என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பொங்கலுக்கு வேட்டி-சேலையும் ரேசன் கடையில் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
- பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகிக்கும் பணிகள் தொடங்கப்படும்.
சென்னை:
தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாளை அனைத்து மக்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஆண்டு தோறும் பொங்கல் தொகுப்பை வழங்கி வருகிறது.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு 'பை' மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.
2023-ம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு உள்பட ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்பட்டன.
அதே போல 2024-ம் ஆண்டில் 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டன. இவற்றுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது.
அதே சமயம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படவில்லை.
இதற்கிடையே வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கப் பணமும் வழங்க உள்ளது. அது ரூ.3 ஆயிரமா? அல்லது ரூ.4 ஆயிரமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இது மட்டுமின்றி பொங்கலுக்கு வேட்டி-சேலையும் ரேசன் கடையில் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதன்படி 2 கோடியே 22 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க 2,22,91,700 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் 1,77,22,000 வேட்டியும், 1,77,64,000 சேலையும் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு 85 சதவீதம் ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
ரொக்கம் மற்றும் கரும்பு கொள்முதல் தொடர்பான அறிவிப்பு வெளியானதும் பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகிக்கும் பணிகள் தொடங்கப்படும்.
அதன் பிறகு பொதுமக்கள் எந்தெந்த தேதிகளில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று அந்த டோக்கனில் எழுதி கொடுப்பார்கள். அதன்படி சென்று ரொக்கப் பணம் மற்றும் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.
பொங்கல் ரொக்கப் பணம் மற்றும் பரிசு தொகுப்பு விவரங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அல்லது நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சாடிவயல் யானைகள் முகாம், தமிழ்நாடு வனத்துறை ஆவணக் காப்பகம் சேமிப்பகம் ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
கோவை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று கோவை வந்தார்.
நேற்று மாலை திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையில் நடந்த மகளிர் மாநாட்டில் பங்கேற்று பேசினார்.
அதனை தொடர்ந்து அவர் நேற்றிரவு கோவை வந்து தங்கினார். இன்று காலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வடகோவையில் உள்ள தமிழ்நாடு வனக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு வனப்படை நவீனமயமாக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டையில் ரூ.19½ கோடியில் கட்டப்பட்டுள்ள வனவிலங்குகள் இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம், சாடிவயல் யானைகள் முகாம், தமிழ்நாடு வனத்துறை ஆவணக் காப்பகம் சேமிப்பகம் ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அங்கு ரூ.9½ கோடியில் கட்டப்பட்டுள்ள ஹாக்கி மைதானத்தை அவர் திறந்து வைத்தார்.
- சம்பவம் தவிர பிற மாநில நபர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் சமீபத்தில் ஏதும் நடைபெறவில்லை.
- பிற மாநில நபர்கள் இங்கு பாதுகாப்பாகவும் இணக்கமாகவும் வாழ்வதற்கு தகுந்த சூழல் நிலவுகிறது.
சென்னை:
திருத்தணி ரெயில் நிலையம் அருகே சிறுவர்கள் சிலர் வடமாநில வாலிபர் ஒருவரை சுற்றிவளைத்து அரிவளாால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
27.12.2025 அன்று, திருத்தணி ரெயில்வே குடியிருப்பு அருகே, சில நபர்களால் ஒருவர் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில், திருத்தணி காவல் நிலையத்தில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபரின் புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவருக்கு முறையான உதவியும் அளிக்கப்பட்டது.
மேற்கொண்ட புலன் விசாரணையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவேற்றம் செய்வதற்கான நோக்கத்துடன், சட்டத்துக்கு முரண்பட்ட 4 இளஞ்சிறார்கள் இந்த குற்றத்தை செய்திருப்பது தெரிய வந்தது.
அவர்கள் 4 பேரும் 28.12.2025 அன்று கைது செய்யப்பட்டு இளையோர் நீதிக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அதில் 3 பேரும் செங்கல்பட்டில் உள்ள பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சிறுவர்கள் மீது சட்டப்படி தகுந்த மற்றும் உடனடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தவிர பிற மாநில நபர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் சமீபத்தில் ஏதும் நடைபெறவில்லை. பிற மாநில நபர்கள் இங்கு பாதுகாப்பாகவும் இணக்கமாகவும் வாழ்வதற்கு தகுந்த சூழல் நிலவுகிறது.
மற்ற மாநிலங்களைச் சேர்ந்த நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவர்கள் வசிக்கும் பகுதிகளிலும், அவர்கள் பணியாற்றும் இடங்களிலும் போதுமான காவல் ரோந்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அடிக்கடி ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, பிற மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.
இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இச்சம்பவத்தின் உணர்வுபூர்வ தன்மையை கருத்தில் கொண்டு, தாக்குதல் தொடர்பான இவ்வீடியோவை சமூக ஊடகதளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு பரப்பப்படுவதால் பொது அமைதி மற்றும் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் வழியாக நேரடியாக கோயம்பேட்டிற்கு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
- சிக்கலை தீர்க்க எங்கள் தொழில்நுட்பக் குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் வழியாக கோயம்பேடு இடையேயான நேரடி ரெயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் வழியாக நேரடியாக கோயம்பேட்டிற்கு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கிரீன் லைன் (அண்ணா நகர், கோயம்பேடு வழியாக) வழியாக விமான நிலையத்திற்கு பயணிக்கும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் இன்டர்சேஞ்ச் செய்து, ப்ளூ லைன் விமான நிலைய சேவைகளைப் பயன்படுத்தி தங்கள் பயணத்தைத் தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதேபோல், க்ரீன் லைனில் இருந்து ப்ளூ லைனுக்கு பயணிக்கும் பயணிகளும் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் இன்டர்சேஞ்ச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இன்டர்-காரிடர் சேவையைத் தவிர, கிரீன் லைன் மற்றும் ப்ளூ லைன் ரெயில்கள் இரண்டும் வார நாட்களின் அட்டவணையின்படி வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.
சிக்கலை தீர்க்க எங்கள் தொழில்நுட்பக் குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மேலும் கூடுதல் புதுப்பிப்புகள் விரைவில் பகிரப்படும். ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 20-க்கு விற்றது.
- தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
சென்னை:
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று காலை சற்று குறைந்தது.
சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை நேற்று முன்தினம் ரூ.13,100 ஆக இருந்தது. சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800-க்கு விற்றது.
தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 20-க்கு விற்றது. சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 160-க்கு விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 420 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,600-க்கும், சவரனுக்கு 3,360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,800-க்கு விற்பனையாகிறது.
தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 258 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
29-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,160
28-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800
27-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800
26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120
25-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,560
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
29-12-2025- ஒரு கிராம் ரூ.281
28-12-2025- ஒரு கிராம் ரூ.285
27-12-2025- ஒரு கிராம் ரூ.285
26-12-2025- ஒரு கிராம் ரூ.254
25-12-2025- ஒரு கிராம் ரூ.245
- நடப்பாண்டில் 8 புதிய ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- கோவை-ராமேசுவரம் ரெயில் (16618) 55 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தெற்கு ரெயில்வேக்கான புதிய கால அட்டவணை வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதில் மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. புதிய பயணிகள் ரெயில், ரெயில் சேவை நீட்டிப்பு, புதிய நிறுத்தங்கள், ரெயிலின் வேகம் அதிகரிப்பு, கூடுதல் பெட்டிகள் இணைப்பு உள்ளிட்ட மாற்றங்கள் அடங்கிய புதிய கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, நடப்பாண்டில் 8 புதிய ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4 ரெயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 8 ரெயில்கள் மாற்று நேரத்தில் இயக்கப்பட்டு வருகிறது. 44 எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 102 எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. 22 மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 7 வந்தே பாரத் ரெயில்களில் கூடுதாலாக 40 பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது. 46 எக்ஸ்பிரஸ் ரெயில், 27 பயணிகள் ரெயில்களில் 62 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் 65 மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. மேலும், 14 பயணிகள் ரெயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட உள்ளது. அதன்படி, 5 நிமிடங்கள் முதல் 85 நிமிடங்கள் வரை பயண நேரம் சேமிக்க முடியும்.
குறிப்பாக, செங்கோட்டை- சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12662) வழக்கமான நேரத்தைவிட 20 நிமிடம் முன்னதாகவும், சென்னை எழும்பூர்-குருவாயூர் (16127) 20 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும் வேகம் அதிகரிக்கப்படவுள்ளது. கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16102) 85 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும், கோவை-ராமேசுவரம் ரெயில் (16618) 55 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.
நாகர்கோவில்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (20692) 45 நிமிடம் முன்னதாகவும், தூத்துக்குடி-சென்னை எழும்பூர் (12694) முத்துநகர் எக்ஸ்பிரஸ் 30 நிமிடம் முன்னதாகவும், சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் முன்னதாகவும் சென்றடையும் வகையில் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. இதேபோல, நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரெயில் 35 நிமிடம் முன்னதாகவும், மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரெயில் 15 நிமிடம் முன்னதாகவும் செல்லும் வகையில் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளின் பயண நேரம் சேமிக்க முடியும்.
