என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று தூத்துக்குடி வருகிறார்.
    • பிரதமர் மோடி - எடப்பாடி பழனிசாமி இடையே சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை சந்திப்பு நிகழ வாய்ப்பு உள்ளது.

    அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நாளை மத்திய தொல்லியல்துறை சார்பாக மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை நிறைவு நாள் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    இதையொட்டி பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று தூத்துக்குடி வருகிறார். பின்னர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் இன்று இரவு 10:30 மணிக்கு திருச்சி வருகிறார்.

    இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளது உறுதியானது.

    பிரதமர் மோடி - எடப்பாடி பழனிசாமி இடையே சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை சந்திப்பு நிகழ வாய்ப்பு உள்ளது.

    இன்று இரவு 10.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் பிரதமரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடன் இருப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

    பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • அருவியின் நீர் வரத்தை கோவில் நிர்வாகிகள் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்யவும், மலை மீதுள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இதனால் இன்று காலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு சென்றனர். அருவியின் நீர் வரத்தை கோவில் நிர்வாகிகள் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • 2019 -ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடந்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • முழுமையான விசாரணை அறிக்கை இன்னும் சில நாட்களில் வந்து விடும்.

    சென்னை எழும்பூரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 2019 -ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடந்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    * கிட்னி திருட்டு தொடர்பாக மற்ற மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய வினித் ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    * முழுமையான விசாரணை அறிக்கை இன்னும் சில நாட்களில் வந்து விடும்.

    * கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம். கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்சி விமான நிலையம் முதல் பிரதமர் தங்கும் ஓட்டல் வரை செல்லும் பாதையில் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
    • முதலில் பிரதமர் மோடி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்குவதாக இருந்தது.

    திருச்சி:

    அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நாளை மத்திய தொல்லியல்துறை சார்பாக மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நிறைவு நாள் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (சனிக்கிழமை) தூத்துக்குடி வருகிறார். பின்னர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் இன்று இரவு 10:30 மணிக்கு திருச்சி வருகிறார்.

    பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கோர்ட் யார்டு மாரியாட் ஹோட்டலில் இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11:30 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு செல்கிறார்.

    அங்கு மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெறும் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நிறைவு நாள் விழாவில் கலந்து கொள்கிறார்.

    முன்னதாக நாளை காலை காரில் விமான நிலையம் செல்லும்போது, கோர்ட்டு யார்டு ஹோட்டலில் இருந்து மேஜர் சரவணன் ரவுண்டானா, எம்ஜிஆர் சிலை, நீதிமன்றம், பாரதிதாசன் சாலை, தலைமை தபால் நிலையம், குட் ஷெட் மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், புதுக்கோட்டை சாலை, விமான நிலையம் வரை சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிற்கு பிரதமர் மோடி ரோடு ஷோவாக சென்று மக்களை சந்திக்கிறார்.

    பின்னர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டு செல்கிறார். அங்கு பைபாஸ் சாலையை ஒட்டி பொன்னேரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்குகிறார்.

    பின்னர் அங்கும் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு விழா நடைபெறும் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் வரை ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார். ரோடு ஷோ நடைபெறும் பகுதிகளில் இரும்பு பேரிக்கார்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த ரோடு ஷோவில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்பதாக கூறப்படுகிறது. பிரதமர் தங்கும் ஓட்டலுக்கு 6 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்பிஜி அதிகாரிகள், எல்.பி.ஜி. பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தமிழக காவல்துறையினர், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் மத்திய மாநில அரசுகளின் உளவுத்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருச்சி விமான நிலையம் முதல் பிரதமர் தங்கும் ஓட்டல் வரை செல்லும் பாதையில் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. மேலும் அரியலூர் கங்கைகொண்ட சோழபுரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக முதலில் அமைக்கப்பட்ட பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட ஹெலிபேட் பொன்னேரி பகுதிக்கு மாற்றப்பட்டது.

    அதேபோன்று முதலில் பிரதமர் மோடி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்குவதாக இருந்தது. அதுவும் பாதுகாப்பு காரணங்களால் கடைசி நேரத்தில் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகாமையில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு மாற்றப்பட்டது. பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகர் மற்றும் அரியலூர் கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமய மாதா பேராலயம் உலகப் புகழ்பெற்ற ஆலயமாகும்.

