என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 8 வழக்குகளில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கான நகல்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
- இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா இன்று அதன் மீதான உத்தரவை வழங்குவதாக தெரிவித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரான சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே அங்கிட் திவாரி தரப்பில் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் எனக்கோரி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் ஜாமீன் வழங்கக் கோரி அங்கிட் திவாரி தரப்பில் அவரது வக்கீல் செல்வம் 2-வது முறையாக திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு கடந்த 1-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கிட் திவாரி சார்பில் ஆஜரான வக்கீல் செல்வம் கைது செய்யப்பட்டு 60 நாட்களுக்கு மேல் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
தமிழக ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசார் தரப்பில் ஆஜரான வக்கீல் அனுராதா இந்த வழக்கு குறித்து மேல்நடவடிக்கை எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவேதான் தற்போது வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும், தற்போது ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைக்கும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கிட் திவாரி தரப்பில் ஆஜரான வக்கீல்கள் காந்தி, செல்வம் ஆகியோர் ஆஜராகி உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் விசாரணைக்கு தடை விதித்த பல வழக்குகள் சிறையில் இருப்பவருக்கு ஜாமீன் வழங்க தடை இல்லை என்பதற்கான வாதங்களை முன் வைத்தனர்.
இது தொடர்பான 8 வழக்குகளில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கான நகல்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜாமீன் வழங்க கூடாது என்பதற்கான உத்தரவு நகல் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்ததால்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா இன்று அதன் மீதான உத்தரவை வழங்குவதாக தெரிவித்தார். அதன்படி அங்கிட் திவாரி மீதான ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக அவர் உத்தரவிட்டார். 2-வது முறையாக அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட படகு இலங்கை நாட்டுடமை ஆக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 22-ந்தேதி 480 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். 23-ந்தேதி அதிகாலை அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜசக் (வயது 47), ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் (43) ஆகியோருக்கு சொந்த மான இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர். படலில் இருந்து ஐசக் (47), சிசேரியன் (43), சமாதான பாபு (38), ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் (34), நிஷாந்தன் (34), முருகேசன் ஆகிய 6 மீனவர்களையும் கைது செய்தனர்.
அவர்கள் அங்குள்ள ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். எல்லை தாண்டியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ராமேசுவரம் மீனவர்களின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து இன்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்கள் 6 பேரையும் விடுதலை செய்ய நீதிபதி கஜநிதி பாலன் உத்தரவிட்டார். மேலும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகு இலங்கை நாட்டுடமை ஆக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விரைவில் விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவல் சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வருடந்தோறும் ஜெய் ப்ரத்யங்கிராவின் லட்ச மூலமந்திர ஹோமம் நடைபெற்று வந்தது.
- அன்னை ஜெய் ப்ரத்யங்கிரா அருளையும், குருவின் ஆசியும் பெற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள வெண்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில்

கடந்த ஆறு வருடங்களாக மூலஸ்தான அமையவிருக்கும் இடத்தில் வருடந்தோறும் ஜெய் ப்ரத்யங்கிராவின் லட்ச மூலமந்திர ஹோமம் நடைபெற்று வந்தது, தற்போது விக்ரஹ ப்ரதிஷ்டா வைபவ பெருவிழவை ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகளின் திருக்கரங்களால் விசேஷ மஹா ஹோமங்கள் செய்வித்து ப்ரதிஷ்டா வைபவ பெருவிழா நடைபெற்றது.

வேத விற்பன்னர்கள் வேதம் முழங்க கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழா, விசேஷ மஹா பூர்ணாஹுதிக்கு பின் மூலஸ்தான, விக்ரஹதிற்க்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது.

விழாவில் முக்கியஸ்தர்களும், பல்வேறு இடங்களில் உள்ள ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தின் அடியார்கள் கலந்துகொண்டு, அன்னை ஜெய் ப்ரத்யங்கிரா அருளையும், குருவின் ஆசியும் பெற்றனர்.
- ராமநாதபுரம் தொகுதியை தங்களுக்கே தரவேண்டும் என்று தினகரன் வலியுறுத்தி உள்ளதாக தெரிய வந்து உள்ளது.
- வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.
சென்னை:
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியில் டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இடம் பெற்றுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் டி.டி.வி.தினகரன் எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அனைத்து தொகுதிகளிலும் அவரது கட்சிக்கு தோல்வியே கிடைத்தது.
