என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தேர்தல் சின்னம் கேட்டு விண்ணப்பிக்க தயாராகும் த.வெ.க.
    X

    தேர்தல் சின்னம் கேட்டு விண்ணப்பிக்க தயாராகும் த.வெ.க.

    • சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாக தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • சுயேச்சை பட்டியலில் இடம் பெற்றுள்ள சின்னங்களில் ஒன்றை த.வெ.க. தேர்வு செய்ய உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த த.வெ.க.வுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக த.வெ.க. மீண்டு வருகிறது.

    விரைவில் கருர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க உள்ளார். இதற்காக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. போலீசார் அனுமதி கொடுக்கும் தேதி, நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க உள்ளார்.

    கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குகள் பாய்ந்துள்ளதால் முன்ஜாமீன் நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளது. மறுபக்கம் கட்சிப்பணிகளை தொடங்க மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவிட்டு இருக்கிறார். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி பணியாற்ற வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

    சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களே இருக்கும் நிலையில், த.வெ.க.வுக்கு தேர்தல் சின்னம் பெறுவதற்கான நடவடிக்கையில் விஜய் இறங்கியுள்ளார். இதற்கான ஆலோசனை நடந்த வேளையில்தான் கரூர் துயர சம்பவம் அக்கட்சி நடவடிக்கைகளை புரட்டி போட்டு விட்டது. தற்போது மீண்டும் இந்த பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொது சின்னம் பெறுவதற்கு சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாக தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பிக்கலாம். எனவே த.வெ.க. இந்த மாதம் கடைசி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் கமிஷனிடம் சின்னம் தொடர்பாக விண்ணப்பிக்க உள்ளது.

    த.வெ.க. முதலில் ஆட்டோ சின்னத்தை குறி வைத்திருந்தது. ஆனால் அந்த சின்னம் கேரளாவில் ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. எனவே சுயேச்சை பட்டியலில் இடம் பெற்றுள்ள சின்னங்களில் ஒன்றை த.வெ.க. தேர்வு செய்ய உள்ளது. பரிசீலனைக்காக 3 சின்னங்களை தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப வேண்டும், அதில் ஒன்றை விருப்ப தேர்வாக கொடுக்கலாம். அந்தவகையில் விசில், உலக உருண்டை, மைக், பேட் இதில் ஒன்றை த.வெ.க. தேர்வு செய்ய இருக்கிறது.

    இதற்கிடையே கட்சியின் கட்டமைப்புகளை மேம்படுத்த 2-ம் கட்ட தலைவர்களை நியமிக்கும் பணியில் விஜய் தீவிரமாகியுள்ளார். விஜயின் இந்த நடவடிக்கை சோர்வாகி இருக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைய இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

    Next Story
    ×