என் மலர்
உள்ளூர் செய்திகள்
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.30 அடியாக உள்ளது.
- வைகை அணையின் நீர்மட்டம் 68.77 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் அனைத்து அணைகளும் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்போது மழை முற்றிலும் நின்று விட்டதாலும், கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால் பெரியாறு, வைகை அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு குடிநீருக்காக மட்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.30 அடியாக உள்ளது. நீர் வரத்து 437 கனஅடி. நேற்று வரை 1500 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 500 கன அடி மட்டும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5469 மி.கன அடியாக உள்ளது. கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டு 135 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது 2 ஜெனரேட்டர்கள் மட்டும் இயக்கப்பட்டு 46 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 68.77 அடியாக உள்ளது. வரத்து 1251 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 5513 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.40 அடி. வரத்து 29 கன அடி. திறப்பு 75 கன அடி. இருப்பு 403 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. வரத்து மற்றும் திறப்பு 29 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.
- இருதரப்பினர் இடையே போலீசார் பேசிக் கொண்டிருக்கும்போதே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது.
- அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் அரசியல் கட்சி தலைவரின் பாடலுக்கு அவரது கட்சியினர் ஆட்டம் போடுவது போல திருச்சியில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டு வீடியோ வெளியிட்டு உள்ளனர்.
அதில் மற்றொரு தரப்பினர் ஜாதி பெயரை குறிப்பிட்டு அவதூறான கருத்துக்கள் பதிவிட்டுள்ளனர். அதற்குக் கீழ் கல்பகனூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு சமுதாயம் குறித்து அவதூறு வார்த்தைகளால் பதிவிட்டுள்ளார்.

தலையில் காயம் அடைந்த ஏட்டு முருகவேல்
மேலும் அதனை தனது வாட்ஸ்-அப் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார். அதனைப் பார்த்த மற்றொரு சமுதாயத்தினர் பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் பச்சமுத்து தலைமையில் ஆத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுத்னர்.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையில் 3 போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். அப்போது இருதரப்பினர் இடையே போலீசார் பேசிக் கொண்டிருக்கும்போதே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து இருதரப்பினரும் செங்கற்களை மாறி மாறி வீசினர்.

இதனால் அப்பகுதியில் உள்ள இரு சக்கர வாகனம், 4 சக்கர வாகனம் மற்றும் அந்த பகுதியில் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் அடித்து சேதப்படுத்தினர். அப்போது அந்த பகுதி போர்க்களமாக காட்சி அளித்தது. தொடர்ந்து நடைபெற்ற கல்வீச்சில் பாதுகாப்பு பணிக்காக வந்த வீரகனூர் போலீஸ் ஏட்டு முருகவேல் என்பவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால் கல்பகனூரில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாததால் லேசான தடியடி நடத்திய போலீசார் இரு தரப்பினரையும் கலைந்து போக செய்தனர்.
இது குறித்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், ஆத்தூர் டி.எஸ்.பி. நாகராஜ் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் ஆகியோரும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் வெளியூர் நபர்கள் உள்ளே நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- நேற்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
- தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து 76 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.76,000-க்கு விற்பனையாகிறது.
- சென்னை திரும்புவதற்காக வெற்றியும், கோபிநாத்தும் அங்குள்ள விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டனர்.
- சட்லஜ் நதியில் தண்ணீரில் மூழ்கியபடி கிடந்த காரை காரை கயிறு கட்டி கரையோரமாக இழுத்தனர்.
சென்னை:
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (வயது 45) தொழில் அதிபரான இவர் தந்தையுடன் சேர்ந்து மனித நேய பயிற்சி மையத்தை கவனித்து வருகிறார்.
பிரபல சினிமா இயக்குனர் வெற்றி மாறனிடம் பயிற்சி பெற்றுள்ள வெற்றி கடந்த 2021-ம் ஆண்டு விதார்த்-ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான 'என்றாவது ஒருநாள்' என்கிற படத்தை இயக்கி உள்ளார். இந்த நிலையில் வெற்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது உதவியாளரான திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த கோபி நாத்துடன் இமாச்சலபிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார்.
பல்வேறு இடங்களை இருவரும் சுற்றி பார்த்தனர். பின்னர் அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக வெற்றியும், கோபிநாத்தும் அங்குள்ள விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டனர். உள்ளூரை சேர்ந்த வாடகை காரை தஞ்சின் என்கிற டிரைவர் ஓட்டிச் சென்றார்.
