என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
    • 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    ராமேசுவரம்:

    காசி தமிழ் சங்கம் 4.0 நிறைவு விழா நாளை ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் விடுதி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இதையடுத்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன், காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் மற்றும் மத்திய மாநில உளவுத்துறை, பாதுகாப்பு துறை உயர் மட்ட அதிகாரி குழு ஆலயம் விடுதியில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், தமிழ் சங்கமம் நிறைவு விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை மாலை 3:30 மணி அளவில் மண்டபத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஹெலிபேட் தளத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, அங்கிருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை வந்தடைந்து, ஒரு மணி நேரம் நிகழ்வில் கலந்து கொள்கிறார்.

    பின்னர் மீண்டும் சாலை மார்க்கமாக சென்று மண்டபம் ஹெலிபேட் தளத்தில் இருந்து 5 மணிக்கு புறப்பட்டு செல்கிறார். துணை குடியரசு தலைவர் சாலை மார்க்கமாக வரும் போது மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபத்திலிருந்து ராமேசுவரம் வரையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டு, குடியரசு துணை தலைவர் நிகழ்ச்சி மேடையை வந்தடைந்த உடன் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்படும்.

    அதேபோல் மீண்டும் அவர் புறப்பட்டு செல்லும் போது போக்குவரத்து நிறுத்தப்படும் என்பதால் பொதுமக்கள் தங்களது பயணங்களை அதற்கேற்ப திட்டமிட்டு கொள்ள வேண்டும்.

    காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளதாகவும், 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் துணை குடியரசு தலைவர் வருகையையொட்டி பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மற்றும் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி டிரோன்கள் பறக்க விடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து டிரோன்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டார்.
    • மகளிர் அணியினர் பலர் இன்று காலை முதலே மாநாட்டு திடலுக்கு வந்து குவிய தொடங்கினர்.

    திருப்பூரில் திமுக மகளிரணி சார்பில் நடைபெறவுள்ள 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டார்.

    அரசின் நலத்திட்டங்களை விளக்கியும், தேர்தல் வெற்றிக்கான அடித்தளத்தை உறுதிப்படுத்தும் முயற்சியாகவும் இந்த கூட்டங்கள் மாநாடு போல் நடத்தப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்காக, 1.31 கோடி மகளிருக்கு உரிமைத்தொகை, விடியல் கட்டணமில்லா பேருந்து பயணம், கல்வி கற்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், வேலைக்கு செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான தோழி விடுதி என மகளிர் மேம்பாட்டுக்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அந்த திட்டங்களை மக்கள் மனதில் பதிய வைக்கவும், சட்டமன்ற தேர்தல் பணியில் மகளிர் அணியினர் திறம்பட செயலாற்றும் வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் இன்று மாலை 4மணிக்கு 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது.

    கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய 6 மாவட்ட ங்களில் உள்ள 35 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்கின்றனர்.12 ஆயிரத்து 380 வாக்குச்சாவடி களில் ஒவ்வொரு வாக்கு ச்சாவடியில் இருந்தும் 15 பேர் என மொத்தம் 1.50 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். மகளிர் அணியினர் பலர் இன்று காலை முதலே மாநாட்டு திடலுக்கு வந்து குவிய தொடங்கினர்.

    இந்நிலையில், மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு தி.மு.க. கட்சியினர் மற்றும் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    மாநாடு முடிந்ததும் கோவை செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு 8-30 மணியளவில் விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார்.

    • சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
    • 1300 மீனவர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் காலை 300-க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஜோசப் என்பவருக்கு சொந்தமான ஒரு படகையும், அதிலிருந்த தங்கச்சிமடம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அருளானந்தன் மகன் ஆமோஸ்டின் (24), அந்தோணியார்புரத்தை சேர்ந்த சத்யம் மகன் ஜோன்தாஸ் (37), மண்டபம் தோப்புகாடு அன்ரோஸ் மகன் பரலோக ஜெபஸ்டின் அன்ரோஸ் (25) ஆகியோரை இலங்கை கடற்படையினர் கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

    மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் ராமேசுவரம், மண்டபம், தங்கச்சி மடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் மண்டபம் மீனவர்கள் 3 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளது மீனவர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 3 மீனவர்கள், நீண்ட நாட்களாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், மேலும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு கொண்டு வர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்ககோரி அனைத்து மீனவ சங்கங்கள் சார்பாக மண்டபம் கோவில் வாடியில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி இன்று மண்டபம் கோவில்வாடி கடலோர பகுதியில் உள்ள சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 1300 மீனவர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது.
    • தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    எல்லோரும் சேமிக்க நினைக்கும் தங்கம், ஏழைகளுக்கு ஏக்கம் தரும் ஒன்றாக மாறிப்போய்விட்டது. இந்த 2025ல், அந்த அளவுக்கு எட்டிப்பிடிக்க முடியாத விலை உயர்வை சந்தித்துள்ளது தங்கம். அதுமட்டுமல்ல தங்கத்துக்கு போட்டியாக வெள்ளியும் விலையேற்றத்தில் விண்ணை முட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.

    கடந்த வார தொடக்கத்தில் ஒரு சவரன் ஒரு லட்சத்து 560-க்கு தொடங்கி வார இறுதியில் ஒரு லட்சத்து 4ஆயிரத்து 800-க்கு விற்பனையானது. கடந்த வாரம் முழுக்க தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையானது.

    அந்த வகையில் இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,020-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

     

    தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 281 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

    276-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

    26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120

    25-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,560

    24-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-12-2025- ஒரு கிராம் ரூ.285

    27-12-2025- ஒரு கிராம் ரூ.285

    26-12-2025- ஒரு கிராம் ரூ.254

    25-12-2025- ஒரு கிராம் ரூ.245

    24-12-2025- ஒரு கிராம் ரூ.244

    • தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது.
    • தொடர்ந்து 2 நாட்கள் நடந்த முகாமில் வாக்காளர்கள் பலர் பயனடைந்து உள்ளனர்.

    சென்னை:

    மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு தீவிர முகாம் கடந்த 27-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது. 2-ம் நாளான நேற்று நடந்த முகாமில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6ஐ உறுதிமொழி படிவத்துடனும், இறந்தவர்களின் பெயர்களை நீக்க படிவம் 7ஐ, முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கைக்காக படிவம்-8ஐ ஆர்வமுடன் அளித்தனர்.

    முதல் நாளில் 17 ஆயிரத்து 42 வாக்காளர்கள் மனுக்கள் அளித்தனர். நேற்று நடந்த முகாமில் 23 ஆயிரத்து 523 வாக்காளர்கள் மனு அளித்தனர். இதில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு 19 ஆயிரத்து 63 மனுக்களும், பெயர் நீக்கத்துக்கு 343 மனுக்களும், முகவரி மாற்றம், பட்டியலில் திருத்தம், மாற்று புகைப்பட அடையாள அட்டை போன்ற இனங்களுக்காக 4 ஆயிரத்து 117 மனுக்களும் பெறப்பட்டன. பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள் பிறப்பு சான்றிதழ் அல்லது கல்வி சான்று, ஆதார் அட்டை, 2005-ம் ஆண்டுக்கான பெற்றோர் வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டுள்ளனர். தற்போது வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இடமாறி சென்ற வாக்காளர்கள், அந்த இடத்திற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் எண் 6ஐ அளித்து தங்களை வாக்காளராக மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு முடியும். இந்த படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி புரிந்து வருகின்றனர்.

    தமிழகத்தில் தி.மு.க.விற்கு 68 ஆயிரத்து 251, அ.தி.மு.க.விற்கு 67 ஆயிரத்து 281, பா.ஜ.க.விற்கு 61 ஆயிரத்து 438, காங்கிரசிற்கு 30 ஆயிரத்து 587 தேர்தல் முகவர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் சென்று அவர்களிடம் ஆறு படிவத்தை பூர்த்தி செய்து வாங்கி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.

