என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி 2 நாள் சுற்றுப்பயணம்
- ராயக்கோட்டையில் 4.10 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது.
- எடப்பாடி பழனிசாமி ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
கிருஷ்ணகிரி:
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் சட்டசபை தொகுதிகள் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அவரது 3-ம் கட்ட சுற்றுப்பயணம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்குகிறது. நாளை 11-ந்தேதி தொடங்கி மறுநாள் 12-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இதற்காக நாளை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அன்றைய தினம் தளி, ஓசூர், வேப்பனப்பள்ளி சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்கிறார்.
அதன்படி நாளை 11-ந்தேதி (திங்கட்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்துள்ள காடு செட்டிப் பள்ளிக்கு மாலை 3.40 மணிக்கு எடப்பாடி பழனிசாமி வருகிறார். அங்கு அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
அதனை அடுத்து ராயக்கோட்டையில் 4.10 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது.
தேன்கனிக்கோட்டையில் மாலை 5.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. ஓசூர் ராம்நகர், சூளகிரி ரவுண்டானா ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பின்னர் அவர் ஓசூரில் தனியார் தங்கும் விடுதியில் இரவு ஓய்வு எடுக்கிறார்.
பின்னர் மறுநாள் 12-ந்தேதி காலை 8 மணிக்கு ஓசூரில் புதிய மாவட்ட கட்சி அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். அங்கிருந்து புறப்பட்டு அவர் ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
இதனையடுத்து ஓட்டலில் சிறுகுறு தொழில் நிறுவன பிரதிநிதிகள், விவசாயிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு மற்றும் தனியார் பள்ளி பிரதிநிதிகள், பில்டர் ஒனர்ஸ் அசோசியசன், நியமன தேர்தலில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு பிரதி நிதிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆகியோர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். பின்னர் அவர் 12.30 மணிக்கு முக்கிய விருந்தினர்கள், கூட்டணி கட்சியினரை சந்தித்தும் பேசுகிறார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மாலை 4.30 மணிக்கு ஓசூரில் இருந்து புறப்பட்டு சூளகிரி தேசிய நெடுஞ்சாலை வழியாக கிருஷ்ணகிரி பேருந்து நிலையம், டி.பி.ரோடு, காந்தி சிலை வழியாக வந்து அரசு மருத்துவமனையில் இருந்து (ரோடு ஷோ) நடைபயணம் மேற்கொள்கிறார்.
கிருஷ்ணகிரி ரவுண்டானா வாசவி கேப் அருகில் மாலை 5 மணிக்கு எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு பர்கூர் எம்.ஜி.ஆர். சிலை அருகிலும், 8.30 மணிக்கு ஊத்தங்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகிலும் மக்களை சந்திக்கிறார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளன. அ.தி.மு.க.வில் உள்ள பல்வேறு அணிகளின் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை, மாவட்ட செயலாளர்கள் அசோக்குமார், பாலகிருஷ்ணரெட்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