கஷங் நாலா என்கிற மலைப்பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் 200 அடி பள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் நதியில் கார் பாய்ந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேரிடர் மீட்பு குழுவினரும் விரைந்து சென்று காரையும் காரில் இருந்தவர்களையும் மீட்பதற்கு களம் இறங்கினார்கள்.
சட்லஜ் நதியில் தண்ணீரில் மூழ்கியபடி கிடந்த காரை காரை கயிறு கட்டி கரையோரமாக இழுத்தனர். அப்போது டிரைவர் தஞ்சின் காருக்குள் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பள்ளத்தாக்கு பகுதியில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோபிநாத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
காரில் பயணம் செய்த வெற்றியை காணவில்லை. சட்லஜ் நதியில் அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார் ஆகியோர் மாயமான வெற்றியை தீவிரமாக தேடி வருகிறார்கள். நேற்று முன்தினம் கார் சட்லஜ் நதியில் பாய்ந்த நிலையில், இன்று 3-வது நாளாக வெற்றியை தேடி கண்டு பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுபற்றி சென்னையில் உள்ள சைதை துரைசாமிக்கு தகவல் தொவிக்கப்பட்டது. மகன் மாயமான தகவலை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அவரது மனித நேய மையத்தில் படித்த பலர் இமாச்சல பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக உள்ளனர். அவர்களும் மீட்புப் பணிக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.
ஸ்பெயினில் இருந்தபடியே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது சட்லஜ் நதியில் காணாமல் போன வெற்றியை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள இமாச்சலபிரதேச போலீசாருடன் தொடர்புக் கொண்டு மீட்பு பணியை விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
வன உயிரினங்கள் மீது வெற்றி மிகுந்த ஆர்வம் கொண்டவர். வெற்றி வனப்பகுதிகளுக்கு சென்று அங்கேயே தங்கி இருந்து புகைப்படங்களை எடுப்பதிலும் ஆர்வம் கொண்டு உள்ளார். அதுபோன்ற புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் வாழும் பனிக்கரடிகளை புகைப்படமாக எடுப்பதற்காகவே வெற்றி அங்கு சென்றிருப்பதும் தெரிய வந்து உள்ளது. சினிமா மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டி ருந்த வெற்றி கிரைம் திரில்லர் படம் ஒன்றை இயக்குவதற்கும் திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில்தான் மாயமாகி உள்ளார்.
சைதை துரைசாமிக்கு வெற்றி ஒரே மகன் ஆவார். 2012-ம் ஆண்டு நடைபெற்ற வெற்றியின் திருமண நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டார். வெற்றியின் மனைவி பெயர் வசுந்தரா.
இவர்களுக்கு சித்தார்த்தா, சங்கமித்ரன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
சட்லஜ் நதியில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக அம்மாநிலத்தைச் சேர்ந்த கன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன் ஜல்தா கூறியதாவது:-
நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1.30 மணி அளவில் கார் ஒன்று சட்லஜ் நதியில் விழுந்துவிட்டதாக போனில் அப்பகுதிவாசிகள் தகவல் தெரிவித்தனர். சிம்லா செல்லும் கசங்க் தலா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடந்த இந்த விபத்து பற்றி போலீசார் விசாரித்ததில் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருவர் இருந்ததை உறுதி செய்தோம்.
நந்தனம் சி.ஐ.டி.நகர் பகுதியில் வசித்து வந்த வெற்றி துரைசாமி மாயமாகி உள்ளார். அவரை தேடி வருகிறோம். கோபிநாத் என்பவர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்.
உள்ளூர்வாசியான டிரைவர் தஞ்சின் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தற்போது 4,201 வீரிய ரக ரோஜா ரகங்களில் சுமார் 32 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
- கவாத்து செய்த ரோஜா செடிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ரோஜா மலர்கள் பூத்து, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1995-ம் ஆண்டு ஊட்டி மலர் கண்காட்சியின் 100-வது ஆண்டு நினைவாக ரோஜா பூங்கா தொடங்கப்பட்டது. இந்த பூங்கா தோட்டக்கத்துறை சார்பில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா ரகங்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு தற்போது 4,201 வீரிய ரக ரோஜா ரகங்களில் சுமார் 32 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
2006-ம் ஆண்டில் உலக அளவில் சிறந்த ரோஜா பூங்கா என்ற விருதை ஊட்டி ரோஜா பூங்காவுக்கு வழங்கி உலக ரோஜா சங்க சம்மேளனம் சிறப்பித்துள்ளது.
தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மிக அதிகமான ரோஜா ரகங்களை கொண்ட பூங்காவாக ஊட்டி ரோஜா பூங்கா திகழ்கிறது.
இந்த ஆண்டு கோடை பருவகாலத்தை முன்னிட்டு கவாத்து பணிகள் மேற்கொள்வதன் மூலமாக கவாத்து செய்த ரோஜா செடிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ரோஜா மலர்கள் பூத்து, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும். இதையொட்டி ரோஜா செடிகளின் கவாத்து பணியை மாவட்ட கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலாமேரி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 11 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன் திருவோடு கன்றுகளை நட்டார்.
- திருவோடு மரத்தை ஆர்வத்துடன் பார்த்து அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து சென்றனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்பு லிங்கசுவாமி கோவில் முன்பு 9 நிலை கொண்ட முழுவதும் கருங்கற்களால் ஆன 108 அடி உயர ராஜகோபுரம் கட்டும் பணி கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
11 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன் திருவோடு கன்றுகளை நட்டார். இந்த வகை மரங்கள் குளிர்ச்சியான பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. அட்சய பாத்திரம் என அழைக்கப்படும். திருவோடு சிவபெருமானுக்கு உகந்தது என்பதால் சிவ ஆலயமான சுயம்பு லிங்கசுவாமி கோவிலில் வளர்த்து வருவதாக கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் கூறினார்.
தற்போது இந்த மரம் காய்த்து குலுங்குகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் காய்த்து குலுங்கும் திருவோடு மரத்தை ஆர்வத்துடன் பார்த்து அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து சென்றனர்.
- அரசு நிறுவனங்களை தனியார் நிறுவனங்களாக மாற்ற முயற்சி செய்கிறார்கள்.
- மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் காணாமல் போய்விடும்.
உடன்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் உடன்குடி பஜாரில் நேற்று இரவு நடந்தது.
கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார்.
உடன்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் தலைவருமான பாலசிங் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், பாராளுமன்ற குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-
இந்தியாவில் உள்ள மக்கள் ஜாதி, மதத்தை மறந்து அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகிறோம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து உதவிக்கரம் நீட்டி ஒற்றுமையாக வாழ்கிறோம்.
ஆனால் பா.ஜனதா அரசு இந்துக்களை பாதுகாக்கவில்லை. இந்திய மக்களை பிரிக்கிறார்கள். இந்துக்களை அரசியல் கேடயமாக பயன்படுத்துகிறார்கள்.
விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட திட்டங்களை கொண்டு வருகிறார்கள். அரசு நிறுவனங்களை தனியார் நிறுவனங்களாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். மாநில உரிமைகளை கொஞ்சம், கொஞ்சமாக பறிக்கிறார்கள்.
மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் காணாமல் போய்விடும். மதத்தை வைத்து அனை வரையும் பிரித்து விடுவார்கள். தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம், பெண்களும் அர்ச்சகராகலாம் என்று ஆணையிட்டு அதை செயல்படுத்தி வருகிறார் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
அனைத்து தரப்பு மக்களை அரவணைத்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கரூர் தொகுதி தற்போது காங்கிரஸ் வசம் உள்ளது.
- உத்தேச பட்டியலை ஒருங்கிணைப்பு குழு தயார் செய்து முதலமைச்சரிடம் வழங்கும் என தெரிகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து அறிந்து கொள்வதற்காக தொகுதி வாரியாக நிர்வாகிகளை அழைத்து அண்ணா அறிவாலயத்தில் கருத்து கேட்கப்பட்டது. தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்தை கேட்டறிந்தது.கடந்த 28-ந் தேதி தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது.
கரூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், புதுச்சேரி ஆகிய தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கரூர் தொகுதி தற்போது காங்கிரஸ் வசம் உள்ளது. இங்கு ஜோதிமணி எம்.பி.யாக உள்ளார். இவர் மீது தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர். கடந்த முறை கூட்டணி கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதை சுட்டிக்காட்டினர்.
மேலும், கரூர் தொகுதியில் தி.மு.க. போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர். இந்த தொகுதியில் தி.மு.க. போட்டியிடும் பட்சத்தில் வெற்றி வாய்ப்பு குறித்தும் நிர்வாகிகள் எடுத்து கூறினர்.
அதேபோன்று காங்கிரஸ் வசம் உள்ள புதுச்சேரி தொகுதியிலும் தி.மு.க. போட்டியிட வேண்டும் என தி.மு.க. நிர்வாகிகள் தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தினர்.
