என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சுய தொழில் பயிற்சியில் சேர ஒரு நபருக்கு ரூ.5000/-வசூலிக்கப்பட்டது.
    • பெண்கள் பயிற்சி மையத்தை தொடங்கி பணத்தை வசூலித்த சுந்தரத்தின் செல்போனில் தொடர்பு கொண்டனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் உள்ள மணிமேகலை தெருவில் உதயா டிரேடர்ஸ் தொழிற்பயிற்சி மையத்தை மதுரையை சேர்ந்த சுந்தரம் என்பவர் நடத்தி வந்தார்.

    இங்கு அளிக்கப்பட்ட சுய தொழில் பயிற்சியில் சேர ஒரு நபருக்கு ரூ.5000/-வசூலிக்கப்பட்டது. மேலும், பயிற்சி முடித்தவர்கள் உற்பத்தி செய்யும் கப் சாம்பிராணி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, கிரயான்ஸ், கலர் பென்சில் போன்ற பொருட்களை எங்களிடமே விற்று மாதம் ரூ.30 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம், இதற்கான பயிற்சி அனைத்தும் இலவசம் எனவும் கூறி, ஒரு நாளைக்கு 875 ரூபாய் வருமானம் வரும் என்று கூறி விளம்பரம் செய்தார்.

    இதனை நம்பி விருத்தாசலத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் தலா ரூ.5000/-என சுந்தரத்திடம் கொடுத்தனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கப்படுமென பணம் கட்டிய பெண்களிடம் சுந்தரம் கூறியுள்ளார். இதனையேற்ற பெண்கள் பயிற்சி வகுப்பில் சேர சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர்.

    அப்போது அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்ட பெண்கள் பயிற்சி மையத்தை தொடங்கி பணத்தை வசூலித்த சுந்தரத்தின் செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் சுந்தரத்தில் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பயிற்சி பெற பணம் செலுத்திய பெண்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

    இதனை அடுத்து பணம் கொடுத்து ஏமாந்ததை அறிந்த பெண்கள், கண்ணீர் மல்க தங்களின் குடும்பத்தாருடன் பூட்டப்பட்டிருந்த அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு உருவானது. இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பயிற்சி மையத்தின் பூட்டை உடைத்த போலீசார், பயிற்சி மையத்திற்குள் சென்றனர். அங்கு எந்த பொருட்களும் இல்லாமல் காலியாக இருந்தது.

    தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து புகாரினை பெற்று, பயிற்சி மையத்தை தொடங்கி பெண்களிடம் பணம் வசூல் செய்த சுந்தரம் மீது போலீ சார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான சுந்தரத்தை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். 

    • தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரையும், குழந்தையையும் சேர்த்தனர்.
    • குழந்தை பிறந்த சம்பவத்தை தொடர்ந்து அதியமான் கோட்டை போலீசார் தகவல் தெரிவித்து அந்த வாலிபரை அழைத்து நேரில் பேசினர்.

    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி. தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் உள்ள மாணவிகள் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. பின்னர் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

    இதை அடுத்து விடுதியின் ஒரு அறையில் பெண் குழந்தையை மாணவி பெற்று எடுத்துள்ளார். இத்தகவல் அறிந்த விடுதி வார்டன் கலைச்செல்வி மற்றும் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரையும், குழந்தையையும் சேர்த்தனர். இது குறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் அதியமான் கோட்டை போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சேர்வதற்கு முன்பாகவே தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்ததாகவும், அவருடன் நெருக்கமாக இருந்ததால் கர்ப்பமானதாகவும் மாணவி தெரிவித்தார்.

    மேலும் மாணவியின் வீட்டிற்கு காதலித்து கர்ப்பமானது தெரியாது, கல்லூரியில் சேரும் போது கர்ப்பமாக தான் இருந்தேன் என்றும் கூறியுள்ளார். அந்த வாலிபர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

    குழந்தை பிறந்த சம்பவத்தை தொடர்ந்து அதியமான் கோட்டை போலீசார் தகவல் தெரிவித்து அந்த வாலிபரை அழைத்து நேரில் பேசினர். அந்த வாலிபர் தான் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டார்.

