என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அவசர கதியில், எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் வன்முறை தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். சிறிது நேரத்தில் அந்த பதிவை அகற்றிவிட்டார். ஆனால், இந்த பதிவின் அடிப்படையில் அவர் மீது சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆதவ் அர்ஜூனா மனு தாக்கல் செய்துள்ளார். அதில், எக்ஸ் தளத்தில் போடப்பட்ட பதிவை உடனடியாக நீக்கி விட்டேன். அந்த பதிவு போட்டதில் எனக்கு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. ஆனால், எனக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரை முழுமையாக கவனிக்காமல், அவசர கதியில், எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை ரத்து செய்யவேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த வழக்கை ரத்து செய்யவேண்டும்'' என்று கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
- சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாக தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பிக்கலாம்.
- சுயேச்சை பட்டியலில் இடம் பெற்றுள்ள சின்னங்களில் ஒன்றை த.வெ.க. தேர்வு செய்ய உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த த.வெ.க.வுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக த.வெ.க. மீண்டு வருகிறது.
விரைவில் கருர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க உள்ளார். இதற்காக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. போலீசார் அனுமதி கொடுக்கும் தேதி, நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க உள்ளார்.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குகள் பாய்ந்துள்ளதால் முன்ஜாமீன் நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளது. மறுபக்கம் கட்சிப்பணிகளை தொடங்க மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவிட்டு இருக்கிறார். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி பணியாற்ற வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களே இருக்கும் நிலையில், த.வெ.க.வுக்கு தேர்தல் சின்னம் பெறுவதற்கான நடவடிக்கையில் விஜய் இறங்கியுள்ளார். இதற்கான ஆலோசனை நடந்த வேளையில்தான் கரூர் துயர சம்பவம் அக்கட்சி நடவடிக்கைகளை புரட்டி போட்டு விட்டது. தற்போது மீண்டும் இந்த பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொது சின்னம் பெறுவதற்கு சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாக தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பிக்கலாம். எனவே த.வெ.க. இந்த மாதம் கடைசி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் கமிஷனிடம் சின்னம் தொடர்பாக விண்ணப்பிக்க உள்ளது.
த.வெ.க. முதலில் ஆட்டோ சின்னத்தை குறி வைத்திருந்தது. ஆனால் அந்த சின்னம் கேரளாவில் ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. எனவே சுயேச்சை பட்டியலில் இடம் பெற்றுள்ள சின்னங்களில் ஒன்றை த.வெ.க. தேர்வு செய்ய உள்ளது. பரிசீலனைக்காக 3 சின்னங்களை தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப வேண்டும், அதில் ஒன்றை விருப்ப தேர்வாக கொடுக்கலாம். அந்தவகையில் விசில், உலக உருண்டை, மைக், பேட் இதில் ஒன்றை த.வெ.க. தேர்வு செய்ய இருக்கிறது.
இதற்கிடையே கட்சியின் கட்டமைப்புகளை மேம்படுத்த 2-ம் கட்ட தலைவர்களை நியமிக்கும் பணியில் விஜய் தீவிரமாகியுள்ளார். விஜயின் இந்த நடவடிக்கை சோர்வாகி இருக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைய இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
- கூட்டத்தில் சிலர் த.வெ.க. கொடியுடன் கலந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
- இதனால் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
சென்னை:
சென்னை சத்தியமூர்த்தி பவனில், முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலத்தின் 129-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அதன்பின், செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேகமான வளர்ச்சி பணிகளை முன்னெடுத்து வருகிறார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில்கள் தொடங்குவதற்கான அனுமதி வழங்குவதில் தாமதம் செய்கிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் அல்ல எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் கோப்புகளுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தில் த.வெ.க. கொடியுடன் சிலர் கலந்து கொண்டதாகவும், இதனால் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
அவர் காண்பது கூட்டணி கனவு. அது பகல் கனவாகத்தான் இருக்கும். காங்கிரஸ் கூட்டத்திலும் த.வெ.க. கொடி பறக்கத்தான் செய்கிறது. அதற்காக நாங்களும் கூட்டணி கனவு காண முடியுமா? என தெரிவித்தார்.
- புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- தபாங் டெல்லி அணியை பெங்கால் வாரியர்ஸ் அணி வீழ்த்தியது.
சென்னை:
12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 37-36 என்ற புள்ளிக்கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 41-39 என்ற புள்ளிக்கணக்கில் யுபி யோதாஸ் அணியை வீழ்த்தியது.