திண்டுக்கல், காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க. வசம் உள்ளது. இங்கு தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்வோம் என கட்சி நிர்வாகிகள் உறுதி அளித்தனர்.
கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பு குழுவினர் கேட்டுக்கொண்டனர்.
இந்த ஆலோசனை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்டமாக ஒவ்வொரு தொகுதிக்கும் யார்-யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற உத்தேச பட்டியலை இந்த ஒருங்கிணைப்பு குழு தயார் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கும் என தெரிகிறது.
அதன்பிறகு அந்த பட்டியல் பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு இறுதி செய்யப்படும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- பூரணம் அம்மாளுக்கு குடியரசு தினத்தன்று “முதலமைச்சரின் சிறப்பு விருது” வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார்.
- தான பத்திரத்தை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவிடம் ஆயி என்ற பூரணம் அம்மாள் வழங்கினார்.
மதுரை:
மதுரை கிழக்கு ஒன்றியம், யா.கொடிக்குளம் ஊராட்சியை சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம் அம்மாள். இவர் மதுரை தல்லாகுளத்தில் உள்ள வங்கியில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது மகள் ஜனனியின் நினைவாக யா.கொடிக்குளம் பகுதி குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் உயரிய நோக்கில் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த ரூ.7 கோடி மதிப்பிலான 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினார். அவரது சேவையை பாராட்டி, பூரணம் அம்மாளுக்கு குடியரசு தினத்தன்று "முதலமைச்சரின் சிறப்பு விருது" வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.
கடந்த வாரம் மதுரையில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆயி என்ற பூரணம் அம்மாளுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
இந்த நிலையில் அதே பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட மேலும் 91 சென்ட் நிலத்தை அவர் தானமாக வழங்கி உள்ளார்.
இதற்கான தான பத்திரத்தை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவிடம் ஆயி என்ற பூரணம் அம்மாள் நேற்று வழங்கினார். அப்போது, அவர் தனது மகள் ஜனனியின் படத்தை கொண்டு வந்திருந்தார். அந்த படத்தின் முன்பாக வைத்து, பத்திரத்தை முதன்மை கல்வி அதிகாரியிடம் கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆயி அம்மாள், கொடிக்குளம் அரசு பள்ளிக்கு மேலும் ரூ.3.5 கோடி மதிப்பிலான 91 சென்ட் நிலத்தை தானமாக வழங்கி இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது சம்பந்தமான படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மக்களும் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகிறார்கள்.
- சசிகலா கொடுக்கும் விருந்துக்கு இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை.
- பாஜகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.
வரும் பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.
வரும் 24ம் தேதி சசிகலா கொடுக்கும் விருந்துக்கு இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தால் கட்டாயம் கலந்து கொள்வேன்.
அதிமுக கரைவேட்டி, கொடி பயன்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் அதிக அளவில் உள்ளது.
பாஜகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளை ஒட்டி உத்தரவு.
- ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் உள்ள சிறைகளில் நீண்ட காலமாக ஆயுள் தண்டனையில் உள்ள கைதிகள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளை ஒட்டி, விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, கடலூர் 4, கோவை 6, வேலூர் 1, புழல் 1 என 12 சிறை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.
- தொழில்நுட்ப கருத்தரங்கம் வருகிற 8ந் தேதி முற்பகல் 11.30 மணி அளவில் காமாட்சிபுரத்தில் நடைபெறுகிறது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் சார்பில் மாநில அளவிலான பெண் விவசாயிகள், பெண் தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக்குழு அமைப்புகள் மற்றும் மா, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கம் வருகிற 8ந் தேதி முற்பகல் 11.30 மணி அளவில் காமாட்சிபுரத்தில் நடைபெறுகிறது.
இந்த கருத்தரங்கில் பங்கேற்க தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சின்னமனூர் வருகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கருத்தரங்கம் நடைபெறும் இடத்திற்கு வருகை தருகிறார். விழாவிற்கு கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அவிநாசி லிங்கம் பல்லைக்கழக துணை வேந்தர் பாரதிஹரிசங்கர், ஹைதராபாத் வேளாண்மை தொழில்நுட்ப பயன்பாட்டு இயக்குனர் சேக்மீரா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கருத்தரங்கில் தேனி, அரியலூர் மற்றும் பெரியகுளம், உத்தமபாளையத்தை சேர்ந்த வேளாண் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.






