என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மாநாட்டில் பங்கேற்க வருபவர்களுக்காக பூம்புகார் எல்லைகளில் வழிகாட்டி பலகைகள், அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட போலீஸ் துறை சார்பில் 41 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பூம்புகாரில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு இன்று மாலை பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் தலைமையில் நடக்கிறது.
பெண் உரிமையை காக்க, பெண்கள் முன்னேற்றம் காண, பெண்களுக்கு எதிரான வன்முறையை போக்கிட, அரசு பதவிகளில் பெண்கள் அதிகாரத்தில் அமர்ந்திட, மது, போதை பொருட்களால் ஏற்படும் சீரழிவில் இருந்து பாதுகாத்திட, சம உரிமை, சம அந்தஸ்து, சம வாய்ப்பு, சமபங்கு என அனைத்திலும் பெண்கள் முன்னேற்றம் காண பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் வன்னிய மகளிர் பெருவிழா மாநாடு இன்று மாலை 3 மணியளவில் நடக்கிறது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தலைமையில் நடக்கும் மாநாட்டில் சரஸ்வதி ராமதாஸ், மகள் காந்திமதி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்கள் ம.க.ஸ்டாலின், பாக்கம்.சக்திவேல், தஞ்சை மண்டல பா.ம.க. செயலாளர் ஐயப்பன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பா.ம.க. வன்னியர் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான மகளிர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அனைத்து ஜாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பிரதானமாக அமைய உள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர்கள் என சுமார் 3 லட்சம் பேர் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பிரமாண்ட நுழைவாயிலுடன் கூடிய பந்தல் அமைக்கப்பட்டு, மேடை போடப்பட்டு, அனைத்து பணிகளும் நிறைவடைந்தது.
மாநாட்டில் பங்கேற்க வருபவர்களுக்காக பூம்புகார் எல்லைகளில் வழிகாட்டி பலகைகள், அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக மணி கிராமம், மேலையூர், பல்லவனேஸ்வரம், காவிரிப்பூம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தும் இடமும் அமைக்கப்பட்டு, அதற்கான முறையான வழிகாட்டி பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் மகளிர் தொண்டர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர்கள் மாநாட்டில் பங்கேற்று மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்பும் வகையில் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டில் பங்கேற்க வருபவர்கள் பூம்புகார் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டு, அதனை கடலோர காவல் குழும போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மாநாட்டிற்கு பங்கேற்பவர்களுக்கு உரிய குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டு பந்தலில் அனைவரும் அமரும் வகையில் விரிவான பந்தல் மற்றும் இருக்கைகள் அமைக்கப்பட்டு மாநாட்டு நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டு களிக்கும் வகையில் ஏராளமான எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு, மின்னொளியில் பந்தல்கள் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்சு வசதிகள், சுகாதார குழுவினர்களும் அமைக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்ட போலீஸ் துறை சார்பில் 41 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் என ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று (சனிக்கிழமை) பொதுகுழு நடத்தப்பட்டு, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று டாக்டர்.ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இது ஒரு முழு அளவிலான போர் அல்ல, மாறாக இது ஒரு கிரே சோன் (Grey zone)
- இந்த நடவடிக்கையை ஒரு டெஸ்ட் போட்டி போன்றது.
ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர திவேதி ஐஐடி மெட்ராஸில் அக்னிசோத் என்ற ஆராய்ச்சிப் பிரிவைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒரு சதுரங்க விளையாட்டு போன்றது. ஏனென்றால், எதிரி இங்கே என்ன செய்வார், நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது யாருக்கும் தெளிவாகத் தெரியாது.
இது ஒரு முழு அளவிலான போர் அல்ல, மாறாக இது ஒரு கிரே சோன் (Grey zone). நமது வழக்கமான நடவடிக்கையை விட வித்தியாசமானது.
நாங்கள் சதுரங்க நகர்வுகளைச் செய்து கொண்டிருந்தோம். அவர்களும் சதுரங்க நகர்வுகளைச் செய்து கொண்டிருந்தார். எங்கோ நாங்கள் அவர்களுக்கு செக்மேட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தோம்.
