என் மலர்
உள்ளூர் செய்திகள்
- திருப்பூர் குமரன் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கைக்குழந்தையுடன் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமான குப்பைகளை முதலிபாளையம் பகுதியில் உள்ள செயல்படாத கல்குவாரி பாறைக்குழியில் மாநகராட்சி கொட்டி வந்தது.
இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் , விவசாயம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனவே சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட முதலிபாளையம் பகுதியை மாசுபட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், கழிவு மேலாண்மை தொடர்பான புதிய முன்னெடுப்புகளை செய்யக்கூடாது என வலியுறுத்தி முதலிபாளையம்- நல்லூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு சார்பில் விவசாயிகள் திருப்பூர் குமரன் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நோய்வாய்ப்பட்டு விளைச்சல் பாதித்த பாகற்காய், காய்கறி, மஞ்சள் கிழங்கு, தென்னை மற்றும் மாசடைந்த நீர் உள்ளிட்டவற்றை மாலையாக அணிந்து பங்கேற்றனர். கைக்குழந்தையுடன் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோஷங்கள் எழுப்பி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
- குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்கள்
- உங்கள் பெற்றோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
மதுரை:
திருச்சியை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர் சென்னையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த அந்த பெண் திடீரென மாயமாகி உள்ளார். பணிபுரியும் மருத்துவமனைக்கும் பெண் வராததால் அவருடைய பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் காணாமல் போன தனது மகளை ஆஜர்படுத்த கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், மாயமான பெண்ணை ஆஜார்படுத்த உத்தரவிட்டு வழக்கை இன்று ஒத்தி வைத்து இருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பெண் காணொளி காட்சி வாயிலாக ஆஜரானார். நீதிபதிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்தப்பெண் நான் உடன் பணி புரியும் மேற்கு வங்கத்தை சேர்ந்த நபருடன் திருமணம் செய்து கொண்டேன் என கூறினார்.
அதற்கு நீதிபதிகள் குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்கள். காதலிக்க அல்ல. காதல் திருமணம் என்பது பங்குச்சந்தை போல ஏற்றமும் உண்டு இரக்கமும் உண்டு.
நீங்கள் விரும்பியவருடன் செல்வது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் உங்கள் பெற்றோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நீங்கள் படித்தவர்கள், பெற்றோரிடம் முறையாக தகவல் தெரிவித்திருக்க வேண்டும். அவர்களை இப்படி நீதிமன்றம் வாயிலாகவா உங்களை காண செய்வது. உங்கள் பெற்றோரை சமாதானம் செய்திருக்கலாம்.
மேலும் தற்போதைய கால கட்டத்தை பெற்றோர்கள் அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.
பின்னர் நீதிபதிகள் அந்த பெண்ணிடம், உங்கள் கணவருடன் சென்று உங்கள் பெற்றோரை சமாதானம் செய்யுங்கள் என அறிவுரை கூறினார். பின்னர் பெற்றோர்கள் நாங்கள் வயதானவர்கள் எங்களை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என கண்ணீர் வடித்தனர். தொடர்ந்து நீதிபதிகள், பெண் திருமணம் ஆகி அவர் கணவர் உடன் சென்று விட்டார் எனக் கூறி இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
- வண்ணார்பேட்டையில் 2 ஓட்டல்கள், சந்திப்பு பகுதியில் 2 ஓட்டல்களில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு கொண்டாட்டங்கள் நடக்கும்.
- அதிக வழக்குகளில் கைதாகி தற்போது வெளியில் சுற்றித் திரியும் நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நெல்லை:
ஆங்கில புத்தாண்டு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாதவாறு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை மாநகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் இன்று இரவில் இருந்து நாளை மறுநாள் அதிகாலை வரையிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, வாகன சோதனை நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லை மாநகர பகுதியில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர். நாளை காலை முதல் 1-ந்தேதி இரவு வரையிலும் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும். விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், கே.டி.சி.நகர் மேம்பாலம், சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் உள்ளிட்ட இடங்களிலும் இளைஞர்கள் ரேஸ் செல்வதை தடுக்க ரோந்து நடத்தப்பட உள்ளது.
நெல்லை மாநகரில் வண்ணார்பேட்டையில் 2 ஓட்டல்கள், சந்திப்பு பகுதியில் 2 ஓட்டல்களில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு கொண்டாட்டங்கள் நடக்கும். இதனால் அங்கும் சோதனை நடத்தப்பட உள்ளது.
