என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கோவில் முன் அமர்ந்து பெட்ரோல் ஊற்றி பொருட்களை எரித்த வீடியோ வெளியானது.
    • கடந்த ஒரு வாரமாக சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு கைது செய்துள்ளனர்.

    சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலும் ஒன்று. கடந்த 6-ந்தேதி இந்த கோவில் வாசல் முன் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி பொருட்களை தீவைத்து எரிப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சென்னையின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவில் முன் தீவைத்து எரிப்பதும், கோவில் பாதுகாப்பு பணியில் யாரும் ஈடுபடுத்தப்படவில்லை என்பது குறித்தும் விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் கோவில் கண்காணிப்பாளர் பாலமுருகன் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகார் அடிப்படையில் போலீசார் சிசிடிவி கேமரா பதிவு உதவியுடன் மர்ம நபரை தேடிவந்தனர். இந்த நிலையில் தீவைத்த நபரை போலீசார் பாரிமுனையில் வைத்து கைது செய்துள்ளனர். அவரது பெயர் தீனதயாளன் என தெரிய வந்துள்ளது. மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீசார் தெரிவித்தாக கூறப்படுகிறது.

    சம்பவத்தின்போது அவர் கோவிலை சுற்றி வந்ததாகவும், அங்குள்ள செருப்புகளை சேகரித்து தீ வைத்ததாகவும் போலீசாரின் முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தின்போது அவர் மதுபோதையில் இருந்தாரா? இவர் யார்? என்பது போன்ற தீவிரவிசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பிப்ரவரி 26-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் என அறிவிப்பு.
    • 3 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறார்கள்.

    பழைய ஓய்வு ஊதியம் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ வருகிற 26-ம்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகளுடன் உடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று காலை 12 மணி அளவில் அமைச்சர் எ.வ. வேலு அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

    பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஜாக்டோ ஜியோவின் உயர்மட்ட குழுவின் 30 பேருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் எ.வ. வேலு, முத்துச்சாமி மற்றும் அன்பின் மகேஷ் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் தொடர்பாக காலவரையற்ற போராட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வெற்றி துரைசாமியின் செய்தியை பார்த்து மிகுந்த வேதனையும் அடைந்தேன்.
    • சைதை துரைசாமிக்கு இதயபூர்வமான இரங்கல்.

    சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சிக்கி வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியை பார்த்து மிகுந்த வேதனையும் அடைந்தேன்.

    மகனை இழந்து தவிக்கும் சைதை துரைசாமிக்கு இதயபூர்வமான ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
    • புழல் சிறையில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தகவல்.

    கடந்த 2023ம் ஆண்டு 14ம் தேதி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி மீதான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார். 8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக நீட்டித்த நிலையில், செந்தில் பாலாஜி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    புழல் சிறையில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

    • வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.
    • அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இமாச்சல பிரதேசத்தில், கடந்த 4ம் தேதி தன் நண்பர் மற்றும் ஓட்டுநருடன் சுற்றுப்பயணம் சென்ற சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் கார் சட்லஜ் நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.

    இதில், வெற்றி துரைசாமி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமானார். இவரை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு இன்று மீட்கப்பட்டது.

    வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

    சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    • அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியை வீடியோவாக வெளியீடு.
    • தான் பேசியதை ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    தமிழக சட்டப்பரேவையில் பேசிய வீடியோவை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக சட்டப்பேரவையில் தான் பேசியதை ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியை வீடியோவாக, ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    • கூட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
    • காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மார்த்தாண்டம், ஞாறான்விளையில் நடைபெற்ற குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியிருப்பிதாவது:-

    வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்ய இளைஞர்கள் அதிகமாக பங்களிப்பு அளிக்க வேண்டும். ராகுல் காந்தியை பிரதமராக்க உழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.


    மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

    காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
    • பள்ளி விழாவில் மாணவிகள் சாமியாடிய நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை கல்வி அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி பள்ளி விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாக்களில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. மாணவர்களும் இதில் உற்சாகமாக கலந்து கொண்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை தாங்கினார். தோட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    அப்போது கருப்பசாமி பாட்டுக்கு மாணவர் ஒருவர் உடல் முழுவதும் கருப்பு நிற சாயம் பூசி கையில் அரிவாளுடன் நடனமாட அந்த பாட்டுக்கு மற்ற மாணவர்கள் பாடல் பாடிக்கொண்டு இருந்தனர்.