இந்த நடவடிக்கைக்கான திட்டமிடல் ஏப்ரல் 23 அன்று தொடங்கியது. அன்று, முப்படைகளின் தளபதிகளும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஒரு முடிவுக்கு வந்தனர். எந்த முக்கிய முடிவையும் எடுக்க இராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 25 ஆம் தேதிக்குள், திட்டத்தைத் தயாரித்து, ஒன்பது இலக்குகளில் ஏழு தாக்குதல்களை நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல்களில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நடவடிக்கை முந்தைய உரி மற்றும் பாலகோட் நடவடிக்கைகளிலிருந்து வேறுபட்டது. உரி நடவடிக்கையில், ஏவுதளங்கள் குறிவைக்கப்பட்டது.
பாலகோட்டில், பாகிஸ்தானில் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆனால் ஆபரேஷன் சிந்தூரில் நாங்கள் எதிரி பிரதேசத்திற்குள் சென்று நர்சரி மற்றும் மாஸ்டர்ஸ் என்ற குறியீட்டுப் பெயர்களைக் கொண்ட முக்கிய இலக்குகளை அழித்தோம்.
இந்த நடவடிக்கையில் ஐந்து இலக்குகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரிலும், நான்கு இலக்குகள் பஞ்சாபிலும் உள்ளன. இந்த நடவடிக்கையை ஒரு டெஸ்ட் போட்டி போன்றது.
இந்த டெஸ்ட் போட்டி நான்காவது நாளில் நிறுத்தப்பட்டது. ஆனால் இது 14, 140 நாட்கள் அல்லது 1400 நாட்களுக்கு கூட தொடரலாம், மேலும் நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் தங்கள் நாட்டவரை திருப்திப்படுத்த பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் தவறான தகவல்களை கூறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங்கும் ஆபரேஷன் சிந்தூரில் 5 பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியகாக நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
- தூய்மைப் பணியாளர்களுடன் அரசுத் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகல் விரைவில் தீர்வு ஏற்படும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 10-வது நாளை எட்டி உள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம் சந்தித்தார். 10-வது நாளாக தொடரும் அவர்களது போராட்டத்திற்கு அவர் முழு ஆதரவு தெரிவித்தார்.
தூய்மைப் பணியாளர்களுடன் அரசுத் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகல் விரைவில் தீர்வு ஏற்படும். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
- புரட்சித் தலைவரின் மக்கள் செல்வாக்கு தான் தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது.
- புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரை விமர்சிப்பது நியாயமற்ற செயல்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"உன் முகத்தைக் காட்டினால் முப்பது இலட்சம் வாக்குகள் நிச்சயம்" என்று பேரறிஞர் அண்ணா அவர்களே பாராட்டும் அளவுக்கு மக்கள் செல்வாக்கைப் பெற்றத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். புரட்சித் தலைவரின் மக்கள் செல்வாக்கு தான் தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்து, முதல் இடைத் தேர்தலிலேயே தனக்குள்ள மக்கள் செல்வாக்கை நிருபித்தவர். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றதுடன், தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை அமைத்து முதலமைச்சராகவே மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்குச் சென்றவர் புரட்சித் தலைவர் அவர்கள். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் புரட்சித் தலைவர். அவர் தோற்றுவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் இயக்கமும் அனைவருக்குமான ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இந்தக் கொள்கை தான், மொத்தமுள்ள 58 ஆண்டு கால திராவிட ஆட்சியில், 30 ஆண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைய வழிவகுத்தது.
