என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மாநிலம் முழுவதும் பணியாளர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார்கள்.
- வாடிக்கையாளர்களுக்குத் தரமான பால் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
உலகளவில் அதிக அளவிலான பால் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக திகழும் வேளையில், நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில், தமிழ்நாடு 4.57 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது.
ஆவின் நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தரமான பால் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. பால் அட்டைகள் மூலம் குறைந்த விலையில் பால் விநியோகமானது சீரான நேர்த்தியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் நாளில் கையொப்பமிட்ட 7 அறிவிப்புகளில் ஆவின் பால் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 ஆண்டுகளில் பால் வளத்துறையினை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் 9,189 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக நாள் ஒன்றுக்கு சுமார் 3.85 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கி வருகின்றனர்.
இதன் மூலம் தற்போது நாளொன்றுக்குச் 35.67 லட்சம் லிட்டர் பால் சங்க அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 4 லட்சம் லிட்டர் பால் உள்ளூர் தேவைக்காக சங்கங்கள் மூலம் விற்பனை செய்தது போக, 31.67 லட்சம் லிட்டர் பால் 27 மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
இப்போது பால்வளத் துறையில் 10.10 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டு சரித்திர சாதனை படைத்துள்ளது.
ஆவின் நிறுவனத்தில் மாநிலம் முழுவதும் பணியாளர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார்கள்.
ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்களை மின்ணணு வாயிலாக ரூ.590/-கோடிக்கு பரிவர்த்தனை மேற்கொண்டதற்காக ஆவின் நிறுவனத்திற்கு இந்திய அளவில் இரண்டாமிடத்திற்கான விருது வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஓட்டுகள் பா.ம.க. வேட்பாளருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
- தி.மு.க.வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
சென்னை:
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி (தி.மு.க.) மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு உள்ளார்.
பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.வும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. பா.ம.க. மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா நிற்கிறார்.
இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்.
ஆளும் தி.மு.க. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் என்பதால் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்று விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
அ.தி.மு.க.வை தொடர்ந்து அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், `ஆட்சியாளர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகிறது. தொண்டர்களின் உைழப்பு, நேரம், பணம் என அனைத்தையும் விரயம் செய்ய விரும்பவில்லை.
எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தே.மு.தி.க. புறக்கணிக்கிறது என்று கூறிவிட்டார். விக்கிர வாண்டி இடைத் தேர்தலை பிரதான எதிர்க் கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்து உள்ளதால் பா.ம.க. தலை வர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். காரணம் அ.தி.மு.க. ஓட்டுகள் இம்முறை பா.ம.க.வுக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிககையில் உள்ளனர்.
இந்த தொகுதியை பொறுத்தவரையில், தி.மு.க. அ.தி.மு.க. சம பலத்துடன் உள்ளன. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் தி.மு.க. ஆதரவுடன் 39.57 சதவீத ஓட்டுக்களை பெற்றது. அ.தி.மு.க. 35.83 சதவீதம், பா.ம.க. 17.64 சதவீதம், நாம் தமிழர் கட்சி 4.57 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
அதாவது பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட 3.7 சதவீதம் மட்டுமே அ.தி.மு.க. குறைவாக பெற்றுள்ளது.
எனவே இப்போது இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ள நிலையில் அக்கட்சியின் ஓட்டுகள் பா.ம.க. வேட்பாளருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
1996க்கு பிறகு தமிழ கத்தில் பெரும்பாலான இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெறுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க., தே.மு.தி.க. வாக்குகள் ஒட்டு மொத்தமாக பா.ம.க. வேட்பாளருக்கு சென்றால் அது தி.மு.க.வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று பேசப்படுகிறது.
பா.ம.க. வேட்பாளரை ஆதரிப்பதற்காகவே அ.தி.மு.க., தே.மு.தி.க. மறைமுக மாக தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளதாக தி.மு.க. வினர் கூறி வருகின்றனர். அ.தி.மு.க., தே.மு.தி.க. ஓட்டுகள் அவ்வாறு ஒருசேர பா.ம.க.வுக்கு செல்லாமல் தடுப்பதற்கு இப்போதே தி.மு.க. தேர்தல் வியூகம் வகுக்க தொடங்கி உள்ளது.
அங்கு தேர்தல் பணி யாற்றுவதற்காக ஒன்றியம் வாயிலாக 9 அமைச்சர்களை தேர்தல் பொறுப்பாளர் களாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார்.
