என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் 3-வது நாளாக போராட்டம்: 500 பேர் கைது
- எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் ஆகிய இடங்களில் 100-க்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
- திடீரென்று அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த தேர்தலில் தி.மு.க. இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது.
இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் நேற்று முன்தினம் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 1500 ஆசிரியர்களை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
நேற்று இடைநிலை ஆசிரியர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதற்காக காலையில் எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் 3-வது நாளாக இன்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித்துறை அலுவலகம், எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் ஆகிய இடங்களில் 100-க்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று அவர்கள் சென்னை சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 11.15 மணியளவில் ஆசிரியர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போராட்டம் நடைபெறும் கலெக்டர் அலுவலகத்துக்கு சாரை சாரையாக வந்தனர். திடீரென்று அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 500-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தின்போது 3 ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.






