என் மலர்
உள்ளூர் செய்திகள்
- குழந்தை ரக்சின் வேனின் முன் சக்கரத்தில் சிக்கிக்கொண்டான்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் இருந்து தனியார் பள்ளி வேன் ஒன்று இன்று காலை மாம்பட்டு கிராமத்துக்கு சென்றது. வேனை மாம்பட்டு மேற்கு தெருவை சேர்ந்த கயலங்குமார் (வயது 35) என்பவர் ஒட்டி வந்தார்.
மேல் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் என்ற சவுந்தர்ராஜன். முந்திரி வியாபாரி. இவர் வீட்டின் முன்பு வேன் நின்றது. முந்திரி வியாபாரியின் மனைவி வசந்தி யு.கே.ஜி. படிக்கும் தனது மூத்த மகன் ரவிக்குமாரை வேனில் பத்திரமாக ஏற்றினார். ரவிக்குமார் ஏறியவுடன் பள்ளி வேன் அங்கிருந்து புறப்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக தாயாரோடு அங்கு நின்று கொண்டிருந்த 2-வது மகன் ஒன்றரை வயது குழந்தை ரக்சின் வேனின் முன் சக்கரத்தில் சிக்கிக்கொண்டான். இதில் படுகாயமடைந்த சிறுவன் ரக்க்ஷினை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தன் கண்முன்னே உடல் நசுங்கி பலியான குழந்தையை பார்த்து தாய் கதறி அழுத காட்சி அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இனி பஸ் இலவசம் என்பதை தாண்டி, மக்களுக்கு மாவுகட்டும் இலவசம் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை,
- பேருந்துகளில் பெரும்பாலானவை தரமற்ற முறையிலே இருப்பதனை இதுபோன்ற தொடர் விபத்துகள் உணர்த்துகின்றன.
சென்னை:
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை அமைந்தகரையில் ஓடும் மாநகரப் பேருந்தில் இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து பெண் ஒருவர் சாலையில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
ஆட்சிக்கு வந்தது முதலே எந்த ஒரு புதிய பேருந்துகளையும் வாங்காமல், தரமற்ற, பயன்பாட்டிற்கு தகுதியற்ற பேருந்துகளுக்கெல்லாம் பிங்க் நிற பெயிண்ட் பூசி "மகளிர் இலவசப் பேருந்து" என்ற பெயரில் இயக்கி பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்கே ஆபத்தான நிலையினை உருவாக்கியிருக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இனி பஸ் இலவசம் என்பதை தாண்டி, மக்களுக்கு மாவுகட்டும் இலவசம் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை,
மக்கள் இவர்கள் ஆட்சியில் உயிர்பிழைத்து வாழ்வதே மாபெரும் சாதனை என்ற நிலையிலே தான் இன்றைய விடியா திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் இருக்கின்றன என்பதற்கு இம்மாதிரியான நிகழ்வுகள்தான் சாட்சி.
தமிழ்நாடு முழுக்க இயக்கப்படும் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமானப் பேருந்துகளில் பெரும்பாலானவை தரமற்ற முறையிலே இருப்பதனை இதுபோன்ற தொடர் விபத்துகள் உணர்த்துகின்றன.
மக்களைப் பாதுகாப்புடன் உரிய இடத்திற்கு கொண்டுசேர்க்கும் வண்ணம், புதிய பேருந்துகள் வாங்கி, ஏற்கனவே உள்ள பேருந்துகளுக்கு உரிய தரப் பரிசோதனைகள் மேற்கொண்டு, பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணம் வழங்குவதை உறுதிசெய்யுமாறு இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் வந்து தரிசனம்.
- `கியூ.ஆர்.’ கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம், நகை அலங்காரம், சந்தன காப்பு அலங்காரம், கன்னியா போஜனம், அரவணை நிவேத்தியம், பால் பாயாசம் நிவேத்தியம், பொங்கல் நிவேத்தியம் மற்றும் அன்னதானம் போன்றவைகளுக்கு பணம் செலுத்தி வழிபாடு நடத்து வது வழக்கம்.