- ஆணவம் தெறிக்கும் திமுக அமைச்சரின் இந்தப் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
- எங்கள் பிள்ளைகளுக்கு ஒருநாள் கல்வி தேவையில்லை என முடிவு செய்வதற்குத் திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?
அரசுப் பள்ளியில் முகாம் நடைபெறுவதால் ஒரு நாளில் ஒன்றும் ஆகிவிடாது என்று அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
திமுக தலைவர்களின் ஆணவம் அழிவிற்கான அறிகுறி!
திமுக அரசின் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற விளம்பர நாடகத்திற்காக அரசுப்பள்ளிகளின் வகுப்பறைகள் பறிக்கப்பட்டு, பிள்ளைகள் கொளுத்தும் வெயிலில் வெளியே அமர வைக்கப்படுவது குறித்து நாம் பல முறை கண்டித்துள்ளோம்.
இந்நிலையில் இதுகுறித்த பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு, "ஒரு நாளில் அப்படி ஒன்றும் பாடம் நடக்கப்போவதில்லை, ஒரு நாளில் பிள்ளைகளின் படிப்பிற்கு எந்த இடையூறும் வரப்போவதில்லை" எனக் கூறி அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனையும் மாணவர்களின் கற்றல் திறனையும் ஒருசேர அவமானப்படுத்தியுள்ளார் திமுக அமைச்சர் துரைமுருகன் அவர்கள். ஆணவம் தெறிக்கும் திமுக அமைச்சரின் இந்தப் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
அரசுப்பள்ளிகள் ஒருநாள் செயல்படவில்லை எனில் ஒன்றும் குடிமுழுகிப் போகாது என்ற தொனியில் ஒரு அரசு அமைச்சர் பொதுவெளியில் பேசுகிறார் என்றால், ஏழை எளிய பிள்ளைகளின் கல்வியின் மீது திமுகவினருக்கு எத்தனை அலட்சியம் இருக்க வேண்டும்? எங்கள் பிள்ளைகளுக்கு ஒருநாள் கல்வி தேவையில்லை என முடிவு செய்வதற்குத் திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?
ஒன்றுக்கும் உதவாத ஆளும் அரசின் விளம்பரங்களுக்காக அரசுப்பள்ளிகளை ஒருநாள் முடக்கும் திமுக அரசு, பலர் குடியைக் கெடுக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு மணி நேரம் கூட விடுமுறை கொடுப்பதில்லையே ஏன்? இந்த டாஸ்மாக் மாடல் அரசுக்கு மது விற்பதைத் தவிர வேறு எதிலும் நாட்டமில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இந்த லட்சணத்தில் இவர்களுக்குக் "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்ற விளம்பரம் வேறு!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கரூரில் என்ன பூதமா உள்ளது? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
- கரூரில் விஜய் உயிருக்கு ஆபத்து உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர்,"கரூரில் என்ன பூதமா உள்ளது" என கேள்வி எழுப்பினார்.
கரூரில் விஜய் உயிருக்க ஆபத்து உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய நிலையில் அண்ணாமலை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
விஜய் கரூர் வருவதற்கு போலீசின் அனுமதி எதற்கு? யார் வேண்டுமானாலும் கரூர் வரலாம். கரூர் மக்கள் ரொம்ப அன்பானவர்கள். கரூரில் என்ன பூதமா உள்ளது
அதிமுகவும்- தவெகவும் வெவ்வேறு பாதையில் உள்ள கட்சிகள், பொறுத்திருந்து பார்ப்போம். விசிகவினர் திருமாவளவன் கண்முன்னரே ஒருவரை அடித்ததற்கு இதுவரை ஒரு எப்ஐஆர் கூட பதியப்படவில்லை.
விசிக தொண்டர்கள் நடந்து கொள்ளும் விதத்திற்கு திருமாவளவன் தான் பொறுப்பு. ஆதவ் அர்ஜூனாவை கட்சியை விட்டு அனுப்பிவிட்டு ஏன் இன்னும் திருமாவளவன் அவருடன் நட்பு பாராட்டுகிறார்?
ஆதவ் அர்ஜூனாவை தவெகவுக்கு அனுப்பி வைத்துவிட்டு திருமாவளவன் பாஜக மீது குறை கூறுவதா? கோவையில் பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைத்தததை வரவேற்கிறோம்.
ஆனால், எம்ஜிஆர், இரட்டைமலை சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை ஏன் வைக்கவில்லை?
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மீனவர்கள் கைது செய்யப்பட்ட முதல் நிகழ்வு இதுதான்.
