என் மலர்
உள்ளூர் செய்திகள்
- போலீசார் காவல் நிலையம் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் வெடி குண்டு கிடைக்கவில்லை.
- பொன்முடியை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தருமபுரி சிறையில் அடைத்தனர்.
மாரண்டஅள்ளி:
தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அடுத்த குஜ்ஜார அள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பொன்முடி (வயது45). இவர் கடந்த 18-ந் தேதி இரவு, சென்னை போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து மாரண்ட அள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடி குண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இது குறித்து, மாரண்ட காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் காவல் நிலையம் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் வெடி குண்டு கிடைக்கவில்லை.
இதையடுத்து, குஜ்ஜார அள்ளிக்கு சென்ற போது, பொன்முடி தலைமறைவாகி விட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே பொன்முடி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவ்வப்போது 100 என்ற எண்ணுக்கு போன் செய்து பேசுவேன் என்றும், அதே போல் கடந்த 18-ந் தேதி வெடிகுண்டு வைத்ததாக கூறியதாக குற்றத்தை ஒப்பு கொண்டார். இதையடுத்து, பொன்முடியை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தருமபுரி சிறையில் அடைத்தனர்.
- கரும்பு லாரியை கண்டதும் ஓடி சென்று லாரியை வழிமறைத்து கரும்பை தின்றது.
- வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. ஆசனூர் அருகே சாலையில் செல்லும் போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் காத்திருந்தது கரும்பு லாரியை கண்டதும் ஓடி சென்று லாரியை வழிமறைத்து கரும்பை தின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக சாலையை வழிமறைத்த கரும்பை சுவைத்த யானை பின்னர் தானாக வனப்பகுதியில் சென்றது.
கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் சாலையில் உலா வருவதும் வாகனங்களை துரத்துவதும் வடிக்கையாகிவிட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
- 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக 69 அடியிலேயே நீடித்து வருகிறது.
- மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது. ரூல்கர்வ் நடைமுறைப்படி 136 அடிக்கு மேல் ஜூலை மாதத்தில் தேக்கமுடியாது என்பதால் கேரளாவுக்கு உபரிநீர் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் சரிந்தது. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழைபெய்ய தொடங்கி உள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.30 அடியாக உள்ளது. அணைக்கு 1311 கனஅடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5942 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக 69 அடியிலேயே நீடித்து வருகிறது. முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்க அதிகாரிகள் முடிவு செய்து அங்கு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 69.46 அடியாக உள்ளது. அணைக்கு 638 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5690 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மழை எங்கும் இல்லை.
- மதுரையில் மாநாட்டு திடலுக்கு முன்பாக சுமார் 300 ஏக்கரில் 3 இடங்களில் வாகன பார்க்கிங் வசதி செய்து தரப்பட்டிருந்தது.
- மாநாட்டு திடல் அருகே போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை:
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெறுகிறது. இதற்காக 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாடு முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
மாநாட்டுப் பணிகள் நேற்று மாலையுடன் 100 சதவீதம் முடிவடைந்த நிலையில் இன்று காலை முதலே மாநாட்டு திடல் களை கட்டியது.
சட்டமன்ற தேர்தலுக்கு ஒருசில மாதங்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டி மாநாட்டை விட மதுரை மாநாட்டிற்கு பல லட்சம் தொண்டர்கள் திரளுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் அதற்கேற்ப பல்வேறு முன்னேற்பாடுகள் முன்னதாகவே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு இருசக்கர வாகனங்களில் மாநாட்டிற்கு தொண்டர்கள் வரவேண்டாம் என்றும், அதேபோல் கர்ப்பிணிகள், மாணவர்கள், முதியவர்கள் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்றும் த.வெ.க. தலைவர் விஜய் கேட்டுக் கொண்டார்.
ஆனாலும் மாநாட்டின் மூலம் விஜய்யை சந்திக்கும் ஆர்வத்தில் வரும் பெண்களுக்கு போதிய வசதிகளை செய்துதர நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன்பேரில் குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு குளிர்சாதன வசதியுடன் பிங்க் அறை தயார் செய்யப்பட்டுள்ளது.
அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் மதுரை மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று பிற்பகல் முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வரத்தொடங்கினார். இதனால் வழியில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் பல மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
மதுரையில் மாநாட்டு திடலுக்கு முன்பாக சுமார் 300 ஏக்கரில் 3 இடங்களில் வாகன பார்க்கிங் வசதி செய்து தரப்பட்டிருந்தது. வெளியூர்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் பஸ், வேன், கார் என தனித்தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்பட்டன. முன்னதாக மாநாடு வரவேற்பு குழு, மருத்துவக்குழு, மகளிர் பாதுகாப்புக்குழு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் குழு, தீர்மானக்குழு, குடிநீர் மேலாண்மைக்குழு உள்ளிட்ட 13 குழு ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் தங்களுக்கான பணிகளை சிறப்பாக செய்திருந்தனர்.
அதன்படி நேற்று மாலை முதலே மதுரை மாவட்ட எல்லையில் இருந்து மாநாட்டு திடல் வரை போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் குழுவினர் நிறுத்தப்பட்டு வாகனங்களுக்கு வழிகாட்டினர். மேலும் பார்க்கிங் இடத்தில் எவ்வாறு நிறுத்த வேண்டும் என்ற அறிவுரைகளையும் வழங்கினர்.
மேலும் மாநாட்டு திடல் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் நேற்று இரவு முதலே தங்களுக்கான பணிகளை தொடங்கினர். அவர்கள் உள்ளூர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட னர். அதேபோல் இன்று காலை மாநாட்டுக்கு வந்த பெண்களை வரவேற்ற மகளிர் தன்னார்வலர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரையில் நடைபெறும் இந்த த.வெ.க. மாநில மாநாட்டையொட்டி, தென் மண்டலம், மேற்கு மண்ட லம், மத்திய மண்டலம் என 3 மண்டலத்தை சேர்ந்த சுமார் 3,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மூன்று மண்டலத்திற்கு உட்பட்ட 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டு இருந்தனர். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஆகியோர் தலைமையில் 10 துணை போலீஸ் கமிஷனர்கள், 10 சூப்பிரண்டுகள், 35 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 80 இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கேரளாவில் இருந்து 50 பெண்கள், 500 ஆண் பவுன்சர்கள் மாநாட்டு பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர்.
மேலும், மாநாட்டு திடல் அருகே போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்தவாறு மாநாடு நடைபெறும் இடம் மற்றும் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் டிரோன் மற்றும் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமாக கண்காணிப்பு பணிகள் நடைபெறுகிறது. கலவர தடுப்பு வாகனமான வஜ்ரா வாகனங்களும் மாநாட்டு திடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
- பிரசித்தி பெற்ற மலை வாசஸ்தலமான அழகர் கோவிலிலும் த.வெ.க. வினர் அதிகளவில் காணப்பட்டனர்.
- மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் த.வெ.க. வினர் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனர்.
திருப்பரங்குன்றம்:
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை அருகே உள்ள பாரபத்தியில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கார், வேன், பஸ் மூலம் தொண்டர்கள் வருகை தர தொடங்கினர். இன்று மாலை மாநாடு தொடங்குகிறது.
இதன் காரணமாக மதுரைக்கு வந்திருந்த த.வெ.க.வினர் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு படையெடுத்தனர். அதன்படி முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு இன்று அதிகாலை முதல் ஏராளமான த.வெ.க.வினர் வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தரிசனம் முடிந்து வெளியே வந்த பக்தர்கள் கோவிலுக்கு முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து வேன், கார்களில் வந்தவர்கள் மாநாட்டு திடலுக்கு செல்லாமல் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.
திருப்பரங்குன்றம் கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் உள்ளூர் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இன்று த.வெ.க.வினரும் சாமி தரிசனம் செய்ய குவிந்ததால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.
இதே போல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் ஏராளமான த.வெ.க. வினர் இன்று அதிகாலை முதல் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். அம்மன் சன்னதி உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பிரசித்தி பெற்ற மலை வாசஸ்தலமான அழகர் கோவிலிலும் த.வெ.க. வினர் அதிகளவில் காணப்பட்டனர். அங்கு மலை மேல் உள்ள சோலைமலை முருகன் கோவில், கள்ளழகர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மாநாட்டு திட லுக்கு சென்றனர்.
