என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருகிறது.
    • பொதுமக்கள் வெளியே செல்வதில்லை. மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. இரவு முதல் காலை 6 மணி வரை பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    குறிப்பாக சத்தியமங்கலம், அந்தியூர், பர்கூர், தாளவாடி போன்ற பகுதிகளில் பனியின் தாக்கம் காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்று வருகின்றன.

    கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது.

    பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போதே வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது.

    அக்னி நட்சத்திர நாட்களில் அடிக்கின்ற வெயிலை போன்று தற்போது வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதில்லை. மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் உள்ளது.

    மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கரும்பு பால், இளநீர், குளிர்பானங்களை விரும்பி பருகி வருகின்றனர். பின்னர் இரவு நேரத்தில் பனியன் தாக்கம் தொடங்கி விடுகிறது. இந்த மாறுபட்ட காலநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர்.

    • டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 2 மாதத்தில் கடை மாற்றப்படும் என கடை முன்பாக சிறிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
    • மதுபான கடைக்கான உரிமம் தேதி நிறைவடைந்த பின்பும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி கொங்கு மெயின் ரோடு இஎஸ்ஐ., மருத்துவமனை அருகில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைக்கு எதிராக அப்பகுதி பொது மக்கள் பலமுறை போராட்டம் நடத்தி வந்தனர்.

    கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி மாவட்ட கலெக்டரிடமும் இது குறித்து மனு அளித்திருந்தனர். தொடர் போராட்டத்தின் காரணமாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 2 மாதத்தில் கடை மாற்றப்படும் என கடை முன்பாக சிறிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.

    தற்போது அந்த அறிவிப்பு பலகையை பார் உரிமையாளர் கழற்றி வீசி விட்டு தொடர்ந்து அந்த கடையை நடத்தி வருவதாகவும் மதுபான கடைக்கான உரிமம் தேதி நிறைவடைந்த பின்பும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    எனவே அச்சுறுத்தலாக இருந்து வரும் அந்த மதுபான கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

    • குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் ஒதுக்கப்பட்டது.
    • தோவாளை காங்கிரஸ் வட்டார தலைவர் முருகானந்தம், ஊராட்சி தலைவர் திருமதி. சந்தியா சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் பீமநகரி ஊராட்சிக்கு உட்பட்ட CMC நகர் பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அவர்கள் கோரிக்கை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம்  ஒதுக்கப்பட்டது.

    அதற்கான பூமி பூஜையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் தோவாளை காங்கிரஸ் வட்டார தலைவர் முருகானந்தம், ஊராட்சி தலைவர் திருமதி. சந்தியா சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

    • விபத்தில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
    • கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள செம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி அன்ன ஜெமிலா (வயது 60). இவரது மகள் சகாய ஜூலி (25).

    இவர்கள் 2 பேரும் நேற்று அதே பகுதியை சேர்ந்த மதியழகன் (60) என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் அன்ன ஜெமிலாவின் மற்றொரு மகளை திசையன்விளை அருகே உள்ள அதிசயபுரத்தில் அவரது வீட்டில் விட்டுவிட்டு மாலையில் ஊருக்கு திரும்பினர்.

    அப்போது திசையன்விளை புறவழிச்சாலை அருகில் இசக்கியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் சென்றபோது, எதிரே உவரியை சேர்ந்த செல்வக்குமார் என்பவரது மகன் பிபின்குமார்(20) ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக ஆட்டோவின் மீது நேருக்கு நேர் மோதியது.


    இந்த விபத்தில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோவின் இடிபாடுகளில் சிக்கி 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்திலேயே மதியழகனும், அன்ன ஜெமிலாவும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    படுகாயம் அடைந்த சகாய ஜூலிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திசையன்விளை கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மார்த்தாண்டம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் பொய்யாப்பாக்கம் புதுக்காலனியை சேர்ந்தவர் ராஜி (வயது 32).

    இவரும் பில்லூர் பள்ளிக் கூட தெருவை சேர்ந்த பிரபாகரனும் மோட்டார் சைக்கிளில் முண்டியம்பாக்கத்திற்கு சென்றனர். அங்கு நடைபெற்ற உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்று நேற்று இரவு வீடு திரும்பினர்.