    இருவீட்டு பெற்றோரையும் அழைத்து பேசினர். இதில் இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டனர். இருவரும் ஒரே சமுதாயம் என்பதால் புகார் அளிக்கவில்லை. இதனால் அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. மாணவியர் விடுதியில் 120 மாணவிகள் உள்ளனர். வார்டனாக கலைச்செல்வி உள்ளார்.

    இந்த மாணவி கர்ப்பமானது வார்டன் தனக்கு தெரியாது என கூறியுள்ளார். இதுகுறித்து தருமபுரி அரசு கலைக்கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

    • பலத்த காற்று வீசினால் சிமெண்ட் கம்பங்கள் உடைந்து கீழே விழும் நிலை உள்ளது.
    • மின் கம்பங்களை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள பூச்சிஅத்திப்பேடு ஊராட்சிக்குட்பட்ட வேம்பேடு கிராமம், செல்லியம்மன் கண்டிகை பகுதியில் சுடுகாடு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகியவற்றிற்கு இடையே அலமாதியில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் வருகிறது. இதையடுத்து அந்த பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அங்கிருந்து மின்கம்பங்கள் மூலம் மின்வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் இந்த உயர் அழுத்த டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்கம்பிகளை தாங்கி பிடிக்கும் 2 சிமெண்டு மின்கம்பங்களும் முற்றிலும் சிதிலமடைந்து சிமெண்டுகள் பெயர்ந்து அதில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின் கம்பங்கள் எந்த நேரத்திலும் முறிந்து விழும் நிலையில் காட்சி அளிக்கின்றன. பலத்த காற்று வீசினால் சிமெண்ட் கம்பங்கள் உடைந்து கீழே விழும் நிலை உள்ளது.

    இதேபோல் அப்பகுதியில் உள்ள பல மின் கம்பங்கள் மிகவும் சேதம் அடைந்து காணப்படுகின்றன. எனவே சேதம் அடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த ஆண்டு ஆயிலச்சேரி கிராமத்தில் அலமாதி துணை மின் நிலையத்தில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பம் உடைந்து விழுந்ததால் வயல்வெளியில் இருந்த ஒருவர் பலியானார். கோடு வெளி கிராமத்தில் மின்வயர் அறுந்து விழுந்ததில் ஒரு பெண் மற்றும் 10 ஆடுகள், ஒரு மாடு பலி ஏற்பட்டது. எனவே உயிர் பலி ஏற்படும் முன்னர் இப்பகுதியில் உள்ள சேதம் அடைந்த மின்கம்பங்களை போர்க்கால அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.

    • சுமார் 15 லட்சம் மதிப்புள்ள உயர்ரக மது பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்ட மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு புதுச்சேரியில் இருந்து மகாபலிபுரம் பகுதிக்கு உயர்ரக மது பாட்டில்கள் கடத்திய வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் கூடுதல் டி.ஜி.பி. மகேஷ் குமார், ஐ.ஜி. மயில்வாகனன், போலீஸ் சூப்பிரண்டு ஷியாமளா தேவி உத்தரவின் பேரில் விழுப்புரம் மண்டல இன்ஸ்பெக்டர் சின்ன காமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஸ்வ நாதன் இணையத் பாஷா தலைமையில் போலீசார் பட்டானூர் நாவர்குளம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான 2 சொகுசு கார்களை மடக்கி சோதனை செய்ததில் அதில் புதுச்சேரியில் இருந்து மகாபலிபுரம் சொகுசு விடுதிகளுக்கு கள்ளத்தனமாக கடத்திவரப்பட்ட சுமார் 15 லட்சம் மதிப்புள்ள உயர்ரக மது பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அதனை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்து செய்தனர். விசாரணையில் அவர் புதுச்சேரியை சேர்ந்த செங்குட்டுவன் மகன் பால முருகன் (25) என்பதும் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு விடுதிகளுக்கு கள்ளத்தனமாக உயர்ரக மதுபாட்டில்களை கடத்தி செல்வதும் தெரிய வந்தது.

    கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 26-ந்தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சென்னை:

    பழைய ஓய்வு ஊதியம் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வருகிற 26-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    இதுதொடர்பாக பேச்சுவார்த்தை அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 26-ந்தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அடையாள வேலைநிறுத்தம் நாளை (பிப்.15) நடைபெறும் என்றும் ஜாக்டோ ஜியோ அறிவித்து இருந்தது.

    இந்நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை நடத்த இருந்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீஸ் நடவடிக்கை முற்றிலும் தவறானது.
    • நாட்டின் முக்கியமானவற்றுக்காக நீங்கள் போராடுகிறீர்கள்.

    போலீஸ் நடவடிக்கையால் காயம் அடைந்த விவசாயியும், முன்னாள் ராணுவ வீரரான குர்மீத்சிங் குடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தொலைபேசியில் பேசினார். செல்போன் மூலம் இந்த உரையாடல் நடந்தது.

    காயம் அடைந்த விவசாயியிடம் எங்கே காயங்கள் ஏற்பட்டது என்று ராகுல் காந்தி கேட்டார். விவசாயி தனது கைகளிலும், கண்ணுக்கு அருகிலும் காயம் ஏற்பட்டதாக பதில் அளித்தார். போலீஸ் நடவடிக்கையால் எத்தனை போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர் என்றும் ராகுல் கேட்டார். இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி பேசியதாவது:-

    போலீஸ் நடவடிக்கை முற்றிலும் தவறானது. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். கவலை படாதீர்கள். நாட்டின் முக்கியமானவற்றுக்காக நீங்கள் போராடுகிறீர்கள். நாட்டின் உணவு வழங்குவோர் மீது மோடி அரசு சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறது.

    இவ்வாறு அந்த விவசாயியிடம் ராகுல் காந்தி பேசினார்.

    • பூங்காவுக்கு வாரவிடுமுறை என்பதால் குறைந்த அளவிலான ஊழியர்கள் பணியில் இருந்ததாக தெரிகிறது.
    • இன்று 2-வது நாளாக அனுமன் குரங்குகளை தேடும் பணி நடைபெற்றது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள், ஒரு ஜோடி இமாலயன் கிரிக்போன் கழுகு, ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் கொண்டு வரப்பட்டது. அதனை பரிசோதனை செய்து தனியாக அடைத்து வைத்து பூங்கா ஊழியர்கள் கண்காணித்து வந்தனர். விரைவில் பயணிகள் பார்வைக்கு அவற்றை திறந்து விட திட்டமிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் பூங்காவுக்கு வாரவிடுமுறை என்பதால் குறைந்த அளவிலான ஊழியர்கள் பணியில் இருந்ததாக தெரிகிறது. அனுமன் குரங்குகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த கூண்டை ஊழியர்கள் சுத்தம் செய்த போது 2 அனுமன் குரங்குகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டன. அதனை பிடிக்க முயன்றபோது மரங்களில் தாவி சென்று விட்டன. இரவு வரை தேடியும் அந்த அனுமன் குரங்குகளை பிடிக்க முடியவில்லை.

    வண்டலூர் பூங்காவில் உள்ள சூழ்நிலைக்கு அனுமன் குரங்குகள் இன்னும் பழக்கப்படாததால் அதனை பிடிக்க முடியாமல் ஊழியர்கள் திணறிவருகிறார்கள். இன்று 2-வது நாளாக அனுமன் குரங்குகளை தேடும் பணி நடைபெற்றது. ஆனால் ஊழியர்களின் பார்வையில் சிக்காமல் பூங்காவில் உள்ள மரங்களில் பதுங்கிக்கொண்டது. அதனை தேடும் பணி நடந்து வருகிறது.

    இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும் போது, வண்டலூர் பூங்காவை சுற்றி பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. அதனை ஆய்வு செய்து வருகிறோம் விரைவில் தப்பி சென்ற 2 அனுமன் குரங்குகளையும் பிடித்து விடுவோம். அவை பூங்காவை விட்டு தப்பி செல்ல வாய்ப்ப்பு இல்லை என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேலாண்மை செய்வதற்குமான நீண்ட கால ஏற்பாடுகளாக ஒரு அறக்கட்டளை நிறுவுவதற்காக சட்டம் இயற்றப்பட்டது.
    • சட்டம் பேரவையின் இறுதி நாள் அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    2020-ம் ஆண்டு தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம் காலாவதியாகி விட்டதால் இச்சட்டத்தை நீக்குவதற்கான சட்ட மசோதா சட்டசபையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

    செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இதனை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை போயஸ் தோட்டப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வசித்த இடமான வேதா நிலையத்தை ஒரு நினைவு இல்லமாக மாற்றி அமைக்கப்பதற்கும், பராமரிப்பதற்கும் அதனை மேலாண்மை செய்வதற்குமான நீண்ட கால ஏற்பாடுகளாக ஒரு அறக்கட்டளை நிறுவுவதற்காக சட்டம் இயற்றப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு 2021-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் இந்த நடவடிக்கைகளை ரத்து செய்து ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களுக்கு வேதா நிலையத்தின் சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டு இருந்தது. அதன்படி ஜெயலலிதா வீட்டின் சாவி வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த நிலையில் 2021-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் நோக்கம் தற்போது செயல்பாட்டில் இல்லாத நிலையில் அச்சட்டம் காலாவதியாகி விட்டதால் சட்டத்தை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சட்டம் பேரவையின் இறுதி நாள் அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளார்.
    • பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தொடங்க தயாராக உள்ளோம்.

    சென்னை:

    செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இன்று மதியம் விசாரணைக்கு வர உள்ள நிலையில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறை மனுவில்,

    * செல்வாக்கு மிக்கவரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக்கூடும்.

    * செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளார்.

    * ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு.

    * பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தொடங்க தயாராக உள்ளோம்.

    * செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    * செந்தில் பாலாஜி தான் வழக்கின் விசாரணையை தொடங்க விடாமல் தாமதப்படுத்தி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் இன்று பிற்பகல் ஜாமின் மனு விசாரணைக்கு வருகிறது.

    • கவர்னரும், தமிழக அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.
    • கோயம்பேடு பஸ் நிலையம் 66 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

    சென்னை:

    நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட பின்னர் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி பற்றிய பா.ம.க.வின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்.

    கவர்னரும், தமிழக அரசும் இணைந்து செயல்பட வேண்டும். பிரச்சனைகள் எழுவது தமிழக மக்களுக்குத் தான் பாதிப்பாக அமையும்.

    கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் மிகப்பெரிய அளவில் பூங்கா அமைக்க வேண்டும். பூங்காவை தவிர வேறு எதுவும் அமைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம். சென்னையில் 870 பூங்காக்கள் உள்ளன. அதில் பெரும்பாலான பூங்காக்கள் 1 முதல் 2 ஏக்கர் பரப்பளவில் தான் உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையம் 66 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

    எனவே அதில் பிரமாண்டமான பொழுது போக்கு பூங்காவை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமையல் எரிவாயுக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும். இனி ரூ.418-க்கு சமையல் எரிவாயு கிடைக்கும்.
    • குழந்தைகளுக்கு தனித்தமிழில் பெயர் சூட்டும் பெற்றோருக்கு ரூ.5,000 வெகுமதி வழங்கப்படும்.

