என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள குடிநீர் வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
சென்னை:
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் குழாயினை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பிரதான குழாயுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் வருகிற 30-ந்தேதி காலை 8 மணி முதல் ஆகஸ்டு 1-ந்தேதி இரவு 10 மணி வரை 3 நாட்கள் அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மண்டலங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள குடிநீர் வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 28, 29-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு விரைவு ரெயில் இருமாா்க்கத்திலும் வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.
- மதுரையில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் கச்சேகுடா செல்லும் ரெயில் ஆக.18 முதல் ஆக.20-ந் தேதி வரை பண்ருட்டியில் நின்று செல்லும்.
தெற்கு ரெயில்வே சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு விரைவு ரெயில் (எண்: 06190/06191) இருமாா்க்கத்திலும் வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வருகிற 30-ந்தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆக.1 முதல் ஆக.31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கச்சேகுடாவில் இருந்து வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு மதுரை செல்லும் சிறப்பு விரைவு ரெயிலும் (எண்: 07191) மறுமாா்க்கமாக மதுரையில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு கச்சேகுடா செல்லும் ரெயிலும் (எண்: 07192) ஆக.18 முதல் ஆக.20-ந் தேதி வரை பண்ருட்டியில் ஒரு நிமிஷம் தற்காலிகமாக நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாலிபர் ஓட்டலில் வேலை பார்த்தபோது சனிக்கிழமை தோறும் விடுமுறை எடுத்து வந்துள்ளான்.
- கைதான வாலிபரிடம் இன்று 2-வது நாளாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில வாலிபரை 15 தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சூலூர்பேட்டை ரெயில் நிலையத்தில் வடமாநில வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அந்த வாலிபரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர் சூலூர்பேட்டையில் உள்ள ஒரு தாபா ஓட்டலில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.
அந்த வாலிபர் ஓட்டலில் வேலை பார்த்தபோது சனிக்கிழமை தோறும் விடுமுறை எடுத்து வந்துள்ளான். கடந்த 12-ந்தேதி சனிக்கிழமையும் விடுமுறை எடுத்துவிட்டு சூலூர்பேட்டையில் இருந்து மின்சார ரெயிலில் ஏறி ஆரம்பாக்கம் வந்துள்ளான். அப்போது அவர் கஞ்சா போதையில் இருந்துள்ளான்.
அந்த நேரத்தில் தான் அவன் சிறுமியை பின்தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளான். மேலும் அவன், கஞ்சா போதையில் ஆரம்பாக்கம், அக்கம்மா பேட்டை, தடா பகுதிகளில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று பொதுமக்கள் குவிந்ததால் கைதான வாலிபரை போலீசார் நேற்று கவரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு விடிய விடிய அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். கும்மிடிப்பூண்டி போலீஸ் டி.எஸ்.பி. ஜெயஸ்ரீ, ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. சாந்தி, திருவள்ளூர் டி.எஸ்.பி. தமிழரசி, திருத்தணி டி.எஸ்.பி. கந்தசாமி ஆகியோர் இன்று காலை கவரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அவர்கள் கைதான வாலிபரிடம் இன்று 2-வது நாளாக விசாரணை நடத்தினார்கள்.
அவனிடம் விசாரணை நடத்தி முடித்த நிலையில் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்தனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு அந்த வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து அவனை வேனில் ஏற்றி மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.
மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லும்போது அந்த வாலிபரை பார்ப்பதற்காக கவரப்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் வாலிபரை தாக்கலாம் என்று கருதி பொதுமக்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அதன் பிறகே வட மாநில வாலிபரை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாபா ஓட்டல் உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவருடைய புகைப்படத்தையோ, பெயர் உள்ளிட்ட விவரங்களையோ போலீசார் வெளியிடவில்லை. வழக்கு விசாரணை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பெயர் மற்றும் விவரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அந்த வாலிபரின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்கள் மூலம் பரவி வருகிறது. அது அந்த வாலிபர்தானா என்பதை போலீசார் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் இன்று ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் வந்து போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் அங்கு இன்று காலையிலேயே 150-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- புனைவு FIR-களுக்கு பெயர்போன திமுக அரசு, அஜித்குமார் வழக்கு போலவே இந்த வழக்கிற்கு என்ன கதை எழுதியுள்ளது என தெரியவில்லை.
- குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை எழும்பூரில் கடந்த ஜூலை 18 அன்று தாக்குதலுக்கு ஆளாகிய ஆயுதப்படை எஸ்.ஐ. ராஜராஜன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சம்பவத்தன்று நள்ளிரவில் மர்ம நபர்களால் எஸ்.ஐ. ராஜராஜன் தாக்கப்பட்டதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புனைவு FIR-களுக்கு பெயர்போன திமுக அரசு, அஜித்குமார் வழக்கு போலவே இந்த வழக்கிற்கு என்ன கதை எழுதியுள்ளது என தெரியவில்லை.
ஆனால், ஒரு காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்குதலுக்கு ஆளாகி, உயிரிழந்துள்ளது என்பது திமுக ஆட்சியின் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதை மீண்டும் மெய்ப்பிக்கிறது.
காவல்துறையினர் தாக்கப்படுவது, ராஜினாமா செய்வது, காவல்துறை சீர்கேடுகள் குறித்து போதுவெளியிலேயே தெரிவிப்பது என தொடர்ந்து வரும் செய்திகள் உணர்த்துவது ஒன்றைத் தான்- காவல்துறையை நிர்வகிக்க வக்கற்ற முதல்வராக இருக்கிறார் பொம்மை முதல்வர் ஸ்டாலின்!
எஸ்.ஐ. ராஜராஜன் கொலை வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- தே.மு.தி.க. சார்பில் மாநில அளவிலான பிரசாரம் வருகிற 3-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது.
- மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் படம் பொருந்திய திறந்த நிலை கேரவன் வாகனத்தை பயன்படுத்த உள்ளோம்.
தமிழக டி.ஜி.பி.யிடம் தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. சார்பில் மாநில அளவிலான பிரசாரம் வருகிற 3-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்காக மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் படம் பொருந்திய திறந்த நிலை கேரவன் வாகனத்தை பயன்படுத்த உள்ளோம். இந்த பிரசாரமானது போலீசாரின் வழிகாட்டுதல்களோடு மக்களிடையே அமைதி, ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும். இதற்காக கட்சி தரப்பில் இருந்து நிர்வாகிகளின் ஒத்துழைப்பு போலீசாருக்கு முழுமையாக வழங்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.
எனவே தே.மு.தி.க.வின் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கி, பிரசாரத்தின்போது பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதலாம் ராஜேந்திர சோழன் வரலாறு போற்றுதலுக்குரியது.
- பாரதப் பிரதமர் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருகை புரிவது மிகவும் பொருத்தமானது.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முதலாம் ராஜேந்திர சோழன் வரலாறு போற்றுதலுக்குரியது. சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவருமான ராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமான ராஜேந்திர சோழன் தீர்க்கதரிசி.
தமிழ்நாட்டு மக்கள் நலன் காக்க, தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல காரணகர்த்தாவாக விளங்கும் பாரதப் பிரதமர் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருகை புரிவது மிகவும் பொருத்தமானது.
தமிழ்நாட்டிற்கு பாரதப் பிரதமரின் வருகையானது கங்கைகொண்ட சோழபுரத்தின் வரலாற்று பெருமைக்கும், தமிழகத்தின் பண்டையக் கால மன்னர்களின் புகழுக்கும் பெருமை சேர்ப்பதோடு, தமிழ்நாட்டின் வருங்கால வளர்ச்சிக்கும் துணை நிற்கும். ராஜேந்திர சோழ மன்னரின் வரலாற்றை இன்றும் நாம் அறிந்து இன்புறுவதற்கு ஏற்ப அவரைப் போற்றி புகழ் பாடுவதற்காக பாரதப் பிரதமர் வருவதை தஞ்சை தரணி மட்டுமல்ல தமிழ்நாடே வரவேற்று, சோழர் காலத்து ஆட்சியை, ஆன்மிகத்தை பறைசாற்றுவோம் என்று த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஏற்கனவே வாங்கிய மனுக்கள் தூங்கியது போல இந்த மனுக்களும் தூங்கும்.