திருப்பதி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 2-ந்தேதி முதல் போலூர் வரையிலும், ராமேசுவரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 1-ந்தேதி முதல் போலூர் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளது. தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதியா ரெயில், நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதியா எக்ஸ்பிரஸ் ரெயில் சீர்காழி ரெயில் நிலையத்தில் வரை விரிவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மீனவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
- மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
- ஆனால், இது குறித்த எந்த கவலையும் இல்லாமல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:-
அரசு பள்ளிகளில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேருக்கும் உடனடியாக காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் சென்னையில் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டமும், அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் மாற்றுத்திறனாளி தற்காலிக பணியாளர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தி சென்னையில் குடும்பத்துடன் தொடர்போராட்டத்தையும் மேற்கொண்டுள்ளனர். அரசு பணியில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் எளிய மக்களை போராடும் சூழலுக்கு திமுக அரசு தள்ளியிருப்பது கண்டிக்கத்தக்கது.
அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு, இன்றுவரை பணிநிலைப்பு வழங்கப்படவில்லை. கடந்த 13 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ.7,500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. பணி நிலைப்பு என்ற நியாயமான கோரிக்கையைக்கூட ஏற்க மறுத்து திமுக அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல.
தமிழக அரசுத் துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால், அவர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்கப் பட வேண்டும் என்று கடந்த 2008&ஆம் ஆண்டு அக்டோபர் 16&ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 151-ஐயும், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை வழங்க சிறப்பு ஆள் தேர்வுகளை நடத்தலாம் என்று 2023&ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 20-ஐயும் செல்லாததாக்கும் வகையில் கடந்த அக்டோபர் 30&ஆம் தேதி 24 என்ற எண் கொண்ட அரசாணையை திமுக அரசு பிறப்பித்திருக்கிறது. இது மாற்றுத்திறனாளிகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் ஆகும்.
அரசாணை எண் 24-ஐ ரத்து செய்து விட்டு, முந்தைய அரசாணைகளின் அடிப்படையில் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளி பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. ஆனால், அதைக் கூட நிறைவேற்றுவதற்கு திமுக அரசு மறுத்து வருகிறது.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், 181-ஆம் வாக்குறுதியாக திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், சொல்வதைச் செய்வதாகக் கூறிக் கொள்ளும் திமுக ஆட்சிக்கு வந்து 55 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடினால், அடக்குமுறையைத் தான் பரிசாக அளிக்கிறது திமுக அரசு.
சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து நான்காம் நாளாக போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள் இன்றும் கைது, அரசு ஊழியர்கள் போராட்டம், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் என தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இது குறித்த எந்த கவலையும் இல்லாமல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பகுதிநேர சிறப்பாசிரியர்கள், மாற்றுத்திறனாளி பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்; திமுகவை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றுவார்கள்.
- தமிழகத்தில் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்.
- நம் மாநிலத்தின் சாதனைகளை நாமே குறைத்து மதிப்பிடுவது சரியல்ல.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை யாராலும் முறிக்க முடியாது. காங்கிரசை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி தமிழக அரசின் கடன் குறித்து விமர்சித்து இருப்பது அவரது சொந்த கருத்து.
கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்ற அவரது பகல் கனவு பலிக்காது. உத்தரபிரதேச புல்டோசர் ஆட்சியின் யோகி ஆதித்யநாத் குரலாக பிரவீன் சக்கரவர்த்தி பேசுகிறார்.
தமிழகத்தில் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். பிரவீன் சக்கரவர்த்தி தன்னுடைய வளர்ச்சி மற்றும் விளம்பரத்திற்காக பேசுகிறார். அவர் மீது அகில இந்திய தலைமையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை காலூன்ற வைக்க உளவு வேலை பார்ப்பவர்களை அனுமதிக்க முடியாது.
ஜோதிமணி எம்.பி. வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், 'தமிழ்நாட்டை உத்தரபிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் செயல்பாடுகள் கவர்னர் மூலம் முடக்கப்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நம் மாநிலத்தின் சாதனைகளை நாமே குறைத்து மதிப்பிடுவது சரியல்ல. பா.ஜ.க.விற்கு ஆயுதம் எடுத்து கொடுப்பது நமது வேலையல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.
- நயினார் நாகேந்திரன் ஆசைப்படுவதற்கு எல்லாம், நான் பதில் கூற முடியாது.
- தேர்தல் நேரத்தில் எல்லா இயக்கங்களும், மாநாடுகள் நடத்துவது வழக்கம்.
தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தேர்தலுக்கு மட்டும் மக்களை சந்திக்கும் கட்சி அல்ல. முதலமைச்சரில் இருந்து, தி.மு.க.வில் உள்ள அனைத்து தலைவர்களும், தொடர்ந்து கூட்டங்களை நடத்திக் கொண்டு வரும் இயக்கம் தான் தி.மு.க.