இதேபோல் மாவட்ட எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உத்தரவிட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் தீவிரமாக பரிசோதனை செய்து அனுப்பிட வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். புறநகர் பகுதிகளில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கூடங்குளம் அணுமின் நிலையம், காவல்கிணறு இஸ்ரோ ஆராய்ச்சி மையம் மற்றும் முக்கிய வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் புத்தாண்டையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்கள், அதிக வழக்குகளில் கைதாகி தற்போது வெளியில் சுற்றித் திரியும் நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதில் பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் உள்பட சில போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள ரவுடிகள் 10 பேர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம் மாவட்டத்தில் இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். சுமார் 1,345 பேர் ரவுடிகள் பட்டியலில் உள்ள நிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில், அவர்களை அந்தந்த உட்கோட்டத்தில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டுகளின் மேற்பார்வையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் எனவும், அந்த ரவுடிகளால் அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என புகார்கள் வந்தால் உடனடியாக அவர்களை கைது செய்திடவும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
- 04-மற்றும் 05-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
01-ந்தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
02 மற்றும் 03-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
04-மற்றும் 05-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு / அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு / அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
02-01-2026 மற்றும் 03-01-2026: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அரசியல் கட்சிகள், முழுவீச்சில் தேர்தலுக்கான பணியை தொடங்கி இருக்கின்றன.
- கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை தி.மு.க. அமைத்துள்ளது
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. எனவே அடுத்த சட்டசபைக்கான தேர்தலை அடுத்த ஆண்டு (2026) மே மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது. இது ஒருபுறம் இருக்க அரசியல் கட்சிகள், முழுவீச்சில் தேர்தலுக்கான பணியை தொடங்கி இருக்கின்றன.
தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய 3 கட்சிகளின் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என நான்கு முனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க. ஏற்கனவே தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுடன் இணைந்து வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
கடந்த தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு அதன் தேர்தல் அறிக்கை தான் மிக முக்கிய காரணமாகும். இந்த நிலையில், தி.மு.க.வும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்துள்ளது.
துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை தி.மு.க. அமைத்துள்ளது
இந்நிலையில் தேர்தல் அறிக்கையில் பொதுமக்களின் கருத்துகளை பெறும் விதமாக பிரத்யேக செயலியை தி.மு.க. உருவாக்கி உள்ளது. இந்த செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
- இன்றைக்கு தமிழகத்தில் செவிலியர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகமே போராட்டக் களத்தில் உள்ளது.
- இன்றைக்கு ஊர் தோறும் கருணாநிதி சிலையை திறந்து கருணாநிதிக்கு விளம்பரம் செய்கிறார்கள்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்றைக்கு தமிழக மக்களிடத்தில் நம்பிக்கை இழந்த அரசாக தி.மு.க. அரசு உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடை தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து வருகிறார்கள்.
மக்கள் வரிப்பணத்தில் பாரபட்சத்துடன் திட்டங்களை ஸ்டாலின் அரசு செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள் ஆனால் தி.மு.க.வுக்கு வாக்களிக்க கூடிய கட்சிக்காரர்களுக்கு மட்டும் வரிப்பணத்தை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் திட்டங்களில் பாரபட்சம் இல்லாமல் வரிப்பணத்தை செலவு செய்வதுதான் அரசின் ஜனநாயக இலக்கணம்.
மக்கள் வரிப்பணத்தை கட்சிக்காரர்களுக்கும், தங்களுக்கு வாக்களிப்பவர்களுக்கும் மட்டும்தான் தேடி பார்த்து விதிகளை திருத்தி உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை தி.மு.க. அரசு கொடுப்பதாக மக்களிடம் புகார் எழுந்துள்ளது.
இந்த திட்டத்தில் பாரபட்சமாக செயல்படுவதாக தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எண்ணத்துடன் மக்களைப் பற்றி சிந்திக்காமல் தேர்தலுக்காக திட்டங்களை விரிவுபடுத்தி ஸ்டாலின் அறிவிக்கிறார்.
இன்றைக்கு தமிழகத்தில் செவிலியர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகமே போராட்டக் களத்தில் உள்ளது. ஆனால் அவர்களை ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. கடைக்கோடியில் திட்டங்களை சேர்க்க ஆர்வம் காட்டாமல், தி.மு.க.வின் மண்டல மாநாடு, மகளிர் மாநாடு, இளைஞர் மாநாடு என மாநாட்டு பந்தலுக்கு அக்கறை காட்டுகிறார்.