    சென்னை:

    பா.ம.க. சார்பில் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கையை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    2024-25-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.5,12,617 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.1,94,146 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.2,00,180 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை கட்டுக்குள் கொண்டுவரப்படும். 2023-24-ம் ஆண்டில் சொந்த வரி வருவாய், மொத்த வரி வருவாய் இலக்குகளை தமிழக அரசால் எட்ட இயலாது. அதனால், வருவாய் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும்.

    குளிர்பானங்கள், வெள்ளை சர்க்கரை, பீட்சா, பர்கர், சான்ட்விச், ஷவர்மா போன்ற அதிக இனிப்பு, உப்பு, கொழுப்பு கொண்ட பொருட்களுக்கு 30 சதவீதம் சுகாதார வரி விதிக்கப்படும். தமிழ்நாட்டில் ஜூலை 25-ந்தேதி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க காவல்துறையில் தனிப்பிரிவு தொடங்கப்படும். மே 1-ந்தேதி முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைபடுத்தப்படும். தமிழ்நாட்டில் அனைத்து மது, பீர் ஆலைகள் மூடப்படும்.

    சமையல் எரிவாயுக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும். இனி ரூ.418-க்கு சமையல் எரிவாயு கிடைக்கும். ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உரிமைத்தொகை ரூ.1000-லிருந்து, ரூ.2000ஆக உயர்த்தப்படும். முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகை ரூ.3,000ஆக உயர்த்தப்படும்.

    குழந்தைகளுக்கு தனித்தமிழில் பெயர் சூட்டும் பெற்றோருக்கு ரூ.5,000 வெகுமதி வழங்கப்படும். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைத்தால், ரூ.1,000 வழங்கப்படும். தமிழ் வழியில் படித்த வர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும். தமிழ்வழியில் படித்தோருக்கு உயர்கல்வியில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும். மழலையர் வகுப்பில் இருந்து 8-ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி கட்டாயமாக்கப்படும். தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நிரப்பப்படும். நடப்பாண்டில், 2 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

    தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழில் வணிக நிறுவனங்களில் மாத வருமானம் ரூ.40,000 வரை உள்ள பணிகளில் 80 சதவீதம் தமிழர்களுக்கு வழங்க புதிய சட்டம் நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டில் தொழில், உற்பத்தி, தளவாட மேலாண்மை உள்ளிட்டவற்றின் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த பணிகள் மூலம் 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும்.

    படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டில் குடியுரிமை சட்டத்திருத்தம் செயல்படுத்தப்படாது. தமிழ் நாட்டில் ரத்து செய்யப்பட்ட தாலிக்குத் தங்கம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

    கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் முழுமையாக வேறு பேருந்து முனையங்களுக்கு மாற்றப்பட்டபின், அது பூங்காவாக மாற்றப்படும். கோயம்பேட்டில் அமைக்கப்படும் பூங்கா 66.4 ஏக்கர் பரப்பளவில் இருக்கும். சென்னையின் மிகப்பெரிய பூங்காவாக அது அமையும்.

    தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படாது. தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 55லிருந்து 17ஆக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மின் கட்டணம் குறைக்கப்படும். மாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடப்படும். பொதுமக்களின் உடல் நலம் குறித்த விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும்.

    தமிழக சட்டப்பேரவை குறைந்தது ஆண்டுக்கு 3 முறையும், 100 நாட்களும் கூடி மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆக்கபூர்வ விவாதம் நடத்துவதை தமிழக அரசு உறுதி செய்யும். தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்த்தப்படும். காவல் துறையினருக்கு 8 மணிநேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும்.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் பணிகள் தடுக்கப்படும். 2024-25ஆம் ஆண்டில் வேளாண் துறைக்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு அடுத்த 5 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் அதிகரிக்கப்படும். தமிழ்நாட்டில் உயர்வகை அரிசி, இரண்டாம் தரவகை பொன்னி அரிசி ஆகியவற்றை முறையே கிலோ ரூ.50, ரூ.45 என்ற விலையில் நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த இருவகை அரிசிகளுக்கும் கிலோவுக்கு ரூ.15 வீதம் தமிழக அரசு மானியம் வழங்கும். வேளாண்துறை முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி திரட்டப்படும்.

    காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக விரிவாக்கப்படும். என்.எல்.சி. 3-வது சுரங்கம் திட்டம், முதல் இரு சுரங்கங்களை விரிவாக்கும் திட்டம் ஆகியவற்றுக்கு தடைவிதிக்கப்படும். பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கான சட்டமுன்வரைவை விரைவாக நிறைவேற்றும்படி, மத்திய அரசை தமிழ்நாடு அரசு கேட்டுக்கொள்ளும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பாலு, இரா அருள் எம்.எல்.ஏ, திலகபாமா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 1952-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை ஒரே நேரத்தில் சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
    • கோவை குண்டு வெடிப்பு கைதிகள் 16 பேரை விடுவிக்க தி.மு.க. கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது.

    கோவை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய மந்திரி எல்.முருகன் மீண்டும் ராஜ்ய சபா உறுப்பினராக போட்டியிடுகிறார் என பா.ஜ.க. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம், தமிழகம் என அவரது பணி சிறக்கட்டும். அவரது வேலை இன்னும் மக்களுக்கு சென்று சேரட்டும்.

    மத்திய மந்திரி எல்.முருகனிடம் நீலகிரியில் போட்டியிட நாங்கள் சொல்லவில்லை. நீலகிரி தொகுதியை தயார்படுத்தி தர அவரிடம் சொல்லி இருந்தோம். நீலகிரியில் போட்டியிட வேட்பாளர் தயாராக உள்ளார். தமிழகத்தில் எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.

    இன்று சட்டமன்றத்தில் 2 தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம்.

    பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பல முறை உயர்த்தப்பட்டது. 1952-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை ஒரே நேரத்தில் சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

    இதுவரை 91 முறை மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டு உள்ளது. அதில் 50 முறை இந்திராகாந்தி, ஆட்சிகளை கலைத்ததால் தேர்தல் நடத்தும் காலம் மாறியது. ஒரே நாடு, ஒரே தேர்தலை கலைஞர் கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் வரவேற்று எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையின் புத்தகத்தை படிக்கவில்லையா?

    இப்போது இல்லையென்றாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் எதிர்காலத்தில் வரும். 2024-ம் ஆண்டு ஒரே நாடு, ஒரே தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

    கோவை குண்டு வெடிப்பு கைதிகள் 16 பேரை விடுவிக்க தி.மு.க. கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது. அக்குற்றவாளிகளை எந்த காரணத்திற்காகவும் விடுவிக்க கூடாது. கோவை இன்னும் அபாயத்தில் இருந்து தப்பிக்கவில்லை.

    தமிழகம் வரும் பிரதமர் மோடி முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த பெரிய தலைவர்கள் இணைய தயாராக இருக்கிறார்கள். நாங்கள் யாரையும் போன் போட்டு கட்சிக்கு வர அழைப்பதில்லை. விருப்பம் உள்ளவர்கள் கட்சியில் இணைகிறார்கள். ஒரு கட்சியை உடைத்து கட்சியை வளர்க்கும் வேலையை பா.ஜ.க. செய்யாது.

    எங்கள் கட்சியில் இணைந்தவர்களை வயதானவர்கள் என எஸ்.பி. வேலுமணி பேசி உள்ளார். எடப்பாடி பழனிசாமியின் வயது என்ன? வயதை பற்றி பேசி வேலுமணி அவரது கட்சி தலைவரை கேவலப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி என்ன இளைஞரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. நான் கட்சி பணிகளை மட்டுமே செய்து வருகிறேன். கோவையில் நல்ல வேட்பாளர்களை போட்டியிட வைப்போம் என்றார்.

    ×