ஒவ்வொரு அமைச்ச ருக்கும் 20 ஆயிரம் ஓட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அங்கு வீடு எடுத்து தங்கி ஊழியர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு தெருவிலும் உள்ள ஓட்டுக்களை கவனித்து யார்-யாரை நியமிக்க வேண்டும் என்ற பட்டியலும் தயார் செய்து வைத்துள்ளனர்.
இடைத் தேர்தலில் போட்டியிடாமல் அ.தி.மு.க. ஒதுங்கியதற்கு பா.ஜனதா வுடன் இருக்கும் மறைமுக உறவு தான் காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்து உள்ள நிலையில் தி.மு.க. இந்த தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது.
ஏனென்றால் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இடையிலான ஓட்டு வித்தியாசம் மிக குறைவாகவே உள்ளது. தி.மு.க. (வி.சி.க.) 72,188 ஓட்டுகளும், அ.தி.மு.க. 65,365 ஓட்டுகளும் பா.ஜனதா 32,198 ஓட்டுகளும் பெற்றுள்ளன.
4 முனை போட்டி நிலவினால் ஓட்டுகள் பிரிந்து எளிதில் தி.மு.க. வெற்றி பெற்று விடும் என்று கருதப்பட்ட நிலையில் இப்போது தி.மு.க., பா.ம.க. நாம் தமிழர் கட்சி இடையே மும்முனைப் போட்டி தான் ஏற்பட்டு உள்ளது.
இதனால் அ.தி.மு.க., தே.மு.தி.க. ஓட்டுகள் பா.ம.க.வுக்கு தான் செல்லும் என்று பலரும் கணித்து வருகின்றனர். இதெல்லாம் மறைமுக காரணமாக இருக்கும் என்று அ.தி.மு.க. தொண்டர்களும் பேசி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு தனி செல்வாக்கு உண்டு. அப்படிப்பட்ட நிலையில் அவரே தேர்தலை சந்திக்காமல் புறக்கணிக்கும் ஆலோசனையை கட்சி மேலிடத்திற்கு வழங்கி இருக்கிறார் என்றால் இதில் ஏதோ உள்குத்து இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக தி.மு.க. இந்த தேர்தலில் தான் தன் செல்வாக்கை நிலைநிறுத்த கடுமையாக போராட வேண்டி இருக்கும். இதற்காக 9 அமைச்சர்கள் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் இருந்து தி.மு.க.வினர் தேர்தல் பணியாற்ற விக்கிரவாண்டிக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
- தொண்டர்களிடையே விவாதம் நடக்கிறது.
- இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது எளிதானதல்ல.
சென்னை:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்த இந்த முடிவு சரியா? தவறா? கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதுதானா? என்று தொண்டர்களிடையே விவாதம் நடக்கிறது.
ஏற்கனவே பாராளு மன்றத் தேர்தலில் படு தோல்வியை சந்தித்து இருக்கும் இந்த நேரத்தில் இந்த தேர்தல் புறக்கணிப்பு தொண்டர்களை சோர்வடையச் செய்யும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
கடந்த காலங்களில் சட்டமன்ற, உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை தி.மு.க.வும் புறக்கணித்த வரலாறு இருக்கிறது. எனவே இது ஒரு பிரச்சினையாக இருக்காது. எல்லாவற்றையும் வெற்றிகரமாக சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்கிறார்கள் அதி.மு.க.வினர்.
பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறும் போது, `ஆளுங்கட்சியின் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகத்தை பார்த்து ஒரு கட்சி இவ்வாறு முடிவெடுப்பது சரியாக இருக்காது.
இப்போது போட்டிக் களத்தில் இருந்து அ.தி.மு.க. விலகி இருப்பதன் மூலம் பா.ஜ.க. மேலும் வளர வழிபிறக்கும். அதேநேரம் சமீபகாலமாக பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வரும் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு விவாதத்துக்குள்ளாகும்.
தற்போதைய நிலையில் அ.தி.மு.க. கட்சிக்கு உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் தாக்கப்படுகிறது. கட்சிக்குள்ளும் ஒருங்கிணைப்பு இல்லை என்பதையே காட்டுகிறது.
அதனால்தான் புறக்கணிப்பு முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்திருப்பார் என்று கூறுகிறார்கள்.
இதற்கிடையில் தேர்தலை புறக்கணித்தது தவறு என்றும் கட்சியை ஒருங்கிணைக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப் போவதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.
