என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மண் சரிவில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- ஊட்டியில் மண் சரிந்து பலியானோர் குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
சென்னை:
நீலகிரி மாவட்டம் உதகை அருகே லவ்டேல் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. கட்டுமான பணியின்போது திடீரென மண் சரிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் ஈடுபட்டனர்.
மண் சரிவில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், ஊட்டியில் மண் சரிந்து பலியானோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், லவ்டேல் காந்தி நகர் பகுதியில் இன்று (7.02.2024) நண்பகல் தனியாருக்குச் சொந்தமான சுவர் ஒன்றை இடிக்கும் பணியில் 17 கட்டுமானத் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து 10 நபர்கள் சிக்கிய விபத்தில் ராதா (38), பாக்கியம் (36), முத்துலட்சமி (36), உமா (35) சங்கீதா (30) மற்றும் சகிலா (30) ஆகிய 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
இவ்விபத்தில் காயமடைந்து உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஜெயந்தி (56), சாந்தி (45), தாமஸ் (24) மற்றும் மகேஷ் (23) ஆகிய 4 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் 22 விமான நிலையங்களை நிர்வகிக்கும் மிகப்பெரிய நிறுவனம்.
- 158-க்கும் மேற்பட்ட விமான இயக்கங்களை வெற்றிகரமாகக் கையாண்டது.
விமான போக்குவரத்து சேவை பணிகளில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், விமான சேவையில் பிரபலமான குளோபல் ஃப்ளைட் ஹேண்ட்லிங் சர்வீசஸ் நிறுவனம் சென்னையில் மிகப்பெரிய பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது.
பஹ்ரைன் நாட்டின் கல்ஃப் ஏவியேஷன் அகாடமியுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்திற்கு குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் என பெயரிடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் அருகே, 8000 சதுர அடியில் குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்துக் கல்வியில், விரிவான பயிற்சித் திட்டங்களை வழங்க, அதிநவீன வகுப்பறைகள், அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சி வசதிகள் மற்றும் அதிநவீன கற்றல் அனுபவத்தை வழங்க அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களைக் கொண்டு இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின், குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன்- விமானப் பள்ளி, கேபின் க்ரூப் பயிற்சி, பல்வேறு விமான நிலைய நிர்வாகத் திட்டங்களில் உள்ள படிப்புகள் உட்பட விமானப் பயணத்தின் பல்வேறு அம்சங்களை கற்றுத்தருகிறது.
இதில் ஸ்மார்ட் கிளாஸ் அறை, ஆய்வகம், கேபின் க்ரூ பயிற்சிக்கான மாக் செட், நூலகம் மற்றும் க்ரூமிங் அறை வசதிகள் உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் உள்ளன.
புதிய பயிற்சி மையம் குறித்து பேசிய அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, "கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு விமானத்துறையில் மிகப்பெரிய வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் தேவை. இந்த பயிற்சி மையம் சென்னை விமான நிலையத்திற்கு அருகில், அமைந்துள்ளதால் இளைஞர்கள் இதனை பயன்படுத்தி திறமையை வளர்த்துக்கொண்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்," என்றார்.
- கடந்து வந்த பாதை என்ற புத்தகத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார்.
- நாகர்கோவில் மேயர் மகேஷ், ஆயர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.
குமரி மாவட்ட குளச்சல் விசைப்படகு மீன்பிடிப்பவர் நலச்சங்க 50 ஆம் ஆண்டு பொன்விழா, மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் முழு உருவ சிலை திறப்பு விழா மற்றும் மீன்பிடி சங்கம் கடந்து வந்த பாதை புத்தக வெளியீட்டு விழா குளச்சலில் நடைபெற்றது.

சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு அவர்கள் லூர்தம்மாள் சைமன் அவர்களின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, கடந்து வந்த பாதை என்ற புத்தகத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார். புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பங்கேற்றார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், ஆயர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு திருமதி. லூர்தம்மாள் சைமன் அவர்களுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்று மணிமண்டபம் கட்டப்படும் என உறுதி அளித்த சபாநாயகருக்கு கன்னியாகுமரி மக்கள் சார்பில் நன்றியை விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தார்.
