என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
    • அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் 28-06-2025 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

    • தமிழ்நாட்டில் 40 பாகிஸ்தானியர்கள் தங்கியுள்ளனர்.
    • தமிழ்நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினர் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் மற்றும் ஆப்பிரிக்க நாட்டினர் உள்ளிட்ட வெளிநாட்டு நபர்களை நாடு கடத்தக்கோரி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் ரமேஷ் என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் "தமிழ்நாட்டில் 40 பாகிஸ்தானியர்கள் தங்கியுள்ளனர். இதில் 16 பேர் நீண்ட கால விசா பெற்றுள்ளனர். 24 பேர் நீண்ட கால விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் மத்திய அரசின் செல்லுபடியாகும் விசா அடிப்படையின் கீழ் தமிழகத்தில் தங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினர் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்" தெரிவிக்கப்பட்டது.

    மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் "சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை நாடுகடத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது".

    இதனைத்தொடர்ந்து மத்திய அரசு அறிக்கையை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 3 வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.

    • முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
    • பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடினர்.

    இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டார்.

    அதேவேளையில் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, ஜெயராமிடம் விசாரணை நடத்திய போலீசார் விசாரணைக்கு பின்பு அவரை விடுவித்தனர். தனக்கு எதிராக பிறப்பிக்கப்படட உத்தரவை எதிர்த்து கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டார். அதன்படி பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை நீதிபதி வேல்முருகனிடம் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

    நேற்று அந்த முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் விசாரணையை தள்ளிவைக்க கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து, விசாரணையை இன்று தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    போலீசார் முன்பு ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, கேள்விக்கு முறையாக பதிலளிக்கவில்லை. முன்ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைப்பார், பூவை ஜெகன்மூர்த்தியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை, அரசியல் காரணங்களால் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும்போது ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பதாக பூவை ஜெகன்மூர்த்தி கோர்ட்டில் உறுதி அளித்தார்.

    நீங்கள் அரசியலில் இருப்பதால் ஒருவேளை யாரும் புகார் தராமல் இருந்திருக்கலாம் என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

    ஒட்டுமொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாக செயல்பட்டது ஜெகன்மூர்த்தி தான். வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் முன்ஜாமின் வழங்கக்கூடாது.

    ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து ஜெகன்மூர்த்தியை விசாரிக்க வேண்டி உள்ளது. ஜெகன்மூர்த்திக்கும் சஸ்பெண்ட் ஏடிஜிபி ஜெயராமுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை தேவை.

    எனவே பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் தலைவர் ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது எனக் கூறி முன்ஜாமின் தர நீதிமன்றம் மறுத்துள்ளதால் ஜெகன்மூர்த்தி கைதாக வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
    • நடிகர் கிருஷ்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகியான பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இதையடுத்து, கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானதை அடுத்து, நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி, நடிகர் கிருஷ்ணா, கெவினை ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

    மருத்துவ பரிசோதனை முடிந்து நடிகர் கிருஷ்ணா, கெவின் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா ஜாமின் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    • இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதாக தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு.
    • ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு.

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக உரிமையியல் வழக்குகள் முடியும் வரை சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற வழக்குகளை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவததை எதிர்க்கும் மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கக் கூடாது. சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டிய சூழலில் தேர்தல் ஆணையம் ஆரம்பகட்ட விசாரணையை நடத்தாமல் இருப்பது தேவையற்றது. ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது.

    மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விசாரணை குறித்து எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    • சாக்கடை நீர் சாலைகளில் ஒடுவதால் சுகாதார சீர்கேடு பெருகியுள்ளது.
    • கொசுத் தொல்லை அதிகரித்து மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

    திமுக அரசைக் கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    மாநகராட்சிகளின் செயலற்ற நிர்வாகங்களை கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

    4.7.2025 - வெள்ளிக் கிழமை காலை 9.30 மணி. இடம் : காந்தி பார்க் அருகில், கும்பகோணம்

    ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்குத் தேவைப்படும் எந்தவிதமான அடிப்படை மற்றும் அத்தியாவசிய வசதிகளையும் ஏற்படுத்தாமல், அவசர அவசரமாக 2021-ஆம் ஆண்டு கும்பகோணத்தை மாநகராட்சியாக அறிவித்தது விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு.