இன்றைக்கு ஊர் தோறும் கருணாநிதி சிலையை திறந்து கருணாநிதிக்கு விளம்பரம் செய்கிறார்கள். அதே போல் அரசின் திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை சூட்டி ஸ்டாலின் அழகு பார்க்கிறார். இன்றைக்கு கருணாநிதிக்கு விளம்பரம் தேடும் அரசாக உள்ளது. இப்படியே சென்றால் தமிழகம் கருணாநிதி குடும்பத்துக்கு சொந்தம் என்ற நிலையை உருவாக்குவார்கள் எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.
- கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை:
மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6.45 மணிக்கு பவுர்ணமி தொடங்கி, 3-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4.43 மணிக்கு நிறைவு பெறுகிறது.
இந்த நேரத்தில் மலையே சிவனாக வணங்கப்படும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை பக்தர்கள் வலம் வரலாம் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
- நாட்டின் 77-வது குடியரசு தினம் டெல்லியில் உள்ள கடமை பாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
- கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்காதது சர்ச்சையானது.
நாட்டின் 77-வது குடியரசு தினம் டெல்லியில் உள்ள கடமை பாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், குடியரசு தினவிழா அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி இடம் பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்காதது சர்ச்சையான நிலையில் இந்த ஆண்டு அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினவிழா அணி வகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு அரசின் பசுமை மின்சக்தி என்ற தலைப்பில் அலங்கார ஊர்தி பங்கேற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை.
- பூரண சந்திரன் மரணத்திற்கு ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.
திருப்பரங்குன்றம்:
மத்திய மந்திரி எல்.முருகன் திருப்பரங்குன்றம் கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் அதற்காக கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக முயற்சி எடுத்து வருகிறார்கள். கார்த்திகை தீபத்தின்போது பக்தர்கள் இங்கு வந்து முறையிடுவதும், அவர்களை கைது செய்து, அடைத்து வைப்பதும் என ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.
எனவே இது தொடர்பாக பக்தர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்த பிறகும் கூட தீபம் ஏற்ற முடியாத சூழல் இருப்பது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் எந்த அளவுக்கு அராஜகமும், அட்டூழியமும் நடைபெறுகிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.
சி.ஐ.எஸ்.எப். வீரர்களையும் அனுமதிக்க முடியாத அளவிற்கு தி.மு.க.வின் அரசாங்கமும், காவல் துறையும், ஸ்டாலினும் நடந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் கோபம் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய அரசிய லமைப்பு சட்டத்தை தி.மு.க. அரசு காலில் போட்டு மிதிக்கிறார்கள். அம்பேத்கரை மதிக்காத அரசாங்கம் என்றால் அது தி.மு.க. அரசாங்கம் தான். தமிழக மக்கள் சரியான நேரத்தில் அவர்களுக்கு பாடத்தை புகட்டுவார்கள். பூரண சந்திரன் மரணத்திற்கு ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.
மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆர்.எஸ்.எஸ். குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மக்க ளுக்கு துரோகத்தை இழைத்து கொண்டிருப்பவர் திருமாவளவன். அறுபடை முருகனும் தமிழகத்தில் நடக்கும் அட்டூழியத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் இன்னும் இரண்டு மாதத்தில் பதில் கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை அரசால் வழங்கப்பட்டுள்ள பயனாளிகளின் பட்டியல்படி தேடித் தேடி நடத்த வேண்டும்.
- தமிழக அரசின் நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 55,706 பேரைக் கொண்டு அரசு நடத்தவுள்ளது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கைல்,
தமிழ்நாட்டில் அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களால் ஏற்பட்டிருக்கும் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்துவதற்கு ஆணையிட்டிருக்கும் திமுக அரசு, அதற்காக ரூ.43.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. நலத்திட்டங்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கான சர்வே மிகவும் அவசியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரத்தில், இத்தகைய சர்வே நடத்தும் திமுக அரசு, சமூகநீதி நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து சாதிவாரி சர்வே நடத்த மறுப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு அரசு நடத்தவிருக்கும் நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேவுக்கும், சாதிவாரி சர்வேவுக்கு இடையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. நலத்திட்ட தாக்க அறிவிக்கைக்கான சர்வே தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.91 கோடி வீடுகளில் நடத்தப்பட வேண்டும். சாதிவாரி சர்வே என்பது அதைவிட சற்றுக் கூடுதலாக 2.26 கோடி வீடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை அரசால் வழங்கப்பட்டுள்ள பயனாளிகளின் பட்டியல்படி தேடித் தேடி நடத்த வேண்டும்; ஆனால், சாதிவாரி சர்வேயை அனைத்து வீடுகளிலும் மேற்கொள்ளலாம். மொத்தத்தில் பணிச்சுமை, அலைச்சல் ஆகியவை சாதிவாரி சர்வேவுக்கும், நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேவுக்கும் ஒரே அளவிலானவை தான், இன்னும் கேட்டால் சாதிவாரி சர்வே நடத்தும் போது, அதில் எழுப்பப்படும் 70-க்கும் மேற்பட்ட வினாக்களின் வாயிலாகவே நலத்திட்டங்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்து விட முடியும் என்பதால், இதற்காக தனி சர்வே நடத்த வேண்டிய தேவை இருக்காது.