- மக்களுக்கு ஒரு சிகிச்சை. தமிழக முதலமைச்சருக்கு ஒரு சிகிச்சையாக இருக்கிறது?
நெல்லை:
தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்று வீட்டுக்கு வீடு சென்று சொல்லுங்கள் என தமிழக முதலமைச்சர் தெரிவித்து வருகிறார்.
தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ரூ.4800 கோடி திட்ட பணிகளை பிரதமர் தமிழகத்திற்கு வழங்க உள்ளார்.
இதனை வீடு வீடாக சென்று தமிழக முதலமைச்சர் சொல்வாரா? ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று அங்குள்ள பொதுமக்களிடம் வாங்கிய சுமார் 14 லட்சம் மக்கள் இன்னும் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் வருவதை முன்னிட்டு பொதுமக்களை ஏமாற்றும் விதமாக தற்போது உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தையும் தொடங்கி மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
ஏற்கனவே வாங்கிய மனுக்கள் தூங்கியது போல இந்த மனுக்களும் தூங்கும்.
தமிழகத்தில் சுகாதாரத்துறை மிக சிறப்பாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தினம்தோறும் தெரிவித்து வருகிறார். அப்படி என்றால் ஒவ்வொரு மருத்துவமனையும் சிறப்பாக இருப்பதாக தான் அர்த்தம். ஆனால் தமிழக முதலமைச்சர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இருந்தால் ஏன் அவர் நேரடியாக அங்கே சென்று சிகிச்சை பெற்று இருக்கலாமே?. மக்களுக்கு ஒரு சிகிச்சை. தமிழக முதலமைச்சருக்கு ஒரு சிகிச்சையாக இருக்கிறது? பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சி.டி ஸ்கேன் உள்ளிட்ட எந்தவித வசதிகளும் இல்லாமல் இருப்பதும், பிறந்த குழந்தைகளை கூட தரையில் படுக்க வைப்பதும் என்ற நிலையில் தான் தமிழகத்தில் சுகாதாரத்துறை நிலை தொடர்ந்து நிலவிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் பெண்கள், பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையாக இருக்கிறது. தற்போது காவல்துறை டி.எஸ்.பி.க்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையாக இருக்கிறது. ஆகவே தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ. 1 லட்சம் ரொக்கப் பணத்துடன் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக அவர் செல்லும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும்.
தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை மறுத்து உரிமைகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருவதை கண்டித்து இந்த கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி அடுத்த மாதம் ஆகஸ்ட் 20-ந்தேதி தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் முதல்முறையாக விருதுகள் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
ரூ. 1 லட்சம் ரொக்கப் பணத்துடன் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இதற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி மணிக்குமார் தலைமையிலான இந்த குழுவில் வேளாண் விஞ்ஞானி சாமிநாதனின் மகள் சவுமியா சாமிநாதனுடன் நானும் இடம் பெற்றுள்ளேன்.
முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், தங்கபாலு, அழகிரி மற்றும் பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்,
மறைந்த தலைவர்கள் காந்தி, நேரு, காமராஜர், அம்பேத்கர், மவுலானா அப்துல் கலாம் ஆசாத், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய 7 பேரின் பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விழாவுக்கு எங்களது தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரையும் அழைக்க திட்டமிட்டுள்ம்.
இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
பின்னர் அவரிடம் திருச்சி சிவா எம்.பி. காமராஜர் பற்றி பேசிய விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வேகமாக கருத்துக்களை தெரிவிக்கவில்லையே என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து செல்வப்பெருந்தகை கூறும்போது, திருச்சி சிவா எம் பி காமராஜர் பற்றி அந்தக் கருத்தை தெரிவித்திருக்கக் கூடாது. அதற்காக உண்மையிலேயே நாங்கள் வருத்தப்பட்டோம். அதே நேரத்தில் எங்களது கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டிய விதத்தில் தெரிவித்துவிட்டோம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதைத் தாண்டி திருச்சி சிவா தெரிவித்த கருத்துக்கு எதிராக நாங்கள் தடியெடுத்தா போராட்டம் நடத்த முடியும்? இதைத்தான் பலரும் விரும்புகிறார்கள்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணியை விட்டு ஏன் வெளியே வரக்கூடாது என்று பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கேட்கிறார்கள். காமராஜரை கொல்வதற்கு முயற்சி செய்தவர்கள் இப்போது அவரது பிறந்தநாளையும் நினைவு நாளையும் கொண்டாடி வருகிறார்கள். எங்களைத் தவிர காமராஜரை உரிமை கொண்டாடுவதற்கு வேறு யாருக்கும் தகுதி கிடையாது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துள்ளார்.
