என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் கை வினைஞர்களுக்கு ரூ.7.01 கோடி கடனும் வழங்கப்பட்டுள்ளது.
    • அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கூட்டுறவுத்துறையின் மூலம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி, நடப்பாண்டில் 31.01.2024 வரை 15,87,522 விவசாயிகளுக்கு பயிர்கடனாக ரூ.13,364.75 கோடி வழங்கப்பட்டுள்ளது. 73,599 பயனாளிகளுக்கு சிறுவணிகக் கடனாக ரூ.277.21 கோடி, 4,978 கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.19.69 கோடி கடனும், 1,681 நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் கை வினைஞர்களுக்கு ரூ.7.01 கோடி கடனும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், கூட்டுறவு மருந்தகங்கள் வாயிலாக ரூ.121.47 கோடி அளவிற்கு மருந்துகளும், கூட்டுறவு மொத்த, பிரதம பண்டக சாலைகள் மூலம் ரூ. 1019 கோடி அளவிற்கு பொருட்களும், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் வாயிலாக ரூ.2084.49 கோடி புரள் வணிகமும், பண்ணை பசுமை கடைகள் வாயிலாக 6236 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.28.53 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைச்செயலாளர் டாக்டர் கோபால், பதிவாளர் டாக்டர் சுப்பையன், சிறப்புப் பணி அலுவலர் சிவன்அருள் உட்பட கூடுதல் பதிவாளர்கள், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருமாவளவன் மட்டும் பானை சின்னத்தில் போட்டியிட்டார்.
    • தனி சின்னத்தில் நின்று ஜெயித்து கட்சிக்கு அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் திருமாவளவன் உறுதியாக உள்ளார்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அதனை தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. 6 சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 4 தொகுதியில் வெற்றி பெற்றனர்.

    இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து களம் இறங்க தயாராக உள்ள விடுதலை சிறுத்தை 4 தொகுதிகளையும் ஒரு மேல்சபை எம்.பி.யும் கேட்க உள்ளனர்.

    திங்கட்கிழமை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் வி.சி.க. அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. கூட்டணி கட்சியின் சின்னத்தில் நிற்காமல் தனி சின்னத்தில் முழுமையாக நிற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருமாவளவன் மட்டும் பானை சின்னத்தில் போட்டியிட்டார். ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை ஒதுக்கப்படுகின்ற அனைத்து தொகுதியிலும் தனி சின்னத்தில் நின்று ஜெயித்து கட்சிக்கு அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் திருமாவளவன் உறுதியாக உள்ளார்.

    இரண்டு தேர்தலில் தனி சின்னமான பானை சின்னத்தில் போட்டியிட்டு குறுகிய காலத்தில் மக்களிடம் சின்னம் குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டது. மிக குறுகிய காலத்தில் பானை சின்னம் வாக்காளர்கள் மத்தியில் இடம் பிடித்தது. அதனால் இந்த முறையும் பானை சின்னத்தில் போட்டியிடவே திருமாவளவன் ஆர்வம் காட்டுகிறார்.

    அதற்காக தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. 2 முறை பானை சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு கணிசமாக வாக்குகள் பெறப்பட்டு இருப்பதை குறிப்பிட்டு மீண்டும் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • நாம் செல்லும் தமிழ்வழிப் பயணத்துக்கு ஊக்கமளித்திட்ட திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணரின் பிறந்தநாள் இன்று!
    • பாவாணரின் தமிழ்த்தொண்டைப் போற்றி, தமிழ் காக்கும் கடமையில் உறுதியோடு நிற்க உரம் பெறுவோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    நாம் செல்லும் தமிழ்வழிப் பயணத்துக்கு ஊக்கமளித்திட்ட திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணரின் பிறந்தநாள் இன்று! ஆழமான தமிழறிவும் அசைக்க முடியாத இன உணர்வும் கொண்ட தமிழ்ச்சீயம் பாவாணர் எனத் தலைவர் கலைஞர் அவரது புகழ் பாடினார்! பாவாணரின் தமிழ்த்தொண்டைப் போற்றி, தமிழ் காக்கும் கடமையில் உறுதியோடு நிற்க உரம் பெறுவோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • எங்களை பொருத்தவரை பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது.
    • தொகுதி பங்கீடு குறித்த விவரங்களை விரைவில் தெரிவிக்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்து விட்டார்.