- 500 ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையிலும், டேப் ஒட்டியிருந்ததாலும் திருமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார்.
- பணம் எடுக்கும்போது இதுபோன்ற கிழிந்த நோட்டுகள் வந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே எத்தலப்பநாயக்கனூரை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது31). இவர் வேடசந்தூரில் உள்ள தனியார் மில்லில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
அய்யலூரில் இருந்து எரியோடு செல்லும் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் நேற்று இரவு ரூ.4 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். அதில் 500 ரூபாய் நோட்டு 7, 200 ரூபாய் நோட்டு 2, 100 ரூபாய் நோட்டு 1 வந்துள்ளது.

இதில் 500 ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையிலும், டேப் ஒட்டியிருந்ததாலும் திருமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். மேலும் பணம் எடுத்தற்கான குறுஞ்செய்தியும் தாமதமாக வந்துள்ளது.
அவசர தேவைக்காக பணம் எடுக்கும்போது இதுபோன்ற கிழிந்த நோட்டுகள் வந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் ஏ.டி.எம். எந்திரங்களில் நல்ல நிலையில் உள்ள நோட்டுகளை மட்டும் வைக்க அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
- மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- இதுவரை தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை என பிரேமலதா தெரிவித்தார்.
சென்னை:
கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்க்ளைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட செயலாளர்கள் சொந்தக் கருத்துக்களைப் பகிர்ந்தனர்.
பெரும்பாலானோர் தனித்துப் போட்டியிடுவோம் என கருத்து பகிர்ந்தனர்.
இதுவரை தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை. இனிமேல் கூட்டணி அமைத்துப் பேசுவோம்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் 14 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும்.
விஜய பிரபாகரனை ஒரு தொகுதியில் நிற்கவைக்க வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.
- பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஈரோடு மாவட்ட தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறையின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இந்த விழாவுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு-ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.
பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோடு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஈரோடு மாவட்ட தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.
- ஏகே 47 துப்பாக்கியில் இருந்து வந்த குண்டுகள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- துப்பாக்கி குண்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னை தாம்பரத்தில் இன்று மேலும் 6 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏகே 47 துப்பாக்கியில் இருந்து வந்த குண்டுகள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நேற்று வழக்கறிஞர் வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், இன்று காந்தி சாலை பகுதியில் மேலும் 6 குண்டுகள் சிதறி கிடந்துள்ளன.
துப்பாக்கி குண்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் கை வினைஞர்களுக்கு ரூ.7.01 கோடி கடனும் வழங்கப்பட்டுள்ளது.
- அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சென்னை:
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கூட்டுறவுத்துறையின் மூலம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, நடப்பாண்டில் 31.01.2024 வரை 15,87,522 விவசாயிகளுக்கு பயிர்கடனாக ரூ.13,364.75 கோடி வழங்கப்பட்டுள்ளது. 73,599 பயனாளிகளுக்கு சிறுவணிகக் கடனாக ரூ.277.21 கோடி, 4,978 கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.19.69 கோடி கடனும், 1,681 நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் கை வினைஞர்களுக்கு ரூ.7.01 கோடி கடனும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்டுறவு மருந்தகங்கள் வாயிலாக ரூ.121.47 கோடி அளவிற்கு மருந்துகளும், கூட்டுறவு மொத்த, பிரதம பண்டக சாலைகள் மூலம் ரூ. 1019 கோடி அளவிற்கு பொருட்களும், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் வாயிலாக ரூ.2084.49 கோடி புரள் வணிகமும், பண்ணை பசுமை கடைகள் வாயிலாக 6236 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.28.53 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைச்செயலாளர் டாக்டர் கோபால், பதிவாளர் டாக்டர் சுப்பையன், சிறப்புப் பணி அலுவலர் சிவன்அருள் உட்பட கூடுதல் பதிவாளர்கள், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருமாவளவன் மட்டும் பானை சின்னத்தில் போட்டியிட்டார்.