மேலும் அர்ச்சனை, குழந்தைகளுக்கு சோறு கொடுப்பு, புடவை சாத்துதல், அஷ்டோத்திரம், குங்குமம் அர்ச்சனை, கோடி அர்ச்சனை போன்ற வழிபாடுகளும் கட்டணம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இது தவிர திருப்பணி களுக்கு பக்தர்கள் நன்கொடை வழங்குவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த வழிபாடுகளுக்கும் நன்கொடைகளுக்கும் பக்தர்கள் நேரடியாக பணம் செலுத்தி வந்தனர். ஆனால் சில பக்தர்கள் பணப்பரிவர்த்தனை செய்யாமல் செல்போன் மூலம், போன் பே அல்லது கூகுள் பே வழியாக இந்த வழிபாடுகளுக்குரிய கட்டணங்களையும், நன்கொடைகளையும் செலுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் வழிபாடுகள் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலை இருந்து வந்தது.
எனவே இந்த கோவிலில் வழிபாடுகள் நடத்துவதற்கும், நன்கொடைகள் வழங்குவதற்கும் செல்போன் வழியாக `கியூ.ஆர்.' கோடு மூலம் பணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பயனாக தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் செல்போன் வழியாக `கியூ.ஆர்.' கோடு மூலம் பணம் செலுத்தி வழிபாடுகள் மற்றும் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஏராளமான பக்தர்கள் `கியூ.ஆர்.' கோடு மூலம் வழிபாடு கட்டணம் செலுத்தி வருகிறார்கள். கோவிலுக்கு நன்கொடையும் குவிந்த வண்ணமாக உள்ளது.
- அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும்.
- சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க வேண்டும்.
சென்னை:
சென்னையில் நேற்று ஓடும் பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து கீழே விழுந்த பெண் பயணி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
* அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும்.
* சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
மிக மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக தை, ஆடி மாத அமாவாசை, சிவராத்திரி தினத்தன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். வருகிற 9-ந்தேதி தை அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி பிரதோஷ நாளான இன்று (7-ந் தேதி) அதிகாலையிலேயே மலையேற அடிவார பகுதியான தாணிப்பாறை பகுதியில் சென்னை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
காலை 6.40 மணிக்கு வனத்துறையினரின் தீவிர சோதனைக்கு பின்னர் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் உள்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் மலையேறி சென்றனர்.
மலைப்பாதையில் உள்ள சங்கிலி ஓடை, மாங்கனி ஓடை, பிலாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தை மாத அமாவாசையை முன்னிட்டு இந்த முறை வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப் பட்டிருந்தது. மலை அடிவாரம் மற்றும் கோவில் பகுதிகளில் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
மலையேறி சென்ற பக்தர்கள் சுந்தர மகாலிங்கம் கோவிலில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர் முடி காணிக்கை செய்தனர்.
பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சுந்தர மகாலிங்கத்தக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
- எந்த கூட்டணியில் சேருவது என்கிற குழப்பமான நிலையில் தே.மு.தி.க. உள்ளது.
- பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தீவிரமாகி வருகின்றன. அந்த வகையில் தே.மு.தி.க.வும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு அந்த கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். தே.மு.தி.க. பொதுச் செயலாளரான பிறகு கட்சியை வழிநடத்தி வரும் பிரேமலதா பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.
தே.மு.தி.க.வை பொறுத்த வரையில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டபோது மிகப் பெரிய வெற்றியை அந்த கட்சி பெற்றிருந்தது.

அதன்பிறகு நடைபெற்ற சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களிலும், உள்ளாட்சி தேர்தலிலும் தே.மு.தி.க. தோல்வியையே தழுவியது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் இதுவரை வெற்றி பெறவே இல்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதனை மாற்றிக் காட்ட வேண்டும் என்பதே பிரேமலதாவின் எண்ணமாக உள்ளது.
