என் மலர்
உள்ளூர் செய்திகள்
- உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்குதல் ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- விவசாய பெருமக்கள் ‘உழவர் செயலி’ மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.
சென்னை:
கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மூலம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக விவசாய எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தரப்படுவதாக அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் உள்ள 4456 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 115 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான கடன்கள் வழங்குதல், உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்குதல் ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
2938 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான விவசாய எந்திரங்கள் மற்றும் கருவிகள் இருப்பில் உள்ளன. டிராக்டர், மினி டிராக்டர், நெல் நடவு எந்திரம், நெல் அறுவடை எந்திரம், கரும்பு அறுவடை எந்திரம், தானியங்களை தூற்றி சுத்தம் செய்யும் எந்திரங்கள் மற்றும் டிரோன்கள் உள்ளிட்ட விவசாய எந்திரங்களும், பவர் டில்லர், ரோட்டோ வேட்டர் தெளிப்பான்கள் உள்ளிட்ட விவசாய கருவிகளும் உள்ளன.
விவசாய பெருமக்கள் 'உழவர் செயலி' மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னர் விவசாயிகளின் கை பேசிக்கு, எந்திரங்கள் மற்றும் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான குறுந் தகவல் அனுப்பப்படும். முன்பதிவு செய்து, குறித்த தேதி மற்றும் நேரத்தில் விவசாயிகள், வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்தலாம்.
மேலும் விவசாயிகள் rcs.tn.gov.in இணையதளத்தின் மூலம் 'Coop e-வாடகை' சேவை மூலமும் பதிவு செய்து பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
- போதையில் ஒரு உணவகத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
- நீண்ட நேரமாக போலீசாருக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை உழைப்பாளர் சிலை அருகே நேற்று நள்ளிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மதுபோதையில் தலையில் ரத்தக்காயங்களுடன் வந்த வாலிபர் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து தொந்தரவு செய்தார்.
அவரிடம் போலீசார் விசாரித்த போது அவர் மது போதையில் நிதானமற்ற வகையில் காணப்பட்டார். போதையில் வரும் வழியில் ஒரு உணவகத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த சிலர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த வாலிபருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது.
அவர் சீருடையில் இருந்த போலீசாரிடம் சென்று, தன்னை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். எனவே உடனடியாக போலீசாரை இங்கு வரச்சொல்லுங்கள் என்று கூறி அதிரடி காட்டினார். இதனால் போலீசார் அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் தலையில் ரத்தக்காயத்துடன் இருந்த அந்த வாலிபரை போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி வலியுறுத்தினார்கள். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து நீண்ட நேரமாக போலீசாருக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.
மேலும் போலீசாரை அவர் ஒருமையிலும் பேசினார். பின்னர் நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு அந்த நபரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பெறாமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த வாலிபர் யார் என்பது குறித்தும், அந்த வாலிபருக்கு தலையில் எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அணையிலிருந்து விநாடிக்கு 324 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
- பாரூர் பெரிய ஏரி, பாம்பாறு அணை மற்றும் சூளகிரி அருகே சின்னாறு அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லை.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து நேற்று அதிகரித்தது. ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 265 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 443 கனஅடியாக அதிகரித்தது.
அணையிலிருந்து விநாடிக்கு 324 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 41.33 அடியாக இருந்தது.
கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 168 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 220 கனஅடியாக அதிகரித்தது.
அணையிலிருந்து ஊற்றுக் கால்வாயில் விநாடிக்கு 12 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 46.35 இருந்தது. பாரூர் பெரிய ஏரி, பாம்பாறு அணை மற்றும் சூளகிரி அருகே சின்னாறு அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லை.
- சமீபத்திய குளறுபடியால் சமூக நீதி, சமநிலைக்கு எதிரானது நீட் என்பது நிரூபணமாகி உள்ளது.
- ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிரானதாக நீட் தேர்வு உள்ளது.
சென்னை:
நீட் தேர்வில் அடுத்தடுத்து பல்வேறு முறைகேடுகள் அம்பலமாவதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
சமூக நீதி, ஏழைகளுக்கு எதிரானது நீட் தேர்வு. ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்.