திமுக, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்த போது குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி பாபர் மசூதி விவகாரம் , காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்று எழுதி வாங்கி வைத்துக்கொண்டது.
ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வோ, பாரதிய ஜனதா சொல்லும் இடத்தில் எல்லாம் கையெழுத்து போடும் நிலையிலேயே உள்ளது. எங்கள் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த விஜயதாரணிக்கு நாங்கள் அப்போதே அறிவுரை கூறினோம். எப்போதும் போல அவரை உள்ளே அழைத்து பாரதிய ஜனதா கட்சி எந்த பொறுப்பையும் கொடுக்காமல் கதவை அடைத்துள்ளது.
கமல்ஹாசன் காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்தவர். அவரது தந்தை காங்கிரசில் சிறப்பாக பணியாற்றியவர் அவரது வழியில் கமல்ஹாசனும் எம்பி பதவியில் சிறப்பாக பணியாற்றுவார் என்றார்.
- நாமக்கல்லில் நடந்த சம்பவம் சிறுநீரகம் திருட்டா அல்லது முறைகேடா என்று பட்டிமன்றம் நடத்த நான் விரும்பவில்லை.
- ஆரம்பகட்ட அறிக்கையின்படி இரண்டு தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த அரசு பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மருத்துவமனைகளுக்கு தேவையான விரிவாக்க கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 82,000 சதுர அடியில் தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ரு. 53 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்ட வருகிறது. இந்த பணி அக்டோபர் மாதம் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
இந்த மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட புற்றுநோய் பாதித்த குழந்தைகள் பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் ஒரே இடத்தில் சிகிச்சை பெற வசதியாக இந்த புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இங்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதியும் செய்யப்படும்.
இதே போல புதிதாக விடுதி கட்டப்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை பெறும் ஏழை குழந்தைகளின் பெற்றோர்கள் தங்குவதற்கு வசதியாக 5.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 அடுக்குமாடிகளுடன் இந்த விடுதி அமைகிறது. கலைஞர் நினைவு மாரத்தான் நடத்தப்பட்டதில் பதிவு கட்டணமாக பெறப்பட்ட ரூ .1 கோடியே 22 லட்சம் இதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரத்தில் இருந்து வரும் ஏழைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்து விட்டு வளாகத்தில் படுத்து தூங்குகிறார்கள்.
அவர்களில் சிலருக்கு சட்டமன்ற விடுதியில் தங்க வைத்து உதவி செய்து வருகிறோம். தங்குவதற்கு இடமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளின் பெற்றோர்கள் 100 பேர் தங்கி சிகிச்சை பெற முடியும். செப்டம்பர் மாத இறுதியில் இந்த பணிகள் நிறைவடைகிறது. குழந்தைகள் சிகிச்சை பெரும் வரை பெற்றோர்கள் இங்கு தங்கிக் கொள்ளலாம். அவர்களுக்கு மூன்று வேலையும் இலவசமாக உணவு வழங்கப்படும். தங்குவதற்கு எவ்வித கட்டணமும் இல்லை.
தரைதளத்தில் சமையலறையும் உணவுக்கூடமும் அமைகிறது. ஒரு தளத்தில் 25 படுக்கைகள் வீதம் நான்கு தளத்தில் 100 படுக்கை வசதி செய்யப்படுகிறது.