இந்த தடவை பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்று கணிசமான வாக்குகள் பெற வேண்டும் என்பதில் டி.டி.வி.தினகரன் உறுதியாக உள்ளார். இதற்காக அவர் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் பா.ஜ.க.விடம் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் இருந்து 22 தொகுதிகளை குறிப்பிட்டு அவர் பட்டியல் தயாரித்து கொடுத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த 22 தொகுதிகளில் இருந்து அ.ம.மு.க.வுக்குரிய 2 அல்லது 3 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

டி.டி.வி.தினகரன் தரப்பில் இருந்து தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் இருக்கும் தொகுதிகள் கேட்கப்பட்டு உள்ளன. ராமநாதபுரம் தொகுதியை தங்களுக்கே தரவேண்டும் என்று டி.டி.வி. தினகரன் வலியுறுத்தி உள்ளதாக தெரிய வந்து உள்ளது.
மற்றொரு தொகுதியாக தேனி அல்லது சிவகங்கையை கேட்டுள்ளார். இந்த தொகுதிகளில் தனது தீவிர ஆதரவாளர்களை களம் இறக்க டி.டி.வி.தினகரன் திட்டமிட்டு இருக்கிறார்.
பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கும் டி.டி.வி.தினகரன் இந்த தடவை பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிட்டாலும் தனது வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.
- மாவட்ட கலெக்டர் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- மொத்தம் 400 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர். 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன.
தஞ்சாவூா்:
தஞ்சை அடுத்த மாதாக்கோட்டையில் பொங்கல் விழாவை முன்னிட்டு லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு மாதாக்கோட்டையில் இன்று காலை நடைபெற்றது.
போட்டியை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தொடங்கி வைத்தார். முன்னதாக அவரது தலைமையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ஜல்லிக்கட்டை முன்னிட்டு காளைகள் திறந்துவிடப்படும் வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடி உயரத்துக்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டு இருந்தன. அதேபோல் காளைகள், பார்வையாளர் பகுதிக்குள் சென்றுவிடாதபடி தடுக்க இரும்பு கம்பிகள், சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
ஜல்லிகட்டில் பங்கேற்க தஞ்சை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் நேற்று இரவு முதலே தஞ்சைக்கு சரக்கு லாரி மூலம் அழைத்து வரப்பட்டன. இதேப்போல் மாடுபிடி வீரர்களும் அதிகாலை முதலே வரத் தொடங்கினர். மேலும் காளையை அடக்க வந்த வீரர்கள் மது அருந்தி உள்ளனரா? புகையிலை பொருட்கள் வைத்திருக்கிறார்களா? என்ற வழக்கமான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இதேப்போல் காளைகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் தலைமையில் கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். மொத்தம் 400 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர். 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அவைகள் துள்ளிக்குதித்து களத்துக்குள் வந்து சீறிப்பாய்ந்தது. காளைகள் வீரர்களை நோக்கி சீறி பாய்ந்தபோது சிலர் தரையில் படுத்து கொண்டனர்.
காளைகள் களத்தில் நின்று விளையாடியதை பார்வையாளர்கள் மெய்மறந்து கண்டு ரசித்தனர். பலர் வீடுகளின் மாடியில் நின்று கண்டு ரசித்தனர். இதேப்போல் காளையை வீரர்கள் அடக்கும் போது கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர்.
களத்தில் நின்று விளையாடிய காளைகளை ஆக்ரோஷத்துடன் வீரர்கள் அடக்கினர்.
காளைகளின் திமிலைப் பிடித்து அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதேப்போல் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் பரிசை பெற்றுக் கொண்டனர்.
காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் சிலருக்கு அங்கேயே மருத்துவ குழுவினர் முதலுதவி அளித்தனர். பலத்த காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.
- இன்று 2-வது நாளாக நாகர்கோவிலில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
- ஜி.எஸ்.டி. பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு வணிகர்களின் நிலைமை காப்பதற்கு 2 சதவீத வரி ஒதுக்கீடு செய்திட முன் மொழிய வேண்டும்.
நாகர்கோவில்:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன்படி இந்த குழுவினர் நேற்று தூத்துக்குடியில் இருந்து கருத்து கேட்பு கூட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இன்று 2-வது நாளாக நாகர்கோவிலில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் உறுப்பினர்கள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முன்னாள் எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே. எஸ்.விஜயன், தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோ.வி.செழியன் எம்.எல்.ஏ., எழிலரசன் எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் எம்.பி., டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ, மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு அறிந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உட்பட்ட பொதுமக்கள், மீனவர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், மலைவாழ் மக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை மீனவர்கள் வழங்கினார்கள். விவசாய சங்க பிரதிகளும் கலந்து கொண்டனர்.