இதை அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கடுமையாக விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு சரியானது என்பது தொண்டர்களுக்கு புரியும். இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது எளிதானதல்ல. தேவையில்லாமல் தொண்டர்களின் உழைப்பையும் பொருளையும் வீணடிக்க அவர் விரும்பவில்லை.
அம்மா காலத்திலும் தேர்தல் புறக்கணிப்பு நடந்துள்ளது. 2009-ல் 5 தேர்தல்களை அவர் புறக்கணித்தார். எனவே இதனால் கட்சி பலவீனமாகி விடும் என்ற வாதம் சரியானதல்ல.
சசிகலாவும் பேசி பேசி பார்க்கிறார். ஆனால் யாரும் அவர் பக்கம் போகவில்லை. எனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் அ.தி.மு.க.வுக்கு தலைமை வகிப்பது எடப்பாடி பழனிசாமிதான் என்பதை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றார்.
எழுத்தாளர் துரைகருணா கூறும்போது, ஆளுங்கட்சியின் அதிகார அத்துமீறல்கள் இருந்தாலும் அதை எதிர்த்து நின்று ஆளும் கட்சிக்கு எதிராக இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை தேர்தல் மூலம் வெளிப்படுத்தினால் தான் கட்சி வலுப்பெறும். மக்கள் நம்பிக்கையை பெறும் என்றார்.
அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சமரசம் இந்த கருத்துக்களை மறுத்தார். எடப்பாடி பழனிசாமி எடுத்திருப்பது சரியான முடிவுதான். அ.தி.மு.க.வின் இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தல்தான். இடைத்தேர்தல் அல்ல.
திருமங்கலம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்கள் எப்படி நடந்தது என்பது தொண்டர்களுக்கு தெரியும். எனவே தேவையற்ற சிரமத்தை தொண்டர்களும் விரும்பமாட்டார்கள் என்றார்.
மேலும் சில கட்சி நிர்வாகிகள் கூறும்போது, `ஒரு தொகுதி இடைத்தேர்தலை வைத்து கட்சி பலவீனமாகிவிடும் எனறு கணிக்க முடியாது. தொண்டர்களை பொறுத்தவரை கட்சி தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதை ஆதரிப்பார்கள்.
முக்கியமாக தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க.வால்தான் முடியும் என்பது கட்சியினரையும் தாண்டி பொதுமக்களுக்கும் தெரியும். எனவே செல்வாக்கு எந்த வகையிலும் குறையாது' என்றனர்.
- கரடி மரத்தை விட்டு இறங்காமல் மேலேயே இருந்தது.
- இரவு முழுவதும் அங்கேயே வலையை விரித்து வைத்து காத்திருந்த நிலையில், கரடி இறங்க வில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் ஆயுதப்படை பட்டாலியன் மையம் உள்ளது.
இதையொட்டிய பகுதிக்குள் நேற்று மதியம் ஒரு கரடி சுற்றித்திரிந்தது. அதனை கண்ட சுற்றுலா பயணிகள், பொது மக்கள் அச்சம் அடைந்து ஓடினர்.
தொடர்ந்து கரடி தமிழ்நாடு 9-ம் அணி பட்டாலியன் தளவாய் விடுதியில் உள்ள மரத்தில் ஏறியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அம்பை கோட்ட துணை இயக்குனர் இளைய ராஜா உத்தரவின்பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
அதனை விரட்ட வனத்துறையினர் சில நடவடிக்கைகள் எடுத்த போதிலும், கரடி மரத்தை விட்டு இறங்காமல் மேலேயே இருந்தது. இதனால் வனத்துறையினர் மரத்தின் அடியில் வலையை கட்டிவைத்தனர்.
இரவு முழுவதும் அங்கேயே வலையை விரித்து வைத்து காத்திருந்த நிலையில், கரடி இறங்க வில்லை. அதனை அம்பை வனக்கோட்ட துணை இயக்குனர் இளையராஜா பார்வையிட்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் வனத்துறையினர் சற்று கண் அயர்ந்திருந்த நேரத்தில் கரடி தானாகவே மரத்தில் இருந்து இறங்கி வனப்பகுதிக்குள் சென்றது.
இதையடுத்து வனத்துறையினர் வலையை சுருக்கி எடுத்துச்சென்றனர்.
- இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது பெரும் வியப்பை அளிக்கிறது.
