என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கருப்பு கொடி போராட்டம்- செல்வப்பெருந்தகை
    X

    தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கருப்பு கொடி போராட்டம்- செல்வப்பெருந்தகை

    • ரூ. 1 லட்சம் ரொக்கப் பணத்துடன் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக அவர் செல்லும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும்.

    தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை மறுத்து உரிமைகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருவதை கண்டித்து இந்த கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி அடுத்த மாதம் ஆகஸ்ட் 20-ந்தேதி தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் முதல்முறையாக விருதுகள் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

    ரூ. 1 லட்சம் ரொக்கப் பணத்துடன் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

    இதற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி மணிக்குமார் தலைமையிலான இந்த குழுவில் வேளாண் விஞ்ஞானி சாமிநாதனின் மகள் சவுமியா சாமிநாதனுடன் நானும் இடம் பெற்றுள்ளேன்.

    முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், தங்கபாலு, அழகிரி மற்றும் பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்,

    மறைந்த தலைவர்கள் காந்தி, நேரு, காமராஜர், அம்பேத்கர், மவுலானா அப்துல் கலாம் ஆசாத், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய 7 பேரின் பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விழாவுக்கு எங்களது தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரையும் அழைக்க திட்டமிட்டுள்ம்.

    இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

    பின்னர் அவரிடம் திருச்சி சிவா எம்.பி. காமராஜர் பற்றி பேசிய விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வேகமாக கருத்துக்களை தெரிவிக்கவில்லையே என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்து செல்வப்பெருந்தகை கூறும்போது, திருச்சி சிவா எம் பி காமராஜர் பற்றி அந்தக் கருத்தை தெரிவித்திருக்கக் கூடாது. அதற்காக உண்மையிலேயே நாங்கள் வருத்தப்பட்டோம். அதே நேரத்தில் எங்களது கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டிய விதத்தில் தெரிவித்துவிட்டோம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதைத் தாண்டி திருச்சி சிவா தெரிவித்த கருத்துக்கு எதிராக நாங்கள் தடியெடுத்தா போராட்டம் நடத்த முடியும்? இதைத்தான் பலரும் விரும்புகிறார்கள்.

    இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணியை விட்டு ஏன் வெளியே வரக்கூடாது என்று பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கேட்கிறார்கள். காமராஜரை கொல்வதற்கு முயற்சி செய்தவர்கள் இப்போது அவரது பிறந்தநாளையும் நினைவு நாளையும் கொண்டாடி வருகிறார்கள். எங்களைத் தவிர காமராஜரை உரிமை கொண்டாடுவதற்கு வேறு யாருக்கும் தகுதி கிடையாது.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துள்ளார்.

    திமுக, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்த போது குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி பாபர் மசூதி விவகாரம் , காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்று எழுதி வாங்கி வைத்துக்கொண்டது.

    ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வோ, பாரதிய ஜனதா சொல்லும் இடத்தில் எல்லாம் கையெழுத்து போடும் நிலையிலேயே உள்ளது. எங்கள் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த விஜயதாரணிக்கு நாங்கள் அப்போதே அறிவுரை கூறினோம். எப்போதும் போல அவரை உள்ளே அழைத்து பாரதிய ஜனதா கட்சி எந்த பொறுப்பையும் கொடுக்காமல் கதவை அடைத்துள்ளது.

    கமல்ஹாசன் காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்தவர். அவரது தந்தை காங்கிரசில் சிறப்பாக பணியாற்றியவர் அவரது வழியில் கமல்ஹாசனும் எம்பி பதவியில் சிறப்பாக பணியாற்றுவார் என்றார்.

    Next Story
    ×