வின்ஸ்ஆன்றோ, புலவர் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.வி.எம். சானலை தூர்வார வேண்டும், குளங்களை தூர்வார விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கனிமொழி எம்.பி.யிடம் வழங்கினார்கள்.
இதே போல் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பிலும் மனு வழங்கப்பட்டது. வணிகர்களை அரசு ஊழியர்களுக்கு இணையாக நடத்துவதற்கான சட்ட முன் வடிவை முன்மொழிந்திட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையாக ஓய்வூதிய பணபலன்களும், குடும்ப பாதுகாப்பு நலநிதி காப்பீடு பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். தனிநபர் வருமான வரி உச்சவரம்பை குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் ஆக உயர்த்தி அறிவிக்க முன்மொழிந்திட வேண்டும்.
ஜி.எஸ்.டி. பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு வணிகர்களின் நிலைமை காப்பதற்கு 2 சதவீத வரி ஒதுக்கீடு செய்திட முன் மொழிய வேண்டும். ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் நோயாளிகள் மாணவர்கள் நலன் கருதி ரூ.1000-த்துக்கு குறைவான விடுதி கட்டிடங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்கள்.
மீன் வலை தயாரிப்பாளர் சங்கம் சார்பில் செயலாளர் நாகூர்கான் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர். மனுவில், கொல்கத்தா, மும்பை துறைமுகங்கள் வழியாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் இறக்குமதியாகும் வலைகளை தடுப்பதுடன் மலிவுவிலை சீனப் பொருட்களுடன் மறைத்து இறக்குமதி செய்யப்படுகின்ற சீன வலைகளை முற்றிலுமாக தடுக்க வேண்டும். விவசாய பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு இருப்பது போன்று மீனவர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் மீன் வகைகளுக்கும் பூஜ்ஜியம் சதவீத வரி மட்டுமே நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து சின்னமுட்டம் விசைப்படகு மீனவர் சங்கம், தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள், குடியிருப்போர் நலசங்க நிர்வாகிகள், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை நிர்வாகிகள், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு நிர்வாகிகளும், கனிமொழி எம்.பி.யிடம் மனு அளித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், அவைத் தலைவர் எப்.எம் ராஜரத்தினம் பொருளாளர் கேட்சன், தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரை பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்ட பொதுமக்களிடமும் கனிமொழி எம்.பி. கருத்துக்களை கேட்டு அறிந்தார்.
- பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- மழை பெய்யாததால் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
நூற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. தென்மேற்கு பருவ மழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும் வடகிழக்கு பருவ மழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர் வரத்து இருக்கும்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை முடியும் தருவாயில், டிசம்பர் மாதம் இறுதியில் எதிர்பாராத விதமாக கனமழை கொட்டியது . வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக நீர்வரத்து இருந்ததால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவையும் எட்டியது. இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டது.
தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யாததால் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அணையில் கடந்த 30-ந் தேதி நீர்மட்டம் 86 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 82.52 அடியாக குறைந்துள்ளது.
- அ.தி.மு.க. - பா.ஜ.க. - பா.ம.க. கூட்டணியை ஒருங்கிணைக்க ஜி.கே.வாசன் பேசி வருவதாக கூறப்பட்டது.
- பா.ஜக. - பா.ம.க. இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
அ.தி.மு.க. - பா.ஜ.க. - பா.ம.க. கூட்டணியை ஒருங்கிணைக்க ஜி.கே.வாசன் பேசி வருவதாக கூறப்பட்ட நிலையில், பா.ஜக. - பா.ம.க. இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
12 மக்களவை தொகுதி மற்றும் 1 மாநிலங்களவை இடத்தை பா.ம.க. கேட்பதாகவும், 7 இடங்களை ஒதுக்கீடு செய்ய பா.ஜ.க. முன்வரும் நிலையில், இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் சின்னங்கள் என்பது தேர்தல் ஆணையத்தின் சொத்து.
- ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் முடக்கியிருக்க முடியும்.
சென்னை:
அ.தி.மு.க. கட்சி சின்னம், கொடி அனைத்தும் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனாலும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து உரிமையை மீட்போம் என்று கூறி வருகிறார்.
வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணியில் தான் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னமும் தங்களுக்கு கிடைக்கும் என்று கூறி உள்ளார். அதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி தராசு ஷியாமிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் சின்னங்கள் என்பது தேர்தல் ஆணையத்தின் சொத்து. தற்காலிகமாக அதை பயன்படுத்தும் உரிமையை மட்டும் அரசியல் கட்சிகளுக்கு வழங்குகிறது. அதற்கும் சில விதிமுறைகளை வைத்துள்ளது.
