என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. மாநாட்டில் 3,500 போலீசார் பாதுகாப்பு- போக்குவரத்தை சரிசெய்ய தனிக்குழு அமைப்பு
- மதுரையில் மாநாட்டு திடலுக்கு முன்பாக சுமார் 300 ஏக்கரில் 3 இடங்களில் வாகன பார்க்கிங் வசதி செய்து தரப்பட்டிருந்தது.
- மாநாட்டு திடல் அருகே போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை:
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெறுகிறது. இதற்காக 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாடு முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
மாநாட்டுப் பணிகள் நேற்று மாலையுடன் 100 சதவீதம் முடிவடைந்த நிலையில் இன்று காலை முதலே மாநாட்டு திடல் களை கட்டியது.
சட்டமன்ற தேர்தலுக்கு ஒருசில மாதங்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டி மாநாட்டை விட மதுரை மாநாட்டிற்கு பல லட்சம் தொண்டர்கள் திரளுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் அதற்கேற்ப பல்வேறு முன்னேற்பாடுகள் முன்னதாகவே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு இருசக்கர வாகனங்களில் மாநாட்டிற்கு தொண்டர்கள் வரவேண்டாம் என்றும், அதேபோல் கர்ப்பிணிகள், மாணவர்கள், முதியவர்கள் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்றும் த.வெ.க. தலைவர் விஜய் கேட்டுக் கொண்டார்.
ஆனாலும் மாநாட்டின் மூலம் விஜய்யை சந்திக்கும் ஆர்வத்தில் வரும் பெண்களுக்கு போதிய வசதிகளை செய்துதர நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன்பேரில் குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு குளிர்சாதன வசதியுடன் பிங்க் அறை தயார் செய்யப்பட்டுள்ளது.
அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் மதுரை மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று பிற்பகல் முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வரத்தொடங்கினார். இதனால் வழியில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் பல மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
மதுரையில் மாநாட்டு திடலுக்கு முன்பாக சுமார் 300 ஏக்கரில் 3 இடங்களில் வாகன பார்க்கிங் வசதி செய்து தரப்பட்டிருந்தது. வெளியூர்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் பஸ், வேன், கார் என தனித்தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்பட்டன. முன்னதாக மாநாடு வரவேற்பு குழு, மருத்துவக்குழு, மகளிர் பாதுகாப்புக்குழு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் குழு, தீர்மானக்குழு, குடிநீர் மேலாண்மைக்குழு உள்ளிட்ட 13 குழு ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் தங்களுக்கான பணிகளை சிறப்பாக செய்திருந்தனர்.
அதன்படி நேற்று மாலை முதலே மதுரை மாவட்ட எல்லையில் இருந்து மாநாட்டு திடல் வரை போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் குழுவினர் நிறுத்தப்பட்டு வாகனங்களுக்கு வழிகாட்டினர். மேலும் பார்க்கிங் இடத்தில் எவ்வாறு நிறுத்த வேண்டும் என்ற அறிவுரைகளையும் வழங்கினர்.
மேலும் மாநாட்டு திடல் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் நேற்று இரவு முதலே தங்களுக்கான பணிகளை தொடங்கினர். அவர்கள் உள்ளூர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட னர். அதேபோல் இன்று காலை மாநாட்டுக்கு வந்த பெண்களை வரவேற்ற மகளிர் தன்னார்வலர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரையில் நடைபெறும் இந்த த.வெ.க. மாநில மாநாட்டையொட்டி, தென் மண்டலம், மேற்கு மண்ட லம், மத்திய மண்டலம் என 3 மண்டலத்தை சேர்ந்த சுமார் 3,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மூன்று மண்டலத்திற்கு உட்பட்ட 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டு இருந்தனர். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஆகியோர் தலைமையில் 10 துணை போலீஸ் கமிஷனர்கள், 10 சூப்பிரண்டுகள், 35 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 80 இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கேரளாவில் இருந்து 50 பெண்கள், 500 ஆண் பவுன்சர்கள் மாநாட்டு பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர்.
மேலும், மாநாட்டு திடல் அருகே போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்தவாறு மாநாடு நடைபெறும் இடம் மற்றும் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் டிரோன் மற்றும் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமாக கண்காணிப்பு பணிகள் நடைபெறுகிறது. கலவர தடுப்பு வாகனமான வஜ்ரா வாகனங்களும் மாநாட்டு திடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.