    ஆனாலும் அ.தி.மு.க.வை, தங்கள் கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க. மேலிடம் முயன்று வருகிறது. இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா அளித்த பேட்டியில், 'அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜ.க.வின் கதவுகள் திறந்தே இருக்கின்றன'என்று கூறினார்.

    ஆனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க. மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.


    இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜ.க.வின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறியது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜ.க.வின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறி இருப்பது அவரது நல்ல எண்ணத்தை காட்டுகிறது.

    எங்களை பொருத்தவரை பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தொகுதி பங்கீடு குறித்த விவரங்களை விரைவில் தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் விஜய் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.
    • தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் ஆங்கிலத்தில் டி.வி.கே. என வருகிறது.

    சென்னை:

    விஜய் கட்சியின் பெயரை ஆங்கிலத்தில் டி.வி.கே. என வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வேல்முருகன் கூறுகையில், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் ஆங்கிலத்தில் டிவிகே என வருகிறது.

    ஏற்கனவே தமிழகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி 2012-ல் தொடங்கப்பட்டு, கேமரா சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.

    தமிழக வாழ்வுரிமை கட்சியும் ஆங்கிலத்தில் டிவிகே என வருவதால், டிவிகே என்பதை விஜய்க்கு வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தெரிவித்துள்ளார்.

    • "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தை அண்மையில் முதலமைச்சர் அறிவித்து கலெக்டர்கள் மூலம் செயல்படுத்தி வருகிறார்.
    • முகாம் நடைபெறும் நாளில் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள், தாங்கள் செல்லும்போது தாலுக்காவில் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட வேண்டும்.

    சென்னை:

    மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தை அண்மையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து கலெக்டர்கள் மூலம் செயல்படுத்தி வருகிறார்.

    "உங்களை தேடி, உங்கள் ஊரில்" முகாம் இனிமேல் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை நடத்தப்பட வேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது.

    இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஜனவரி முதல் டிசம்பர் வரை ஆண்டு முழுவதும் அனைத்து தாலுகாக்களும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில், ஆண்டின் தொடக்கத்தில் ஒரு ஆண்டிற்கான அட்டவணையை மாவட்ட கலெக்டர் வரைய வேண்டும் என்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு தெளிவுபடுத்தி உள்ளது.

    முகாம் நடைபெறும் நாளில் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள், தாங்கள் செல்லும்போது தாலுக்காவில் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட வேண்டும்.

    மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அலுவலர்கள், மனுக்களை உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த முகாம்கள் நடத்துவது குறித்த அறிக்கையை ஒவ்வொரு மாதம் 5-ந்தேதிக்குள் வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு காலத்தில் பா.ஜனதாவுடன், அ.தி.மு.க. தோழமையாக இருந்தது.
    • இதுதான் அ.தி.மு.க. நிலைப்பாடு. எப்போதும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம்.

    தஞ்சாவூா்:

    பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களிடம் கருத்துகளை கேட்டு அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த குழுவினர் தஞ்சை மண்டலத்துக்கு உட்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் கருத்துக்களைக் கேட்டு அறிந்து தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜனதாவுடன் கூட்டணிக்காக அ.தி.மு.க.வுக்கு கதவுகள் திறந்தே இருப்பதாக மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளது அவரது நிலைப்பாடாகும்.


    ஒரு காலத்தில் பா.ஜனதாவுடன், அ.தி.மு.க. தோழமையாக இருந்தது. இப்போது அரசியல் ரீதியாக நாங்கள் எதிர்க்கிறோம். எங்களோட முன்னோடிகள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பற்றி சிறுமைப்படுத்தும் விதமாக பா.ஜனதா மாநில தலைவர் கடுமையான அளவிற்கு விமர்சனம் செய்திருந்தார் .