சமீபத்திய குளறுபடியால் சமூக நீதி, சமநிலைக்கு எதிரானது நீட் என்பது நிரூபணமாகி உள்ளது.
தகுதியின் அளவுகோலாக கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் மோசடி. நீட் தேர்வு தொடர்பான சர்ச்சைகள் அதன் அடிப்படையிலேயே சமத்துவமின்மை உள்ளதை எடுத்துக்காட்டுகின்றன.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிரானதாக நீட் தேர்வு உள்ளது.
அனிதா தொடங்கி இன்னும் எத்தனையோ மாணவர்கள் நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம்.
குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வை மத்திய அமைச்சர் தாங்கி பிடிப்பது வெட்கக்கேடு என்று தெரிவித்துள்ளார்.
- கிராமத்தில் இரண்டு நாட்களாக விழாக்கோலம் பூண்டு இருந்தது.
- இன்னிசைக் கச்சேரி மற்றும் நினைவு பரிசு வழங்குதல் நடைபெறும்.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள தென்கரை கிராமத்தைச் சேர்ந்த இயல், இசை, நாடக கலைஞர், திரைப்பட நடிகர், பாடகர் என்று பன்முகங் களை கொண்ட டி.ஆர்.மகாலிங்கம் நூற்றாண்டு விழா தென்கரையில் உள்ள டி.ஆர்.எம்.சுகுமார் பவனத் தில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கிராமத்தில் இரண்டு நாட்களாக விழாக்கோலம் பூண்டு இருந்தது.
இன்று காலை பிரபல பின்னணி பாடகி பி. சுசிலா குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நாதஸ்வர தவில் வித்வான் வலையப்பட்டி சுப்பிரமணி யன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
டி.ஆர்.மகாலிங்கம் மற்றும் கோமதி மகாலிங்கம் தொண்டு அறக்கட்டளை மூலம் நிறுவப்பட்ட டி.ஆர்.மகாலிங்கம் மார்பளவு சிலை திறப்பு விழா நடைபெற்றது. ஐகோர்ட்டு மூத்த வக்கீல் டி.கே.கோபாலன் தலைமை தாங்கினார்.
நடிகர் சங்க தலைவர் நாசர், திரைப்பட பாடகர் டாக்டர் சீர்காழி சிவசிதம் பரம், தென்னிந்திய நடிகர் சங்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துணை தலைவர் பூச்சி எஸ்.முருகன், தமிழக அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலைவர் நடிகர் ராஜேஷ், நகைச்சுவை நடிகர் செந்தில், நடிகரும், இயக்குனருமான சந்தானபாரதி, நடிகை சச்சு, நடிகர் அண்ணாதுரை கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டி.ஆர்.மகாலிங்கம் பேரன் டி.ஆர்.எம்.எஸ்.ராஜேஷ் மகாலிங்கம், டி.ஆர்.வித்யா ஆகியோர் வரவேற்றனர். மாலை தென்கரையில் அமைந்துள்ள டி.ஆர்.மகாலிங்கம் நினைவு கலையரங்கில் பிரபல பின்னணி பாடகர் பங்குபெறும் டி.ஆர்.எம்.எஸ். சென்னை கிளாசிக் ஆர்கெஸ்ட்ராவின் இன்னிசைக் கச்சேரி மற்றும் நினைவு பரிசு வழங்குதல் நடைபெறும்.
இதைத்தொடர்ந்து வெண்ணிறை ஆடை நிர்மலா செந்தமிழ் தேன் மொழியாள் என்ற பாட லுக்கு நடனமாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, முன்னாள் எம்.எல்.ஏ. எம்.வி.கருப்பையா, ஊராட்சிமன்ற தலைவர் மஞ்சுளா ஐயப்பன், கூட்டுறவு சங்க இயக்குனர் பங்களா மூர்த்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்.கே.முருகேசன், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், தென்கரை தி.மு.க. கிளை செயலாளர் சோழன் ராஜா மற்றும் திரைப்பட நடிகர், நடிகைகள், இசை கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், பொதுமக்கள், ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை போர் என்று கூறுகிறேன்.
- தி.மு.க. அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.
சென்னை:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொடடி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!
