என் மலர்
உள்ளூர் செய்திகள்
- விமர்சனங்களை காந்திமதி இன்றோடு நிறுத்தி கொள்ள வேண்டும்.
- இல்லாவிட்டால் பல விஷயங்களை நாங்களும் சொல்ல நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.
சென்னை:
சேலத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் பா.ம.க. தலைவர் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்தும் விமர்சித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு அன்புமணி தரப்பு பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக வக்கீல் பாலு கூறியதாவது:-
சேலத்தில் இன்று அவர்கள் எடுத்த முடிவுகள் எதுவும் எங்களை கட்டுப்படுத்தாது. இரண்டு கேலி கூத்தான தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதாவது, பா.ம.க. தலைவராக டாக்டர் ராமதாசை தேர்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்கள். அப்படியானால், இதுவரை பேசியது பொய்யா? டாக்டர் ராமதாசை பொதுக்குழுவில் முறைப்படி தலைவராக தேர்வு செய்துவிட்டதாகவும், அதை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து விட்டதாகவும் ஐகோர்ட்டு அங்கீகரித்துவிட்டதாகவும் கூறி வந்தார்கள். அப்படியானால் இப்போது தலைவரை தேர்வு செய்திருப்பதாக கூறுவது ஏன்?
ஒரு கட்சியின் புதிய தலைவரை அந்த கட்சியின் தலைவராக இருப்பவர்தான் பொதுக்குழுவை கூட்டி தேர்வு செய்ய முடியும். அதன்படி, பா.ம.க. தலைவராக இருக்கும் அன்புமணிதான் பொதுக்குழுவை கூட்டி புதிய தலைவரை தேர்வு செய்ய முடியும்.
இன்னொரு கேலி கூத்தான தீர்மானத்தையும் சொல்லி உள்ளார்கள். அதாவது, பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து சவுமியா அன்புமணியை நீக்கி இருப்பதாக கூறியிருக்கிறார்கள். சவுமியா அன்புமணி ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பில் நீண்ட நாட்களாக தலைவராக இருக்கிறார். அவரை நீக்க வேண்டுமென்றால் அந்த அமைப்பின் பொதுக்குழுதான் கூடி முடிவெடுக்கும். இன்னொரு அமைப்பு அந்த முடிவை எடுப்பதற்கு என்ன உரிமை உள்ளது?
காந்திமதி எங்கள் தலைவரை மிக மோசமாக தரக்குறைவாக விமர்சித்துள்ளார். அதை கடுமையாக கண்டிக்கிறோம். ஏற்றுக் கொள்ள மாட்டோம். அன்புமணி எங்கள் கட்சியை வழிநடத்தி வரும் தலைவர். அவரை யார் விமர்சனம் செய்தாலும் ஏற்க மாட்டோம். அது அக்காவாக இருந்தாலும் சரி, அக்கா-தம்பி சண்டை இருந்தால் வீட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
பா.ம.க. டாக்டர் ராமதாசின் குடும்ப சொத்தும் அல்ல. இந்த விமர்சனங்களை காந்திமதி இன்றோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பல விஷயங்களை நாங்களும் சொல்ல நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டில் தற்போது கலாச்சார போர் நடக்கிறது.
- சமூக நீதி விவகாரங்களில் அரசின் கவனம் குறைந்து உள்ளது.
தமிழக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பெண்கள், அரசியல், சமூக வாழ்க்கையில் எல்லை கடந்து வெற்றி பெற வேண்டும் . ஆனால் தமிழ்நாட்டில் பெண்கள் அதிகமாக பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.இதனால் மாநிலத்தில் மாற்றம் அவசியம்.
தமிழ்நாட்டில் தற்போது கலாச்சார போர் நடக்கிறது. சமூக நீதி விவகாரங்களில் அரசின் கவனம் குறைந்து உள்ளது. ஈரோடு, கரூர் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைத்த உணவை பரிமாற அனுமதிக்கவில்லை என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
ரெயில் கட்டணம் குறைவாக இருந்தாலும், ஆம்னி பஸ் கட்டணம் 3 மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் பண்டிகை காலங்களில் மக்கள் கடும் சுமையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இதை முதன்மையாக கவனிக்க வேண்டும்.
தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை கொண்டாடுவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது. தமிழை கொண்டாடுவது பா.ஜ.க ஆனால் தமிழை திண்டாட வைப்பது தமிழக அரசு .
ஆசிரியர் மற்றும் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுகளில் தி.மு.க. சாதனைகள் குறித்து கேள்விகள் இடம்பெற்றுள்ளது. இது ளிப்படையான பாரபட்சம் . இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய அரசை விமர்சிப்பவர்களை உடனே "சங்கி" என்று சொல்லும் போக்கு அதிகரித்துள்ளது. கலாச்சாரம், மொழி, பாரம்பரியத்தை போற்றுபவர்கள் அனைவரையும் சங்கி என அழைப்பது தவறு.
இவ்வாறு அவர் கூறினார்.
- அன்புமணிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
- ராமதாஸின் அனுமதியின்றி பா.ம.க. கொடியை சௌமியா அன்புமணி பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது.
பா.ம.க.வில் தந்தை-மகனுக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் போக்கு அதிகரித்து தற்போது இருதரப்பினரும் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இன்று சேலத்தில் ராமதாஸ் தரப்பினர் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்தினர். இதில் அன்புமணிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதேபோல் ராமதாஸின் அனுமதியின்றி பா.ம.க. கொடியை சௌமியா அன்புமணி பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, பசுமை தாயகம் அமைப்பின் தலைவராக ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் இருந்த சௌமியா அன்புமணி நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- களத்தில் இல்லாதவர்களை பற்றி பேச மாட்டேன் என்ற விஜய்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த செல்லூர் ராஜூ.
- நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
மதுரை செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
இங்கே இருக்கும் அதிகாரிகளுக்கு சொல்கிறேன், 2026-ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனதும், தவறு செய்யும் அதிகாரிகள், அவர்கள் ஐஏஎஸ் ஆக இருந்தாலும் சரி, எந்த அதிகாரிகளாக இருந்தாலும் சரி சிறைச் சாலை செல்வது உறுதி.
நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
எழுதி வைத்து கொள்ளுங்கள், 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர்.
நேற்று வந்த விஜய்க்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
வடிவேலு, நயன்தாரா வந்தால்கூடதான் கூட்டம் கூடும். நடிகர் என்றால் கூட்டம் கூடதான செய்யும். அதற்காக எல்லோரும் எம்ஜிஆர் ஆக மாற முடியாது.
அதிமுக களத்தில் இல்லை என பேச எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்.
அதிமுக களத்தில் இல்லை என பேசுவது முட்டாள் தனமானது. விஜய் நாவை அடக்கி பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராமதாஸ் இல்லாத பா.ம.க. பிணத்துக்கு சமம்.
- ராமதாஸ் தேர்தலுக்கு வியூகம் வகுத்து விட்டார்.
சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராமதாஸ் தரப்பு பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீகாந்தி பேசியதாவது:-
அன்புமணி அணிந்திருக்கும் கோட் சூட் யார் கொடுத்தது? எம்.பி. பதவியும், அமைச்சர் பதவியும், உழைத்து வாங்கியதா? ராமதாஸ் இல்லாத பா.ம.க. பிணத்துக்கு சமம். தம்பி அன்புமணிக்கு அதிகாரம் வேண்டும் என்றால் புதிய கட்சியை தொடங்கிக் கொள்ளட்டும்.
ராமதாஸுக்கு அன்புமணி செய்தது பச்சை துரோகம்!
ராமதாஸ் தேர்தலுக்கு வியூகம் வகுத்து விட்டார். யாருடன் கூட்டணி? யாருக்கு சீட்டு? எப்படி ஜெயிக்க வேண்டும் என அவருக்கு தெரியும். இனிமே குறுக்க பேச யாருமே கிடையாது. காலை வாரி விடவும் யாரும் இல்லை என்றார்.
- கடந்த 2, 3 ஆண்டுகளில் அவருக்கு ஏற்பட்டிருக்கின்ற மன உளைச்சல் சாதாரண மன உளைச்சலா?