    ஏற்கெனவே, அதிக அளவு சொத்து வரியை செலுத்தி வந்த மக்களுக்கு, அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் வீட்டு வரி, வணிக வரி, தொழில் வரி என்று அனைத்து வரிகளையும் உயர்த்திய இந்த விடியா திமுக மாடல் அரசு, பொதுமக்களிடம் வசூலிக்கும் வரிக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை நிறைவேற்றி உள்ளனவா என்று கும்பகோணம் மக்கள் ஏமாற்று மாடல் ஸ்டாலின் அரசை கேள்விக் கனைகளால் துளைத்தெடுத்து வருகின்றனர்.

    பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. மாநகரம் முழுவதும் குப்பை கூளங்கள் அகற்றப்படுவதில்லை.

    வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறைந்த அளவே செயல்படும் அம்மா உணவகங்களை பராமரிப்பதற்கு போதிய நிதியை ஒதுக்காததால், அம்மா உணவகங்களை நம்பியுள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கும்பகோணம் மாநகராட்சி முழுவதும் உள்ள பாதாள சாக்கடை பராமரிப்பு இல்லாமல், பம்பிங்க் செக்ஷன் சரியாக செயல்படாமல், 80 நபர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில், வெறும் 30 நபர்கள் மட்டுமே பணிபுரிவதால், பராமரிப்புப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சாக்கடை நீர் சாலைகளில் ஒடுவதால் சுகாதார சீர்கேடு பெருகியுள்ளது. கொசுத் தொல்லை அதிகரித்து மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

    தாராசுரம் பகுதியில் உள்ள பாசன வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது.

    கும்பகோணம் மாநகராட்சி பள்ளிக் கட்டடங்கள் சிதிலமடைந்த நிலையில், எந்தவிதமான பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல், அவைகளுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் கல்வி நிதி எங்கே செல்கிறது என்று தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

    இந்நிலையில், மாநகராட்சிகளின் செயலற்ற நிர்வாகங்களை கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், கும்பகோணம் மாநகராட்சியில் வசித்து வரும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமலும், சாலைகளை புதுப்பிக்காமலும், பாதாள சாக்கடைகளை பராமரிக்காமலும் பொதுமக்களை மிகுந்த சிரமப்படுத்தும் கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 4.7.2025 - வெள்ளிக் கிழமை காலை 9.30 மணி அளவில், கும்பகோணம் காந்தி பார்க் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், அரசு தலைமை முன்னாள் கொறடாவுமான சு. மனோகரன் அவர்கள் தலைமையிலும், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சு.மு. பாரதிமோகன், கும்பகோணம்

    மாநகரக் கழகச் செயலாளர் திரு. ராம. ராமநாதன், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரு. ரதிமீனா சேகர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வை தன்வர்த்தினி எழுதி உள்ளார்.
    • அரசு வேலை வாங்கி தருவதாக தன்வர்த்தினி குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் உள்பட சிலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த பெரியமணலி குளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார்(29). இவர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

    அந்த மனுவில், நாமக்கல் அருகே வரகூராம்பட்டியில் உள்ள கனரா வங்கியில் அதிகாரியாக நான் பணியாற்றி வருகிறேன். நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள ஒரு திருமண தகவல் மையத்தின் மூலம் நாமக்கல் ராமாபுரம்புதூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரது மகள் தன்வர்த்தினி(29) என்பவருடன் அறிமுகமானது. அப்போது தன்வர்த்தினி பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் என அவரும், அவரது தந்தையும் எங்களிடம் கூறினர்.

    தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி வையப்பமலை கொங்கு திருமண மண்டபத்தில் முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் விசாரித்த போது தன்வர்த்தினி பொள்ளாச்சி கோட்டாட்சியர் இல்லை என்பது எங்களுக்கு தெரிய வந்தது.

    நாங்கள் தன்வர்த்தினியிடமும் அவரது பெற்றோரிடமும் விசாரித்தபோது, தன்வர்த்தினி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், தேர்வாணைய செயலர் கையொப்பமிட்ட சான்றிதழையும் காண்பித்தனர். தன்வர்த்தினியின் பெயரில் தமிழக அரசின் தலைமை செயலாளர் கையொப்பமிட்ட ஒரு அடையாள அட்டையையும் என்னிடம் காண்பித்தனர்.

    நாங்கள் தொடர்ந்து விசாரித்ததில் சான்றிதழ், அடையாள அட்டை, டி.என்.பி.எஸ்.சி. பட்டியல் அனைத்தும் போலியானது என தெரியவந்தது. ஏமாற்றும் நோக்கில் தமிழ்நாடு அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி உள்ளனர்.

