என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வெறுப்பை வேரறுக்க அன்பென்ற ஆயுதம் ஏந்த கற்று தந்த நிகரற்ற தலைவன் கோடானு கோடி மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.
    • வெறுப்பை வேரறுக்க அன்பென்ற ஆயுதம் ஏந்த கற்று தந்த நிகரற்ற தலைவன் கோடானு கோடி மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு இன்று பிறந்த நாள். இதனையொட்டி காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் உள்பட பல தரப்பினரும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:-

    இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க அயராது மக்களுக்காக உழைத்து வரும் அன்பு தலைவர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.

    வெறுப்பை வேரறுக்க அன்பென்ற ஆயுதம் ஏந்த கற்று தந்த நிகரற்ற தலைவன் கோடானு கோடி மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.

    மக்களின் பிரதமர் ராகுல் காந்தி அவர்கள் மக்களின் ஆசி மற்றும் பிரார்த்தனையால் நீடூழி வாழ வேண்டுகிறேன்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் உள்பட 7 வனச்சரகங்களும் உள்ளன.
    • வனக்கோட்ட வாரியாக யானைகளின் இருப்பு எவ்வளவு என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை மத்திய அரசு வெளியிடும்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது.

    ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் சத்தியமங்கலம், டி.என்.பாளையம், கடம்பூர், தாளவாடி, ஆசனூர், ஜீரகள்ளி கேர்மாளம், விளாமுண்டி, தலமலை, பவானிசாகர் ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன.

    ஈரோடு வனக்கோட்டத்திற்குள்பட்ட தந்தை பெரியார் வனச்சரணாலயத்தில் ஈரோடு, அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி, தட்டக்கரை ஆகிய 5 வனச்சரகங்களும், சேலம் மாவட்டத்தில் மேட்டூர், கொளத்தூர் உள்ளிட்ட 20 வனச்சரகங்களும், தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் உள்ளிட்ட 8 வனச்சரகங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் உள்பட 7 வனச்சரகங்களும் உள்ளன.

    இந்த வனச்சரணாலய பகுதிகளில் ஆயிரக்கணக்கான யானைகள் வசித்து வருகின்றன. வனச்சூழலையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் யானைகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே யானைகளின் வாழ்விடங்களை மேம்படுத்தும் வகையில் தமிழக வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வனச்சரணாலயப் பகுதிகளில் ஒவ்வொரு வனச்சரகத்திலும் வசிக்கும் யானைகள் எவ்வளவு என்பது குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டன.

    தற்போது வனச்சரகங்களில் எடுக்கப்பட்ட யானைகளின் கணக்கெடுப்பு தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்தப் பகுதிகளில் வசிக்கும் யானைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவல்களை மத்திய வனத்துறை மூலம் அரசு வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பாதுகாப்பாளர் ராஜ்குமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடங்கி அதன் தொடர்ச்சியாக உள்ள மோயாறு பள்ளத்தாக்கு, சத்தியமங்கலம், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஒசூர் வனக்கோட்டம் வரையிலான பகுதிகளில் இந்த ஆண்டுக்கான யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

    சத்தியமங்கலம் வனக்கோட்டத்தை பொறுத்த வரை கடந்த ஆண்டில் 720-க்கும் மேற்பட்ட யானைகள் இருந்தது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்தது. தமிழகத்தில் நடைபெற்றதை போலவே அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.

    ஒவ்வொரு பகுதியிலும் எடுக்கப்பட்ட யானைகளின் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை சேகரித்து இறுதியாக வனக்கோட்ட வாரியாக யானைகளின் இருப்பு எவ்வளவு என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை மத்திய அரசு வெளியிடும்.

    சத்தியமங்கலம் வனக்கோட்டத்தைப் பொருத்த வரை யானைகள் வேட்டையாடுவது தடுக்கப்பட்டுள்ளதால் யானைகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பில்லை. யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்பதை யானைகளின் வழித்தடங்களில் எடுக்கப்பட்ட ஒட்டு மொத்தமாக கணக்கீட்டின் அடிப்படையிலேயே தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமியால் பா.ம.க.வுக்கு வைக்கப்பட்டுள்ள செக்.
    • தி.மு.க., பா.ம.க., தேர்தல் களத்தில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ள நிலையில் தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் இடையே அங்கு நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா களமிறங்கியுள்ள நிலையில் பா.ம.க. வேட்பாளராக வன்னியர் சங்க துணைத் தலைவரான சி.அன்புமணி நிறுத்தப்பட்டுள்ளார்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிட்ட போதிலும் தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் இடையே தான் அங்கு நேரடி மோதல் ஏற்பட்டு உள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்திருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் அ.தி.மு.க.வின் இந்த முடிவு தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் தேர்தல் களத்தில் நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    விக்கிரவாண்டி தொகுதி பா.ம.க.வுக்கு மிகவும் சாதகமான தொகுதியாகவே பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 72 ஆயிரத்து 188 வாக்குகள் கிடைத்துள்ளன. இது 39.57 சதவீதமாகும்.