- ராமதாஸ் அவர்கள் முடிவெடுக்கும் வரையிலே பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தது.
சேலம்:
சேலத்தில் நடந்த பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அருள் எம்.எல்.ஏ பேசியதாவது:-
ஒரு கட்சியினுடைய தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் நமது பாட்டாளி மக்கள் கட்சி. ஒரு தலைவர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் உதாரணமாக இருந்ததும் நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சி. அப்படின்னா மருத்துவர் ராமதாஸ் என்ற ஒரு தலைவர் இந்த நாட்டை எப்படி நேசித்தார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 46 ஆண்டு காலம் அரை நூற்றாண்டுகள் தன்னுடைய வாழ்வை இந்த மக்களுக்காக அர்ப்பணித்து ஒரு போராளியாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பவர்.
அப்படிப்பட்ட தலைவர் இன்றைக்கு கடந்த 2, 3 ஆண்டுகளில் அவருக்கு ஏற்பட்டிருக்கின்ற மன உளைச்சல் சாதாரண மன உளைச்சலா? நான் உங்களிடத்தில் கேட்கிறேன். இந்த மன உளைச்சலுக்கு யார் காரணம். பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களா? பொறுப்பாளர்களா? யார் காரணம், யாருமே இல்லை.
ராமதாஸ் அவர்கள் முடிவெடுக்கும் வரையிலே பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தது. மருத்துவர் ராமதாஸ் என்ற ஒரு பெயரை சொன்னால் எந்த ஒரு தலைவரும் ராமதாஸ் சொல்வதை மட்டுமே செய்தாக வேண்டிய கட்டாய நிலையை உருவாக்கி வைத்திருந்தார். இன்றைக்கு சிறு அளவிற்கு மாற்றுவதற்கு ஒரு கூட்டம் முயற்சிக்கிறது. அதற்கு யார் காரணம். மருத்துவர் ராமதாஸ் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டு 36 வயதிலேயே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவி கொடுத்து இந்திய துணை கண்டத்தில் பல சாதனைகளை செய்ய வேண்டும் என்று வழிகாட்டி, எம்.பி. பதவி உள்ளிட்ட பல பதவிகளை கொடுத்து அழகுபார்த்த ராமதாஸ்.
அவர்களை இந்த 3 ஆண்டுகளில் நீங்கள் படுத்திக் கொண்டு இருக்கின்ற பாடு என்பது, நேற்று முன்தினம் ஒரு காணொளி வந்ததே தமிழ்நாட்டில் இருக்கின்ற பெண்கள் கதறி அழுதார்களே. ஆனால் ராமதாஸ் அவர்களால் பெற்றெடுக்கப்பட்ட ஒரு குழந்தை மகிழ்ந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு பெரிய வேதனை. நியாயமா? நான் கேட்கிறேன். 18 முறை நான் சிறைக்கு சென்றிருக்கிறேன். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறேன். ஆனால் சிறையை காணாத உங்களுக்கு எத்தனை எத்தனை பதவிகளை வாரி கொடுத்தவர் யார்? அடுத்தது நமக்கு வழிகாட்டுபவர்கள் நீங்கள் என்று நினைத்து உங்களை அழைத்தோம். ஆனால் அனைவரின் தலையிலும் மண்ணை போட்டு விட்டீர்களே. நியாயமா? தர்மமா? உங்களிடத்தில் கேட்கிறேன். வயிறு அய்யாவுக்கு மட்டும் எரியவில்லை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அப்பாவுக்கும், ஒவ்வொரு அம்மாவுக்கும் வயிறு எரிகிறது.
நீங்கள் இந்த 26-ல் அமைக்கின்ற கூட்டணி நீங்கள் சொல்கின்றவர் தான் இந்த நாட்டின் முதலமைச்சராக வருவார். யார் தலையில் எழுதியுள்ளது என்று எங்களுக்கு தெரியவில்லை. முதலமைச்சராக யார் வருவார் என்பதை முடிவு செய்பவர் ராமதாஸ் என்று பேசினார்.
- கடந்த 7 ஆண்டுகளில் மதவாத சக்திகள் வளர்ந்து விட்டன.