    சிறப்பு தீவிர முகாமின் முதல் நாளான நேற்று முன்தினம் 18 வயது நிரம்பிய தகுதியுடைய 1 லட்சத்து 85 ஆயிரத்து 277 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 2-வது நாளாக நேற்றும் முகாம் நடந்தது.

    2 நாட்கள் நடந்த முகாமில் 4 லட்சத்து 42 ஆயிரத்து 70 பேர் படிவம் 6, 6ஏ மற்றும் இறந்த 4 ஆயிரத்து 741 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அவர்களின் குடும்பத்தினர் படிவம் 7ஐ அளித்தனர்.

    தொடர்ந்து 2 நாட்கள் நடந்த முகாமில் வாக்காளர்கள் பலர் பயனடைந்து உள்ளனர். இந்த முகாமில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்காக வருகிற 3 மற்றும் 4-ந்தேதிகளில் மீண்டும் சிறப்பு தீவிர முகாமை நடத்த இந்திய தேர்தல் கமிஷன் மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. இந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

    • சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும்செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஜனவரி 1-ந்தேதி முதல் முன்கூட்டியே 7.35 மணிக்கு புறப்படும்.
    • மின்சார ரெயில் நேர மாற்ற அட்டவணையும் விரைவில் வெளியாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வேயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகளும் முடிவடைந்து இருக்கிறது. இதற்கிடையே புதிய ரெயில்கள், சிறப்பு ரெயில்கள், நீட்டிப்பு செய்யப்பட்ட ரெயில்கள் உள்ளிட்டவை புதிய கால அட்டவணையில் இடம்பெறும்.

    கடந்த ஏப்ரல் மாதம் கால அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பழைய அட்டவணையின்படியே ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே வாரியம் தெரிவித்திருந்தது.

    அதே நேரத்தில், புதிய கால அட்டவணை 2026 ஜனவரி மாதம் வெளியிடப்படும் எனவும் அறிவித்தது. அதன்படி 2026-ம் ஆண்டுக்கான புதிய ரெயில்வே கால அட்டவணை ஜனவரி 1-ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்த புதிய கால அட்டவணையில் பல்வேறு ரெயில்களின் புறப்படும் நேரம், நீட்டிப்பு ரெயில்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற உள்ளது. இதேபோல, மாற்றியமைக்கப்பட்ட புதிய கால அட்டவணையானது தேசிய ரெயில்வே விசாரணை அமைப்பு (என்.டி.இ.எஸ்.) என்ற செயலில் வெளியாகி இருக்கிறது.

    புதிய கால அட்டவணையின்படி, சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 1-ந்தேதி முதல் எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு பதிலாக 10.40 மணிக்கு புறப்படும். எழும்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.50 மணிக்கும், எழும்பூரில் இருந்து காலை 7.45 மணிக்கு திருச்சி புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் 8 மணிக்கும், சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும்செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஜனவரி 1-ந்தேதி முதல் முன்கூட்டியே 7.35 மணிக்கு புறப்படும்.

    இதேபோல, எழும்பூரில் இருந்து இரவு 7.15 மணிக்கு ராமேசுவரம் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 8.35 மணிக்கும், எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் 1.15 மணிக்கு முன்கூட்டியே புறப்பட்டுவிடும். எழும்பூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 7.15 மணிக்கு புறப்படும். எழும்பூரில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 3.05 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் நேரம் மாற்றப்படவில்லை. அதேநேரத்தில் மின்சார ரெயில் நேர மாற்ற அட்டவணையும் விரைவில் வெளியாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்கு பதிலாக 8.50-க்கு புறப்படும். சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக மதியம் 12.10 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் 6.50 மணிக்கும் புறப்படும். ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 6 மணிக்கு புறப்படும். தூத்துக்குடியில் இருந்து எழும்பூர் வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்கு பதிலாக 9.05 மணிக்கு புறப்படும். இதேபோல, குருவாயூர், வைகை, நெல்லை வந்தே பாரத் ஆகிய ரெயில்களில் மறுமார்க்கமாக புறப்படும் நேரத்தில் மாற்றமில்லை.