    அதேநேரத்தில் அ.தி.மு.க.வுக்கு 65 ஆயிரத்து 365 ஓட்டுகள் கிடைத்துள்ளன. இது 35.83 சதவீதமாகும். இந்த தொகுதியில் பா.ம.க.வுக்கு 32,198 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இது 17.54 சதவீதமாகும்.

    தி.மு.க. கூட்டணிக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையே விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 6823 வாக்குகளே வித்தியாசமாகும். இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டு இருந்தால் தி.மு.க.வுக்கு கடும்போட்டியை ஏற்படுத்தி இருக்க முடியும் என்கிற கருத்தும் உள்ளது.

    இந்த தொகுதியில் வன்னியர்கள் ஓட்டு அதிகமாக இருப்பதால் பா.ம.க.வும் அ.தி.மு.க.வும் இணைந்து தேர்தலை சந்தித்தால் தி.மு.க.வை தோற்கடித்திருக்க முடியும் என்றே கூறப்படுகிறது.

    2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு விக்கிரவாண்டி தொகுதியில் 93 ஆயிரத்து 670 வாக்குகள் கிடைத்தன.பா.ம.க. உடன் இணைந்து தேர்தலை சந்தித்த அ.தி.மு.க. 84 ஆயிரத்து 157 ஓட்டுகளை பெற்றது. இதன் மூலம் பா.ஜ.க., பா.ம.க. அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் இணைந்து விக்கிரவாண்டி தொகுதி தேர்தலை சந்தித்திருந்தால் நிச்சயம் அது தி.மு.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்த ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி இருக்கும் என்பதும் கட்சி நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.

    2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் இந்த தொகுதியில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு 41,428 வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலி லும் அதிக வாக்குகளை பா.ம.க. பெற்றுவிட்டால் அ.தி.மு.க. வுக்கு 3-ம் இடம் தான் கிடைக்கும் என்று கருதியும் அ.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் இது எடப்பாடி பழனிசாமியால் பா.ம.க.வுக்கு வைக்கப்பட்டுள்ள செக் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். அ.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த வாக்குகள் யாருக்கும் செல்லாமல் தடுக்கப்படும் சூழலில் பா.ம.க. குறைவான வாக்குகளையே பெற முடியும் என்பதும் அ.தி.மு.க.வின் கணக்காக உள்ளது.

    பா.ம.க.வால் வன்னியர்கள் நிறைந்த தொகுதியில் தடம் பதிக்க முடியவில்லை என்கிற பிரசாரத்தை அ.தி.மு.க.வால் முன்வைக்க வசதியாக இருக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். இது வரும் காலங்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதாயத்தை தேடித்தரும் என்றும் அவர் நம்புகிறார்.

    இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பா.ம.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் தேர்தல் பணியாற்ற வேண்டிய நிலையும் அந்த கட்சிக்கு ஏற்பட்டு இருக்கிறது.

    அதேநேரத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. எப்போதும் இல்லாத வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. தி.மு.க. அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    2016-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற வேண்டும் என்கிற எண்ணத்தோடு தேர்தல் பணியாற்றி வருகிறது.

    இதனால் தி.மு.க.வுக்கும் பா.ம.க. வுக்கும் தேர்தல் களத்தில் கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் எப்போதுமே ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியிலும் அது நீடிக்குமா? இல்லை பா.ம.க. அதிரடி மாற்றத்தை ஏற்ப டுத்துமா? என்பதே இப்போது பலத்த கேள்வியாக எழுந்துள்ளது.

    பா.ம.க.வுக்கு நிகராக தி.மு.க. வினரும் வன்னியர் வாக்குகளை பிரிப்பதால் சாதி ரீதியிலான வாக்குகள் சிதறி அங்கு கடும் பலப்பரீட்சை நடத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    • மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ‘சாகர் கவாச் ஆப்ரேஷன்’ பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.
    • போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்று தொடங்கியது.

    அதன்படி, நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோர பகுதிகளான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.

    முதல் நாளான இன்று ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி. சுந்தர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி, எஸ். எஸ்.ஐ.சசிகுமார் உள்பட 40-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    படகு மூலம் கடலுக்கு சென்று வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என முன்னெச்சரிக்கை விடுத்தனர்.