தேர்தல் நேரத்தில் எல்லா இயக்கங்களும், மாநாடுகள் நடத்துவது வழக்கம். ஆனால் இதற்கு முன்னதாகவே, மகளிர்களை, இளைஞர்களை சந்திக்கும் கூட்டங்களை, தி.மு.க. தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.
இந்தியா கூட்டணி உடைந்து விடும் என்று நயினார் நாகேந்திரன் ஆசைப்படுவதற்கு எல்லாம், நான் பதில் கூற முடியாது. அவர் இந்தியா கூட்டணி உடைந்து விடும் என்று கனவு கண்டு கொண்டு இருக்கிறார். அவர் கனவு காண்பது தப்பு அல்ல. அவர் கனவு கண்டு கொண்டே இருக்கட்டும்.
ஆனால் நிச்சயமாக, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை என்பதை நயினார் நாகேந்திரன் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.
- நான் செய்த சத்தியத்தை இன்றுவரை காப்பாற்றிக்கொண்டே இருக்கிறேன்.
- தைலாபுரத்தில் தினந்தோறும் என்னை வந்து சந்திக்கும் பா.ம.க.வினரை நினைத்தால் புத்துணர்ச்சி வந்துவிடுகிறது.
சேலம்:
பா.ம.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் தொடர்ந்து பேசியதாவது:-
* 30 ஆண்டாக மக்களுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்த ஜி.கே.மணியை அவமானப்படுத்தினால் என்னால் பொறுக்க முடியாது.
* இந்த தேர்தலில் நல்ல கூட்டணி அமைப்பேன், நல்ல முடிவை அது கொடுக்கும்.
* என்னைப்போன்ற ஒரு தகப்பன் உலகில் வேறு யாருக்காவது உண்டா? அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்?
* அன்புமணி ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? என செல்லும் இடங்களில் எல்லாம் கேட்கிறார்கள்.
* நான் செய்த சத்தியத்தை இன்றுவரை காப்பாற்றிக்கொண்டே இருக்கிறேன்.
* அன்புமணியின் பின்னால் 5 சதவீதம் பேர் வட இல்லை. அவருக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.
* நான் நினைத்திருந்தால் இந்திய அளவில் எந்த பதவியில் வேண்டுமானாலும் அமர்ந்திருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை.
* பதவிக்கு வரமாட்டேன் என்ற எனது சத்தியத்தால் தான் நீ 36 வயதில் மத்திய அமைச்சராக ஆனாய்.
* கூட்டணிக்கான காலம் இன்னும் கனியவில்லை, நான் நினைப்பது போன்ற வெற்றி தேர்தலில் கிடைக்கும்.
* அன்புமணி நினைப்பு வந்துவிட்டால், தூக்க மாத்திரை போட்டால் கூட தூக்கம் வருவதில்லை.
* தைலாபுரத்தில் தினந்தோறும் என்னை வந்து சந்திக்கும் பா.ம.க.வினரை நினைத்தால் புத்துணர்ச்சி வந்துவிடுகிறது என்றார்.
- வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு விரைவில் கிடைக்கும்.
- சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு என்னை தினமும் காயப்படுத்துகிறார்கள்.
சேலத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் பா.ம.க. தலைவர் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்தும் விமர்சித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடந்து நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்ணீர் மல்க தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
* செயற்குழுவும், பொதுக்குழுவும் நேற்று முதலே களைகட்டத் தொடங்கி விட்டது.
* பொதுக்குழுவில் 27 தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.
* என்னிடத்தில் உள்ள ஆதங்கத்தை கொட்டித் தீர்க்க ஒரு மணி நேரம் தேவை.
* நான் வளர்த்த பிள்ளைகள் தான் என்னை தூற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
* 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி, நல்ல முடிவு எடுப்பேன்.
* வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு விரைவில் கிடைக்கும்.
* தனது கனவில் தாய் வந்ததை நினைத்து மனம் உடைந்து கண்ணீர் சிந்தினார். அப்போது தொண்டர்கள் அழக் கூடாது ஐயா என கூறினர்.
* பிள்ளையை நான் சரியாக வளர்க்கவில்லை என கனவில் தாயிடம் அழுதேன்.
* என்னை 20- 30 துண்டுகளாக கூட வெட்டி வீசி இருக்கலாம், போய் சேர்ந்திருப்பேன்.
* சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு என்னை தினமும் காயப்படுத்துகிறார்கள்.
* 100-க்கு 95 சதவீத பாட்டாளி மக்கள் தன் பக்கம் தான் இருக்கிறார்கள்.
* அன்புமணி தன்னை நெஞ்சிலும், முதுகிலும் ஈட்டியால் குத்திவிட்டதாக பேசினார்.






