என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தங்கம் விலை நேற்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலையில் கடந்த சில வாரங்களாக ஏற்றத்தாழ்வு இருந்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 76 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.76,000-க்கு விற்பனையாகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வழக்கமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது துணை ராணுவப் படையினரை பாதுகாப்பிற்காக அழைத்து வருவது வழக்கம்.
    • செந்தில் பாலாஜி தாய், தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது தாய், தந்தையர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அங்கு கேரளா பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் வந்தனர்.

    அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டுக்குள் சென்ற அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே இந்த வீட்டில் பல முறை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடைபெற்ற நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வழக்கமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது துணை ராணுவப் படையினரை பாதுகாப்பிற்காக அழைத்து வருவது வழக்கம். அல்லது உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம்.

    ஆனால், பாதுகாப்பிற்காக துணை ராணுவப்படை வீரர்கள் இல்லாமல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அங்கு வசிக்கும் அவரது தாய், தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை முடியும் வரை, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொ டர்பான அமலாக்கத்துறையின் விசாரணையை தள்ளிவைக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கில் தீர்ப்பை வரும் 15-ந்தேதிக்கு நீதிபதி அல்லி ஒத்திவைத்தார். இந்த சூழலில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலில் கட்சி கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுக்க தலைவர் கிருஷ்ணசாமிக்கு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • தேர்தலில் 2 அல்லது 3 இடங்களை கேட்க திட்டமிட்டுள்ளோம்.

    குனியமுத்தூர்:

    டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் புதிய தமிழகம் கட்சி செயல்பட்டு வருகிறது.

    இந்த கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. அங்கம் வகித்த கூட்டணியில் இடம் பெற்று இருந்தது. தற்போது அந்த கூட்டணி உடைந்து ள்ளது. இதன் காரணமாக டாக்டர் கிருஷ்ணசாமி, எந்த அணியுடன் கூட்டணி சேரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

    இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்ட குழு கூட்டம் கோவை குனியமுத்தூரில் உள்ள டாக்டர் கிருஷ்ணசாமி இல்லத்தில் நடந்தது. பாராளுமன்ற தேர்தலில் கட்சி கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுக்க தலைவர் கிருஷ்ணசாமிக்கு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமான காலக்கட்டத்தில் நடக்கிறது. எனவே வலுவான கூட்டணியில் இடம்பெற திட்டமிட்டுள்ளோம். அது எண்ணிக்கை மற்றும் கொள்கை அடிப்படையில் வெற்றி பெறும் கூட்டணியாக இருக்க வேண்டும். தேர்தலில் 2 அல்லது 3 இடங்களை கேட்க திட்டமிட்டுள்ளோம்.

    2019-ல் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் நாங்கள் இடம்பெற்றோம். தற்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது இல்லை. புதிய அரசியல் சூழல் நிலவுகிறது.

    புதிய தமிழகம் கட்சி சுதந்திரமாக செயல்பட நினைக்கிறது. பாரதிய ஜனதா- அ.தி.மு.க. கூட் டணி என்பது காலம் கடந்துவிட்டது. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து நாங்கள் இதுவரை முடிவுக்கு வரவில்லை.

    தமிழகத்தில் தற்போது 3 அணிகள் உள்ளன. நாங்கள் வெற்றிக்கூட்டணியில் இடம்பெறுவோம். பாராளுமன்றத்தில் எங்களது குரல் ஒலிக்க வேண்டும். அதுதான் எங்களின் நோக்கம் ஆகும். இம்முறை நாங்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இடம்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து கட்சிகளையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரவணைத்து தான் செல்கிறார்.
    • தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.

    மதுரை:

    மதுரையில் தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை பெற்ற கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரையில் இன்று நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சிறு, குறு தொழி ல்களை ஊக்கப்படுத்த வேண்டும் என அதிகளவில் மனு வழங்கியுள்ளனர். பிரதமர் மோடி 3 முறை தமிழகம் வருகை தந்தும் சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ள சேதங்களுக்காக நிவாரண நிதி 1 ரூபாய் கூட தரவில்லை. முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்தே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட போதிலும் எந்தவித பாரபட்சமும் காட்டப்படவில்லை. அனைத்து கட்சிகளையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரவணைத்து தான் செல்கிறார்.

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அறிவிப்புகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் நிதியை ஒவ்வொரு ஆண்டும் குறைத்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக ரெயில்வே திட்டங்களுக்கான நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விண்ணப்பதாரர்களின் வீடுகளில் தண்ணீர் தேங்கி வெள்ளத்தால் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்ததா? என்பதையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியலை 4 மாவட்ட கலெக்டர்களும் அரசுக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

    சென்னை:

    மிச்சாங் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6 ஆயிரம் நிவாரண உதவி நியாய விலைக்கடை மூலம் வழங்கப்பட்டது.

    இதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 13.72 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது. சர்க்கரை கார்டு, எந்த பொருளும் வாங்க முடியாத கார்டுதாரர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள், வெளியூரில் இருந்து இங்கு தங்கி வேலை செய்வோருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொதுமக்கள் விண்ணப்பம் எழுதி கொடுத்திருந்தனர். ரேஷன் கார்டு இல்லாதவர்களும் எழுதி கொடுத்தால் அவர்களது விண்ணப்பமும் நிவாரணம் வழங்க பரிசீலிக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.

    அதனை தொடர்ந்து 5.5 லட்சம் பேர் ரூ.6 ஆயிரம் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இதில் ரேஷன் கார்டு இணைத்து 2 லட்சத்து ஆயிரம் பேரும், ரேஷன் கார்டு இல்லாமல் 3 லட்சத்து 5 ஆயிரம் பேரும் மனு கொடுத்து இருந்தனர்.

    இந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வந்தது.

    அது மட்டுமின்றி அந்தந்த வார்டு வருவாய், சுகாதாரம், பொறியியல் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்து வந்தனர்.

    விண்ணப்பதாரர்களின் வீடுகளில் தண்ணீர் தேங்கி வெள்ளத்தால் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்ததா? என்பதையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதே போல் ரேஷன் கார்டு இல்லாதவர்களின் விண்ணப்பங்களுடன் ஆதார் மற்றும் முகவரி சான்றுக்கான வாடகை ஒப்பந்தம், கியாஸ் பில், வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு வந்தது.

    இதில் தகுதியான நபர்களை கண்டறிந்து கணக்கெடுக்கப்பட்டு வந்தது. ஆய்வு நடத்திய அதிகாரிகள் தகுதியான விண்ணப்பதாரர்களை வீட்டின் முன்பு போட்டோவும் எடுத்து பதிவு செய்தனர்.

    இந்த பணிகள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. இப்போது இந்த கள ஆய்வு அனைத்தும் நிறைவடைந்துவிட்டது.

    தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியலை 4 மாவட்ட கலெக்டர்களும் அரசுக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இந்த பட்டியலில் சுமார் 5 லட்சம் பேர் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

    எனவே விரைவில் 5 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் பணம் கிடைக்க உள்ளது. முதலமைச்சரின் அனுமதி பெற்று நிதித்துறையில் இருந்து பணம் ஒதுக்கப்பட்டதும் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கான முறையான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வாராந்திர விடுமுறை தினங்களை முன்னிட்டு சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து கூடுதலான அளவில் பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள்.
    • கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வாராந்திர விடுமுறை தினங்களான சனிக்கிழமை (10-ந் தேதி) மற்றும் ஞாயிற்றுக்கிழமையை (11-ந் தேதி - சுபமுகூர்த்த தினம்) முன்னிட்டு சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து கூடுதலான அளவில் பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் 9-ந் தேதி (நாளை) வெள்ளிக்கிழமை தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பஸ்கள் மேற்கூறிய இடங்களில் இருந்தும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    மேலும், ஞாயிற்றுக்கிழமை (11-ந் தேதி) சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த மனு மீது 15-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்தார்.
    • செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்து அவர் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு சென்னை செசன்ஸ் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்தநிலையில், போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தொடங்கக்கூடாது என்றும், இந்த விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் வக்கீல் பரணிகுமார் மூலம் செந்தில் பாலாஜி அதே கோர்ட்டில் புதிய மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி அல்லி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன், 'மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை வழக்கு செல்லாததாகிவிடும்' என வாதாடினார்.

    அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் என்.ரமேஷ், 'வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல' என வாதாடினார்.

    இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த மனு மீது 15-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்தார்.

    செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்து அவர் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அவரது நீதிமன்ற காவலை 15-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • கிளாம்பாக்கம் பஸ் நிலையமே, பயணிகளுக்கு அதிக வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் உருவாக்கப்பட்டுள்ளது.
    • வண்டலூர் ரெயில் நிலையத்துக்கு 2 ‘ஸ்மால்’ பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பஸ் நிலையத்தில் இருந்துதான், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் ஆம்னி பஸ்களும் இயக்கப்பட வேண்டும் என கடந்த ஜனவரி 24-ந்தேதி போக்குவரத்துத்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, 'தாம்பரம், போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க ஆம்னி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்படும். பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கி விடுவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றார்.

    ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயண், ''அனைத்து ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வாகன நிறுத்தும் இடம் உள்ளன. எனவே கோயம்பேட்டில் இருந்தும் பயணிகளை ஏற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும், என்றார்.

    அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் குறுக்கிட்டு, ''ஆம்னி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்படும் இடங்களில் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும்'' என்றார்.

