என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகம் வரும் பிரதமரிடம் மாநில அரசின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்படும் - மு.க.ஸ்டாலின்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கிறார்.
- மருத்துவமனையில் இருந்தபடியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பணிகளை செய்து வருகிறார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த திங்கட்கிழமை காலை நடைப்பயிற்சி சென்றபோது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது.
இதனால் அவர் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்தார். அப்போது டாக்டர்கள் அவரை 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கொள்ளப்பட்ட தொடர் மருத்துவ பரிசோதனை மூலம் அவரது இதயம் சீராக இயங்கவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவரது இதய செயல்பாடுகள் சிறப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. என்றாலும் மேலும் ஓரிரு தினங்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தினமும் அவரது குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் சந்தித்து பேசி வருகிறார்கள். இதன் மூலம் மருத்துவமனையில் இருந்தபடியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பணிகளை செய்து வருகிறார்.
இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்தித்து பேசினார். அப்போது தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் தமிழகத்துக்கு தேவையான கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பிரதமர் மோடியிடம் தமிழக அரசு சார்பில் கொடுக்க வேண்டிய மனு தயாரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டது. அதை அவர் இன்று ஆய்வு செய்தார். பிறகு அந்த மனுவில் கையெழுத்திட்டார்.
இந்த மனுவை பிரதமர் மோடியிடம் அமைச்சர் தென்னரசு கொடுக்க உள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன்.
நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் மோடியிடம் வழங்குவார்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