    • மழை எதிரொலியால் ஓடைகளில் குளிக்க தடை.
    • இரவில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவி லுக்கு அமாவாசை, பவுர்ண மிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்தில் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அந்த வகையில் பிரதோ ஷம், ஆனி மாத பவுர்ண மியை முன்னிட்டு இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பிரதோஷ நிகழ்ச்சியில் பங் கேற்க சென்னை, நெல்லை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு நள்ளிரவு முதல் வருகை தந்தனர்.

    வானம் மேக மூட்டத்துடன் மழை பெய்வது போன்ற சூழல் நிலவியதால் குறைந்த அளவிலான பக்தர்களே வந்திருந்தனர். இதையடுத்து காலை 6.15 மணிக்கு வனத்துறை கேட் திறந்துவிடப்பட்டது. குளுமையான சூழலால் பக்தர்கள் சிரமமின்றி மலையேறி சென்றனர். தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதாலும், மழை பெய்தால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதாலும், அப்படியே வந்தாலும் கோவிலுக்குச் செல்ல முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும் பக்தர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருந்தது.

    இன்று மாலை சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இரவில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது என்றும், தரிசனம் முடிந்து திரும்பி வருபவர்கள் ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது என வனத்துறையினர் தெரி வித்துள்ளனர்.

    நாளை மறுநாள் (21-ந் தேதி) ஆனி மாத பவுர்ணமி நாளில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கோடை வெயில் மற்றும் விவசாய பயன்பாடு காரணமாக வீராணம் ஏரி கடந்த சில மாதங்களாக தண்ணீரின்றி வறண்டது.
    • வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

    இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் தஞ்சை மாவட்டம் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வரும்.

    இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 கன அடி ஆகும். ஏரியின் மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    மேலும் வீராண ஏரியின் நீர்மட்டத்திற்கு ஏற்ப இங்கிருந்து சென்னைக்கு குழாய் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    கோடை வெயில் மற்றும் விவசாய பயன்பாடு காரணமாக வீராணம் ஏரி கடந்த சில மாதங்களாக தண்ணீரின்றி வறண்டது.

    இந்த நிலையில் கீழணையில் இருந்து கடந்த 25-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.

    இன்று காலை வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக உயர்ந்து தனது முழு கொள்ளளவை எட்டியது. அதாவது வீராணம் ஏரியின் மொத்தமாக 1465 கன அடி நீர் தேக்கி வைக்கமுடியும். இதில் 1343.50 கன அடி நீர் தற்போது உள்ளது.

    மேலும், வீராணம் ஏரி நிரம்பியதால் கீழணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது. மேலும், நேற்று இரவு காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 14 மி.மீ. மழை பதிவாகியது.

    இதனால் ஏரிக்கு வினாடிக்கு 25 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தற்போது காட்டுமன்னார்கோவில் பகுதியில் அறுவடை நடைபெறுவதால் பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை.

    கடந்த ஆண்டு வீராணம் ஏரி 7 முறை நிரம்பிய நிலையில், இந்த ஆண்டு முதல் முறையாக நிரம்பியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசியல் குடும்பத்தை சேர்ந்த ராகுல் காந்தி, இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • நாட்டு மக்களுக்கான அர்ப்பணிப்பு ராகுலை உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும்.

    சென்னை:

    இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரனாகவும், நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் பேரனாகவும் ராகுல் காந்தி அடையாளம் காணப்படுகிறார். ராகுல் காந்தி இன்று தனக்கான ஒரு அடையாளத்தை தானே உருவாக்கி வரும் முயற்சியில் பெரும் வெற்றிகளையும் குவித்து வருகிறார்.

    இந்தியாவின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் குடும்பத்தை சேர்ந்த ராகுல் காந்தி, இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,

    நாட்டு மக்களுக்கான அர்ப்பணிப்பு ராகுலை உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும். தொடர்ந்து முன்னேற வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    • நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், கமிஷனர் வே.அமுதவல்லி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
    • குழந்தை தொடர்பான விவரங்கள் யாருக்கும் தெரியாத வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்கவும் முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்சோ சட்டத்தை அமல்படுத்துதல் தொடர்பாக நடந்த ஆய்வுக் கூட்டத்தில் போக்சோவுக்கு என தனி இணையதளம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார்.

    இந்தநிலையில் https://www.pocsoportal.tn.gov.in என்ற போக்சோ இணையதளம், தனி நபர் பராமரிப்பு திட்ட செயலி, குழந்தை பராமரிப்பு இல்லங்களை ஆய்வு செய்வதற்கான செயலி, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான கைபேசி செயலி போன்ற புதிய செயலிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், கமிஷனர் வே.அமுதவல்லி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    இதில் போக்சோ இணையதள முகப்பு மூலம், பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகளை போலீஸ் துறை, போக்சோ கோர்ட்டு, மகளிர் கோர்ட்டு மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை ஆகிய துறைகள், விவரங்களை உடனுக்குடன் பதிவு செய்யவும், பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்படுவது முதல் கோர்ட்டு இறுதி தீர்ப்பு வரையும், ஒவ்வொரு நடவடிக்கையையும் அத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கண்காணித்து வழக்கை விரைவுபடுத்த முடியும்.

    மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டு தொகையை தாமதமின்றி இணையதளம் மூலமாக நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தவும், துறை சார்ந்த உயர் அலுவலர்களால் வழக்கு துரிதமாக தீர்வு செய்வதை கண்காணிப்பதற்கும் இந்த இணையதளம் பயனுள்ளதாக அமையும். குழந்தை தொடர்பான விவரங்கள் யாருக்கும் தெரியாத வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வழக்கு நீதிபதிகள் எஸ்எஸ் சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
    • தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலரான வக்கீல் ஹென்றி திபேன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்எஸ் சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை, மதுரை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நிராகரித்து விட்டது. அதனால், தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், மதுரை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 1-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    • சொகுசு கார் ஒன்று, சாலை ஓரம் தூங்கிய சூர்யா மீது மோதியது.
    • காரில் வந்த இரு பெண்களும் மதுபோதையில் இருந்ததாக சூர்யாவின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    சென்னை:

    சென்னை பெசன்ட் நகர் ஓடக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 22) பெயிண்டரான இவர், நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் பெசன்ட் நகர் கலாசேத்ரா காலனி, வரதராஜ் சாலை நடைபாதை அருகே தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்று, சாலை ஓரம் தூங்கிய சூர்யா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆஸ்பத்திரியில் சூர்யாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய காரில் 2 பெண்கள் இருந்துள்ளனர். விபத்து குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் தப்பி ஓடினர்.

    மேலும் காரில் வந்த இரு பெண்களும் மதுபோதையில் இருந்ததாக சூர்யாவின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஸ் தலைமையிலான போலீசார் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் கார் பதிவெண் மற்றும் தப்பியோடிய பெண்களின் புகைப்படம் ஆகிய ஆதாரங்களை வைத்து விசாரணை நடைபெற்றது.

    விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது ஆந்திர மாநில எம்பி பீடா மஸ்தானின் மகள் பீடா மாதூரி என்பது தெரியவந்தது. இவர் புதுச்சேரியில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் போலீசார் நேற்று மாலை பீடா மாதூரியை கைது செய்தனர். அவர் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல் சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் பீடா மாதூரி போலீஸ் நிலைய ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    நடைபாதையில் தூங்கிய பெயிண்டர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் பெசன்ட் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு மட்டும் காலை உணவுத் திட்டம் தற்போது அமலில் உள்ளது.
    • பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள், பிரமுகர்களின் பிறந்த நாளில் இனிப்பு பொங்கல் மட்டும் தற்போது வழங்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுத் திட்டம் வாயிலாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் சேர்த்து 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு மட்டும் காலை உணவுத் திட்டமும் தற்போது அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இனி வரக்கூடிய நாட்களில் முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாளன்று மதிய உணவுடன் சேர்த்து இனிப்பு பொங்கல் கூடுதலாக வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளி தரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள், பிரமுகர்களின் பிறந்த நாளில் இனிப்பு பொங்கல் மட்டும் தற்போது வழங்கப்படுகிறது. வழக்கமான மதிய உணவு வழங்கப்படுவதில்லை. இதை மாற்றி இனிமேல் மதிய உணவுடன் சேர்த்து, சர்க்கரை பொங்கலும் அளிக்கலாம் என்று சமூக நலத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் மாணவர்களுக்கு முக்கிய தலைவர்களின் பிறந்த நாளில் மதிய உணவுடன் சேர்த்து இனிப்பு பொங்கல் வழங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக ஒரு மாணவருக்கு ரூ2 ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் 42 லட்சத்து 71 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதற்கான செலவீனத்துக்காக 4 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காலை முதல் மாலை வரை வெப்பம் சுட்டெரிப்பதும், இரவில் மழை குளிர்விப்பதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • 12 வருகை விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, நேற்று இரவு சென்னையின் பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சாந்தோம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ராயப்பேட்டை, கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர், கோடம்பாக்கம்,

    திருவொற்றியூர், தாம்பரம், சேலையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.

    நேற்று காலை முதல் மாலை வரை வெப்பம் சுட்டெரிப்பதும், இரவில் மழை குளிர்விப்பதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனிடையே, நள்ளிரவில் சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக 26 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    12 வருகை விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன. அதைப்போல், 14 புறப்பாடு விமானங்கள், தாமதமாக புறப்பட்டு சென்றன. கோழிக்கோடு மற்றும் டெல்லியில் இருந்து வந்த விமானங்கள் முறையே திருச்சி, பெங்களூருவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

    ×