    இதையடுத்து நீதிபதி, ''சென்னையில் அனைத்து இடங்களிலும் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதி வழங்கினால் கிளாம்பாக்கம் செல்லும் முன்பாகவே பஸ்கள் நிரம்பி விடும். கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தொடங்கப்பட்டதன் நோக்கமே வீணாகி விடும். எனவே எந்தெந்த வழித்தடங்களில் பயணிகளை ஏற்றி இறக்க ஆம்னி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்தும், மாற்று வழித்தடங்களை அடையாளம் கண்டும் வரைபடங்களுடன் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை நாளை (வெள்ளிக்கிழமை) தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.

    இந்த வழக்கு விசாரணையின்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.,) உறுப்பினர் செயலாளர் அன்சூல் மிஸ்ரா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் நிலையமே, பயணிகளுக்கு அதிக வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு 2013-ம் ஆண்டு சட்டசபையில் வெளியிடப்பட்டன. முன்பு சென்னை அருகே பிராட்வே பகுதியில் இருந்துதான் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசல் காரணமாக கோயம்பேடுக்கு பஸ்நிலையம் மாற்றப்பட்டபோது, இதுபோலத்தான் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    தற்போது மக்கள்தொகை பெருக்கம், போக்குவரத்து நெரிசல் காரணமாக தென்மாவட்டங்கள் செல்லும் பஸ்கள் எல்லாம் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கிளாம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு செல்ல பயணிகள் அவதிப்படக்கூடாது என்பதற்காக கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு 17 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகருக்குள் பல்வேறு பகுதிகளுக்கு 698 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 4,651 நடைகள் (டிரிப்கள்) அடிக்கப்படுகின்றன. இதுபோக வண்டலூர் ரெயில் நிலையத்துக்கு 2 'ஸ்மால்' பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே, மனுதாரர்களின் கோரிக்கையின் அடிப்படையில், ஆம்னி பஸ்களை கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்க அனுமதித்ததால், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உருவாக்கியதற்கான நோக்கமே அடிப்பட்டு விடும்.

    மனுதாரர்கள் தங்கள் நலனுக்காகத்தான் பார்க்கின்றனரே தவிர, பொதுமக்கள் மற்றும் அரசின் நலனை கருத்தில் கொள்ளவில்லை. இதுபோன்ற வழக்குகளை தொடர்ந்து, தென்மாவட்ட பஸ்கள் எங்கிருந்து புறப்படுகிறது என்ற தேவையற்ற குழப்பத்தை பயணிகள் மத்தியில் உருவாக்குகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாக்குப்பதிவின்போது ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 100 சதவீதம் தேவை என்றால், 130 சதவீத அளவில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்திருக்க வேண்டும்.
    • போலீசார் தரப்பில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் அந்தந்த பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய துணை தேர்தல் கமிஷனர் அஜய் பாது மற்றும் இந்திய தேர்தல் கமிஷனின் முதன்மை செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் சென்னைக்கு வந்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 2 நாட்களாக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் தமிழக தேர்தல் அதிகாரிகள், மத்திய மற்றும் மாநில அமலாக்க முகமைகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து நேற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் காணொலி காட்சி மூலம் இந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மற்றும் தேர்தல் அதிகாரிகள், சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை, ஆவடி, தாம்பரம் போலீஸ் கமிஷனர்கள் நேரடியாக கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், புதுச்சேரி டி.ஐ.ஜி. ஆகியோரும் நேற்று நடந்த கூட்டத்தில் பங்கேற்றனர். புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக அவர்கள் எடுத்துரைத்தனர்.

    பாராளுமன்ற தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகள், வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குதல், வெப் கேமராக்கள் மூலம் ஓட்டுப்பதிவை கண்காணிப்பது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச்செல்வதை தடுப்பது, பண பட்டுவாடாவை தடுப்பது, தேர்தல் விதிமுறை மீறல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய ஆய்வு கூட்டம் மாலை 6 மணி வரை நீடித்தது. ஆய்வு கூட்டம் நிறைவடைந்த பிறகு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற தேர்தல் தயார் நிலை குறித்து கடந்த 2 நாட்களாக இந்திய துணை தேர்தல் கமிஷனர் அஜய் பாது மற்றும் இந்திய தேர்தல் கமிஷனின் முதன்மை செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். எந்த அளவில் நாங்கள் தயாராக இருக்கிறோம்? என்பது பற்றி ஆய்வு செய்தனர். தேர்தல் நடத்த நாங்கள் தயார் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளோம்.

    வாக்குப்பதிவின்போது ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 100 சதவீதம் தேவை என்றால், 130 சதவீத அளவில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்திருக்க வேண்டும். அந்த அளவில் தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு வாக்குப்பதிவு எந்திரத்துடனும் விவிபாட் எந்திரம் இணைக்கப்படும். அதன் மூலம் ஒவ்வொரு வாக்காளரும் ஒப்புகை சீட்டைப் பார்த்து அவர்களின் வாக்கை உறுதி செய்துகொள்ள முடியும்.

