைச்சர் வருகை தந்து சுமார் 70 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரத்தில் 8 தளங்களை கொண்டு ரூ.139 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 35.18 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
அதனைத்தொடர்ந்து தியாகதுருகம் வழியாக மணலூர்பேட்டை சென்றடையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் திருவண்ணாமலை செல்கிறார்.
நிகழ்ச்சிக்கான முன்னேற்பாட்டு பணிகளை தி.மு.க. நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். முதலமைச்சர் வருகையொட்டி கள்ளக்குறிச்சி பகுதியில் தி.மு.க. பேனர்கள், கொடிகள் கட்டப்பட்டு விழாகோலம் பூண்டுள்ளது.
- அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர வேண்டும்!
- ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்!
சென்னை:
அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை மேடவாக்கத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
MGNREGA-வை மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள்!
இது தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை, அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர வேண்டும்! ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்! என்று கூறியுள்ளார்.
- உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
26-ந்தேதி மற்றும் 27-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
28 மற்றும் 29-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
30-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 28-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை:
24 மற்றும் 25-ந்தேதிகளில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 27ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- பா.ஜ.க. அரசை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் கொட்டாரம் சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் 400 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு, மகாத்மா காந்தி பெயரை மாற்றிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்பினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வழக்கு சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி செந்தில் குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
- டி.ஆர்.பாலு, அண்ணாமலை இருவரும் நேரில் ஆஜராகவில்லை.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த போது அண்ணாமலை, 'தி.மு.க. பைல்ஸ்' என்ற பெயரில் தி.மு.க. அமைச்சர்கள் பலரின் சொத்து விவரங்களை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டார்.
அதில், தி.மு.க. பொருளாளரும், எம்பி.யுமான டி.ஆர்.பாலு, அவரது மகனும் அமைச்சருமான டி.ஆர்.பி ராஜா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு 21 நிறுவனங்கள் சொந்தமாக உள்ளதாக தெரிவித்து இருந்தார்.
மேலும் டி.ஆர்.பாலு மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது தன்னுடைய பெயருக்கும் மற்றும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி டி.ஆர்.பாலு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கில் டி.ஆர்.பாலுவின் 21 நிறுவனங்கள், சொத்துக்கள் தொடர்பாக அண்ணாமலை தரப்பில் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி செந்தில் குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.ஆர்.பாலு, அண்ணாமலை இருவரும் நேரில் ஆஜராகவில்லை.
இதையடுத்து இரு தரப்பிலும் ஆஜராகி இருந்த வக்கீல்கள் குறுக்கு விசாரணையை வேறு தேதிக்கு தள்ளி வைக்க நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதி, குறுக்கு விசாரணையை ஜனவரி 20-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
- எங்கள் வீட்டு பிள்ளைக்கு பெண் பார்க்கும் மேட்ரிமோனியல் வேலையை யாரும் பார்க்க வேண்டாம்.
- ஆண்டிபட்டி தொகுதியில் கண்டிப்பாக அ.ம.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறும்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க.வுக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு செய்து போட்டியிட போவதாக வெளியாகும் செய்தி உண்மையானதல்ல. நான் ஏற்கனவே கூட்டணி குறித்து பிப்.24ம் தேதிக்கு பிறகு அறிவிப்பதாக தெரிவித்துள்ளேன். கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு வெற்றி, தோல்விகளை இந்த இயக்கம் சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என முடிவு செய்து களப்பணி ஆற்றினோம். அதேபோல் வருகிற தேர்தலிலும் அ.ம.மு.க. அங்கம் வகிக்கும் கூட்டணியே மாபெரும் வெற்றி பெறும்.
இதை நான் விளையாட்டுக்காக சொல்லவில்லை. 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு நிர்வாகிகள் தயாராக உள்ளனர். வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. எங்கள் வீட்டு பிள்ளைக்கு பெண் பார்க்கும் மேட்ரிமோனியல் வேலையை யாரும் பார்க்க வேண்டாம்.
நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் 23 வயதில் இருந்து அரசியல் பாடம் கற்றவன். எனவே தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்து வெற்றி வியூகம் வகுக்க வேண்டும் என தெரியும். திருவிழா போல ஒரே மாதத்தில் மறந்து முடிவதில்லை. ஒரு கட்சி தேர்தலுக்குப் பிறகும் களத்தில் நிற்க வேண்டும். அதனை மனதில் வைத்து எங்கள் பயணம் தொடரும். லட்சியம், கொள்ளைக்காக உருவாக்கப்பட்ட இயக்கமாகும். ஆண்டிபட்டி தொகுதியில் கண்டிப்பாக அ.ம.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறும் என்றார்.
- அன்புமணி பா.ம.க.வில் இல்லை. அவரை ஏற்கனவே பா.ம.க.வில் இருந்து நீக்கிவிட்டேன்.
- 29-ந் தேதி நடைபெறும் பொதுக்குழு செல்லாது என அறிவிக்க அன்புமணிக்கு உரிமை இல்லை.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பெரியாரின் 52-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது தரப்பு நடத்தும் பொதுக்குழு செல்லாது என அன்புமணி தரப்பினர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். அவர்கள் பொய்யர்கள், புரட்டர்கள். எது வேணாலும் சொல்வார்கள். அதை பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. 99 சதவீதம் மக்கள் என் பக்கம் தான் உள்ளார்கள். அன்புமணி பா.ம.க.வில் இல்லை. அவரை ஏற்கனவே பா.ம.க.வில் இருந்து நீக்கிவிட்டேன். அவர் எது வேணாலும் பொய்களை சொல்லுவார். 29-ந் தேதி நடைபெறும் பொதுக்குழு செல்லாது என அறிவிக்க அன்புமணிக்கு உரிமை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