தமிழக அரசின் நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 55,706 பேரைக் கொண்டு அரசு நடத்தவுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு இதை விட 4 மடங்கு அதிகமாக சுமார் 2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். நலத்திட்ட தாக்க சர்வேவுக்கு ரூ.43.52 கோடி செலவாகும் நிலையில், சாதிவாரி சர்வேவுக்கு ரூ. 300 கோடி செலவாகும். இது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கும் குறைவு தான்.
இவை அனைத்துக்கும் மேலாக நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின் அடிப்படையில் தான் மேற்கொள்ள முடியும். இதே சட்டத்தின் அடிப்படையில் சாதிவாரி சர்வேயையும் மேற்கொள்ள முடியும். நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை நடத்த தமிழக அரசுக்கு இருக்கும் அதிகாரம், சாதிவாரி சர்வேயை நடத்துவதற்கு இல்லையா? அனைத்து அதிகாரங்களும் தமிழக அரசுக்கு இருக்கிறது. ஆனால், சமூகநீதிக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற மனம் தான் திமுகவுக்கு இல்லை.
சாதிவாரி சர்வே நடத்தப்பட்டால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிகள் அம்பலமாகிவிடும் என்று திமுக அரசு அஞ்சுகிறது. அதனால் தான் இல்லாத காரணங்களைக் கூறி சாதிவாரி சர்வே நடத்த மறுக்கிறது. ஆனால், சமூகநீதியை நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்க முடியாது. தமிழ்நாட்டில் தற்போதுள்ள சமூக அநீதி ஆட்சி வீழ்த்தப்பட்டு, சமூகநீதி ஆட்சி அமைக்கப்படும் போது கண்டிப்பாக சாதிவாரி சர்வே நடத்தப்படுவதும், அதனடிப்படையில் சமூகநீதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் உறுதி என்று கூறியுள்ளார்.
- கிருஷ்ணனை திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேரள போலீசார் கூறி விட்டு சென்றனர்.
- சிறப்பு விசாரணை குழுவினர் சோதனைக்கு வந்தபோது நான் வீட்டில் இல்லை.
ராஜபாளையம்:
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக் கவசம், நிலைக் கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஆகியவை கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிடப்பட்டது.
அப்போது 4.54 கிலோ தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் பத்ம குமார், வாசு, நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், உன்னி கிருஷ்ணன், தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் உட்பட 10 பேரை எஸ்.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் இந்திரா நகரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு டி.எஸ்.பி சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அதன்பின் கிருஷ்ணனிடம் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்று கிருஷ்ணனை திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேரள போலீசார் கூறி விட்டு சென்றனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப் பெரியாறு பகுதியில் பிறந்து வளர்ந்த கிருஷ்ணன் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பூர்வீக ஊரான ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது இரிடியம் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கிருஷ்ணன் கூறுகையில், சிறப்பு விசாரணை குழுவினர் சோதனைக்கு வந்தபோது நான் வீட்டில் இல்லை. வீட்டில் எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. அதன்பின் போலீசார் அழைப்பின் பேரில் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தேன். என்னிடம் 2 பேரின் பெயர்களை கூறி தெரியுமா? என கேட்டார்கள். நான் தெரியாது எனக்கூறினேன். அவர்கள் சபரிமலை குறித்து என்னிடம் எதுவும் கேட்கவில்லை. எனக்கும் சபரிமலை வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. டிசம்பர் 30-ம் தேதி திருவனந்தபுரம் அலுவலகத்தில் ஆஜராகி விசாரணை குறித்து கையெழுத்திட்டு செல்லுமாறு கூறியுள்ளனர், என்றார்.
- கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 240 பஸ்களும், நாளை 255 பஸ்களும் இயக்கப்படுகிறது.
- 4-ந்தேதி 765 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்.
சென்னை:
புத்தாண்டையொட்டி அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக இன்று முதல் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 240 பஸ்களும், நாளை 255 பஸ்களும் இயக்கப்படுகிறது.
கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் 55 பஸ்களும் மாதவரத்தில் இருந்து 20 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
மேலும் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப ஜனவரி 3-ந்தேதி 525 பஸ்களும், 4-ந்தேதி 765 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்து உள்ளார்.