- தனி சின்னத்தில் நின்று ஜெயித்து கட்சிக்கு அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் திருமாவளவன் உறுதியாக உள்ளார்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதனை தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. 6 சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 4 தொகுதியில் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து களம் இறங்க தயாராக உள்ள விடுதலை சிறுத்தை 4 தொகுதிகளையும் ஒரு மேல்சபை எம்.பி.யும் கேட்க உள்ளனர்.
திங்கட்கிழமை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் வி.சி.க. அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. கூட்டணி கட்சியின் சின்னத்தில் நிற்காமல் தனி சின்னத்தில் முழுமையாக நிற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருமாவளவன் மட்டும் பானை சின்னத்தில் போட்டியிட்டார். ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை ஒதுக்கப்படுகின்ற அனைத்து தொகுதியிலும் தனி சின்னத்தில் நின்று ஜெயித்து கட்சிக்கு அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் திருமாவளவன் உறுதியாக உள்ளார்.
இரண்டு தேர்தலில் தனி சின்னமான பானை சின்னத்தில் போட்டியிட்டு குறுகிய காலத்தில் மக்களிடம் சின்னம் குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டது. மிக குறுகிய காலத்தில் பானை சின்னம் வாக்காளர்கள் மத்தியில் இடம் பிடித்தது. அதனால் இந்த முறையும் பானை சின்னத்தில் போட்டியிடவே திருமாவளவன் ஆர்வம் காட்டுகிறார்.
அதற்காக தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. 2 முறை பானை சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு கணிசமாக வாக்குகள் பெறப்பட்டு இருப்பதை குறிப்பிட்டு மீண்டும் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- நாம் செல்லும் தமிழ்வழிப் பயணத்துக்கு ஊக்கமளித்திட்ட திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணரின் பிறந்தநாள் இன்று!
- பாவாணரின் தமிழ்த்தொண்டைப் போற்றி, தமிழ் காக்கும் கடமையில் உறுதியோடு நிற்க உரம் பெறுவோம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
நாம் செல்லும் தமிழ்வழிப் பயணத்துக்கு ஊக்கமளித்திட்ட திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணரின் பிறந்தநாள் இன்று! ஆழமான தமிழறிவும் அசைக்க முடியாத இன உணர்வும் கொண்ட தமிழ்ச்சீயம் பாவாணர் எனத் தலைவர் கலைஞர் அவரது புகழ் பாடினார்! பாவாணரின் தமிழ்த்தொண்டைப் போற்றி, தமிழ் காக்கும் கடமையில் உறுதியோடு நிற்க உரம் பெறுவோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
- எங்களை பொருத்தவரை பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது.
- தொகுதி பங்கீடு குறித்த விவரங்களை விரைவில் தெரிவிக்கிறேன்.
பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்து விட்டார்.
ஆனாலும் அ.தி.மு.க.வை, தங்கள் கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க. மேலிடம் முயன்று வருகிறது. இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா அளித்த பேட்டியில், 'அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜ.க.வின் கதவுகள் திறந்தே இருக்கின்றன'என்று கூறினார்.
ஆனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க. மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜ.க.வின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறியது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜ.க.வின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறி இருப்பது அவரது நல்ல எண்ணத்தை காட்டுகிறது.
எங்களை பொருத்தவரை பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தொகுதி பங்கீடு குறித்த விவரங்களை விரைவில் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகர் விஜய் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.
- தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் ஆங்கிலத்தில் டி.வி.கே. என வருகிறது.
சென்னை:
விஜய் கட்சியின் பெயரை ஆங்கிலத்தில் டி.வி.கே. என வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வேல்முருகன் கூறுகையில், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் ஆங்கிலத்தில் டிவிகே என வருகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி 2012-ல் தொடங்கப்பட்டு, கேமரா சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சியும் ஆங்கிலத்தில் டிவிகே என வருவதால், டிவிகே என்பதை விஜய்க்கு வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தெரிவித்துள்ளார்.