அ.தி.மு.க.வில் பிரச்சினைகள் எழுந்து எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் கோர்ட்டில் வழக்காடியதில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு இரட்டை இலை கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து இருப்பது ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும் மூல வழக்கை அடிப்படையாக வைத்து தெரிவித்து இருப்பார். ஆனால் அந்த வழக்கும் அவருக்கு சாதகமாக இருக்க வாய்ப்பில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி இருக்கிறார். அந்த அப்போதைய சூழ்நிலை வேறு.

அப்போதும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்த போது தேர்தல் ஆணையம் இரு தரப்பிடமும் கேட்டுத் தான் முடிவு செய்ய முடியும் என்று கூறியது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் முடக்கியிருக்க முடியும். ஆனால் அதை செய்யவில்லை. அதைதொடர்ந்து தற்காலிகமாக பயன்படுத்தும் உரிமை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்கப்பட்டது.
ஆனால் இப்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக வழங்கப்பட்டிருக்கிறது.
இனி மூல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வைத்து இடைக்கால தடை வாங்கலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் கருதலாம். அப்படியானாலும் இருதரப்புக்கும் சாதகமாகவே இருக்கும். எனவே ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதி.மு.க. ஆட்சியில் தேசிய அளவில் உள்ளாட்சித் துறையில் 140 விருதுகள் பெற்றோம்.
- விவசாயிகளுக்கு மும்முணை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்பட்டது.
அரூர்:
தருமபுரி மாவட்ட கொங்கு இளைஞர்களின் மேம்பாட்டிற்காக பல்துறை பயிற்சி அளிக்கும் கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலயம் அரூரில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் முன்னாள் முதலமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய பண்பாலயத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் முதலமைச்சராக பொறுப்பேற்றேன். அப்போது இருந்த எதிர்கட்சித் தலைவர்கள் என்னை ஏளனப்படுத்தி பேசினார்கள். 6 மாதங்கள் கூட அதி.மு.க. ஆட்சி நீடிக்காது என்றனர். ஆனால் எனது தலைமையில் நான்கு வருடம், 2 மாதங்கள் சிறந்த ஆட்சியை நடத்தினோம்.
தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள், தருமபுரி உள்பட 6 சட்டக் கல்லூரிகளை தொடங்கினோம். அதேபோல், நீட் தேர்வில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தமிழகத்தில் அதி.மு.க. தலைமையிலான ஆட்சிக் காலம் தமிழகத்தின் பொற்கால ஆட்சியாக இருந்துள்ளது. இன்று தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதிகளை வழங்கினர்.

ஆனால், தி.மு.க. 2 வருடங்கள், 8 மாத காலம் ஆட்சியில் இருந்தும் எந்த சிறந்த திட்டமும் செயல் படுத்தப்படவில்லை. நீட் விலக்குகோரி தி.மு.க.வினர் லட்சகணக்கானோரிடம் கையொப்பம் பெற்றனர். நீட் விலக்கு கோரி கையொப்பம் பெற்ற கையெழுத்து பிரதிகள் சேலத்தில் அண்மையில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் சிதறி கிடந்தது தெரியவந்தது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதி.மு.க. ஆட்சியில் தேசிய அளவில் உள்ளாட்சித் துறையில் 140 விருதுகள் பெற்றோம். அதி.மு.க. ஆட்சியில் தடை இல்லா மின்சாரம் தந்தோம். விவசாயிகளுக்கு மும்முணை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்பட்டது.
பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை கீழ் வரும் 40 ஆயிரம் ஏரிகளில் குடிமராமத்து திட்டம் மூலம் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டு தூர்வாரப்பட்டு அதில் கிடைக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக பயன்படுத்திக்கொள்ள வகை செய்தோம்.
தருமபுரி மாவட்டத்தில் அதி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் கே.ஈச்சம்பாடி அணைக் கட்டு நீரேற்றும் திட்டம் உள்ளிட்ட நீர்பாசன திட்டங்கள் கிடப்பில் போடப் பட்டுள்ளன
இவ்வாறு அவர் பேசினார்.
- 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைக்குகளை வழங்குவது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் குற்றம்.
- சிறுவனின் பெற்றோர் அபராதம் செலுத்திய நிலையில் மோட்டார் சைக்கிள் ஒரு வருடமாக ஓட்ட முடியாமல் போனது.