    இதை பார்த்ததும் அங்கு அமர்ந்திருந்த மாணவிகள் சிலர் உணர்ச்சிகரமாக அருள்வந்து ஆடினர். இதனால் ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவிகளை அங்கிருந்து வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று அமைதிப்படுத்தினர்.

    பள்ளி விழாவில் மாணவிகள் சாமியாடிய நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அப்பகுதி மக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று மாட்டு வண்டியில் வந்த மணமக்களை கண்டு ரசித்தனர்.
    • மணமகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நண்பர்களின் இந்த சிறப்பான ஏற்பாட்டை அனைவரும் பாராட்டினர்.

    பேராவூரணி:

    பொதுவாகவே திருமணங்களில் குதிரை சாரட் வண்டிகளிலும், ஜானவாச காரிலும், மணமக்களை ஊர்வலமாக அழைத்து வருவது வழக்கம். ஆனால், இங்கு மணமக்கள் தனது திருமணம் பாரம்பரிய முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர். இந்த சுவாரஸ்யமான நிகழ்வை பற்றி இங்கு காண்போம்.

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன்- பழனியம்மாள் தம்பதியின் மகன் வெங்கடேசுக்கும், நடுவிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பாதகுமார்- விஜயராணி தம்பதியின் மகள் நாகஜோதிக்கும் பெரியோர்களால் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டு, இவர்களது திருமணம் நேற்று ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோவிலில் நடைபெற்றது.

    மணமகனான வெங்கடேஷ் சிங்கப்பூரில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். திருமணத்தையொட்டி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர் தான் விவசாய குடும்பத்தில் பிறந்ததால் தனது திருமணம் பாரம்பரிய முறையில் இருக்க வேண்டும் என நினைத்தார்.

    அதற்காக, விவசாய குடும்பங்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளும் தனது திருமணத்தில் பங்கு பெற வேண்டும் என வெங்கடேஷ் அவரது நண்பர்களிடம் கூறினார்.

    அதன்படி, அவரது நண்பர்கள் வெங்கடேஷின் திருமணத்தில் மாடுகளை வைத்து வெகு விமர்சையாக ஊர்வலம் நடத்த வேண்டும் என திட்டமிட்டனர்.

    அதன்படி, திருமணம் முடிந்ததும் ஆத்தாளூர் வீரமாகாளி அம்மன் கோவில் வெளியே தயார் நிலையில் இருந்த அலங்கரிக்கப்பட்ட ரேக்ளா மாட்டு வண்டியில் மணமக்கள் இருவரும் ஏறினர். பின்னர், மணக்கோலத்தில் மணமகன் மாட்டுவண்டியை ஓட்ட அருகில் மணப்பெண் புண்சிரிப்புடன் அமர்ந்திருந்தாள்.

    தொடர்ந்து, மாட்டு வண்டியானது சுமார் 2 கி.மீ. தூரம் ஊர்வலமாக சென்று பேராவூரணி அண்ணாசிலை அருகில் உள்ள திருமண மண்டபத்தை வந்தடைந்தது. வரும் வழி எல்லாம் அப்பகுதி மக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று மாட்டு வண்டியில் வந்த மணமக்களை கண்டு ரசித்தனர்.

    மேலும், மணமகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நண்பர்களின் இந்த சிறப்பான ஏற்பாட்டை அனைவரும் பாராட்டினர்.