    • ஜனநாயகன் திரைப்பட இசை வெளியீட்டு விழா கோலாலம்பூரில் நடைபெற்றது.
    • இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் தனி விமானம் மூலம் நேற்று இரவு சென்னை திரும்பினார்.

    சென்னை:

    ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய், கோலாலம்பூரில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு 9.15 மணி அளவில் சென்னை திரும்பினார்.

    விமான நிலையத்தில் விஜய்யை பார்ப்பதற்காக ரசிகர்கள், த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்திருந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விஜய்யை பார்ப்பதற்காக தாக ரசிகர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் காருக்குள் ஏறச்சென்ற விஜய், நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

    அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனெ அவரை மீட்டு காரில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதன்பின், நீலாங்கரையில் உள்ள தனது வீட்டுக்கு விஜய் காரில் புறப்பட்டுச் சென்றார். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 2-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • அரசியல் தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    தேமுதிக கட்சியின் நிறுவனரான விஜயகாந்தின் 2-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்த வகையில் விஜய் வசந்த் எம்.பி., விஜயகாந்த் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்கள் உடனிருந்தனர்.

    மேலும், காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட 140-வது ஆண்டு இன்று காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனைத் தொடர்ந்து, விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள செய்தியில் "சுதந்திரப் போராட்டத்தின் தீப்பொறியில் உருவான இந்திய தேசிய காங்கிரஸ் தியாகத்தால் வளர்ந்து ஒற்றுமை, சமத்துவம் மதச்சார்பற்ற தன்மை, சமூக நீதி என்ற கொள்கைகளால் நாட்டை கட்டி அமைத்தது.

    காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல அது ஒரு கருத்து, ஒரு இயக்கம், இந்தியாவின் மனசாட்சி.

    இந்திய தேசிய காங்கிரஸின் நிறுவன தினத்தில் ஏழைகளின் குரலாய், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையை மீட்க அரசியல் அமைப்பை பாதுகாக்க காங்கிரஸ் என்றும் களத்தில் நிற்கும் என்பதை உறுதி செய்வோம்.

    காங்கிரஸில் இருப்பதே பெருமை !காங்கிரஸை வளர்ப்பதே கடமை!!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாட்டைச் சேர்ந்த 248 மீன்பிடிப் படகுகளும், 61 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளனர்.
    • மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உரிய தூதரக வழிகளை மேற்கொள்ள வலியுறுத்தல்.

    தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 27.12.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்களை அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கை கடற்படையினர் இன்று (28.12.2025) கைது செய்த மற்றொரு சம்பவத்தை வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக மீனவர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கை அதிகாரிகளால் சிறை பிடிக்கப்படுவது தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கவலையுடன் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இக்கைது நடவடிக்கைகள் நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 248 மீன்பிடிப் படகுகளும், 61 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற கைது சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உரிய தூதரக வழிகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் ஆகிய இடங்களில் 100-க்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
    • திடீரென்று அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த தேர்தலில் தி.மு.க. இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது.

    இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் நேற்று முன்தினம் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 1500 ஆசிரியர்களை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    நேற்று இடைநிலை ஆசிரியர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதற்காக காலையில் எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் 3-வது நாளாக இன்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித்துறை அலுவலகம், எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் ஆகிய இடங்களில் 100-க்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று அவர்கள் சென்னை சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை 11.15 மணியளவில் ஆசிரியர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போராட்டம் நடைபெறும் கலெக்டர் அலுவலகத்துக்கு சாரை சாரையாக வந்தனர். திடீரென்று அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 500-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    போராட்டத்தின்போது 3 ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.
    • 2026 சட்டசபை தேர்தல் பணிகள் குறித்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வரும் 31-ந்தேதி காலை 10 மணிக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

    2026 சட்டசபை தேர்தல் பணிகள் குறித்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தான் நிலைக்குலைந்து கண் கலங்கினாலும் கட்சியை வலிமையான சக்தியாக உருவாக்க ராமதாஸ் முயற்சித்து வருகிறார்.
    • அன்புமணி பிரிந்து சென்ற பிறகு ராமதாசுக்கு செல்வாக்கு கூடியுள்ளது.