    முண்டியம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சர்வீஸ் ரோட்டிலிருந்து, தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல முற்பட்டனர். அப்போது சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார், சுங்கச்சாவடி ஆம்புலன்ஸ் மூலமாக இருவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் சென்ற வழியிலேயே ராஜி உயிரிழந்தார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த பிரபாகரன் இன்று அதிகாலை உயிரிழந்தார். விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 147 நபர்களிடம் விசாரணை, டிஎன்ஏ பரிசோதனை என பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
    • வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

    இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    147 நபர்களிடம் விசாரணை, டிஎன்ஏ பரிசோதனை என பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இந்நிலையில் வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    விசாரணை அதிகாரியாக இருந்த திருச்சி சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. பால்பாண்டி மாற்றப்பட்டுள்ளார். புதிய விசாரணை அதிகாரியாக தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. கல்பனா தத்தை நியமனம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

    • தி.மு.க. கூட்டணியில் 10-க்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன.
    • தி.மு.க. வுடன் சமூக நீதி, மாநில உரிமைகள், மொழி உரிமை என கருத்தியல் ரீதியாக உடன்பாடு இருக்கிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. கூட்டணியில் 10-க்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன. அவரவர் கோரிக்கைகளுக்கு ஏற்ப தொகுதிப் பங்கீடுகளை முடிக்க வேண்டிய பொறுப்பு தி.மு.க. தலைமைக்கு இருக்கிறது. தனிப்பட்ட முறையில் கட்சியின் பலம் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிட கூட்டணி பலம் மிகவும் முக்கியம். அப்போதுதான் நமது கொள்கை பகைவர்களை வீழ்த்த முடியும்.

    வி.சி.க.வுக்கு தனியாக சின்னம் இல்லை. புதிதாக ஒரு சின்னத்தை நினைவூட்டி இறுதிவரை வழி காட்டுவது கடினம். அதைத் தவிர்ப்பதற்காகத்தான் தி.மு.க. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துகிறது. மேலும் உதயசூரியன் சின்னத்தில் நின்றால், அது தி.மு.க.வுக்கு கிடைத்த வாக்கு வங்கியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும்.

    எனவே, வி.சி.க. என்னும் கட்சிக்கு வாக்கு வங்கி இருப்பதை நிரூபிக்க வேண்டியிருந்தது. கடந்த மக்களவைத் தேர்தலில் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் வாக்கு வங்கி இருந்ததால் சிதம்பரத்தில் பானை சின்னத்திலும் போட்டியிட்டோம். அதன் பின், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்த சின்னத்தில் போட்டியிட்டு வாக்கு வங்கியை உறுதி செய்தோம். எந்தச் சின்னத்தில் போட்டி என்பது பேச்சுவார்த்தையில் தெரியும். சாதிவன்முறை, பெண்கள் தொடர்பான பிரச்சினை, மொழி, இனம் அடிப்படையிலான பிரச்சினை, வர்க்கப் பிரச்சினைகள் எனப் பல தளங்களிலும் முரண்பாடுகள் இருக்கின்றன. அதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க முடியாது. தி.மு.க.வுடன் சமூக நீதி, மாநில உரிமைகள், மொழி உரிமை என கருத்தியல் ரீதியாக உடன்பாடு இருக்கிறது. அந்த புள்ளியில் தி.மு.க.வு டன் வி.சி.க. நீடிக்கிறது.

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதைக் கற்பனை கூட செய்ய முடியாது. மாநிலங்கள் இருக்காது, தேர்தல் இருக்காது, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்கள் இருக்காது. ஒன் இந்தியா, ஒன் நேசன், ஒன் கல்ச்சர், ஒன் எலக்சன். ஒன் பார்ட்டி என ஆபத்தான நிலையை இந்தியா எட்டும்.

    இவ்வாறு தொல். திருமாவளவன் கூறி உள்ளார்.

    • 3 கட்சிகளும் தொகுதி விருப்பப்பட்டியலை தி.மு.க.விடம் இன்று வழங்குகிறார்கள்.
    • கடந்த பாராளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி இன்று மாலையில் தி.மு.க. தனது கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன், முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்துகிறது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த பேச்சு வார்த்தையில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மதியம் 3 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் 4 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் 5 மணிக்கு கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதே போல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டிருந்தது.இந்த முறை அதே தொகுதிகள் ஒதுக்கப்படுமா? அல்லது தொகுதி மாற்றி கொடுக்கப்படுமா? என்பது இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில் தெரியவரும்.