    தொடர்ந்து அ.தி.மு.க. தலைவர்களை சிறுமைப்படுத்தி பேசும் பா.ஜனதா மாநில தலைவரை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தொண்டர்களும் சரி , பொதுமக்களும் சரி பா.ஜனதாவுடன் கூட்டணி வேண்டாம் என தொடர்ந்து கூறி வருகின்றனர்.

    பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக தலைமை அறிவித்தபோது ஒட்டுமொத்த அ.தி.மு.க. தொண்டர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.


    எந்த காலத்திலும் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு தமிழ்நாடு முழுவதும் வரவேற்பு உள்ளது.

    எங்கள் நிலைப்பாட்டை பொறுத்தவரை பா.ஜனதாவுக்கான கதவு சாத்தப்பட்டு விட்டது. அவர்கள் திறந்து வைத்திருக்கலாம். அவர்கள் வரக்கூடாது என்று நாங்கள் கதவை சாத்தி விட்டோம்.

    இதுதான் அ.தி.மு.க. நிலைப்பாடு. எப்போதும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் பா.ஜ.க.வும் தனியாக கூட்டணி அமைக்கும் பணியில் தீவிரமாக உள்ளது.
    • அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க எல்லா கதவுகளும் திறந்தே இருக்கிறது' என்று கூறியுள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடக்கிறது. பாராளுமன்ற தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்திலும் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் தற்போது அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஆகியவை நடந்து வருகிறது.

    தி.மு.க.வை பொருத்தவரை கூட்டணியை இறுதி செய்து விட்டது. தற்போது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.


    அதே நேரத்தில் அ.தி.மு.க.வை பொருத்தவரை பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கெனவே கூறி விட்டது. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி, சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை' என்று ஏற்கெனவே கூறி இருந்தார். இதையடுத்து மற்ற கட்சிகளை கூட்டணிக்கு இழுக்கும் பணியில் அ.தி.மு.க. மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

    இதனால் தமிழகத்தில் பா.ஜ.க.வும் தனியாக கூட்டணி அமைக்கும் பணியில் தீவிரமாக உள்ளது. இதற்காக கடந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு இழுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.


    இந்த வேலைகள் ஒருபுறம் நடந்தாலும், அ.தி.மு.க.வை தங்கள் கூட்டணியில் எப்படியாவது சேர்த்துவிட வேண்டும் என்று பா.ஜ.க. டெல்லி மேலிடம் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அளித்துள்ள பேட்டியில், 'அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க எல்லா கதவுகளும் திறந்தே இருக்கிறது' என்று கூறியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் எப்படியாவது கூட்டணி அமைக்க வேண்டும் என்று பா.ஜனதா மேலிடம் கருதுகிறது.

    ஆனால் மத்திய மந்திரி அமித்ஷாவின் பேட்டிக்கு பதில் அளித்துள்ள அ.தி.மு.க., 'பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை' என்று மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

    • கட்டுமான பணியின்போது திடீரென மண் சரிந்து விழுந்தது.
    • மண் சரிவில் சிக்கி 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    உதகை:

    நீலகிரி மாவட்டம் உதகை அருகே லவ்டேல் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. கட்டுமான பணியின்போது திடீரென மண் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் சிக்கிக்கொண்டனர்.

    அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் மண் சரிவில் சிக்கி 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 5 பேர் பெண் தொழிலாளிகள் ஆவர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு தொழிலாளி இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக்கொண்டார். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    • உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
    • காலநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    காலநிலை மாற்றம் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான கருத்தரங்கம் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடந்தது. இதில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. காலநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அரிசி விலை உயர்ந்துள்ளது.

    சென்னையில் தற்போது 3500 பஸ்கள் இருக்கும் நிலையில் அதை 8000 பஸ்களாக உயர்த்த வேண்டும்.