இப்படிப்பட்ட மக்கள் தலைவரை, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை, திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவச் செய்தவர் என்றும், ஒரு பார்ப்பனிய பெண் திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தவர் என்றும் தொல் திருமாவளவன் பேசி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 30 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்திய பெருமைக்குரியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு வாங்கிக் கொடுத்தவர் சமூக நீதிகாத்த வீராங்கணை புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்று அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரை விமர்சிப்பது நியாயமற்ற செயல். வருகின்ற தேர்தலில், கூடுதல் தொகுதிகள் வாங்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவோ தி.மு.க.வையோ அல்லது தி.மு.க. தலைவரையோ திருமாவளவன் அவர்கள் புகழ்ந்து பேசுவதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது. அதே சமயத்தில், மக்கள் செல்வாக்கு பெற்ற, சாதி மதங்களைக் கடந்த மறைந்த தலைவர்களை விமர்சிப்பது என்பது நாகரிகமற்ற செயல். "எங்கிருந்தாலும் வாழ்க" என்று வாழ்த்திய அம்மா அவர்களை சாதியின் பெயரால் விமர்சிப்பது நியாயமா என்பதை தொல் திருமாவளவன் அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
"வறியவர்களுக்கு வழங்கிய வள்ளல்களின் புகழைப் பற்றித்தான் உலகம் எப்போதும் சிறப்பாகப் பேசும்" என்ற வள்ளுவரின் வாக்கிற்கு முற்றிலும் முரணாக தொல் திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பது அவருக்கு நல்லதல்ல. அது அவரின் அரசியல் மேம்பாட்டிற்கு வழிவகுக்காது. எனவே, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் குறித்த விமர்சனத்தை தொல் திருமாவளவன் அவர்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல்வேறு இடங்களில் யானைகள் கூட்டம் தனித்தனியாக முகாமிட்டு சுற்றி திரிகின்றன.
- சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறையில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அதிலும் குறிப்பாக கருமலை, சிறுகுன்றா, வெள்ளமலை, புதுத்தோட்டம், தாய்முடி, நடுமலை அம்மையப்பன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் முகாமிட்டு உள்ளன.
மேலும் வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டின் பல்வேறு இடங்களில் யானைகள் கூட்டம் தனித்தனியாக முகாமிட்டு சுற்றி திரிகின்றன. இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு அரசு பஸ் வால்பாறைக்கு புறப்பட்டு சென்றது.
அப்போது 3-வது கொண்டை ஊசி வளைவு அருகே குட்டியுடன் நின்ற 3 யானைகள் சாலையை வழிமறித்து நின்றன. இதனை பார்த்த அரசு பஸ் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். பயணிகளும் பீதி அடைந்தனர்.
அரசு பஸ் டிரைவர் உடனடியாக வாகனத்தை பின்னோக்கி இயக்கினார். தொடர்ந்து பஸ்சின் பின்னால் வந்த வாகனங்களும் நிறுத்தப்பட்டன.
வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் சிறிது நேரம் சுற்றி திரிந்த யானைகள் பின்னர் சாலையோரம் ஒதுங்கி சென்றன. அதன்பிறகு அந்த பகுதியில் வாகன போக்குவரத்து இயல்பு நிலைக்கு வந்தது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பருவமழைக்கு பிறகு மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதனால் வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த ரோட்டில் இரவு நேரத்தில் செல்வோர் வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும். மேலும் யானைகள் எதிரில் தென்பட்டால், சிறிது நேரம் அமைதியாக இருந்தாலே அவை விலகி சென்று விடும். ஹாரன் ஒலித்து யானைகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- ராயக்கோட்டையில் 4.10 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது.
- எடப்பாடி பழனிசாமி ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
கிருஷ்ணகிரி:
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் சட்டசபை தொகுதிகள் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அவரது 3-ம் கட்ட சுற்றுப்பயணம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்குகிறது. நாளை 11-ந்தேதி தொடங்கி மறுநாள் 12-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இதற்காக நாளை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அன்றைய தினம் தளி, ஓசூர், வேப்பனப்பள்ளி சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்கிறார்.
அதன்படி நாளை 11-ந்தேதி (திங்கட்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்துள்ள காடு செட்டிப் பள்ளிக்கு மாலை 3.40 மணிக்கு எடப்பாடி பழனிசாமி வருகிறார். அங்கு அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
அதனை அடுத்து ராயக்கோட்டையில் 4.10 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது.
தேன்கனிக்கோட்டையில் மாலை 5.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. ஓசூர் ராம்நகர், சூளகிரி ரவுண்டானா ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பின்னர் அவர் ஓசூரில் தனியார் தங்கும் விடுதியில் இரவு ஓய்வு எடுக்கிறார்.