- 242 மீன்பிடிப் படகுகளும், 74 மீனவர்களும் இலங்கைக் காவலில் உள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், மீனவர்கள் கைது சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள், இன்று (09.10.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்துத் தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இன்று (09.10.2025) அதிகாலை, ஐந்து இந்திய மீன்பிடிப் படகுகள் மற்றும் 47 மீனவர்கள் (30 தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் 17 காரைக்கால் மீனவர்கள்) இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை மத்திய வெளியுறவுத்துறை மந்திரியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள முதல்-அமைச்சர், சிறைபிடிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டின் கடலோர கிராமங்களைச் சேர்ந்த 30 மீனவர்களும், நான்கு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளும் அடங்கும் என்று கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கைது சம்பவம் மீனவ சமூகத்தினரிடையே பெருத்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கடலோர மாவட்ட மக்களிடையே அச்சம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர் 2025-ம் ஆண்டில், ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மீனவர்கள் கைது செய்யப்பட்ட முதல் நிகழ்வு இதுதான் என தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது, நமது மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் தங்களது பாரம்பரிய தொழிலைத் தொடர்வதில் உள்ள மன உறுதியையும், நம்பிக்கையையும் வெகுவாக பாதிப்பதாகவும் உள்ளது என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், இன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 242 மீன்பிடிப் படகுகளும், 74 மீனவர்களும் இலங்கைக் காவலில் உள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவித்திட உரிய அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளதோடு, இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக முயற்சிகளை மேற்கொள்ளவும், கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மீண்டும் மீண்டும் அரசுப்பள்ளிகளில் கைவைப்பது என்ன மாதிரியான மனநிலை?
- திமுக அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்போடு வலியுறுத்துகிறேன்.
ராணிப்பேட்டை போல் திருச்சியிலும் அரசு பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து அமைச்சர் துரைமுருகனின் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, ஒரு நாளில் ஒன்றும் ஆகிவிடாது என அவர் கூறியதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, இது என்ன மாதிரியான மனநிலை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர், சூரை, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசுப்பள்ளிகளிலும், குமணந்தாங்கல் அரசுப்பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி மீண்டும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு.
ஏற்கனவே, திருச்சியிலும் இதே போல அரசுப்பள்ளியில் முகாம் நடத்தப்பட்டதை மாணவர்களும், பெற்றோரும் கண்டித்த நிலையில், தனது அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோன்ற துஷ்பிரயோகங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய செய்தியாளர்களிடம், "ஒருநாளில் பாடத்தை எடுக்கப்போவதில்லை. மாணவர்களுக்கு எந்த இடையூறும் இல்லை" என கூச்சமின்றி பதிலளித்துள்ளார் அமைச்சர் திரு. துரைமுருகன்.
உங்களின் சுய விளம்பரத்திற்காக முகாம்களை நடத்தவேண்டும் என்றால் உங்கள் கட்சி அலுவலகங்களில் நடத்தலாமே அமைச்சரே. மீண்டும் மீண்டும் அரசுப்பள்ளிகளில் கைவைப்பது என்ன மாதிரியான மனநிலை?
ஏற்கனவே, திருபுவனத்தில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்ததை அனைவரும் அறிவார்கள். இதுதான் நீங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தும் லட்சணம். இப்படியிருக்க, ஏன் மாணவர்களின் கல்வியையும் சேர்த்து கெடுக்கிறீர்கள்? மாணவர்களின் கல்வியை தடுத்து அரசுப்பள்ளிகளில் முகாம் நடத்துவதை திமுக அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்போடு வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- உயர்மட்ட பாலத்துக்கு விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் பெயரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்டியுள்ளார்.
- கோவை வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஜி.டி.நாயுடு குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.
கோவை அவினாசி சாலையில் 10.1 கிலோ மீட்டர் நீளத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்துக்கு கோவையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் பெயரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்டியுள்ளார். தொடர்ந்து மேம்பாலத்தை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இதற்காக கோவை வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஜி.டி.நாயுடு குடும்பத்தினர் சந்தித்து பேசினர். அப்போது விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் பெயரை மேம்பாலத்துக்கு சூட்டியதற்காக அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
- அ.தி.மு.க., விஜய் கூட்டணி உருவாவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
- அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.
விஜய்யின் அரசியல் வருகை 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் இருந்தது.
அதே நேரம் அவருடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் சில கட்சிகள் ஈடுபட்டன. ஆனால் தி.மு.க. மற்றும் பா.ஜனதா மீது அவர் வைத்த கடுமையான விமர்ச னங்கள் மூலம் தனித்து போட்டியிடும் முடிவைத் தான் விஜய் தேர்வு செய்வார் என்று நினைக்க வைத்தது.