    போலீசார் தரப்பில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் அந்தந்த பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பதற்றமான அல்லது பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகளைப் பற்றி ஆய்வு செய்வதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. ஏனென்றால் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு சூழ்நிலைகள் மாறக்கூடும். எனவே அங்கு நிலவும் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    தேர்தல் தேதி அறிவிப்பை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிடும். அதற்கு காத்திருக்க வேண்டும். இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தமிழகத்துக்கு ஆய்வுக்காக வரும்போது அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மண் சரிவில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    • ஊட்டியில் மண் சரிந்து பலியானோர் குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

    சென்னை:

    நீலகிரி மாவட்டம் உதகை அருகே லவ்டேல் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. கட்டுமான பணியின்போது திடீரென மண் சரிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் ஈடுபட்டனர்.

    மண் சரிவில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், ஊட்டியில் மண் சரிந்து பலியானோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், லவ்டேல் காந்தி நகர் பகுதியில் இன்று (7.02.2024) நண்பகல் தனியாருக்குச் சொந்தமான சுவர் ஒன்றை இடிக்கும் பணியில் 17 கட்டுமானத் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து 10 நபர்கள் சிக்கிய விபத்தில் ராதா (38), பாக்கியம் (36), முத்துலட்சமி (36), உமா (35) சங்கீதா (30) மற்றும் சகிலா (30) ஆகிய 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

    இவ்விபத்தில் காயமடைந்து உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஜெயந்தி (56), சாந்தி (45), தாமஸ் (24) மற்றும் மகேஷ் (23) ஆகிய 4 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவின் 22 விமான நிலையங்களை நிர்வகிக்கும் மிகப்பெரிய நிறுவனம்.
    • 158-க்கும் மேற்பட்ட விமான இயக்கங்களை வெற்றிகரமாகக் கையாண்டது.

    விமான போக்குவரத்து சேவை பணிகளில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், விமான சேவையில் பிரபலமான குளோபல் ஃப்ளைட் ஹேண்ட்லிங் சர்வீசஸ் நிறுவனம் சென்னையில் மிகப்பெரிய பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது.

    பஹ்ரைன் நாட்டின் கல்ஃப் ஏவியேஷன் அகாடமியுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்திற்கு குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் என பெயரிடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் அருகே, 8000 சதுர அடியில் குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

     


    விமானப் போக்குவரத்துக் கல்வியில், விரிவான பயிற்சித் திட்டங்களை வழங்க, அதிநவீன வகுப்பறைகள், அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சி வசதிகள் மற்றும் அதிநவீன கற்றல் அனுபவத்தை வழங்க அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களைக் கொண்டு இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்நிறுவனத்தின், குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன்- விமானப் பள்ளி, கேபின் க்ரூப் பயிற்சி, பல்வேறு விமான நிலைய நிர்வாகத் திட்டங்களில் உள்ள படிப்புகள் உட்பட விமானப் பயணத்தின் பல்வேறு அம்சங்களை கற்றுத்தருகிறது.

    இதில் ஸ்மார்ட் கிளாஸ் அறை, ஆய்வகம், கேபின் க்ரூ பயிற்சிக்கான மாக் செட், நூலகம் மற்றும் க்ரூமிங் அறை வசதிகள் உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் உள்ளன.

    புதிய பயிற்சி மையம் குறித்து பேசிய அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, "கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு விமானத்துறையில் மிகப்பெரிய வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் தேவை. இந்த பயிற்சி மையம் சென்னை விமான நிலையத்திற்கு அருகில், அமைந்துள்ளதால் இளைஞர்கள் இதனை பயன்படுத்தி திறமையை வளர்த்துக்கொண்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்," என்றார்.

    • கடந்து வந்த பாதை என்ற புத்தகத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார்.
    • நாகர்கோவில் மேயர் மகேஷ், ஆயர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

    குமரி மாவட்ட குளச்சல் விசைப்படகு மீன்பிடிப்பவர் நலச்சங்க 50 ஆம் ஆண்டு பொன்விழா, மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் முழு உருவ சிலை திறப்பு விழா மற்றும் மீன்பிடி சங்கம் கடந்து வந்த பாதை புத்தக வெளியீட்டு விழா குளச்சலில் நடைபெற்றது.


    சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு அவர்கள் லூர்தம்மாள் சைமன் அவர்களின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, கடந்து வந்த பாதை என்ற புத்தகத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார். புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பங்கேற்றார். 

    சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், ஆயர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.


    இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு திருமதி. லூர்தம்மாள் சைமன் அவர்களுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    இதனை ஏற்று மணிமண்டபம் கட்டப்படும் என உறுதி அளித்த சபாநாயகருக்கு கன்னியாகுமரி மக்கள் சார்பில் நன்றியை விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தார்.

    ×