    இந்த ஆலயம் இத்தாலி ரோம் நகரில் அமைந்துள்ள வாடிகன் சிட்டியால் பசிலிகா அந்தஸ்து வழங்கப்பட்ட ஆலயம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு 443-ம் ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு நேற்று மாலை கொடி பவனி நடைபெற்றது. இன்று காலை தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் கூட்டுத் திருப்பலி முடிந்ததும் காலை 8.45 மணியளவில் பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக பங்கு தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்கு தந்தைகள், பொதுமக்கள் கொடியை ஏற்றினர்.

    அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'மரியே வாழ்க' என முழக்கமிட்டனர். மேலும் புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

    மேலும் விழாவை முன்னிட்டு துறைமுகபகுதி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் இருந்து சைரன் ஒலி எழுப்பப்பட்டது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை பேராலய பங்கு தந்தை ஸ்டார்வின் உள்ளிட்டோர் செய்து வருகிறனர்,

    மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு 2 ஏ.டிஎஸ்.பி.கள் 1 ஏ.எஸ்.பி., 5 டி.எஸ்.பி., 15 இன்ஸ்பெக்டர்கள், 35 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி. கேமராக்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.

    பனிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தொடர் கனமழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கானது நீடிக்கிறது.
    • 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று 76.10 அடியாக உள்ளது.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் சாரல் மழையால் அணைகள் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. அம்பை, ராதாபுரம் சுற்று வட்டாரத்தில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக ராதாபுரத்தில் 29 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    அணைகளை பொறுத்தவரை பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை பகுதியில் 15 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நேற்று அந்த அணை நீர்மட்டம் 120 அடியாக இருந்த நிலையில் இன்று 3½ அடி உயர்ந்து 123.40 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 401 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையில் இருந்து பாசனத்திற்காக 1,500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 139.50 அடியை எட்டி உள்ளது. அணை பகுதியில் 14 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 95.62 அடியாக உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் இன்று 3-வது நாளாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. நாலுமுக்கு எஸ்டேட்டில் 2-வது நாளாக 7 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவாகி உள்ளது. ஊத்து எஸ்டேட்டில் 66 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 58 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலையில் 43 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கானது நீடிக்கிறது.

    குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க நேற்று வரை தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்றும் சீற்றம் குறையவில்லை. இதனால் இன்று 8-வது நாளாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடனே திரும்பி செல்கின்றனர். அதே நேரம் புலியருவி மற்றும் சிற்றருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    அணைகளை பொறுத்தவரை 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி நீர்மட்டம் 82 அடியை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் அணை நீர்மட்டம் 2½ அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 100 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அணையில் இருந்து 25 கனஅடிநீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்னும் 2 அடி நீரே தேவைப்படுவதால் அணை இன்று மாலைக்குள் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று 76.10 அடியாக உள்ளது. அணை நீர் இருப்பு இன்று 3 அடி உயர்ந்துள்ளது. கருப்பாநதி அணையில் நேற்று 59.71 அடி நீர் இருப்பு இருந்த நிலையில் இன்று 61.35 அடியாக உள்ளது. குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகள் நிரம்பி வழிகிறது. அதிகபட்சமாக குண்டாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 5 சென்டிமீட்டரும், அடவி நயினார் அணையில் 3 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    • இன்று அதிகாலை கடையில் இருந்து கரும்புகை வெளியே வர தொடங்கியது.
    • தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதன் காரணமாக அக்கம்பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    திருப்பூர்:

    தூத்துக்குடியை சேர்ந்தவர் முருகேசன். இவர் திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையிலேயே படுத்து தூங்கினார்.

    இன்று அதிகாலை கடையில் இருந்து கரும்புகை வெளியே வர தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முருகேசன் கடையில் இருந்து வெளியே வந்தார். தொடர்ந்து வேகமாக பரவிய தீ காரணமாக பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் எரிய தொடங்கியது. மேலும் கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதன் காரணமாக அக்கம்பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    கடந்த சில தினங்களுக்கு முன்புதான் முருகேசன் பல லட்சம் மதிப்பிலான பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்காக வாங்கி வைத்துள்ளார். அவை அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. தீயில் எரிந்து சேதமான பட்டாசுகள் மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொல்கத்தாவில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து நின்றது.
    • கொல்கத்தாவில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து நின்றது.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் ஈரோடு வழியாக வந்து செல்கின்றன.

    சமீப காலமாக வெளி மாநிலங்களில் இருந்து ஈரோடு வரும் ரெயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஈரோடு ரெயில் நிலையத்தில், மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பது குறித்து, ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொல்கத்தாவில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து நின்றது.