- மாநில உரிமைகளை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
புதுக்கோட்டை:
சிவகங்கை எம்.பி. கார்த்திசிதம்பரம் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது பெரும் வியப்பை அளிக்கிறது. பா.ஜ.க. கூட்டணிக்கு மறைமுகமாக அ.தி.மு.க. ஆதரவு அளிக்கிறதோ என்று சந்தேகம் உள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கூட அ.தி.மு.க. கூட்டணி கணிசமான வாக்குகளை அந்த தொகுதியில் பெற்றுள்ளது.
ஒரு பெரிய அரசியல் கட்சி தேர்தல் நடத்தையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. தேர்தலை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம். டெல்லியில் இருந்து அழுத்தம் அளித்து பா.ஜ.க.விற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறியதால் தேர்தலை புறக்கணித்து உள்ளனரா என்ற சந்தேகம் உள்ளது.
தமிழகத்தில் ஒத்தை சீட்டு கூட வாங்கலையா என்று கையை உயர்த்தி உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி கேட்டதாக நான் கருதுகிறேன். இந்தியா கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக மசோதாக்கள் மீதான விவாதங்களில் பங்கு பெற்று வாதாடுவோம்.
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் இந்து கோவில்களை அறநிலையத்துறையில் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். புதிதாக பதவி ஏற்று உள்ளவர்கள் அறியாமையில் இது போன்ற கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
இந்து கோவில்கள், அறநிலையத்துறை அரசாங்கத்திடம் தான் இருக்க வேண்டும் . நீட் தேர்வில் வெளிப்படை தன்மை என்பது கிடையாது. தேர்வு நடந்த முறையில் வைத்து நான் சொல்கிறேன். எதன் அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்
மாநில உரிமைகளை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இது தேவையில்லை. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. சுமூகமாகத்தான் உள்ளது. கோயம்புத்தூரில் கூட நடைபெற்ற முப்பெரும் விழாவில் அனைத்து கட்சிகளும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
நாங்கள் இருவரும் பரஸ்பரமாக தான் உள்ளோம். எந்தவிதமான பனிப் போரும் கிடையாது. வரும் காலங்களிலும் இந்த கூட்டணி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடலில் தற்போது ஜெல்லி மீன்கள் அதிகளவில் காணப்படுகிறது.
- ஜெல்லி மீன்கள் உடலில் அரிப்பை ஏற்படுத்துகிறது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த அரிய மான் சிறந்த பொழுது போக்கு இடமாக திகழ்கிறது. இதனால் ராமேசுவரம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் பெரும்பாலானோர் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் பொழுதை கழிக்க அரியமான் கடற்கரைக்கு வருகின்றனர்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடலில் உற்சாகமாக குளித்து மகிழ்வதுடன் கடற்கரை ஓரமுள்ள சவுக்கு காடுகளில் குடும்பத்தினருடன் அமர்த்து உணவு சாப்பிட்டு விடுமுறை நாட்களை கழித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பக்ரீத் பண்டிகையை யொட்டி தொடர் விடுமுறை மற்றும் அரியமான் கடற்கரையில் கடற்கரை திருவிழா நடைபெற்று வருவதால் தினசரி திரளான சுற்றுலாப் பயணிகள் அரியமானுக்கு குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
இதனிடையே கடலில் தற்போது ஜெல்லி மீன்கள் அதிகளவில் காணப்படுகிறது. ஒளிரும் தன்மையும், மெல்லிய உடல் அமைப்பும் கொண்ட இந்த மீன்கள் தண்ணீரின் நிறத்தில் காணப்படுகின்றன. பசையும், பற்றிக் கொள்ளும் தன்மையும் உள்ளதால் மனிதர்களின் உடலில் எளிதில் ஒட்டிக் கொள்கின்றன.
விஷத்தன்மை உள்ள இந்த மீன்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதனை பிடித்து மகிழ்கின்றனர். அந்த மீன் ஒட்டிக்கொள்ளும் போது, அதில் இருந்து சுரக்கும் விஷத்தன்மை கொண்ட திரவம் உடலில் அரிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் ஒவ்வாமையையும் ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் இன்று அரியமான் கடற்கரையில் குளித்த சுமார் 30-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஜெல்லி மீன் கடித்ததில் அவர்களுக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டதுடன், ஒவ்வாமை ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு மருத்துவ குழுவினர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சுற்றுலா பயணிகளிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே இதுகுறித்து கடற்கரையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருப்பூர் பூலுவப்பட்டியை சேர்ந்த பள்ளி ஆசிரியை கஸ்தூரி அதிகமுறை பயணமாகி வந்தார்.