இதே போல் மாட்டுத்தாவணி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாண்டி கோவிலில் த.வெ.க.வினர் அதிகளவில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். இங்கிருந்து மாநாடு நடைபெறும் இடம் சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் த.வெ.க. வினர் அதிகளவில் வருகை தந்தனர். மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் த.வெ.க. வினர் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனர்.
- கோவை வடக்கு-காரமடை இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- நீலகிரி அதிவிரைவு ரெயில் கோவை-மேட்டுப்பாளையம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கோவையில் நிறுத்தப்படும்.
சென்னை:
கோவை வடக்கு-காரமடை இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து வரும் 26, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி அதிவிரைவு ரெயில் (வண்டி எண்.12671), கோவை-மேட்டுப்பாளையம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கோவையில் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மாலை 5 மணியளவில் விஜய் தனது உரையை தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையை அடுத்துள்ள பாரபத்தி கிராமத்தில் இன்று நடைபெற உள்ளது. மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே தொண்டர்கள் குவிந்து வருவதால் மாநாட்டை முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மாநாட்டை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 3 மணிக்கு விஜய் அவருக்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் ரேம்ப் வாக் வருவதாகவும், பிறகு புஸ்ஸி ஆனந்த் 4 மணியளவிலும், அதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் பேசுவதாகவும் தெரிகிறது.
இதையடுத்து 5 மணியளவில் விஜய் தனது உரையை தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த மாநாட்டிற்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை நடைபெறும் த.வெ.க. மாநாட்டில் புதிய பாடல் வெளியாக உள்ளது. 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது' என்ற தீமில் த.வெ.க.வின் புதிய பாடல் இன்று வெளியிடப்படுகிறது.
த.வெ.க. கொடிப்பாடலுக்கு இசையமைத்த தமன், மாநாட்டு பாடலுக்கும் இசையமைத்துள்ளார். 1967, 1977-ல் தி.மு.க., அதி.மு.க, ஆட்சி அமைத்தது குறித்து விஜயின் பேச்சும் பாடலில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
- பார் வெள்ளி 1 லட்சத்து 26ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.9 ஆயிரத்து 235-க்கும், சவரன் ரூ.320 குறைந்து ரூ.73 ஆயிரத்து 880-க்கும், நேற்று கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு ரூ.9 ஆயிரத்து 180-க்கும், சவரன் ரூ.440 குறைந்து ரூ.73 ஆயிரத்து 440-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9.230-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 73,840-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 26ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
20-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,440
19-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,880
18-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,200
17-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,200
16-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
20-08-2025- ஒரு கிராம் ரூ.125
19-08-2025- ஒரு கிராம் ரூ.126
18-08-2025- ஒரு கிராம் ரூ.127
17-08-2025- ஒரு கிராம் ரூ.127
16-08-2025- ஒரு கிராம் ரூ.127
- மதுரையில் த.வெ.க. கட்சியின் 2-வது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது.
- மாநாட்டில் பங்கேற்க இரவு முதல் தற்போது வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு திடலில் வந்த வண்ணம் உள்ளனர்.
மதுரையில் த.வெ.க. கட்சியின் 2-வது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது.
மாநாட்டில் பங்கேற்க இரவு முதல் தற்போது வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு திடலில் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் மாநாட்டு திடலில் சீமான் ஒழிக என தவெக தொண்டர்கள் கோஷமிட்டு வருகின்றனர். அண்மையில் தவெக கட்சியையும் தொண்டர்களையும் சீமான் கடுமையாக தாக்கி விமர்சித்த நிலையில் அவருக்கு எதிராக தொண்டர்கள் கோஷமிட்டனர்.
- பொதுமக்களுக்கு அச்சம் மூட்டும் வகையில் ஆக்ரோஷமான தன்மை கொண்ட நாய்களை வளர்க்கக்கூடாது.
- வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல அனுமதிக்கப்படும்.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சியில் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்த புகார்கள் வருகின்றன.
செல்லப்பிராணிகளின் உரிமையார்கள் கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்கவும், பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் பொழுது கழுத்துப்பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை கண்டிப்பாக தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாய்களை வீடுகள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் முகமூ இன்றி திரியவிட்டாயோ / அழைத்து சென்றாலோ உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவ்வாறான நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகள் மீது இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களுக்கு அச்சம் மூட்டும் வகையில் ஆக்ரோஷமான தன்மை கொண்ட நாய்களை வளர்க்கக்கூடாது. மேலும் பொது இடங்களுக்கு ஒரே நேரத்தில் ஒரு செல்லப்பிராணியை மட்டுமே அதன் உரிமையாளர்கள் எடுத்து செல்ல வேண்டும்.