    அந்த ரெயிலின் ஒவ்வொரு பெட்டியாக சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியை சோதனை செய்த போது அங்குள்ள கழிப்பறை அருகே கேட்பாரற்று ஒரு சாக்கு பை இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த சாக்கு பையை திறந்து பார்த்தபோது அதில் 6.50 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? அதனை யார் கொண்டு வந்தது? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். சமீப காலமாக ஈரோட்டில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தும் கும்பல் அதிகரித்து வருகிறது.

    இதேபோன்று, ஈரோடு குயவன்திட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, ஈரோடு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அப்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த ஒருவர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அந்த நபரை விரட்டிப் பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மரப்பாலத்தைச் சேர்ந்த முகேஷ் ( 23) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 3.450 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஈரோடு மாநகராட்சி பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்கும் சம்பவம் அதிகரித்து வருவது போலீசாரையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    • தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
    • தொடர் மழையால் சுருளி, மேகமலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுகிறது.

    கூடலூர்

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

    கடந்த 2 நாட்களாக தேனி, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடியில் பெய்து வரும் தொடர் மழையால் நேற்று அணைக்கு நீர்வரத்து 4574 கன அடியாக இருந்தது. நீர்மட்டம் 131.90 அடியாக உயர்ந்தது. இன்று காலை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து 4711 கன அடியாக அதிகரித்துள்ளது.

    நீர் திறப்பு 1867 கன அடியாக உள்ளது. நீர்மட்டம் மேலும் உயர்ந்து 132.95 அடியாக உள்ளது. ரூல்கர்வ் விதிப்பதி இம்மாதம் 30-ந் தேதி வரை 137 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரியாறு அணையில் 28, தேக்கடியில் 21 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட விவசாயம், குடிநீர் தேவைகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாகவும், வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாகவும் நீர்மட்டம் இன்று காலை 65.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1794 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 869 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4818 மி.கன அடியாக உள்ளது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதும், வைகை அணை கரையோரம் உள்ள 5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாயம் எச்சரிக்கை விடப்படும். 68 அடியை எட்டியதும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்.

    தொடர் மழையால் சுருளி, மேகமலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    • மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதன்மூலம் நிலத்தடி நீர் குறைந்து, பொதுமக்கள் தண்ணீருக்கு அல்லல்பட வேண்டிய அவல நிலையும் உருவாகும்.
    • மணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மணல் கடத்தல் நடைபெறுவதும், இதன்மூலம் படுகொலைகள் நடப்பதும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. மணல் கொள்ளையில் ஈடுபடுவோரை தி.மு.க. அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்காமல், அவர்கள்மீது மென்மையான போக்கினை கடைபிடித்து வருவதுதான் இதுபோன்ற கொலைகள் அதிகரிக்க வழிவகுக்குகிறது.

    தி.மு.க. அரசு இதுபோன்ற மென்மையான போக்கினை கடைபிடிப்பதற்குக் காரணம், ஆளும் கட்சியைச் சார்ந்த முக்கியமான அரசியல் புள்ளிகள் மணல் கொள்ளையில் ஈடுபடுவதுதான் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதன்மூலம் நிலத்தடி நீர் குறைந்து, பொதுமக்கள் தண்ணீருக்கு அல்லல்பட வேண்டிய அவல நிலையும் உருவாகும்.

    தமிழ்நாட்டில் நடைபெறும் மணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்து உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்தவும், கொலைகாரர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • போர் நினைவு சின்னத்தில் தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.
    • கார்கிலில் தாய்நாட்டை பாதுகாத்து, தங்கள் உயிரை தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

    கடந்த 1999-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே கார்கில் போர் ஏற்பட்டது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை ஆண்டுதோறும் ஜூலை 26-ந்தேதி கார்கில் போர் வெற்றி தினமாக இந்தியா கடைபிடித்து வருகிறது. இன்றைய தினத்தில் போர் நினைவு சின்னத்தில் தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.

    அதன்படி ஜூலை 26-ந்தேதியான இன்று கார்கில் வெற்றி கொண்டாட்டம் கொண்டாடப்படுகிறது.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கார்கிலில் தாய்நாட்டை பாதுகாத்து, தங்கள் உயிரை தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ராணுவ வீரர்களின் வீரமும் தியாகமும் ஒருபோதும் மறக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த ஜனவரி மாதம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஒரு வாலிபருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது.
    • பணத்தை வாங்கிய கோபால் கும்பல் அவரிடம் தொடர்ந்து பணம் பறிக்க முடிவு செய்தனர்.