    இதற்காக 3 கட்சிகளும் தொகுதி விருப்பப்பட்டியலை தி.மு.க.விடம் இன்று வழங்குகிறார்கள்.

    • கவர்னரின் அறிவுரையை தமிழ்நாடு அரசு புறக்கணித்து விட்டது.
    • உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை கவர்னர் சட்டசபையில் அமர்ந்திருந்தார்.

    சென்னை:

    சட்டசபை விவகாரம் தொடர்பாக கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

    * அரசின் உரை தவறானதாகவும் உண்மைக்கு புறம்பானதாகவும் இருந்தது.

    * தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக முன்கூட்டியே அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

    * கவர்னர் உரை என்பது அரசின் கொள்கை, சாதனைகளாக இருக்க வேண்டும். அரசியல் கருத்தாகவோ தவறாகவோ இருக்க கூடாது.

    * கவர்னரின் அறிவுரையை தமிழ்நாடு அரசு புறக்கணித்து விட்டது.

    * அரசிடம் இருந்து கவர்னர் உரைக்கான அறிக்கையானது பிப்.9-ந்தேதி கிடைத்தது.

    * உரையில் ஏராளமான பத்திகள் தவறானதாகவும், உண்மைக்கு புறம்பானதாகவும் இருந்தன.

    * தேசிய கீதம் தொடக்கத்திலும் இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

    * சட்டசபையில் முதல்வர், சபாநாயகர், உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துவிட்டு திருக்குறளையும் கவர்னர் வாசித்தார்.

    * அவைக்கு மரியாதை அளித்ததோடு, அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடக்க வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.

    * அரசியலமைப்பு சட்டப்படி அதற்கு மேலாக, கவர்னரால் உரையை வாசிக்க முடியவில்லை.

    * உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை கவர்னர் சட்டசபையில் அமர்ந்திருந்தார்.

    * சபாநாயகர் தனது உரையை முடித்ததும் தேசிய கீதம் இசைக்கப்படும் என கவர்னர் எழுந்தார்.

    * ஆனால் அவை நடவடிக்கைக்கு மாறாக கோட்சே உள்ளிட்ட பெயர்களை சபாநாயகர் வாசிக்க தொடங்கினார்.

    * சபாநாயகரின் பேச்சானது அவரின் பதவியின் மாண்புக்கும், அவை மரபுக்கும் பொருத்தமானதாக இல்லை.

    * சபாநாயகரின் செயல்பாடு, அவையின் மாண்பை குறைத்துவிட்டது.

    * அவை மாண்பை கடைப்பிடிக்கும் வகையில் கவர்னர் வெளியேறினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் நொருங்கி போனது.
    • ஆந்திரா மாநில கிராம மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.

    மேல்பட்டி:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே உள்ள ரங்கசமுத்திரம் கிராமம் தாசராபள்ளி கொல்லை மேடுவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55), முன்னாள் ராணுவ வீரர்.

    இவருக்கு திருமணம் ஆகி மனைவி தேன்மொழி, 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    வெங்கடேசன் தனது வீட்டின் அருகேயுள்ள, தனக்கு சொந்தமான 8 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிட்டு வருகிறார்.

    இவர்களின் விவசாய நிலம் ஆந்திர மாநிலம் தண்டலாம்பள்ளி மற்றும் பாவதேசவூர் கிராமத்தை ஒட்டி உள்ளது.

    அந்த கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காக தமிழக எல்லையில் உள்ள பரதராமிக்கு, வெங்கடேசன் நிலத்தின் வழியாக சென்று வந்ததாக கூறப்படுகிறது.

    இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டலாம்பள்ளியை சேர்ந்தவர்கள், வெங்கடேசனின் நிலத்தின் வழியாக அத்துமீறி சாலை அமைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார்.


    இது சம்பந்தமாக வெங்கடேசன் மற்றும் எதிர் தரப்பினரை பரதராமி போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து வெங்கடேசன் தனது விவசாய நிலத்தை சுற்றி வேலி அமைத்தார். இதனால் ஆந்திரா மாநில கிராம மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.

    இதனால் ஆத்திரமடைந்த தண்டலாம்பள்ளி மற்றும் பாவதேசவூர் கிராமத்தை சேர்ந்த சிலர், வெங்கடேசன் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதில் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் நொருங்கி போனது.