சென்னை:
தமிழகத்தில் வாகன விபத்தில் உயிர் இழப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சாலை விபத்துகளும் அதிகளவில் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் கூட விபத்து குறையவில்லை. சமீப காலமாக 18 வயதுக்கு குறைந்த மைனர்கள் வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்து ஏற்படுகிறது.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காயமடைந்தாலோ அல்லது இறந்தாலோ வாகனத்தை மைனர் அல்லது யாரேனும் இயக்கினால் மட்டுமே வாகன உரிமையாளர்களிடம் இருந்து இழப்பீடு பெற முடியும் என்ற மத்திய மோட்டார் வாகன சட்டம் 2019-ஐ திருத்தம் செய்ததையடுத்து தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சிறுவர்கள் கார், மோட்டார் சைக்கிள் ஓட்டி பிடிப்பட்டால் வாகனத்தின் உரிமையாளருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். மேலும் வாகனத்தின் பதிவு சான்று (ஆர்.சி) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதால் வாகனத்தை ஒரு வருடத்துக்கு ஓட்ட முடியாமல் போய்விடும். சட்டம் தற்போது அமலில் உள்ளது.
காரைக்குடி மாஜிஸ்திரேட் கோர்ட்டு சமீபத்தில் சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிளின் பதிவு சான்றிதழை 12 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யவும், சிறுவனுக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கவும் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிட்டது.
சிறுவனின் பெற்றோர் அபராதம் செலுத்திய நிலையில் மோட்டார் சைக்கிள் ஒரு வருடமாக ஓட்ட முடியாமல் போனது.
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைக்குகளை வழங்குவது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் குற்றம். ஆனாலும் மீறுபவர்கள் பொதுவாக அபராதத்துடன் விடுவிக்கப்பட்டனர். இனிமேல் அப்படி இல்லாமல் அபராதத்துடன் வாகனத்தை இயக்குவதற்கு தடையும் விதிக்கப்படுகிறது.
- பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. 2-ம் கட்ட தலைவர்கள் ரகசியமாகவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை சேர்ப்பதற்கு நேரடியாக நடத்தப்பட்டிருக்கும் முதல் பேச்சுவார்த்தை இது என்றே அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
திண்டிவனம்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் தனித்தனியாக கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன.
அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய 2 கட்சிகளையும் மீண்டும் கூட்டணியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் பா.ம.க. தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேல்சபை எம்.பி. சீட்டை தரும் கட்சியுடனேயே கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் பா.ம.க. உறுதியாக உள்ளது. இதனை மனதில் வைத்தே அந்த கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை, அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் சந்தித்து பேசியுள்ளார். திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. நேற்று இரவு 7.45 மணி அளவில் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்ற சி.வி. சண்முகம், டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார்.
சுமார் ½ மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விரும்புவதாக இந்த சந்திப்பின்போது டாக்டர் ராமதாசிடம், சி.வி. சண்முகம் கூறி இருப்பதாக தெரிகிறது.
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. 2-ம் கட்ட தலைவர்கள் ரகசியமாகவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தங்களது கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வை சேர்ப்பதற்கு திரைமறைவிலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம், டாக்டர் ராமதாசை சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை சேர்ப்பதற்கு நேரடியாக நடத்தப்பட்டிருக்கும் முதல் பேச்சுவார்த்தை இது என்றே அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது என்னென்ன விவரங்கள் பேசப்பட்டன? என்பது பற்றி இரு தரப்பினரும் அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும் அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி தொடர்பாகவே பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாக 2 கட்சிகளின் வட்டாரங்களும் தெரிவித்து உள்ளன.
டாக்டர் ராமதாசுடனான இந்த பேச்சுவார்த்தைக்கு சி.வி.சண்முகத்தை எடப்பாடி பழனிசாமியே அனுப்பி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து சி.வி. சண்முகம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விரைவில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய விவரங்களை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற வேண்டுமென்றால் பா.ம.க.வுக்கு 12 தொகுதிகள் வரையில் தர வேண்டும் என்று அந்த கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ 7 இடங்களை தருவதாக கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் பா.ம.க.வுக்கு பாரதிய ஜனதா தருவதாக உறுதி அளித்திருக்கும் 7 தொகுதிகளைவிட கூடுதலாக 2 தொகுதிகளை கொடுக்கவும் அ.தி.மு.க. தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் பெரிய கட்சிகள் ஏதும் இல்லாத நிலையில் பா.ம.க.வை தங்களது அணியில் சேர்த்துக்கொண்டால் மட்டுமே தி.மு.க. அணியை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்பதே அ.தி.மு.க.வின் எண்ணமாக உள்ளது.
கடந்த தேர்தலில் பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியிலேயே இடம் பெற்றிருந்தது. நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் பா.ம.க.வை தங்கள் அணியில் தக்க வைத்துக்கொள்வதற்கு அ.தி.மு.க. தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பலன் கிடைக்குமா? அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