- குறுக்குவழியில் ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தலாம் என அமித்ஷா நினைக்கலாம்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ம.தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தலில் போட்டியிட எத்தனை சீட்டுகள் எண்ணிக்கை என்பது முக்கியமில்லை. தமிழகத்தில் மதவாத சக்திகள் வளா்ந்து விடக்கூடாது, சாதி-மத மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்படக்கூடாது என 9 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் இருந்து வருறோம்.
ம.தி.மு.க. எத்தனை சீட்டுகளில் போட்டியிட வேண்டும் என்பதை இயக்கத்தின் தலைமை முடிவெடுக்கும். உரிய எண்ணிக்கைக்கான சீட்டு எங்களுக்கு தி.மு.க. வழங்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.
ம.தி.மு.க. எப்போதும் தி.மு.க. கூட்டணியுடன் நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். வேறு எந்த கூட்டணியில் இருந்தும் அழைப்பு வந்ததா? என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. மதவாத சக்திகள் தமிழகத்தில் கால் பதிக்கும் சூழ்நிலையில், எங்களது கூட்டணி உறுதியாக உள்ளன.
கடந்த 7 ஆண்டுகளில் மதவாத சக்திகள் வளர்ந்து விட்டன. அதனை வளர விடக்கூடாது என்பதற்காக அனைத்து ஜனநாயக சக்திகள் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளோம்.
த.வெ.க. தலைவர் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளாம். அவர் மதவாத சக்திகளை எதிர்க்கிறார். விஜய் அறியாமலேயே மதவாத சக்திகளுக்கு உதவி விடக்கூடாது. மதவாத சக்திக்கு எதிரான தி.மு.க. கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும்.
த.வெ.க. தலைவர் விஜய் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில் இணைய மாட்டார். அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில் அவர் ஆரம்ப காலத்தில் இருந்தே மதவாத சக்திக்கு எதிரான கொள்கை நிலைப்பாட்டை எடுத்துள்ளார். மேற்கு வங்காளம், தமிழகத்தையும் கைப்பற்றுவோம் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறுகிறார். கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவே அவ்வாறு கூறுகிறார்.
எஸ்.ஐ.ஆர். மூலம் தமிழகம், உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு இடங்களில் தகுதியான வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. எஸ்.ஐ.ஆர்-ஐ நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அதற்கான காலக்கெடு தான் குறைவு. அதில் உள்ள குறைபாடுகளை நாங்கள் எதிர்க்கிறோம்.
இப்படி குறுக்குவழியில் ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தலாம் என அமித்ஷா நினைக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது தகுதியான வாக்காளர்களை நீக்கி விடக்கூடாது என்பது தான் எங்களது அச்சம். ஏனெனில் இத்தகைய தவறுகள் ஒருசில மாநிலங்களில் நடந்துள்ளது. அது தமிழகத்தில் நடந்து விடக்கூடாது என்றார்.
இறுதியில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு குறைந்த தொகுதிகள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறதே என்று கேள்விக்கு, "எங்களுக்கு எத்தனை தொகுதிகள் தேவை என்பதை எங்கள் கட்சியின் தலைமை முடிவெடுக்கும். அதுகுறித்து தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு கூட்டணியில் பேச்சுவார்த்தை நடக்கும் போது கூட்டணி தலைமையிடம் எங்கள் கட்சி தலைமை பேசும்.
தொகுதி எண்ணிக்கை குறைந்தால் யாருக்கும் சந்தோஷமாக இருக்காது. எண்ணிக்கை கூடினால் சந்தோஷப்படுவோம். தொகுதி எண்ணிக்கை குறைப்பு தொடர்பாக தி.மு.க. எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தொகுதி ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்றார்.
- மெரினா காமராஜர் சாலையில் பேரணியாக சென்றபோது தடுத்ததால் தள்ளுமுள்ளு.
- காவல்துறையினர் உடனான தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் இடைநிலை ஆசிரியர் ஒருவர் மயக்கமடைந்தார்.
சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மெரினா காமராஜர் சாலையில் பேரணியாக சென்றபோது தடுத்ததால் இடைநிலை ஆசிரியர்கள்- காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பேரணியை தடுத்ததால் இடைநிலை ஆசிரியர்கள் மெரினா காமராஜர் சாலையில் அமர்ந்து போராடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், காமராஜர் சாலையில் பேரணி சென்ற இடத்தில் ஆசிரியர்களை தடுத்து நிறுத்திய போலீசார் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.
பேரணியாக சென்றபோது காவல்துறையினர் உடனான தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் இடைநிலை ஆசிரியர் ஒருவர் மயக்கமடைந்தார்.
கடந்த 2009ம் ஆண்டில் மறைந்த கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சுமார் 20,000 இடைநிலை ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தில் நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி ஒரு தகப்பனாக இச்சம்பவத்தை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
- பாதிக்கப்பட்ட அக்குழந்தை முழு மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் மீண்டு வர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில், 'போதையில் பாதை மாறும் இளைஞர்கள், பலியாகும் தமிழகப் பெண்கள்!' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூரில் அதீத மதுபோதையில் இளைஞர் ஒருவர், விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன. அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி ஒரு தகப்பனாக இச்சம்பவத்தை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. பாதிக்கப்பட்ட அக்குழந்தை முழு மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் மீண்டு வர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
இந்த டாஸ்மாக் மாடல் அரசின் கீழ் போதையின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைக் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. அவையனைத்திற்கும் பின்னணியில் போதையின் கரங்கள் தான் ஓங்கியிருக்கின்றன. ஆனால், "போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்" என வீர வசனம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரும்புக்கரமோ இத்துப்போய்விட்டது. எந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத ஒரு அவல ஆட்சியை நடத்திக் கொண்டு "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற விளம்பரப் பதாகைகளைத் தூக்கிப் பிடிக்க திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்.
மழலை மாறாத குழந்தையைச் சீரழித்த அக்கொடும்குற்றவாளியும், கடந்த நான்கரை ஆண்டுகளாகப் பெண்களின் பாதுகாப்பை அடகு வைத்து ஆட்சி நடத்தும் தி.மு.க.-உம் தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்! என்று கூறியுள்ளார்.
- மகளிர் அணியினர் பலர் இன்று காலை முதலே மாநாட்டு திடலுக்கு வந்து குவிய தொடங்கினர்.
- மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் இன்று மாலை 4 மணிக்கு 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய 6 மாவட்ட ங்களில் உள்ள 35 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்கின்றனர்.12 ஆயிரத்து 380 வாக்குச்சாவடி களில் ஒவ்வொரு வாக்கு ச்சாவடியில் இருந்தும் 15 பேர் என மொத்தம் 1.50 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். மகளிர் அணியினர் பலர் இன்று காலை முதலே மாநாட்டு திடலுக்கு வந்து குவிய தொடங்கினர்.
மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டார். இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டனர்.
அப்போது அந்த விமானத்தில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி NVN சோமு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை ஆகியோர் சந்தித்துக் கொண்டனர்.
இந்த புகைப்படத்தை திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் வெல்லும் தமிழ் பெண்கள் என அந்த புகைப்படத்திற்கு கேப்ஷன் வைத்திருந்தார்.
- த.வெ.க தலைவர் விஜய் வரலாற்று நாயகனாக தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை காணுவதைப் போல இன்று தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாகி இருக்கிறது.
கோவை:
தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
த.வெ.க தலைவர் விஜய் ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக மலேசியா சென்றிருந்தார். அங்கு அவருக்கு கூடிய கூட்டத்தை பார்த்து அண்டை நாடுகளே வியந்து போய் இருக்கின்றன. அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சியானது உலக நாடுகளை திரும்பி பார்க்கும் வகையில் நடந்துள்ளது.
இதுவரை மலேசியாவில் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள் தான் ரோடு ஷோ சென்றுள்ளனர். ஆனால் இந்த முறை இவருக்கு ரோடு ஷோ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
த.வெ.க தலைவர் விஜய் வரலாற்று நாயகனாக தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு அவருடைய தலைமை தான் தேவை என தமிழகத்தில் உள்ள பெண்கள், இளம் வயதினர் என அனைவரும் ஒருமனதாக குரல் கொடுக்கும் காட்சியை நாம் பார்த்து வருகிறோம்.