நாமக்கல்லில் நடந்த சம்பவம் சிறுநீரகம் திருட்டா அல்லது முறைகேடா என்று பட்டிமன்றம் நடத்த நான் விரும்பவில்லை. அண்ணாமலை எப்படி சொன்னாலும் நான் கவலைப்படவில்லை. 2019-ம் ஆண்டில் இதே நாமக்கல்லில் நடந்த சிறுநீரக முறைகேடு வழக்கில் அ.தி.மு.க. அரசு வழக்கு பதிவு செய்ததோடு சரி. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே ஊரில் தான் இப்போதும் சிறுநீரக முறைகேடு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுத்து உள்ளார்.
ஆரம்பகட்ட அறிக்கையின்படி இரண்டு தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 4 அல்லது 5 நாட்களில் முழுமையான அறிக்கை வரும். அப்போது இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இது மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளை விற்று பிழைப்பது ஈனப் பிழைப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மருத்துவக் கல்வி இயக்குனர் தேரணி ராஜன், இயக்குனர்கள் லட்சுமி வேல்முருகன், சுமதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- முனியன் என்பவரது மனைவி பானுமதி 5 மாத கர்ப்பிணியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- இன்று காலை நகர்நல அலுவலர் முருகன், டி.எஸ்.கே., மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர்:
திருப்பூர் அவிநாசி சாலை பங்களா ஸ்டாப் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் டி.எஸ்.கே. மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்பூர் வடக்கு பகுதியை சேர்ந்த ஏராளமான கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்குப்பட்ட சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த முனியன் என்பவரது மனைவி பானுமதி 5 மாத கர்ப்பிணியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று வழக்கமான பரிசோதனைக்கு சென்று இருந்த பானுமதிக்கு குளுக்கோஸ் பாக்கெட்கள் வழங்கி உள்ளனர். அதில் காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பானுமதி கேட்டபோது, ஆஸ்பத்திரி ஊழியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பானுமதி தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி உதவி நல அலுவலர் கலைச்செல்வன், ஆஸ்பத்திரிக்கு வந்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் ஆஸ்பத்திரியில் இருந்த குளுக்கோஸ் பாக்கெட்டுகளையும் ஆய்வு செய்தார்.
அப்போது அதில் ஒரு சில காலாவதியான பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கவனக்குறைவாக நடந்து கொண்ட ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு அவர் கடும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் விசாரணை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை நகர்நல அலுவலர் முருகன், டி.எஸ்.கே., மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து விசாரணையின் அடிப்படையில் மருத்துவமனையின் மருந்தாளுனர் வீர பராசக்தி, ஆய்வக நுட்பனர் நாகஜோதி, செவிலியர் கோமதி உள்ளிட்டோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட்டுகள் அப்புறப்படுத்தப்பட்டது. அஜாக்கிரதையாக செயல்படாமல் கவனமாக செயல்பட மருத்துவர்கள் முன்னிலையில் மருத்துவ பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கிறார்.
- மருத்துவமனையில் இருந்தபடியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பணிகளை செய்து வருகிறார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த திங்கட்கிழமை காலை நடைப்பயிற்சி சென்றபோது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது.
இதனால் அவர் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்தார். அப்போது டாக்டர்கள் அவரை 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கொள்ளப்பட்ட தொடர் மருத்துவ பரிசோதனை மூலம் அவரது இதயம் சீராக இயங்கவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவரது இதய செயல்பாடுகள் சிறப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. என்றாலும் மேலும் ஓரிரு தினங்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தினமும் அவரது குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் சந்தித்து பேசி வருகிறார்கள். இதன் மூலம் மருத்துவமனையில் இருந்தபடியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பணிகளை செய்து வருகிறார்.
இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்தித்து பேசினார். அப்போது தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் தமிழகத்துக்கு தேவையான கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பிரதமர் மோடியிடம் தமிழக அரசு சார்பில் கொடுக்க வேண்டிய மனு தயாரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டது. அதை அவர் இன்று ஆய்வு செய்தார். பிறகு அந்த மனுவில் கையெழுத்திட்டார்.
இந்த மனுவை பிரதமர் மோடியிடம் அமைச்சர் தென்னரசு கொடுக்க உள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன்.
நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் மோடியிடம் வழங்குவார்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