    அரசு அதிகாரி என ஆள்மாறாட்டம் செய்தும், ஏமாற்றியும் என்னுடன் திருமணம் செய்து சட்டத்திற்கு புறம்பாக போலியான ஆவணங்களை தயாரித்த அவர் மீதும், அவரது பெற்றோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தார்.

    அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் சவீதா மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, தன்வர்த்தினியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தினர். அதன்பிறகு சேலம் பெண்கள் கிளைச் சிறையில் தன்வர்த்தினி அடைக்கப்பட்டார்.

    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வை தன்வர்த்தினி எழுதி உள்ளார். நேர்முகத்தேர்வு வரை சென்றுள்ளார். 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். சென்னையில் சிவில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது நாங்கள் ஏமாந்து விட்டோம். ஒருவர் எங்களிடம் வந்து சான்றிதழ், அடையாள அட்டையை வழங்கி சென்றார் என தன்வர்த்தினி தெரிவித்தார்.

    இதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. அவர் உண்மையை மறைக்கிறாரா என்று தெரியவில்லை. மேலும் சென்னையில் அடையாள அட்டை, சான்றிதழ் கொடுத்த நபரிடம் விசாரிக்க வேண்டியது உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே தன்வர்த்தினிக்கு ஆதரவாக பேசி வந்த இதில் தொடர்புடைய அசோகன் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தன் வர்த்தினிக்கு சான்றிதழ் கொடுத்ததாக கூறப்படும் சென்னையை சேர்ந்த திருமுருகன் என்பவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். அவர் சிக்கினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே அரசு வேலை வாங்கி தருவதாக தன்வர்த்தினி குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் உள்பட சிலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் இந்த வழக்கில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. 

    • மாணவிகள் பள்ளிகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.
    • படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

    மதுரை:

    தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் அரசு கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிறுவனங்களுக்கு செல்ல அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி 2024-2025 ஆம் கல்வியாண்டில் மொத்தம் 23,49,616 பள்ளி மாண வர்களுக்கும் சுமார் 2,00,000 கல்லூரி மாணவர்களுக்கும் கட்டணமில்லா பயணத்திற்கான அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பேருந்துகளில் மாணவர்கள் செல்லும்போது புத்தகப்பை மற்றும் உணவுப் பைகள் கொண்டு செல்வதால் பேருந்தினுள் கூட்ட நெருக்கடியில் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    கூட்ட நெருக்கடியால் மாணவ, மாணவிகள் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் காட்சிகளை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காணலாம். சில நேரங்களில் விபத்துகளால் மாணவர்கள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது.

    ஆகவே, மாணவ, மாணவிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வண்ணம், நெருக்கடி மிகுந்த வழித்தடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக தனிப் பேருந்துகளை இயக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, பிள்ளைகளை அறிவுறுத்தி வளர்க்க வேண்டியதில் பெற்றோரின் கடமை உள்ளது. பள்ளியிலேயே புகைப்பழக்கம், மது, புகையிலை, கஞ்சா போன்ற பழக்கங்களுக்கு மாணவர்கள் ஆளாகி வருவது அதிகரித்து வருகிறது. மாணவிகள் பள்ளிகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.

    படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. நடத்துனர் அறிவுறுத்தினாலும் மாணவர்கள் அதனை ஏற்பதில்லை. அது தண்டனைக்குரிய குற்றம். காவல்துறையினர் வழக்கு பதிவு கூட செய்யலாம்.

    ஆகவே மாணவர்கள் பேருந்திற்குள் இருப்பதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனையும் மீறி படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

    • பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
    • பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நடைபெற்று முடிந்த மார்ச் 2025, மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி எழுதி, விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் Notification என்ற பகுதியில் 30.06.2025 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் முதல் வெளியிடப்படவுள்ளது.

    இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மறுகூட்டல் / மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், உடன் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களான சஞ்சித், சுகேஷ், வீரராஜ், சரவணன் ஆகிய 4 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
    • மாணவர்கள் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொழிஞ்சி வாடி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 215 மணவர்கள் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். பின்னர் காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. 42 மாணவர்கள் உணவு சாப்பிட்டனர்.

    சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களான சஞ்சித், சுகேஷ், வீரராஜ், சரவணன் ஆகிய 4 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்களை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் ஆகியோர் சென்று மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.