    பெண்களுக்கு இலவச பஸ் சலுகை வழங்கப்படுவது போல சென்னையில் ஆண்கள் அனைவருக்கும் இலவச பஸ் சலுகை கொடுக்க வேண்டும். பிறகு படிப்படியாக வாய்ப்புள்ள மற்ற இடங்களில் இதனை விரிவுபடுத்த வேண்டும். அப்போது தான் பொது போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன் படுத்துவார்கள்.

    மாசு பிரச்சனையால் சென்னையில் ஆண்டுக்கு 4 ஆயிரம் பேர் இறக்கும் சூழல் உள்ளது. இதனை தவிர்க்க தமிழக அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குழந்தை ரக்சின் வேனின் முன் சக்கரத்தில் சிக்கிக்கொண்டான்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் இருந்து தனியார் பள்ளி வேன் ஒன்று இன்று காலை மாம்பட்டு கிராமத்துக்கு சென்றது. வேனை மாம்பட்டு மேற்கு தெருவை சேர்ந்த கயலங்குமார் (வயது 35) என்பவர் ஒட்டி வந்தார்.

    மேல் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் என்ற சவுந்தர்ராஜன். முந்திரி வியாபாரி. இவர் வீட்டின் முன்பு வேன் நின்றது. முந்திரி வியாபாரியின் மனைவி வசந்தி யு.கே.ஜி. படிக்கும் தனது மூத்த மகன் ரவிக்குமாரை வேனில் பத்திரமாக ஏற்றினார். ரவிக்குமார் ஏறியவுடன் பள்ளி வேன் அங்கிருந்து புறப்பட்டது.

    அப்போது எதிர்பாராத விதமாக தாயாரோடு அங்கு நின்று கொண்டிருந்த 2-வது மகன் ஒன்றரை வயது குழந்தை ரக்சின் வேனின் முன் சக்கரத்தில் சிக்கிக்கொண்டான். இதில் படுகாயமடைந்த சிறுவன் ரக்க்ஷினை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தன் கண்முன்னே உடல் நசுங்கி பலியான குழந்தையை பார்த்து தாய் கதறி அழுத காட்சி அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இனி பஸ் இலவசம் என்பதை தாண்டி, மக்களுக்கு மாவுகட்டும் இலவசம் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை,
    • பேருந்துகளில் பெரும்பாலானவை தரமற்ற முறையிலே இருப்பதனை இதுபோன்ற தொடர் விபத்துகள் உணர்த்துகின்றன.

    சென்னை:

    அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சென்னை அமைந்தகரையில் ஓடும் மாநகரப் பேருந்தில் இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து பெண் ஒருவர் சாலையில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    ஆட்சிக்கு வந்தது முதலே எந்த ஒரு புதிய பேருந்துகளையும் வாங்காமல், தரமற்ற, பயன்பாட்டிற்கு தகுதியற்ற பேருந்துகளுக்கெல்லாம் பிங்க் நிற பெயிண்ட் பூசி "மகளிர் இலவசப் பேருந்து" என்ற பெயரில் இயக்கி பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்கே ஆபத்தான நிலையினை உருவாக்கியிருக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இனி பஸ் இலவசம் என்பதை தாண்டி, மக்களுக்கு மாவுகட்டும் இலவசம் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை,

    மக்கள் இவர்கள் ஆட்சியில் உயிர்பிழைத்து வாழ்வதே மாபெரும் சாதனை என்ற நிலையிலே தான் இன்றைய விடியா திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் இருக்கின்றன என்பதற்கு இம்மாதிரியான நிகழ்வுகள்தான் சாட்சி.

    தமிழ்நாடு முழுக்க இயக்கப்படும் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமானப் பேருந்துகளில் பெரும்பாலானவை தரமற்ற முறையிலே இருப்பதனை இதுபோன்ற தொடர் விபத்துகள் உணர்த்துகின்றன.

    மக்களைப் பாதுகாப்புடன் உரிய இடத்திற்கு கொண்டுசேர்க்கும் வண்ணம், புதிய பேருந்துகள் வாங்கி, ஏற்கனவே உள்ள பேருந்துகளுக்கு உரிய தரப் பரிசோதனைகள் மேற்கொண்டு, பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணம் வழங்குவதை உறுதிசெய்யுமாறு இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×