இதனால் வெற்றி பெறும் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்பதே அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் நிர்வாகிகளின் நோக்கமாக உள்ளது. தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்ப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தீவிர பேச்சு வார்த்தையை நடத்தி 4 தொகுதிகளை தருவதற்கு சம்மதித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அ.தி.மு.க.வும் தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இதனால் எந்த கூட்டணியில் சேருவது என்கிற குழப்பமான நிலையில் தே.மு.தி.க. உள்ளது. இது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் கருத்துகளை கேட்பதற்கு முடிவு செய்த பிரேமலதா இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் கூட்டத்தை கூட்டி இருந்தார்.
இந்த கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதில் பங்கேற்க வந்த பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அவர் தலைமையில் நடைப்பெற்றது. மாநில நிர்வாகிகள் அவை தலைவர் டாக்டர் இளங்கோவன் துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ் மற்றும் மாவட்ட செயலாளர்கள் வி.சி.ஆனந்தன், அனகை முருகேசன், பால சுப்பிரமணியன், சூரியா, பாலா, வேல்முருகன், பழனி, ஆவடி மாநகர, மாவட்ட செயலாளர் சங்கர் உள்பட 82 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து பேசினார்கள்.
பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியை விரும்புவதாக மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் மரணம் அடைந்துள்ள நிலையில் தனித்து போட்டியிடலாம் என்றும் சிலர் பேசியுள்ளனர். கட்சியினரின் கருத்துக்களை கேட்டுக் கொண்டு தீவிரமாக ஆலோசனை நடத்தி கட்சி நலன் கருதி முடிவெடுப்போம் என்று பிரேமலதா அவர்களிடம் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்று அவர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.
பா.ஜனதா கூட்டணியில் கள்ளக்குறிச்சி, சேலம் உள்பட 4 பாராளுமன்ற தொகுதிகளை தருவதாகவும் மேல்சபை எம்.பி. பதவி ஒன்று தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.க.வும் தே.மு.தி.கவை எப்படியாவது தங்கள் பக்கம் கொண்டு வர வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் சிலர் தே.மு.தி.க. தலைமையிடம் தொடர்ந்து ரகசியமாக பேசி வருகிறார்கள்.
பா.ஜனதா கூட்டணியில் நீங்கள் கேட்கும் தொகுதிகளைவிட கூடுதல் தொகுதிகள் தருவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. சார்பில் மேல் சபை எம்.பி. பதவியை தருவது பற்றியும் பேசிக் கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இப்படி தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க., பா.ஜ.க. இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வரும் நிலையில் இன்று நடை பெறும் கூட்டத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றி முடிவு எடுக்கப்படுவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- உலக பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலம் ராமேசுவரம்.
- தீர்த்த கடற்கரையில் வைத்து திதி, தர்ப்பணம் கொடுப்பது ஜதீகமாக உள்ளது.
ராமேசுவரம்:
தென்னகத்து காசியாகவும், உலக பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாகவும் விளங்கும் ராமேசுவரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவிலில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து, கோவிலில் இருக்கும் 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகின்றனர்.
இதில் ஆண்டுதோறும் வரக்கூடிய முக்கிய அமாவாசை நாட்களான தை, ஆடி, புரட்டாசி ஆகிய அமாவாசை நாட்களில் தங்களுடைய முன்னோர்களுக்கு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் வைத்து திதி, தர்ப்பணம் கொடுப்பது ஜதீகமாக உள்ளது. அந்த வகையில் நாளை மறுநாள் (9-ந்தேதி, வெள்ளிக்கிழமை) தை அமாவாசை வருவதால் அந்நாளில் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து சுவாமி வழிபாடு செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியானது கோவில் நிர்வாகம் சார்பில் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கிழக்கு கோபுர வாசல் பகுதியில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் இருக்க மூங்கில் கம்புகள் வைத்து வரிசைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், கூட்டம் இருக்கும் என்பதால் நீண்டநேரம் வரிசையில் நின்று செல்வதற்கு வசதியாக தற்காலிக நிழற்குடை அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியானது கோவில் நான்கு ரத வீதிகளிலும் தை அமாவாசை வரையிலும் தற்காலிகமாக அமைக்கப்பட்டு வருகிறது..