- 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
திருப்பூர்:
அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் அதிக முறை பயணம் செய்யும் பயணிகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து போக்குவரத்து கழகம் சார்பில் ரூ. 10 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் திருப்பூரில் இருந்து இரவு புறப்பட்டு, மறுநாள் காலை நாகர்கோவில் செல்லும் மார்த்தாண்டம் அரசு பஸ்சில், திருப்பூர் பூலுவப்பட்டியை சேர்ந்த பள்ளி ஆசிரியை கஸ்தூரி (வயது 26) அதிகமுறை பயணம் செய்து வந்தார்.
சமீபத்தில் நடந்த பரிசு போட்டி குலுக்கலில் இவர் தேர்வானார். இதையடுத்து அவருக்கு திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசை, திருப்பூர் மண்டல மேலாளர் (பொறுப்பு) செல்வக்குமார், பொது மேலாளர் (வணிகம்) ராஜேந்திரன், பொது மேலாளர் (தொழில்நுட்பம்) ஜோதிமணிகண்டன் உள்ளிட்ட கிளை மேலாளர்கள் வழங்கினர்.
பயணி கஸ்தூரி கூறுகையில், பாதுகாப்பான பயணம். பெண் தனியாக பயணிக்கும் போது பாதுகாப்பு உள்ளது. அரசு பஸ்களை நம்பி, இரவில் பயணிக்கலாம். 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
- ஏக்கர் கணக்கில் ஸ்ட்ராபெர்ரி பழவகைகள் பயிரிடப்பட்டு உள்ளன.
- பசுமைக் குடில்களை சுமார் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தின் தேயிலை, மலை காய்கறிக்கு அடுத்தபடியாக சீச்சீஸ், பிளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி போன்ற பழவகைகள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இதற்கிடையே ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சோலூர், எல்லநள்ளி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏக்கர் கணக்கில் ஸ்ட்ராபெர்ரி பழவகைகள் பயிரிடப்பட்டு உள்ளன. இவை குளிர் மற்றும் பனிக்காலத்தில் செழிப்பாக வளரும். அங்கு தற்போது மழை பெய்து வருவதால் அங்கு விளைவிக்கப்பட்டு உள்ள ஸ்ட்ராபெர்ரி செழிப்பாக வளர்ந்து நிற்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி பழசீசன் தொடங்கி உள்ளதால், அங்கு விவசாயிகள் தற்போது பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஸ்ட்ராபெர்ரி பயிரிட்டு இருக்கும் விவசாயிகள் கூறியதாவது:-
ஸ்ட்ராபெர்ரி பயிரிட்ட 3 மாதங்களுக்கு பிறகு பழங்களை அறுவடை செய்ய முடியும். ஒருநாள்விட்டு ஒருநாள் பழங்களை அறுவடை செய்யலாம். ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக விவசாய நிலங்களுக்கு வந்திருந்து, ஒரு கிலோ ஸ்ட்ராபெர்ரி பழங்களை ரூ.300 வரை கொள்முதல் செய்து கொண்டு செல்கின்றனர்.
அவை நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஸ்ட்ராபெர்ரி பயிர்களுக்காக அமைக்கப்பட்டு உள்ள பசுமைக் குடில்களை சுமார் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- விபத்தில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில்,
மேற்கு வங்க மாநிலம் நியூ ஜப்பைகுரி பகுதியில் கஞ்சன்ஜங்கா பயணிகள் ரெயிலும் சரக்கு ரெயிலும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ரெயில் பாதையில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ள நிலையில், இதுகுறித்த விசாரணை நடத்தி, இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் ரெயில்வே போக்குவரத்தை சரிவர கண்காணிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.
- டெபாசிட் பறிபோய்விடும் என்ற அச்சத்திலேயே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது.
- தி.மு.க. ஆட்சியில் பயன்பெற்ற மக்கள் அனைவரும் அன்புமணி சொன்னால் கூட தி.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பர்.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதற்கு தி.மு.க.வை குறை கூறியதற்கு ஆர்.எஸ். பாரதி கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பூத் கேப்சரிங்கை தொடங்கியதே அ.தி.மு.க.தான். வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் கலாச்சாரம் தொடங்கியது ஜெயலலிதா ஆட்சியில் தான். பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. சொல்லும் சாக்குதான் புறக்கணிப்பு. டெபாசிட் பறிபோய்விடும் என்ற அச்சத்திலேயே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது.