நான் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது அங்கு ஆர்ப்பரித்து வரக்கூடிய கூட்டத்தை பார்க்கும் போது 1972-ம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் 88-ம் ஆண்டில் ஜெயலலிதா ஆகியோருக்கு திரண்ட கூட்டத்தை போன்று தற்போது தமிழகத்தில் விஜய்க்கு கூட்டம் வருவதை பார்க்க முடிகிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை காணுவதைப் போல இன்று தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாகி இருக்கிறது. இந்த மாற்றமானது எதிர்காலத்தில் தமிழகத்தின் வரலாற்றில், விஜய் தமிழ்நாட்டு முதலமைச்சராக அமர்வதை மக்கள் சக்தியோடு இணைந்து அந்த பணியை நிறைவேற்றுவோம்.
த.வெ.கவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பல இடங்களில் கருத்துக்களை பரிமாறி வருகிறார்கள். இதுவரையிலும் அந்த கருத்துக்கள் என்னை போன்றவர்களின் கவனத்துக்கு வரவில்லை. கவனத்திற்கு வந்தால் தான் அதற்கு பதில் அளிக்க முடியும்.
ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு கருத்துக்களை சொல்வர். பொதுவாக ஒரு புதிய இயக்கம் தொடங்கி இருக்கிறது. ஒரு வரலாறு படைக்கிற இயக்கம். எது வேண்டுமானாலும் மக்கள் கோரிக்கை வைக்கும் போது அந்த கோரிக்கைக்கு ஏற்ப எப்படி நாம் நிறைவேற்ற வேண்டும் என்பதை ஆராய்ந்து அந்த பணிகளை மேற்கொள்வோம்.
எங்களை பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம். த.வெ.க தலைவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி இணைய முடியும் என தெளிவாக சொல்லிவிட்டோம்.
த.வெ.க., பா.ஜ.க மீது எந்த விமர்சனமும் வைக்கவில்லை என்ற திருமாவளவனின் கருத்து வேறு. இதே தி.மு.க வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்தபோது என்ன செய்தார் என்பதை திருமாவளவன் தான் விளக்க வேண்டும்.
எங்கள் தலைவர் ஈரோடு பொதுக்கூட்டத்தில் பேசும் போது 2 கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த மக்களும் அதற்கு கரகோஷம் அளித்தனர். கொள்கை ரீதியாக நாங்கள் எதிர்க்கிறோம். யாரை அப்படின்னு அவர் கேட்டபோது மக்கள் சொன்னார்கள். மக்கள் உணர்வை தான் அவர் பிரதிபலிக்கிறார். எல்லோருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.
த.வெ.கவில் எந்தெந்த தலைவர்கள் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ஜனவரி முதல் வாரத்துக்குள் அத்தனையும் உங்களுக்கு தெரியும் என்றார்.
- அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
- செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சேலம்:
சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. யாருடன் கூட்டணி அமைப்பது, எத்தனை இடங்களை கேட்பது என்று தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சேலம் 5 ரோட்டில் உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
இதில் செயல்தலைவர் ஸ்ரீகாந்திமதி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளாளர் மன்சூர், மாநில இளைஞர் சங்க தலைவர் தமிழ்குமரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர், பொதுக்குழு உறுப்பினர்கள் 4 ஆயிரத்து 300 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க டாக்டர் ராமதாசுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. பின்னர் பொதுக்குழுவில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து டாக்டர் ராமதாஸ் அறிவிக்கிறார். இதனால் இந்த கூட்டம் அரசியல் கட்சியினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அவர்களது இருக்கையில் டாக்டர் ராமதாஸ் படத்துடன் கூடிய பையில் தண்ணீர் பாட்டில் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள், மிக்சர், கடலை உருண்டை வைக்கப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள டாக்டர் ராமதாஸ் நேற்று மதியம் சேலம் வந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் செயற்குழு, பொதுக்குழு நடந்த மண்டபம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் சேலம் மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ம.க. கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பா.ம.க. மாநில இணை பொதுச்செயலாளர் இரா.அருள் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து இருந்தனர்.