தை அமாவாசையை முன்னிட்டு நாளை மறுநாள் அதிகாலையிலேயே கோவில் நடைதிறக்கப்படு கிறது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு காலை 5 மணி முதல் 5.30 வரை ஸ்படிக லிங்க பூஜையும், அதனை தொடர்ந்து சாயரட்சை பூஜை வரையிலான கால பூஜைகள் நடைபெறும். காலை 10.25 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகள் சகிதம் புறப்பாடாகி பகல் 12.10 மணிக்கு அக்னி தீர்த்த கரைக்கு எழுந் தருளி தீர்த்த வாரி உற்சவம் நடைபெறும்.
அதனைதொடர்ந்து பகல் முழுவதிலும் கோவில் நடை திறந்திருக்கும். மாலை 5.30 மணிக்கு மண்டகப்படியில் தீபாரதணை நடைபெற்று இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் மற்றும் ஸ்ரீ ராமர் வெள்ளி ரத புறப்பாடு வீதி உலா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
- ஹாலோ பிளாக் கற்கள் ஒன்றிற்கு ரூ. 5 முதல் 6 வரை விலை ஏற்றப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது ஜல்லி, பவுடர் மற்றும் மூலப்பொருட்களின் அதிரடி விலை ஏற்றத்தினால் ஹாலோ பிளாக் தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
குறிப்பாக ஜல்லியின் விலை சுமார் ஒரு யூனிட்டுக்கு ஆயிரம் வரை உயர்ந்து இருப்பதினால் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய சிறிய லாபம் கூட தற்போது கிடைப்பதில்லை.
எனவே ஹாலோ பிளாக் விலை நிர்ணயம் பற்றியும் கல்குவாரிகளில் ஜல்லி, பவுடர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க கோரியும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று முதல் ஒரு வார காலம் (7 நாட்கள்) அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.
அதன்படி இன்று திருப்பூர் மாவட்டத்தில் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் தங்களது அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இதன் காரணமாக இன்று முதல் 7 நாட்களுக்கு ஹாலோ பிளாக் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறாது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வேலைநிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு ரூ. 10 கோடி வரை ஹாலோ பிளாக் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.2 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் , உடனடியாக அரசு கவனம் செலுத்தி விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும். இல்லையென்றால் ஹாலோ பிளாக் கற்கள் ஒன்றிற்கு ரூ. 5 முதல் 6 வரை விலை ஏற்றப்படும். மேலும் வேலைநிறுத்தத்தால் லட்சக்கணக்காக தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- நேற்று தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி விலை 76 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.76,000-க்கு விற்பனையாகிறது.
- ராமர் உருவம் பொறித்த காவி கொடி ஏற்றப்பட்டது.
- கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பையும் பதட்டையும் ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி:
அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி ராமர் கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி அன்றைய தினம் இரவு குமரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
மேலும் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறையில் கடல் நடுவில் உள்ள பாறையில் இரும்பு கம்பி நடப்பட்டு ராமர் உருவம் பொறித்த காவி கொடி ஏற்றப்பட்டது. அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சி.எஸ். சுபாஷ் தலைமையில் குமரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் தர்மராஜ் இந்த கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள பாறையில் ஏற்றப்பட்ட ராமர்கொடி குறித்து சமூக வலைத் தளங்களில் சர்ச்சை கிளப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று இரவோடு இரவாக கடலில் உள்ள பாறையில் ஏற்றப்பட்ட ராமர் கொடி அகற்றப்பட்டது. அதையும் மீறி அந்த பகுதியில் மீண்டும் காவி கொடியேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று காலை மீண்டும் அந்த காவி கொடி அகற்றப்பட்டது.