பின்னர் மறுநாள் 12-ந்தேதி காலை 8 மணிக்கு ஓசூரில் புதிய மாவட்ட கட்சி அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். அங்கிருந்து புறப்பட்டு அவர் ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
இதனையடுத்து ஓட்டலில் சிறுகுறு தொழில் நிறுவன பிரதிநிதிகள், விவசாயிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு மற்றும் தனியார் பள்ளி பிரதிநிதிகள், பில்டர் ஒனர்ஸ் அசோசியசன், நியமன தேர்தலில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு பிரதி நிதிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆகியோர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். பின்னர் அவர் 12.30 மணிக்கு முக்கிய விருந்தினர்கள், கூட்டணி கட்சியினரை சந்தித்தும் பேசுகிறார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மாலை 4.30 மணிக்கு ஓசூரில் இருந்து புறப்பட்டு சூளகிரி தேசிய நெடுஞ்சாலை வழியாக கிருஷ்ணகிரி பேருந்து நிலையம், டி.பி.ரோடு, காந்தி சிலை வழியாக வந்து அரசு மருத்துவமனையில் இருந்து (ரோடு ஷோ) நடைபயணம் மேற்கொள்கிறார்.
கிருஷ்ணகிரி ரவுண்டானா வாசவி கேப் அருகில் மாலை 5 மணிக்கு எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு பர்கூர் எம்.ஜி.ஆர். சிலை அருகிலும், 8.30 மணிக்கு ஊத்தங்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகிலும் மக்களை சந்திக்கிறார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளன. அ.தி.மு.க.வில் உள்ள பல்வேறு அணிகளின் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை, மாவட்ட செயலாளர்கள் அசோக்குமார், பாலகிருஷ்ணரெட்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
தெற்கு கடலோர ஆந்திரபிரதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கோவை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
- மூத்த அண்ணனுக்குப் பிறந்தநாள்!
- தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மூத்த அண்ணனுக்குப் பிறந்தநாள்!
நெருப்பாறுகள் பல நீந்தி, கழகத்தின் மனச்சாட்சியாக - தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84!
அரசியலில் தெளிவு, வரலாற்றில் ஆழம், இன உணர்வில் தீரம், கலை - இலக்கியத்தில் செழுமை எனச் செயல்படும் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையை வாழ்த்துகிறேன்!
இன்றைய செய்திகளைப் பதிவு செய்து, கருத்தாழமிக்க கட்டுரைகளால் சிந்தனையூட்டி நாளைய வரலாற்றை எழுத உணர்வளிக்கும் முரசொலியின் பயணம் என்றென்றும் தொடரட்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.
- தமிழகம், கேரளாவில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.
படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் அமெரிக்கா மற்றும் ஓவர்சீஸ் நாடுகளில் தொடங்கி அதிரடி புக்கிங்ஸ் நடந்து வருகிறது. படத்தின் பிரீமியர் ஷோவிற்கு வட அமெரிக்கா நாட்டில் 50,000-க்கு மேற்பட்ட டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் நேற்று டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ரசிகர்கள் காலையிலேயே தியேட்டர் வாசலில் வரிசையில் நின்று அடித்து பிடித்து டிக்கெட் புக் செய்தனர். இதேபோல், தமிழ்நாட்டிலும் டிக்கெட் முன்பதிவு நேற்று இரவு தொடங்கியது. ரசிகர்கள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவிலும் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று இரவு 9 மணிக்கு தொடங்கியது. ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இப்படம் முன்பதிவுகளில் மட்டுமே பல கோடிகள் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மீனவர்கள் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பபடுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
- அவர்களின் குடும்பங்களுக்கு கடுமையான மன உளைச்சலையும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்கள் சிறைபிடிப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், இன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் இலங்கை கடற்படையினரால் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு இந்திய மீனவர்கள் அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுடன் சிறைபிடிக்கப்பட்ட மற்றொரு துயரமான சம்பவத்தை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு கடலை நம்பியே உயிர்வாழ்ந்து வரும் நிலையில் தற்போது சிறை வாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்கள் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பபடுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் குடும்பங்களுக்கு கடுமையான மன உளைச்சலையும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தை திறம்படக் கையாண்டு, கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட இந்திய அரசு உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அவரச சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு சென்று ஆய்வு .