    சேலம்:

    சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலத்தில் நாளை காலை 10 மணிக்கு பா.ம.க.வின் செயற்குழுவும், 11.30 மணிக்கு பொதுக்குழுவும் நடைபெற உள்ளது. தேர்தல் கூட்டணி குறித்து நிறுவனர் ராமதாஸ் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என தமிழகம் எதிர்பார்த்து உள்ளது.

    ராமதாசால் பா.ம.க.வில் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவியில் இருந்தும் அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். பா.ம.க.வை பிளவுபடுத்த அன்புமணி மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளாலும் ராமதாஸ் வேதனை அடைந்துள்ளார். அன்புமணியால் தூண்டிவிடப்பட்ட சிலரின் அவதூறு பேச்சால் நிறுவனர் நிலைகுலைந்து போயுள்ளார். சூழ்ச்சியால் பா.ம.க.வை அபகரிக்க பார்க்கிறார்கள்.

    தான் நிலைக்குலைந்து கண் கலங்கினாலும் கட்சியை வலிமையான சக்தியாக உருவாக்க ராமதாஸ் முயற்சித்து வருகிறார். கட்சியை வலிமையாக்க ராமதாஸ் எடுக்கும் முயற்சிகளை கண்டு ராமதாசை விட்டு அன்புமணியிடம் சென்ற நிர்வாகிகள் வேதனை அடைந்துள்ளனர். அவர்கள் மீண்டும் ராமதாஸ் உடன் வருவார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் அடையாளம் ராமதாஸ்தான். தற்போது ராமதாசுக்கு பெரிய சோதனை வந்துள்ளது. ஆனால் வரும் தேர்தலில் ராமதாஸ் சொல்பவர்களுக்குதான் பாட்டாளி மக்கள் வாக்களிப்பார்கள். ராமதாசின் நேற்றைய உருக்கமான பேச்சு அனைவருக்கும் வேதனை அளிக்கிறது. ராமதாசின் உருக்கமான பேச்சு வரும் தேர்தலில் வாக்காக மாறும். தேர்தல் கூட்டணி குறித்து மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ராமதாஸ் கருத்து கேட்டுள்ளார். ராமதாஸ் அமைக்கும் கூட்டணிதான் வெற்றி கூட்டணி; அந்த கூட்டணிதான் ஆளுங்கட்சியாக ஆட்சியை பிடிக்கும்.

    என்னை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. ராமதாசால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணியால் பா.ம.க.வில் இருந்து யாரையும் நீக்க முடியாது. தற்போது வரை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை யாரிடமும் பேசவில்லை. பா.ம.க தனித்துப் போட்டி அல்ல. நிச்சயம் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திப்போம். கூட்டணியில் சேர 3 பக்கம் இருந்து ராமதாசுக்கு அழைப்பு வந்துள்ளது.

    அன்புமணியை நம்பவில்லை; பொதுநலத்துடன் செயல்படும் ராமதாசை தான் நம்புகிறார்கள். பா.ம.க.வின் செயற்குழுவை நடத்தக் கூடாது என சொல்ல அன்புமணிக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அன்புமணியின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்துவதோடு அவரின் வளர்ச்சியையும் பாதிக்கும். ராமதாசை ஆதரிப்பவர்கள் மட்டும்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும்; ஆட்சி அமைக்க முடியும். அன்புமணிக்கு பின்னால் சில நிர்வாகிகள்தான் உள்ளார்களே தவிர பா.ம.க.வின் உண்மை தொண்டர்களோ, பொதுமக்களோ கிடையாது. அன்புமணி பிரிந்து சென்ற பிறகு ராமதாசுக்கு செல்வாக்கு கூடியுள்ளது. அன்புமணி உடன் உள்ள நிர்வாகிகள் மீண்டும் ராமதாஸ் பக்கம் வருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×