என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாடுகடத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
- தமிழ்நாட்டில் 40 பாகிஸ்தானியர்கள் தங்கியுள்ளனர்.
- தமிழ்நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினர் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் மற்றும் ஆப்பிரிக்க நாட்டினர் உள்ளிட்ட வெளிநாட்டு நபர்களை நாடு கடத்தக்கோரி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் ரமேஷ் என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் "தமிழ்நாட்டில் 40 பாகிஸ்தானியர்கள் தங்கியுள்ளனர். இதில் 16 பேர் நீண்ட கால விசா பெற்றுள்ளனர். 24 பேர் நீண்ட கால விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் மத்திய அரசின் செல்லுபடியாகும் விசா அடிப்படையின் கீழ் தமிழகத்தில் தங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினர் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்" தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் "சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை நாடுகடத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது".
இதனைத்தொடர்ந்து மத்திய அரசு அறிக்கையை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 3 வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.






