என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொகைன் விற்றவர் மேலும் ஒரு வழக்கில் கைது- 25 பேர் தொடர்ச்சியாக சிக்கியதால் பரபரப்பு
    X

    நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொகைன் விற்றவர் மேலும் ஒரு வழக்கில் கைது- 25 பேர் தொடர்ச்சியாக சிக்கியதால் பரபரப்பு

    • நடிகர் ஸ்ரீகாந்த் மீதும் மேலும் வழக்குகள் பாயுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
    • சென்னை மாநகருக்கு பெங்களூரில் இருந்து அதிக அளவில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவது போலீசார் நடத்தி வரும் தொடர்ச்சியான விசாரணையில் தெரியவந்துள்ளது

    சென்னை:

    சென்னை மாநகரில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் நுங்கம்பாக்கத்தில் அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகியான பிரசாத் மற்றும் அவரது கூட்டாளி பிரதீப் ஆகியோர் போதை பொருட்களை வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் ஸ்ரீகாந்துக்கு போதை பொருட்களை சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள போதைப்பொருள் வியாபாரியான பிரதீப் சென்னையில் பல்வேறு இடங்களிலும் போதைப்பொருட்களை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக சூளைமேட்டில் போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்த வழக்கிலும் பிரதீப் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த நிலையில் சூளைமேட்டில் போடப்பட்ட போதைப்பொருள் வழக்கிலும் பிரதீப் சிக்கியுள்ளார்.

    புழல் சிறையில் உள்ள அவரை இந்த வழக்கிலும் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சூளைமேடு போலீசார் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்த பிரதீப் தொடர்புடைய இந்த போதைப்பொருள் வழக்கில் இதுவரை 25 பேரை கைது செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் ஏற்கனவே 24 பேர் தொடர்ச்சியாக கைதான நிலையில் நைஜீரியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தற்போது சிக்கி உள்ளார்.

    கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி அன்று மாலை, சூளைமேடு பகுதியில் 2.11 கிராம் கொகைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்த பயாஸ், சந்திரசேகர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

    இவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் 14 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து சுமார் 60 கிராம் கொகைன், 1.7 கிலோ கஞ்சா, 2 கிராம் கஞ்சா ஆயில், 3 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள், 3 கார்கள், 2 எடை எந்திரங்கள், கொகைன் பயன்படுத்தும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவைச் சேர்ந்த எகோ நாதனியல் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்தும் கொகைன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதன் தொடர்ச்சியாக தனிப்படை போலீசார் நைஜீரியாவைச் சேர்ந்த சரா குமாமா என்கிற 41 வயது பெண்ணை கைது செய்துள்ளனர். பெங்களூரில் வைத்து அவரை பிடித்த போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் இருந்தும் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் இரண்டு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

    நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரதீப் இரண்டாவது வழக்கில் சென்னை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதன் மூலமாக நடிகர் ஸ்ரீகாந்த் மீதும் மேலும் வழக்குகள் பாயுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    சென்னை மாநகருக்கு பெங்களூரில் இருந்து அதிக அளவில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவது போலீசார் நடத்தி வரும் தொடர்ச்சியான விசாரணையில் தெரியவந்துள்ளது.

    நைஜீரியா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பெங்களூரில் பதுங்கி இருந்து போதைப்பொருட்களை சென்னையைச் சேர்ந்த பிரபலங்களுக்கு விற்பனை செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து போதைப்பொருள் மையமாக மாறி வரும் பெங்களூரில் பதுங்கி உள்ள வெளிநாட்டினரை தொடர்ச்சியாக வேட்டையாடும் நடவடிக்கைகளில் சென்னை மாநகர போலீசார் இறங்கி இருக்கிறார்கள்.

    Next Story
    ×