நமது புனித பூமியான விக்கிரவாண்டி சட்டப்பே ரவை தொகுதி பா.ம.க. வேட்பாளராக தம்பி பனையபுரம் சி.அன்புமணி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
விக்கிரவாண்டி என்றதும் எனது நினைவில் மட்டுமின்றி, உனது நினைவிலும் தோன்று வது தியாகமும், துரோகமும் தான். அவற்றில் தியாகத்தை முதலில் நினைவு கூர்கிறேன்.
வன்னியர்களுக்கு தமிழகத் தில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, நான் அறிவித்த 7 நாள் தொடர் சாலைமறியல் போராட்டம் 1987-ம் ஆண்டு நடந்த போது பாப்பனப்பட்டு என்ற இடத்தில் ரெங்கநாதக் கவுண்டர், வீரப்பக் கவுண்டர் ஆகியோரை சுட்டுக் கொன்ற காவல்துறை அடுத்து சித்தணி என்ற இடத்தில் ஏழுமலை என்ற மாவீரனை தங்களின் குண்டுகளுக்கு இரையாக்கியது.
அப்போதும் கொலைப் பசி அடங்காத காவல்துறை, பனையபுரம் கூட்டுச்சாலையில் போராட்டம் நடத்திய நமது சொந்தங்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தான் ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்கார வேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கயத்தூர் தண்டவராயன் ஆகிய 5 சொந்தங்களும் தங்களின் மார்புகளில் துப்பாக்கி குண்டுகளை வாங்கி உயிர்த்தி யாகம் செய்தனர்.
தியாகத்தைத் தொடர்ந்து துரோகத்திற்கு வருகிறேன். இதே விக்கிரவாண்டி தொகு தியில் ஐந்தாண்டுகளுக்கு முன் சட்டப்பேரவை உறுப்பி னராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த ராதாமணி என்பவர் காலமானதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் இடைத்தேர்தல் நடைபெற்றது.
அதற்கான பரப்புரை தொடங்கும் முன்பே அக்டோபர் 7-ம் நாள் அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின், தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அதன்பின் 5 ஆண்டுகள் ஆகிவிட்டன
தி.மு.க. ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.
எத்தனை துரோகங்கள் செய்தாலும் வன்னியர்கள் நம்மை ஆதரித்துக் கொண்டே இருப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைமைக்கு இந்தத் தேர்தலில் நாம் பாடம் புகட்ட வேண்டும்.
இந்த தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகவாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தி.மு.க. அரசு முன்வரும். அதனால் தான் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை போர் என்று கூறுகிறேன். இதை பாட்டாளி சொந்தங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் வன்னி யர்களுக்கான இட ஒதுக் கீட்டை வென்றெடுக்க விக்கி ரவாண்டி இடைத்தேர்தல் நமக்கு மிகச்சிறந்த வாய்ப்பு ஆகும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வுக்கு கிடைக்கும் தோல்வி தான் வன்னிய மக்களுக்கும் சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்கும். இதை உணர்ந்து பாட்டாளி சொந்தங்களும், பிற சமுதாய மக்களுக்கும் விக்கிரவாண்டி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அணையில் நீர்மட்டம் சரிந்ததால் கீழ் பவானி பாசனத்தின் இரண்டாம் போகத்துக்கே தண்ணீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.
- குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரால் காளிங்கராயன் வாய்க்கால் மூலம் 15,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுக்கு 10 மாதங்கள் காளிங்கராயன் வாய்க்காலில் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். பாசனப்பகுதியில் கரும்பு, வாழை, நெல், மக்காச்சோளம், மஞ்சள், எள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படும். ஆண்டுக்கு மூன்று போகம் விளைய கூடிய இப்பாசனத்திற்கு அட்டவணைப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 16-ந் தேதி கண்ணீர் திறக்கப்பட்டு, ஏப்ரல் 30-ம் தேதி தண்ணீர் நிறுத்தப்பட வேண்டும்.