- பணியாளர்களின் வருகைப் பதிவேடு, உள் மற்றும் புற மருத்துவ பயனாளிகளின் சிகிச்சை விவர பதிவேடுகள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள தாம்பரம்– மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கட்டடத்தை திறந்து வைத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
பிறகு, விழா முடிவுற்று இல்லம் செல்லும் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மருத்துவமனையில் உள்ள அவரச சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, ரத்த பரிசோதனை, சளி பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சதை பரிசோதனை உள்ளிட்ட அனைத்து விதமான பரிசோதனைகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளும் உயர்தர மத்திய ஆய்வகத்தையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மருத்துவமனை இயக்குநர், சிகிச்சை பெற்று வரும் 121 புற மருத்துவ பயனாளிகள் (out patients), 326 உள் மருத்துவ பயனாளிகளுக்கு (In patients), மத்திய ஆய்வகத்தில் இன்றைய தினம் இதுவரை 2390 பல்வேறு வகை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அம்மருத்துவமனையில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவ பயனாளியிடம் அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை விவரங்கள் குறித்து, முதலமைச்சர் கேட்டறிந்தார். அப்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை நல்ல முறையில் அளிப்பதாகவும், நன்றாக கவனித்துகொள்வதாகவும் முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்தார்.
பின்னர், பணியாளர்களின் வருகைப் பதிவேடு, உள் மற்றும் புற மருத்துவ பயனாளிகளின் சிகிச்சை விவர பதிவேடுகள், மருந்துகள் இருப்பு பதிவேடு போன்றவற்றை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதன் விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அத்துடன், மருத்துவமனையை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என்றும், இம்மருத்துவமனையில் மருத்துவ பயனாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை காலதாமதமின்றி வழங்கிட வேண்டும் என்றும், அத்தியாவசிய மருந்துகள் தேவையான அளவிற்கு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சென்னை தனியார் நிறுவனத்தில் ஜெயராமன் பண ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
- போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவை:
கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது45). நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் முருகப்பெருமாள்(26).
இவர்கள் 2 பேரும் கோவை செட்டிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, நாங்கள் குடிபோதையில் ஜெயராமன் என்பவரை கொன்று கிணற்றில் வீசியதாக கூறி சரண் அடைந்தனர்.
போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் கிடந்த ஜெயராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
இதற்கிடையே செட்டிப்பாளையம் போலீசார் ஜெயராமன் படுகொலை தொடர்பாக சரண் அடைந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவை கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட ஜெயராமன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
அப்போது இதே நிறுவனத்தில் டிரைவர்களாக வேலை பார்த்த பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகியோரிடம் ஜெயராமனுக்கு பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் இரவு நேரங்களில் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பதை வாடிக்கையாக கொண்டு இருந்தனர்.
இதற்கிடையே சென்னை தனியார் நிறுவனத்தில் ஜெயராமன் பண ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரிடம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஜெயராமன் தனது சக நண்பர்களான பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகியோருடன் சம்பவத்தன்று ஒன்றாக அமர்ந்து மது குடித்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.
ஜெயராமனுக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருக்கிறது. இந்த நிலையில் அவர் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனால் பயந்து போன 2 பேரும் தனியார் நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு பேசிவிட்டு பின்னர் ஜெயராமன் உடலை காரில் கோவைக்கு கொண்டுவந்து கிணற்றில் வீசியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
கோவை கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட ஜெயராமன் படுகொலையில் நுங்கம்பாக்கம் தொழில் அதிபர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தே கிக்கின்றனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை போலீசார் சென்னைக்கு விரைந்து உள்ளனர். விசாரணைக்கு பிறகு தான் ஜெயராமன் எப்படி இறந்தார் என்பது பற்றிய உண்மையான விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.