    இது குறித்து தகவல் அறிந்த பரதராமி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் வெங்கடேசன் தனது குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

    முன்னாள் ராணுவ வீரர் வீட்டை சூறையாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது.
    • பேரிடர் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார்.

    முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9.45 மணியளவில் சட்டசபைக்கு வந்தார். அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி 9.55 மணிக்கு வந்தார். அவருக்கும் பேண்டு வாத்தியம் முழங்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

    பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    சட்டசபை வளாகத்தில் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபைக்குள் அழைத்து செல்லப்பட்டார். கவர்னர் சபைக்குள் வந்ததும் சரியாக காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது.



    தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை கவர்னர் ஆர்.என்.ரவி படிக்காமல் புறக்கணித்தார். இதையடுத்து அந்த உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஆற்றல் மையமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும், மக்கள் தொகையில் 6 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ள நமது மாநிலம் இந்தியாவின் பொருளாதாரத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்கினை அளிக்கிறது.

    2022-2023-ம் ஆண்டில் 7.24 சதவீத நிலையான வளர்ச்சி வீதத்தை விஞ்சி நமது மாநிலத்தின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் சராசரி பண வீக்கத்தை பொறுத்தவரை 2022-23-ம் ஆண்டிலும் நாட்டின் 6.65 சதவீத பண வீக்கத்துடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97 சதவீதமாக உள்ளது. இந்திய நாட்டை விட தமிழ்நாடு வேகமாக வளர்ச்சி அடைவதோடு அதே கால கட்டத்தில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் நமது மாநிலம் திறம்பட செயல்பட்டு வருவதை இது மெய்ப்பிக்கிறது.

    தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய தலைமையின் கீழ் இந்த அரசின் அயராத முயற்சியின் விளைவாக குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியினை கண்டுள்ளது.

    மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால் 2021-2022-ல் 4-ம் இடத்தில் இருந்த நமது மாநிலம் 2022-2023-ம் ஆண்டில் நாட்டிலேயே முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது 14.54 லட்சம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முன் எப்போதும் இல்லாத அளவில் மொத்தம் 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்வதற்கு, சாதனை படைக்கும் வகையில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

    ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. பேரிடர் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.

    6-வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்தி காட்டியது பெருமை அளிக்கிறது. இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. ஜி.எஸ்.டி. காரணமாக தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட பணிகளுக்கு உறுதி அளித்தபடி மத்திய அரசு நிதி அளிக்கவில்லை. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாததால் மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    மக்களுடன் முதல்வர் திட்டத்தால் 2.40 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகிறது. புயல் பாதிப்பு நிவாரணத்துக்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. பண வீக்கத்தை கட்டுப்படுத்தி விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களின் வருமான ஆதாரம் குறைந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை ரூ.24,926 கோடி சுய உதவிக்குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டு உள்ளது.

    அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் முகவரியாக தமிழகம் உள்ளது. மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்கி நிதி உதவி வழங்க வேண்டும். சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான முழு செலவினமும் தமிழக அரசின் நிதியில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது.

    மகளிருக்கு மாதம் ரூ.1000 என்ற தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவுத் திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டியாகும்.

    ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த அனுமதிப்பதில்லை என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

    மத்திய அரசு அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக எடுக்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு, கற்றல் திறன் அதிகரித்துள்ளது.

    நாட்டிற்கே முன்னோடியாக காலை சிற்றுண்டி திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலை சிற்றுண்டி திட்டம் 16.85 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

    முதலமைச்சரின் கனவுத் திட்டமாக காலை சிற்றுண்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சிறுபான்மையினர், மீனவர்களை காப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுகிறது.

    பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது நாட்டிற்கே முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது. 5.59 லட்சம் ஏக்கராக குறுவை சாகுபடியை உயர்த்தி தமிழக வேளாண்துறை சாதனை படைத்துள்ளது.

    வரலாற்றிலேயே முதல் முறையாக பால் கொள்முதல் விலை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொடர் முயற்சியால் இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும். 3 லட்சம் பெண்களை கொண்டு புதிதாக 27 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 அளிக்கப்பட்டு வருகிறது.

    2.17 லட்சம் பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் பலன் அடைந்துள்ளனர்.

    மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும். இல்லம் தேடி கல்வித் திட்டம் 1.65 லட்சம் மையங்களில் நடைபெறுகிறது. இதன் மூலம் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

    சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4671 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. சரக்கு சேவை வரிக்கான இழப்பீட்டை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும்.

    மருத்துவ சுற்றுலாவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. விளையாட்டை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பரவலான வளர்ச்சியை கொண்டு வர அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 24.86 லட்சம் மாணவர்கள் இல்லம் தேடி கல்வி திட்டத்தால் பயன் அடைந்து வருகின்றனர்.

    3 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரூ.18,228 கோடியில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் 1 கோடிக்கும் மேலான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.294 கோடியில் திட்டம் உள்ளது.

    ரூ.76 கோடியில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு மூலம் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கராக உயர்த்தி தமிழக வேளாண் துறை சாதனை படைத்துள்ளது.

    சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இயற்கை பேரிடரால் பாதித்த 24.25 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.6000, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் 6.63 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.6000 வழங்கப்பட்டது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தமிழ்நாடு மேம்பாட்டு செயல் திட்டம்-2024 எனும் சட்ட முன்வடிவை நடப்பு கூட்டத் தொடரின் போது அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

    அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தை இந்த அரசு தொடங்கியுள்ளது.

    கிண்டியில் 1000 படுக்கைகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை ரூ.240 கோடி செலவில் அரசு கொண்டு வந்து சானை புரிந்துள்ளது.

    ஸ்டார்ட் அப் இந்தியா 2022 தரவரிசையில் நம் மாநிலம் சிறந்த செயலாற்றும் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு இணைய வசதி தற்சார்பு தெழிலாளர்கள் நல வாரியத்தை தொடங்கி உள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. விரிவான சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3059 கி.மீ. நீள சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.4861 கோடி செலவிலும் 187 பாலங்கள் கட்டுமான பணிகளை ரூ.553 கோடி செலவிலும் இந்த அரசு நடப்பாண்டில் மேற்கொண்டு வருகிறது.

    விடுதிகளில் மாதாந்திர உணவுக் கட்டணத்தை பள்ளி மாணவர்களுக்கு 1000 ரூபாயில் இருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1100 ரூபாயில் இருந்து ரூ.1500 ஆகவும் அரசு உயர்த்தி உள்ளது. இதன் மூலம் 1.71 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னர் திருக்குறளை வாசித்துவிட்டு சில கருத்துக்களை பேச தொடங்கினார்.
    • அரசு தயாரித்த உரையில் பல பகுதிகளை தார்மீக அடிப்படையிலும் உண்மையின் அடிப்படையிலும் என்னால் ஏற்க முடியவில்லை.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் உரையாற்றுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 10 மணிக்கு அவைக்கு வந்தார். அவர் வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பேச தொடங்கினார்.

    மதிப்பிற்குரிய சட்டப்பேரவை தலைவர் அவர்களே! மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே, மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர்களே, சட்டப்பேரவை அலுவலர்களே, நண்பர்களே, தமிழக சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறிவிட்டு உரையை வாசிக்க தொடங்கினார்.

    அப்போது அவர் ஒரு திருக்குறளை வாசித்துவிட்டு சில கருத்துக்களை பேச தொடங்கினார். இந்த அவையில் தேசிய கீதத்தை முதலிலும், இறுதியிலும் இசைக்க வேண்டும். அதை கடைபிடிக்கவில்லை. கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் ஏற்புடையதாக இல்லை.

    எனவே உரையை படிக்க விரும்பவில்லை. அரசு தயாரித்த உரையில் பல பகுதிகளை தார்மீக அடிப்படையிலும் உண்மையின் அடிப்படையிலும் என்னால் ஏற்க முடியவில்லை.

    இவ்வாறு கூறிவிட்டு தொடர்ந்து அரசின் உரையை வாசிக்காமல் வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய் பாரத் நன்றி என்று கூறி தனது உரையை 4 நிமிடங்களுக்குள் முடித்துக்கொண்டார்.

    அரசின் உரையை கவர்னர் முழுமையாக படிக்காமல் புறக்கணித்து அவையில் அமர்ந்த சம்பவம் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தமிழக கவர்னர் அரசின் உரையை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்து அவையில் அமர்ந்து இருந்தது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். 

    ×