    • கீழ் கோர்ட்டான விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரத்து 500 அபராதத்தை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
    • விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

    விழுப்புரம்:

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும் அவரது உத்தரவின்பேரில் பெண் அதிகாரியின் காரை வழிமறித்து சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து 2 பேரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். மேலும் இவ்வழக்கை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த நிலையில் அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ்தாஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு, பிப்ரவரி 23-ந்தேதிக்குள்ளாகவோ அதற்கு முன்னரோ விசாரித்து முடிக்க வேண்டுமென விழுப்புரம் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து ராஜேஷ்தாஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மற்றொரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், சம்பவம் நடைபெற்ற கள்ளக்குறிச்சி தற்போது தனி மாவட்டமாகி விட்டது என்பதால் இவ்வழக்கை கள்ளக்குறிச்சி கோர்ட்டுக்கு மாற்ற வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, அம்மனுவை தள்ளுபடி செய்ததோடு ராஜேஷ்தாசின் மேல்முறையீட்டு மனுவை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமாவே விசாரிப்பார் என்று உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

    இதில் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் இன்று (12-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ராஜேஷ்தாஸ் தரப்பில் வக்கீல்கள் பழனிவேல், ரவீந்திரன், ஹேமசந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள். நாங்கள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளோம். எனவே, காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் அதனை நீதிபதி பூர்ணிமா ஏற்கவில்லை.

    அதற்கான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் கீழ் கோர்ட்டான விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரத்து 500 அபராதத்தை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு விதிக்கப்பட்டிருந்த ரூ.500 அபராத தொகையையும் உறுதி செய்து உத்தரவிட்டார்.

    • பொள்ளாச்சி இளநீரின் மொத்த பண்ணை விலை தற்போது அதிகரித்து உள்ளது.
    • ஆனைமலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் செவ்விளநீர் அறுவடை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் அதிகளவில் தென்னை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இங்குள்ள தென்னைகளில் உற்பத்தி யாகும் பச்சைநிற இளநீர் மற்றும் செவ்விளநீருக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உண்டு.

    அதிலும் குறிப்பாக கோடைக்காலம் வரும் போது பொள்ளாச்சியில் இருந்து வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு அதிகளவில் இளநீர் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். மேலும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இளநீர் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

    தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி அனல் வெயில் கொளுத்தி வருவதால் பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பச்சை இளநீர், செவ்விளநீர் ஆகியவற்றின் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. மேலும் கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்திருந்து, இளநீரை குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி சென்று வருகின்றனர். இதுதவிர சென்னை, மதுரை, திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அதிகளவில் இளநீர் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. எனவே பொள்ளாச்சி இளநீரின் மொத்த பண்ணை விலை தற்போது அதிகரித்து உள்ளது.

    இங்கு கடந்த மாதம் தொடக்கத்தில் ஒரு இளநீரின் பண்ணை விற்பனை விலை ரூ.18 ஆக இருந்தது. ஆனால் நேற்றைய நிலவரப்படி ஒரு இளநீர் ரூ.25 என்ற விலைக்கு நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் செவ்விளநீர் அறுவடை அதிகரிக்க தொடங்கி உள்ளது. அவற்றை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    அங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 2 லட்சம் வரையிலான செவ்விளநீர் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

    பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஆண்டு பருவமழை குறைவாக இருந்தாலும், தென்னையில் இளநீர் உற்பத்தி அதிகரித்து உள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இளநீர் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்திருந்து, இளநீரை குறிப்பிட்ட விலைக்கு வாங்கி செல்கின்றனர். பெரும்பாலும் செவ்விளநீரே அதிகளவில் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கோடைக்காலம் உச்சகட்டத்தை எட்டும்போது வெளியூர்களுக்கு லாரிகள் மூலம் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும் இளநீரின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருகிறது.
    • பொதுமக்கள் வெளியே செல்வதில்லை. மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. இரவு முதல் காலை 6 மணி வரை பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    குறிப்பாக சத்தியமங்கலம், அந்தியூர், பர்கூர், தாளவாடி போன்ற பகுதிகளில் பனியின் தாக்கம் காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்று வருகின்றன.

    கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது.

    பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போதே வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது.

    அக்னி நட்சத்திர நாட்களில் அடிக்கின்ற வெயிலை போன்று தற்போது வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதில்லை. மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் உள்ளது.

    மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கரும்பு பால், இளநீர், குளிர்பானங்களை விரும்பி பருகி வருகின்றனர். பின்னர் இரவு நேரத்தில் பனியன் தாக்கம் தொடங்கி விடுகிறது. இந்த மாறுபட்ட காலநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர்.

    ×