இந்த ஆண்டு பவானிசாகர் அணைக்கான நீர் பிடிப்பு பகுதியில் மழை இன்மையாலும், பிற பகுதி மழைநீர் வரத்து இன்றியும், அணை நீர் மட்டம் தொடர்ந்து சரிந்தது. குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. அணையில் நீர்மட்டம் சரிந்ததால் கீழ் பவானி பாசனத்தின் இரண்டாம் போகத்துக்கே தண்ணீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே நீலகிரி மாவட்டம் உட்பட அணை நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணைக்கு குறைந்த அளவு நீர் வரத்தாகி வருகிறது. கடந்த மே மாதம் 15-ந் தேதி அணையின் நீர்மட்டம் 44.35 அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி 57.71 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தாலும் சில நாட்களாக நீர் வரத்து மீண்டும் குறைந்து விட்டது.
வழக்கமாக இந்த மாதத்தில் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு மேல் இருக்கும். அதனால் காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு 57.71 அடியாக நீர் திறப்பு உள்ளதாலும் அணைக்கான நீர் வரத்து 600 கன அடியாக உள்ளதுடன் தினமும் குடிநீர் தேவைக்கு 150 கன அடி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுவதால் கவலை அளிக்கும் படியே உள்ளது.
இந்த சூழலால் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறக்க இயலாத நிலை உள்ளதால் காளிங்கராயன் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்தால் மட்டுமே அடுத்த சில நாட்களில் காளிங்கராயன் பாசனத்திற்கும் ஆகஸ்ட் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் உள்ள 1 லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்களுக்கும் தண்ணீர் வழங்க இயலும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- ஊராட்சி அதிகாரிகள் இந்த கழிவுகள் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- கூடுதல் போலீசார் நியமித்து கண்காணிக்க வேண்டும்.
குழித்துறை:
தமிழக-கேரளா எல்லைப்பகுதி வழியாக தினமும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் சென்று வருகின்றன.
அடிக்கடி கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் காலியான சரக்கு வாகன ஓட்டுனர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த மாநிலத்தில் இருந்து மீன், கோழி உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை ஏற்றி வந்து தமிழகத்திற்குள் கொட்டி செல்லும் அவலநிலை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனினும் அவ்வப்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாத மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கழிவுகள் கொட்டி வரும் சம்பவம் நடந்து வருகிறது.
இந்நிலையில் குமரி-கேரளா எல்லை சோதனை சாவடி வழியாக நள்ளிரவில் கேரளாவில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் புழுக்களுடன் இறைச்சி கழிவுகள் ஏற்றி வரப்பட்ட வாகனத்தை குழித்துறை அருகே விளவங்கோடு ஊராட்சி ஈத்தவிளை பகுதியில் வைத்து ஊர் மக்கள் மடக்கி சிறைபிடித்தனர்.
இது குறித்து தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ., களியக்காவிளை போலீசார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து அறிந்த விளவங்கோடு ஊராட்சி தலைவர் லைலா ரவிசங்கர், மேல்புறம் ஒன்றிய கவுன்சில் ரவிசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ஊராட்சி அதிகாரிகள் இந்த கழிவுகள் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இந்த வாகனத்தை களியக்காவிளை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கழிவுகள் ஏற்றி வந்த லாரியை மீண்டும் கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, கேரளாவில் இருந்து எல்லை பகுதிகள் வழியாக இரவு நேரங்களில் வரும் டிப்பர், கண்டெய்னர் லாரிகள் மற்றும் டெம்போக்களில் கழிவு பொருட்கள் கொண்டு வந்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி செல்கின்றனர். இதனை தடுக்க கூடுதல் தனிப்படை போலீசார் நியமித்து கண்காணிக்க வேண்டும், மேலும் அவ்வாறு கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதோடு நிறுத்தாமல் வாகனங்களை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், எல்லை பகுதியில் ஒரு சில போலீசாரை மட்டும் வைத்து பணி மேற்கொண்டால் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடைபெறும்.
எனவே அப்பகுதியில் கூடுதல் போலீசார் நியமித்து கண்காணிக்க வேண்டும் என கூறினர்.
- வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
- ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர தொடங்கினர்.
ஏற்காடு:
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாப் தலங்களில் ஒன்றாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு திகழ்கிறது.
இங்கு தமிழகம் மட்டுமின்றி பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினங்களில் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
அதேபோல் நேற்று முதல் நாளை திங்கட்கிழமை வரை 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சனிக்கிழமை தினமான நேற்று மதியம் முதல் ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வர தொடங்கினர்.
இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்ல கூடிய ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம் மற்றும் தாவரவியல் பூங்கா போன்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகள் குவிந்து காணப்பட்டனர். விடுமுறை இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் திரண்டனர். குடும்பத்துடன் அண்ணா பூங்காவில் உள்ள ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்டவை விளையாடி மகிழ்ந்தனர்.
லேடீஸ் சீட், ஜென்ஸ், சில்ரன்ஸ் சீட் ஆகிய பாறைகள் இயற்கையாகவே காட்ச்சித்தளங்களாக அமைந்துள்ளது. இங்கிருந்து சேலம் நகரத்தின் அழகை கண்டு களித்தனர்.
ஏற்காட்டின் கிழக்கு முனையில்அமைந்துள்ள பகோடா காட்சி முனை பிரமிட் பாய்ன்ட் என அழைக்கப்படுகிறது. இங்கு ராமர் கோவில் ஒன்றுள்ளது. அதுபோல் ராஜ ராஜேஸ்வரி கோவில், சேர்வ ராயன் கோவிலை சுற்றுலாப் பயணிகள் வழிபட்டனர்.
ஏற்காடு பட்டு பண்ணையில் மெல்பெரி செடிகள் பெருவாரியாக வளர்க்கப்படுகிறது. இங்கு ரோஜா நாற்றுக்கள் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை சுற்றுலாப் பயணிகள் வீட்டுக்கு கொண்டு செல்ல வாங்கு வதை காண முடிந்தது.
கிளியூர் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல் போட்டனர். ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய ஆர்வத்துடன் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மாலை வேளையில் படகு சவாரி நிறுத்தப்பட்ட நிலையிலும் அதிக படியான சுற்றுலாப் பயணிகள் படகு இல்லம் வந்து படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- சுப முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான கூட்டம் அலைமோதியது.
திருச்செந்தூர், ஜூன். 16-
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர் கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் சுபமுகூர்த்த நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்தனர்.

அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான திருமணங்கள் இன்று கோவிலில் நடைபெற்றது.
விடுமுறை மற்றும் சுப முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான கூட்டம் அலைமோதியதால் சுமார் 5 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் இன்று வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் பக்தர்கள் வந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலை ஓரத்திலும், கோவில் அருகில் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் இடத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்திருந்தனர்.* * *திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.
- 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 9 இடங்களில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
- 1991-ம் ஆண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி:- விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாதது மேலிட உத்தரவு. பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்துதான் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்று ப.சிதம்பரம் கூறி இருக்கிறாரே?
பதில்:- ப.சிதம்பரத்துக்கும் எங்கள் கட்சிக்கும் என்ன சம்பந்தம். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது என்பது எங்கள் கட்சி எடுத்த முடிவு. அவரது கட்சி முடிவு அல்ல.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலின்போது ஜனநாயக படுகொலை நடைபெற்றது. வாக்காளர்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாமல், ஆடு, மாடுகளை பட்டியில் அடைப்பதை போல வாக்காளர்களை தினமும் அழைத்து சென்று பட்டியில் அடைத்து அவர்களை கொடுமைப்படுத்திய காட்சியை பார்த்திருப்பீர்கள்.
தேர்தல் ஆணையம் அதை கண்டு கொள்ளவே இல்லை. அது மாநில அரசுக்கு துணை நிற்கிறது. போலீசார் துணை நிற்கிறார்கள். அரசு அதிகாரிகள் துணை நிற்கிறார்கள். அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பண பலம், படை பலத்தை பயன்படுத்தி, அதிகமான பரிசு பொருட்களை கொடுத்து அந்த தேர்தலில் தில்லுமுல்லு செய்து தேர்தல் நடைபெற்று முடிந்தது.
தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது என்பதால் தான் அ.தி.மு.க. இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. விக்கிரவாண்டி தொகுதி விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில்தான் வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் 6 ஆயிரம் ஓட்டுகள்தான் குறைவாக வாங்கினோம்.
எங்களுக்கு எவ்வளவு ஓட்டுகள் கிடைத்துள்ளது என்பது தெரிந்து விட்டது. இனி ஏன் அங்கு போட்டியிட வேண்டும். போட்டியிட்டால் விடவா போகிறார்கள். ஆட்சி அதிகார பலத்தை பயன்படுத்துவார்கள். பணத்தை வாரி இறைப்பார்கள்.