    சேலம்:

    சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் சசிசேகர் (44), திருமணமாகி இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவர் தருமபுரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு சேலத்தில் உள்ள மற்றொரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்தார்.

    அப்போது அங்கு பணியாற்றிய திருமணமாகாத இளம்பெண் ஒருவருடன் சசிசேகர் பேசி பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்த பெண்ணுடன் சசிசேகர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஒரு வாலிபருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. திருமணமான 10 நாளில் அந்த பெண் வாந்தி எடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அந்த இளம்பெண் 2 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த அந்த இளம்பெண்ணின் கணவர் திருமணமாகி 10 நாளில் எப்படி 2 மாதம் கர்ப்பம் என்று மனைவியிடம் கேட்டார்.

    அப்போது கதறி அழுத அந்த இளம்பெண் என்னை மன்னித்து விடுங்கள் என கண்ணீர் விட்டு கதறினார். மேலும் தன்னுடன் வேலை பார்த்தவருடன் ஏற்பட்ட பழக்கம் குறித்த விவரத்தையும் கணவரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இதையடுத்து கருவை கலைத்து விட முடிவு செய்த புது மாப்பிள்ளை சசிசேகரை தேடி சென்றார். அவர் அப்போது தனது நண்பரான கோபால் என்பவரையும் உடன் அழைத்து சென்றார். சசிசேகரை பிடித்து எச்சரித்த 2 பேரும் கருவை கலைக்க ரூ.80 ஆயிரம் பணம் கேட்டனர். கொடுக்காவிட்டால் போலீசில் புகார் கொடுக்கப்போவதாகவும் கூறினர்.

    இதனால் பயந்து போன சசிசேகர் உடனடியாக கேட்ட பணத்தை கொடுத்து விட்டார். பணத்தை வாங்கிய புதுமாப்பிள்ளை மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் வேறு யாருக்கும் தெரியாமல் கருவை கலைத்தார். தொடர்ந்து புது மாப்பிள்ளை, மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

    இதையடுத்து புதுமாப்பிள்ளையுடன் சென்ற கோபால் சசிசேகரை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டார். அதன்படி சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடிகளான மோகன் என்ற பாஸ்ட் புட் மோகன், உலகநாதன், பூமாலை ராஜன் ஆகிய 3 பேரை அழைத்து கொண்டு மீண்டும் சசி சேகரை கோபால் சந்தித்தார்.

    அப்போது மேலும் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினர். கேட்ட பணத்தை கொடுக்கவில்லை என்றால் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிடுவோம் , பின்னர் நீ சிறைக்கு சென்று விடுவாய் என்று மிரட்டினர். இதனால் பயந்து போன சசிசேகர் ரூ.9 லட்சம் பணத்தை கொடுத்தார்.

    பணத்தை வாங்கிய கோபால் கும்பல் அவரிடம் தொடர்ந்து பணம் பறிக்க முடிவு செய்தனர். அதன்படி மேலும் ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால் இந்த பிரச்சனையை முடித்து விடலாம் இல்லை என்றால் சிக்கலில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று மிரட்டினர்.

    இதனால் செய்வதறியாது திகைத்த சசிசேகர் ஏற்கனவே இந்த பிரச்சனைக்கு ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்த நிலையில் மேலும் ரூ.10 லட்சம் கொடுக்க முடியாது என்று கூறிய நிலையில் பயந்து போன அவர் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி அழகாபுரம் போலீசில் புகார் கொடுத்த அவர் இந்த பிரச்சனையில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு கதறினார்.

    அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் அந்த பெண்ணின் கணவரின் நண்பரான கோபால் மற்றும் பிரபல ரவுடிகளான மோகன் என்ற பாஸ்ட் புட் மோகன், பூமாலை ராஜன், உலகநாதன் ஆகிய 4 பேர் மீதும் மிரட்டி ரூ.9 லட்சம் பணம் பறித்ததாக வழக்கு பதிவு செய்து அவர்களை தேடினர். அப்போது 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். வழக்கு பதிவு செய்யப்பட்ட கோபால் தவிர மற்ற 3 பேர் மீதும் சேலம் டவுன், அழகாபுரம் போலீஸ் நிலையங்களில் 5-க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×