இடைத்தேர்தலில் ஓட்டுப்போட வேண்டாம் என அதிமுகவினரிடம் சொல்ல எடப்பாடிக்கு தைரியம் உள்ளதா? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வாக்களித்தால் எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்தார்கள் என்று அர்த்தம்.
வன்னியர் சமூகத்தினருக்கு பல நன்மைகளை செய்துள்ளதால் எதையும் சந்திக்கும் ஆற்றல் தி.மு.க.வுக்கு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் பயன்பெற்ற மக்கள் அனைவரும் அன்புமணி சொன்னால் கூட தி.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பர் என்றார்.
- ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் முகமதுஅலி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
- கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூா்:
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து நீர்வரத்து, வடிகால் வாரிகளையும், ஏரி குளங்களையும் உடனே தூர்வார வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் முகமதுஅலி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாமல் துரோகம் செய்து வருகிறது . கடந்த ஆண்டு தமிழகத்திற்கு தரவேண்டிய 90 டி.எம்.சி. தண்ணீர் தரவில்லை. நடப்பாண்டில் 10 டி.எம்.சி தண்ணீர் தரவில்லை. ஒட்டு மொத்தத்தில் தமிழத்திற்கு தரவேண்டிய 100 டி.எம்.சி தண்ணீரை தராமல் வஞ்சிக்கிறது.
எனவே கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பி உள்ளது. எனவே உடனடியாக நம்மக்குரிய தண்ணீரை பெற்று தர வேண்டும். அடுத்த கட்டமாக அனைத்து விவசாய அமைப்புகள், பல்வேறு கட்சி நிர்வாகிகளை அழைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மும்முனைப் போட்டி ஏற்பட்டதன் காரணமாக எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் தலைமைக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
- ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் தலா 20 ஆயிரம் ஓட்டுகளை பிரித்து கொடுத்து அதன் அடிப்படையில் தேர்தல் பணியாற்ற தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா நிறுத்தப்பட்டுள்ளார். இவரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்காக 9 அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அமைத்து உள்ளார்.
இந்த குழுவில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், அமைச்சருமான க.பொன்முடி, கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுடன் உள்ளூர் எம்.எல்.ஏ. ஆர்.லட்சுமணனும் இடம் பெற்றுள்ளார். இவர்கள் விக்கிரவாண்டியில் கடந்த 14-ந்தேதி கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் உள்ளூர் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.
தேர்தலில் யார் யாருக்கு எந்த ஏரியாவை ஒதுக்குவது என்றும் தேர்தலில் வெற்றி பெற என்னென்ன வியூகம் வகுக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் விரிவாக பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அப்பகுதி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டனர்.
மேலும் காணை மத்திய ஒன்றியத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு, விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு, மேற்கு ஒன்றியத்திற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் அந்தந்த நிர்வாகிகளை அழைத்து பேசி உள்ளனர்.
இதே போல் காணை வடக்கு ஒன்றியத்தில் அமைச்சர் சக்கரபாணி, கோலியனூர் மேற்கு ஒன்றியத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், விக்கிரவாண்டி மத்திய ஒன்றியத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் தலா 20 ஆயிரம் ஓட்டுகளை பிரித்து கொடுத்து அதன் அடிப்படையில் தேர்தல் பணியாற்ற தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் ஒன்றியச் செயலாளர்களுக்கும் எவ்வளவு ஓட்டுகளை பார்க்க சொல்வது என்பது பற்றி ஆலோசித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி தேர்தலில் பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயாவும் நிறுத்தப்பட்டுள்ளதால் மும்முனைப் போட்டி ஏற்பட்டதன் காரணமாக எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் தலைமைக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
இந்த மாதம் 20-ந்தேதியில் இருந்து சட்டசபை கூட்டம் நடைபெற இருப்பதால் அதில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள் கூட்டம் முடிந்ததும் விக்கிரவாண்டி தொகுதிக்கு சென்று தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு உதவ கட்சி நிர்வாகிகளையும், பேச்சாளர்களையும் அழைத்துக் கொள்ளலாம் என்று தலைமை கூறி உள்ளதால் இப்போதே கட்சி நிர்வாகிகள் விக்கிரவாண்டி செல்ல தயாராகி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி கூட்டணி கட்சி உள்ளூர் பிரமுகர்களும் பிரசாரத்திற்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சட்டசபை கூட்டம் முடிந்ததும் விக்கிரவாண்டி தொகுதியில் ஒரு நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.
அதே போல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்தும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்தும் பேச பிரசார சுற்றுப்பயணத்துக்கு தயாராகி வருவதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.