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளவாறு அந்த செல்லப் பிராணியை அழைத்து செல்லும் பொழுது மற்றவர்கள் பாதுகாப்பை கருதி அதன் வாயை மூடியிருக்க (Muzzle) செய்தும், கட்டாயம் கழுத்துப்பட்டையுடன் சங்கிலியால் கட்டி வைத்திருக்கவும் வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் உரிமம் மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல அனுமதிக்கப்படும்.
விலங்குகளின் நடவடிக்கைகள் நன்கு அறிமுகமான மனிதர்கள் மற்றும் அதன் இருப்பிட சூழ்நிலையில் இயல்பு நிலையிலும் மற்ற இடங்களில் மாறுபட்டும் இருக்கக் கூடும். இதனை உரிமையாளர்கள் உணர்ந்து கொண்டு பொறுப்புணர்வுடன் பிறருக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இவற்றை வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
பொது இடங்கள், அடுக்கக குடியிருப்புகளின் மின்தூக்கிகள் (Lift) ஆகியவற்றில் மிகுந்த பாதுகாப்போடும் மற்றவர்களுக்கு அச்சுமூட்டும் வகையிலோ (அ) அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலோ நாய்களின் நடவடிக்கைகள் இல்லாதிருப்பதை உறுதி செய்ய வேண்டியது உரிமையாளர்களின் பொறுப்பாகும்.
இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி (Guidelines with respect to Pet Street Dogs and their care givers and for Residents Welfare Associations and Apartment Owners Associations இந்த விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.
இதனை மீறி உரிமம் பெறாமல் ஆபத்து ஏற்படும் வகையில் வெறித்தன்மை, பதற்றம் மற்றும் துரத்தி கடிக்கும் தன்மையுள்ள நாய்களை அந்த செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள், அவற்றை பொது இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திறந்துவிட்டால் அவ்வாறான நாய்கள் மீது இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படியும், பொதுமக்களின் உடல் / மன அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாய்களின் உரிமையாளர்களின் மீது உரிய குற்றவியல் சட்ட நடவடிக்கைகளின்படியும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என கடுமையாக எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+2
- மாநாட்டு அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.
- மாநாடு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன. இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டு அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. மொத்தமுள்ள 500 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட மைதானத்தில், 250 ஏக்கர் மாநாடு நடைபெறும் இடமாகவும், மீதமிருக்கும் 300 ஏக்கர் நிலம் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநாடு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொண்டர்கள் அமர பச்சை கம்பளம் விரித்து அதில் 2 லட்சம் சேர்களும், வி.ஐ.பி.க்கள் அமர சிவப்பு கம்பளம் விரித்து அதில் 300 சேர்களும் போடப்பட்டுள்ளன. இரவை பகலாக்கும் வகையில் உயர்கோபுர மின்விளக்குகள், போக்கஸ் லைட்டுகள் என மாநாட்டு திடல் ஜொலிக்கிறது.
- தி.மு.க. குடும்பத்துக்காக பாடுபடும் இயக்கம். அ.தி.மு.க. மக்களுக்காக பாடுபடும் இயக்கம்.
- தி.மு.க. ஆட்சியில் மருத்துவமனைக்கு கையோடு போனால் கை இல்லாமல் வருகிறார்கள்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை சோளிங்கர் தொகுதிகளில் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி பின்னர் அரக்கோணம் காந்தி சாலையில் குழுமியிருந்த மக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்றார் உதயநிதி. அரக்கோணத்திலாவது உங்கள் ரகசியத்தை சொல்லுங்கள். மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார். போட்டோ ஷூட் எடுப்பார். குழு அமைப்பார் அவ்வளவுதான். இதுவரை 52 குழு அமைத்து கிடப்பில் கிடக்கிறது. மக்களை ஏமாற்றுவதில் சாதனை படைத்திருப்பது தி.மு.க. அரசு.
ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாகப் போற்றப்பட்ட தமிழக காவல்துறை இப்போது ஏவல்துறையாக மாறிவிட்டது. இன்று இவ்வளவு பெரிய கூட்டம் நடக்கிறது. எங்காவது காவல்துறை இருக்கிறதா?. இதுவே ஸ்டாலின் நடத்தும் கூட்டத்துக்கு 2 ஆயிரம் காவலர்களை நிறுத்துகிறார்கள். ஏனென்றால், ஸ்டாலினுக்கு மக்கள் கூட்டம் வராது. அதனால் காவல்துறையை நிறுத்தி கூட்டத்தைக் காட்டுகிறார்கள். நீங்கள் பாதுகாப்பு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் எங்கள் தொண்டர்கள் மக்களை பாதுகாப்பார்கள்.
தி.மு.க. குடும்பத்துக்காக பாடுபடும் இயக்கம். அ.தி.மு.க. மக்களுக்காக பாடுபடும் இயக்கம். இதுதான் வித்தியாசம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது இயக்கத்தை உடைக்க சதித் திட்டம் தீட்டியும் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. சில சுயநலவாதிகள் நம் ஆட்சியை கவிழ்க்க எதிரியோடு இணைந்து பணியாற்றினார்கள். அதையும் முறியடித்தோம். தி.மு.க.வின் சூழ்ச்சியை மக்கள் ஆதரவோடு தவிடுபொடியாக்கினோம்.
இன்றைக்கு புதிதாக கட்சி தொடங்குபவரும் அ.தி.மு.க. தலைவரைப் போற்றித்தான் கட்சி தொடங்க வேண்டிய நிலை இருக்கிறது. அப்படி நமது தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்து மறைந்தனர். வருகிற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற நல்லாதரவை தரவேண்டும்.
ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து ஏழை மக்கள் உயர்தர சிகிச்சை கொடுத்தோம். ஒரு மருத்துவக் கல்லூரியை தி.மு.க. அரசால் கொண்டுவர முடிந்ததா?. வறட்சி ஏற்பட்ட காலங்களில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அ.தி.மு.க. அரசுதான்.
தி.மு.க. ஆட்சியில் மருத்துவமனைக்கு கையோடு போனால் கை இல்லாமல் வருகிறார்கள். காலோடு போனால் உயிரில்லாமல் வருகிறார்கள். கடலூரில் சளிக்கு சிகிச்சை பெற போன இடத்தில் நாய்க்கடி ஊசி போட்டார்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாரத்தான் ஓடிக்கொண்டு இருக்கிறார். மக்களை காப்பதற்கு அமைச்சர் பதவி கொடுத்தால் இவர் ஓடிக்கொண்டே இருக்கிறார். ஓடுவதை நிறுத்துங்கள். மருத்துவமனைகளுக்கு ஆய்வுக்கு செல்லுங்கள்.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தாலிக்குத் தங்கம் திட்டம் தொடரும். மணமகளுக்கு பட்டுசேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி வழங்கப்படும். தி.மு.க. எந்த கோரிக்கையையும் நிறைவேற்றிய வரலாறு கிடையாது. அ.தி.மு.க. ஆட்சியில் கன்னியாகுமரி-திருப்பதி கனரக தொழிற்வட்ட சாலைத் திட்டத்தில் அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம், திருத்தணி வரை சாலை அமைக்க ரூ.350 கோடியில் டெண்டர் விடப்பட்டு, இன்னமும் நிறைவடையாமல் உள்ளது. இதுதான் தி.மு.க. அரசின் நிலைப்பாடு.
அரக்கோணம் நகரத்துக்கு ரூ.110 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.57 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு அரசு கலைக் கல்லூரியாக மாற்றப்பட்டு ரூ.7 கோடியில் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விடுதி கட்டப்பட்டது. அரக்கோணத்தில் ரூ.8 கோடியில் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. நெமிலி ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டது.
மேலும் ரெயில்வே மேம்பாலம் வேண்டும், பழனிபேட்டையில் உள்ள ரெட்டைக்கண் பாலத்துக்கு பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும், அரக்கோணம் மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், சுரங்கப்பாதை, நான்குவழிச்சாலை போன்ற கோரிக்கைகளை கொடுத்திருக்கிறீர்கள். அ.தி.மு.க. அரசு அமைந்ததும் நிறைவேற்றப்படும். அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.