பரிசு பொருட்களை அள்ளி கொடுப்பார்கள். பண மழை பொழியும். ஜனநாயக படுகொலை நடைபெறும். சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாது. எனவேதான் அ.தி.மு.க. இந்த தேர்தலை புறக்கணிக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 36 இடங்களில் கொட்டகை அமைத்து வாக்காளர்களை அடைத்து வைத்து கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்காக அமைச்சர்கள் பாடுபட்டார்கள்.
கொட்டகையில் அடைத்து வைத்திருந்தால் அங்கு நானே நேரில் வந்து வாக்கு சேகரிப்பேன் என்று சவால் விட்டேன். உடனே அந்த வாக்காளர்களை பஸ்சில் ஏற்றி ஊர் ஊராக சுற்றுலா அழைத்து சென்றார்கள். அப்படி இருக்கும்போது அங்கு எப்படி சுதந்திரமாக தேர்தல் நடக்கும்.
கேள்வி:- அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாவிட்டால் தொண்டர்கள் உற்சாகம் இழந்து விட மாட்டார்களா?
பதில்:- தொண்டர்கள் எப்படி உற்சாகம் இழப்பார்கள். அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு பெருகி இருப்பதால் அவர்கள் உற்சாகமாகத்தான் இருக்கிறார்கள்.
கேள்வி:- 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?
2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதே போல் சட்டமன்ற தேர்தலிலும் எல்லா இடத்திலும் தி.மு.க. வரும் என்று சொன்னார்கள். ஆனால் அ.தி.மு.க. 75 இடங்களில் வெற்றி பெற்றது. 2019 பாராளுமன்ற தேர்தலின்போது சட்டமன்ற தொகுதிகளை பொருத்தவரை 2 தொகுதிகளில் தி.மு.க.வை விட அதிக ஓட்டுகள் எங்களுக்கு கிடைத்தது.
இப்போது நடந்த பாராளுமன்ற தேர்தலில் 10 சட்டசபை தொகுதிகளில் தி.மு.க.வை விட அதிக ஓட்டுகள் பெற்றுள்ளோம். அதில் அமைச்சர் தொகுதியில் 2 இடங்களில் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளோம்.
அப்படியென்றால் இனி வரும் சட்டமன்ற தேர்தல் எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். எனவே பாராளுமன்ற தேர்தல் வேறு, சட்டசபை தேர்தல் வேறு. மக்கள் பிரித்து பார்த்துதான் ஓட்டு போடுகிறார்கள்.
2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 9 இடங்களில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தர்மபுரி, கன்னியாகுமரி ஆகிய 2 தொகுதிகளில் தி.மு.க.வுக்கு டெபாசிட் பறிபோனது. அங்கெல்லாம் மீண்டும் அவர்கள் ஜெயிக்கவில்லையா?
1991-ம் ஆண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். எனவே மாறி மாறிதான் வெற்றி வரும். எல்லா தேர்தல்களிலும் எல்லா கட்சிகளும் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது. வெற்றி தோல்வி மாறி மாறிதான் வரும்.
2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெல்லும். அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிலர் பேட்ஜ் அணியாமல் பணி செய்வது குறித்து புகார் பெறப்பட்டுள்ளது.
- சீருடை பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும்.
சென்னை:
டிரைவர்-கண்டக்டர் கள் பணியின்போது சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது சம்பந்தமாக அனைத்து கிளை மேலாளர்கள்-மண்டல மேலாளர்களுக்கு மாநகர போக்கு வரத்து கழக மேலாண் இயக்குனர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை வருமாறு:-
மாநகரப் போக்குவரத்து கழகத்தை சார்ந்த அனைத்து பணிமனைகளிலும் பணி புரியும் டிரைவர்கள் கண்டக்டர்கள் கட்டாயம் சீருடை பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும். சிலர் பேட்ஜ் அணியாமல் பணி செய்வது குறித்து புகார் பெறப்பட்டுள்ளது.
எனவே டிரைவர்-கண்டக்டர்கள் சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிகிறார்களா என்பதை கிளை மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