இந்த சூழ்நிலையில் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அரசியல் போக்கையே மாற்றியது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விஜய் மீதான அணுகுமுறை த.வெ.க.வினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டங்களில் த.வெ.க.வினர் தங்கள் கட்சி கொடிகளுடன் கலந்து கொள்ள தொடங்கினார்கள். எடப்பாடி பழனிசாமி, விஜய் ஆகியோர் படங்களுடன் சுவரொட்டிகளையும் த.வெ.க.வினர் ஒட்டினார்கள்.
இந்த இணக்கமான போக்கு அ.தி.மு.க., விஜய் கூட்டணி உருவாவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் த.வெ.க.வினர் கொடிகளுடன் கலந்து கொண்டதை சுட்டிக் காட்டிய எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.
இந்நிலையில், கூட்டத்தில் தவெக கொடிகளை வைத்திருந்தவர்கள் தவெகவினர் இல்லை. அதிமுக இளைஞர்கள் என தெரியவந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் அதிமுக டி-ஷர்ட் அணிந்தபடி தவெக கொடியை இளைஞர்கள் அசைத்துள்ளனர்.
அந்த இளைஞர்களைப் பார்த்து "கொடி பறக்குது பாருங்க.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க" என இபிஎஸ் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாஜகவிற்கு புது அடிமைகள் நிச்சயம் கிடைப்பார்கள்.
- திமுகவின் கடைசி தொண்டன் இருக்கும் வரை பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் பேசினார். பின்னர் தனியார் விடுதியில் நேற்று தங்கினார்.
இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, "பாஜகவிற்கு புது அடிமைகள் நிச்சயம் கிடைப்பார்கள். ஆனால் எத்தனை அடிமைகள் ஒன்றுசேர்ந்து வந்தாலும், திமுக-வின் கடைசி தொண்டன் இருக்கும் வரை அவர்களால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது.
உங்கள் எழுச்சி, அன்பை பார்க்கையில், முழுதாக மேடை ஏறுவோமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. என்றைக்கும் 'கை' நம்மைவிட்டு போகாது. நான் என் கையையும், உங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையையும் சொன்னேன்" என்று கூறினார்.
கை' நம்மைவிட்டு போகாது என்று கூறியதன் மூலம் சூசகமாக திமுக - காங்கிரஸ் கூட்டணி பலத்தை துணை முதல்வர் உதயநிதி உறுதிசெய்தார்.
- அமைச்சர் பஸ் ஓட்டுவதை அதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
- பஸ்சின் வடிவமைப்பு, பயணிகளின் வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்வதோடு, பஸ்சை இயக்கியும் பார்த்தேன்.
தமிழ்நாடு அரசு, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 130 புதிய பஸ்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வாங்கி உள்ளது. அவற்றில் 110 குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்களும் 20 வால்வோ சொகுசு பஸ்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
படுக்கை வசதியுடன் கூடிய வால்வோ சொகுசு பஸ்களுக்கு பெங்களூருவில் அமைந்துள்ள வால்வோ நிறுவனத்தில் கூண்டு கட்டும் பணி நடந்து வருகிறது. இதை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வால்வோ சொகுசு பஸ்சினை அமைச்சர் சிவசங்கர் ஓட்டிப் பார்த்தார். அனுபவம் வாய்ந்த டிரைவர் போல் பஸ்சை ஓட்டினார். அமைச்சர் பஸ் ஓட்டுவதை அதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
அங்கு பயிற்சி பெற்று வரும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கும் அமைச்சர் அறிவுரையும் வழங்கினார். வால்வோ நிறுவனத்தின் பயிற்சி ஓடுதளத்தில் பஸ்சினை சோதனை முறையில் அமைச்சர் நீண்ட நேரம் ஓட்டி பார்த்தார்.
அப்போது போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் சுஞ்சோங்கம் ஜாதக் அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் மற்றும் வால்வோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதுபற்றி அமைச்சர் சிவசங்கர் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சேவையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, நவீன 'மல்டி-ஆக்சில் வால்வோ' பஸ்களை வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பெங்களூருவில் உள்ள வால்வோ பஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற் சாலைக்கு நேரில் சென்று, தயாரிப்பு நிலையில் இருந்த பஸ்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். பஸ்சின் வடிவமைப்பு, பயணிகளின் வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்வதோடு, பஸ்சை இயக்கியும் பார்த்தேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
அமைச்சர் சிவசங்கர் எந்தவித பதட்டமும் இன்றி உற்சாகத்துடன் சொகுசு பஸ்சை ஓட்டி சென்றதை பஸ்சில் பயணம் செய்த அதிகாரிகள் வியந்து பார்த்தனர்.