    மாணவர்கள் சாப்பிட்ட உணவில் பல்லி விழுந்துள்ளதாகவும், அதனை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நடிகர் ஸ்ரீகாந்த் மீதும் மேலும் வழக்குகள் பாயுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
    • சென்னை மாநகருக்கு பெங்களூரில் இருந்து அதிக அளவில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவது போலீசார் நடத்தி வரும் தொடர்ச்சியான விசாரணையில் தெரியவந்துள்ளது

    சென்னை:

    சென்னை மாநகரில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் நுங்கம்பாக்கத்தில் அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகியான பிரசாத் மற்றும் அவரது கூட்டாளி பிரதீப் ஆகியோர் போதை பொருட்களை வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் ஸ்ரீகாந்துக்கு போதை பொருட்களை சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள போதைப்பொருள் வியாபாரியான பிரதீப் சென்னையில் பல்வேறு இடங்களிலும் போதைப்பொருட்களை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக சூளைமேட்டில் போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்த வழக்கிலும் பிரதீப் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த நிலையில் சூளைமேட்டில் போடப்பட்ட போதைப்பொருள் வழக்கிலும் பிரதீப் சிக்கியுள்ளார்.

    புழல் சிறையில் உள்ள அவரை இந்த வழக்கிலும் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சூளைமேடு போலீசார் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்த பிரதீப் தொடர்புடைய இந்த போதைப்பொருள் வழக்கில் இதுவரை 25 பேரை கைது செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் ஏற்கனவே 24 பேர் தொடர்ச்சியாக கைதான நிலையில் நைஜீரியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தற்போது சிக்கி உள்ளார்.

    கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி அன்று மாலை, சூளைமேடு பகுதியில் 2.11 கிராம் கொகைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்த பயாஸ், சந்திரசேகர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

    இவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் 14 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து சுமார் 60 கிராம் கொகைன், 1.7 கிலோ கஞ்சா, 2 கிராம் கஞ்சா ஆயில், 3 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள், 3 கார்கள், 2 எடை எந்திரங்கள், கொகைன் பயன்படுத்தும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவைச் சேர்ந்த எகோ நாதனியல் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்தும் கொகைன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதன் தொடர்ச்சியாக தனிப்படை போலீசார் நைஜீரியாவைச் சேர்ந்த சரா குமாமா என்கிற 41 வயது பெண்ணை கைது செய்துள்ளனர். பெங்களூரில் வைத்து அவரை பிடித்த போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் இருந்தும் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் இரண்டு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

    நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரதீப் இரண்டாவது வழக்கில் சென்னை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதன் மூலமாக நடிகர் ஸ்ரீகாந்த் மீதும் மேலும் வழக்குகள் பாயுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    சென்னை மாநகருக்கு பெங்களூரில் இருந்து அதிக அளவில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவது போலீசார் நடத்தி வரும் தொடர்ச்சியான விசாரணையில் தெரியவந்துள்ளது.

    நைஜீரியா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பெங்களூரில் பதுங்கி இருந்து போதைப்பொருட்களை சென்னையைச் சேர்ந்த பிரபலங்களுக்கு விற்பனை செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து போதைப்பொருள் மையமாக மாறி வரும் பெங்களூரில் பதுங்கி உள்ள வெளிநாட்டினரை தொடர்ச்சியாக வேட்டையாடும் நடவடிக்கைகளில் சென்னை மாநகர போலீசார் இறங்கி இருக்கிறார்கள்.

    • காலை உணவு திட்டத்திற்காக 2 பெண் ஊழியர்கள் சிலிண்டர் அடுப்பை பற்ற வைத்துள்ளனர்.
    • பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து ஓடினர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் பாலப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    4 ஆசிரியர் ஆசிரியைகள் உள்ளனர். 2 பள்ளி கட்டிடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடத்தின் அருகிலேயே சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளது. அங்கு இன்று காலை உணவு திட்டத்திற்காக 2 பெண் ஊழியர்கள் சிலிண்டர் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது கியாஸ் கசிவின் காரணமாக திடீரென தீப்பற்றியது. இதனையடுத்து பணியாளர்கள் இருவரும் தப்பி வெளியே ஓடி வந்தனர்.

    அருகிலேயே பள்ளிக்கு வந்த 2 குழந்தைகள் மட்டும் இருந்தனர். அவர்களையும் அழைத்துக் கொண்டு தூரமாகச் சென்று விட்டனர். தீ பிடித்த சிறிது நேரத்தில் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் சமையலறை கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து சுக்கு நூறானது. மேலும் கட்டிடங்கள் முழுவதும் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வருவதற்கு முன்பாகவே இந்த விபத்து நடைபெற்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து ஓடினர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தி அணைத்தனர். மேலும் குழந்தைகளுக்கு மாற்று இடத்தில் உணவு சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆபத்தான நிலையில் இருந்த கட்டிடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    ×