இந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பையும் பதட்டையும் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சுற்றி தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
- தஞ்சாவூர் மாவட்டத்துக்கு செல்வது 16-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
- பொது தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்க உள்ளனர்.
சென்னை:
தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் கடந்த 5-ந் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டமாக பல்வேறு தரப்பட்ட மக்களிடம் சென்று தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்டு வருகிறது.
இந்த குழு மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணத்தின் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டம் செல்கின்றனர்.
நாளை (8-ந் தேதி) தஞ்சை-திருவாரூர், நாகை-திருவாரூர், திருச்சி-புதுக்கோட்டை மாவட்டங்களின் நிர்வாகிகளை சந்திப்பதாக இருந்தது. ஆனால் இப்போது தஞ்சாவூர் மாவட்டத்துக்கு செல்வது 16-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
9-ந் தேதி சேலத்துக்கு பதில் ஓசூர் செல்கிறார்கள். 10-ந் தேதி கோவை, திருப்பூருக்கும், 11-ந் தேதி சேலம் செல்லும் வகையிலும் சுற்றுப்பயணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 17-ந் தேதி விழுப்புரம், 18-ந் தேதி வேலூர், ஆரணிக்கு செல்லும் இந்த குழுவினர் 21, 22, 23-ந் தேதிகளில் சென்னையில் பொது தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்க உள்ளனர்.
- ஒவ்வொரு மாநிலத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்கான பூர்வாங்க பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
- வாக்குப்பதிவு எந்திரங்களின் தயார் நிலை குறித்தும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் தேர்தல் பயிற்சி குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி பற்றி அட்டவணையை இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரம் வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.
அதற்கு முன்னதாக நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.
இதையொட்டி ஒவ்வொரு மாநிலத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்கான பூர்வாங்க பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல், வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை, சட்டம்-ஒழுங்கு நிலவரம் ஆகியவை குறித்து அந்த மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்திய துணை தேர்தல் கமிஷனர் அஜய் பதூ மற்றும் இந்திய தேர்தல் கமிஷனின் முதன்மைச் செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் நேற்று சென்னை வந்திருந்தனர்.
தலைமைச் செயலகத்தில் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய இவர்கள் வாக்காளர் இறுதி பட்டியல் நிலை குறித்தும், வாக்குப்பதிவு எந்திரங்களின் தயார் நிலை குறித்தும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் தேர்தல் பயிற்சி குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பிறகு வருமான வரித்துறை, சுங்கத்துறை, அமலாக்கத்துறை, சி.ஆர்.பி.எப். போலீஸ் அதிகாரிகள், தமிழக ஆயுதப்படை போலீசார், தேர்தல் பிரிவு போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து இன்று மாவட்ட கலெக்டர்கள் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்கள்.
ஒவ்வொரு மாவட்ட கலெக்டரையும் தொடர்பு கொண்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்காளர் பட்டியல் பற்றியும் திருத்தம் சம்பந்தமாகவும், எவ்வளவு வாக்குப்பதிவு எந்திரங்கள் கைவசம் உள்ளது என்பது பற்றியும், இன்னும் எவ்வளவு மின்னணு எந்திரங்கள் தேவைப்படும் என்பது பற்றியும் கேட்டறிந்தனர்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வெளி மாநில போலீசார் எவ்வளவு தேவைப்படும், பதட்டமான பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் காணொலி மூலம் விவாதித்தனர். இன்று மாலை வரை இந்த ஆய்வு நடைபெறும் என தெரிகிறது.
அதன்பிறகு துணை தேர்தல் கமிஷனர் அஜய் பதூ மற்றும் தேர்தல் கமிஷன் முதன்மை செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.






