என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மழைக்கால காய்ச்சல் முகாம்கள் கடந்த 17-ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன.
- பொதுமக்கள் இந்த முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை:
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் டெங்கு காய்ச்சலும் தற்போது அதிகரித்துள்ளது.
மழையினால் நோய் தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் மாநகராட்சி பொது சுகாதாரத்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.
மழைக்கால காய்ச்சல் முகாம்கள் கடந்த 17-ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. கொசு மருந்து தெளித்தல், கொசுப்புகை மருந்து அடித்தல் போன்ற கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 627 நிலையான மருத்துவ முகாம்களும் 217 நடமாடும் மருத்துவ முகாம்களும் என மொத்தம் 844 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 36 ஆயிரத்து 353 பேர் பயன் அடைந்துள்ளனர்.
இன்று திருவொற்றியூர், மணலி, தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணா நகர் உள்ளிட்ட மண்டலங்களில் 116 சிறப்பு முகாம்கள் நடந்தன. தற்போது வாந்தி, வயிற்றுப் போக்கு, தொண்டை வலி, சளி, இருமல் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவதால் வார்டு வாரியாக மருத்துவ முகாம்கள் நடக்கின்றன. பொதுமக்கள் இந்த முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இன்று நடக்கும் முகாம்களுடன் சேர்த்து 40 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு முகாமில் ஒரு மருத்துவர், நர்சு மற்றும் உதவியாளர் வீதம் சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- பேச்சிப்பாறை அணையிலில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கோதையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
- அருவியில் குளிப்பதற்கு இன்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியிடப்படுகிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்த நிலையில், நேற்று மாவட்டம் முழுவதும் மீண்டும் மழை கொட்டி தீர்த்தது. தக்கலை, குளச்சல், இரணியல், குருந்தன்கோடு, சுருளோடு பகுதியிலும் மழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலமோரில் 35.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை அணையிலில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கோதையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்கு இன்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேசிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.85 அடியாக இருந்தது. அணைக்கு 1,243 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 50 கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 2,049 கனஅடி தண்ணீர் உபரி நீராகும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.20 அடியாக உள்ளது. அணைக்கு 871 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,050 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழைக்கு நேற்று ஒரே நாளில் 8 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
குமரி மாவட்டத்தில் மழைக்கு இந்த மாதத்தில் இதுவரை 55 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 9 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 18 வீடுகளும், கல்குளம் தாலுகாவிலும் 9 வீடுகளும், விளவங்கோடு தாலுக்காவில் 5 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் 11 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 3 வீடுகளும் இடிந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் 15 மின்கம்பங்களும் சேதமடைந்தன. அவை அனைத்தும் சரி செய்யப்பட்டுவிட்டது.
- ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, வரவுக்குள் செலவு செய்து சிக்கனமாக வாழப் பழகிட வேண்டும்.
- அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கை தொடங்கிட வேண்டுகிறேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உலக சிக்கன நாளையொட்டி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
ஒருவர் சேமிக்கும் தொகையானது முதுமையில் நம்பிக்கையையும், பாதுகாப்பினையும் அளிக்கிறது. சிறுகச் சிறுகச் சேமிப்பதன் மூலம் குடும்பத்திற்குத் தேவைப்படக்கூடிய அவசரச்செலவுகள் குறிப்பாக, உயர்கல்விக்கான செலவு, திருமணச் செலவு, மருத்துவச் செலவு, வீடு கட்டுதல் போன்ற இனங்களில் ஏற்படும் செலவு போன்ற அனைத்தையும் எளிதில் எதிர்கொள்ள முடிகிறது.
எனவே, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, வரவுக்குள் செலவு செய்து சிக்கனமாக வாழப் பழகிட வேண்டும். வாழ்க்கை சிறப்பாக அமைய அனைவரும் சிக்கனமாகச் செலவு செய்து சேமித்திட அருகிலுள்ள அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கை தொடங்கிட வேண்டுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
- யானை, அகழியின் பகுதியிலேயே கால்களை மடக்கியவாறு இருந்தது.
- வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த காட்டு யானையை நேரில் ஆய்வு செய்தனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடந்துறை காப்புக்காட்டு வனப்பகுதியையொட்டி திருமலைராஜ் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.
நிலத்தையொட்டி, வனத்துறை சார்பில் யானைகள் நுழையாமல் இருக்க அகழி வெட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வனத்தை விட்டு வெளியேறிய 20 வயது ஆண் காட்டு யானை ஒன்று இந்த அகழியை கடக்க முயன்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக யானை அகழியின் இடுக்கி சிக்கி, அதன் கால்கள் அகழிக்குள் சிக்கி கொண்டது. இதனால் யானையால் வெளியே மீண்டு வரமுடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து யானை, அகழியின் பகுதியிலேயே கால்களை மடக்கியவாறு இருந்தது. அப்போது தோட்டத்திற்காக போடப்பட்ட மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளது. யானையின் வாயில் சிக்கிய மின்கம்பிகளுடன் யானை உயிரிழந்த நிலையில் கிடந்தது.
இதை பார்த்த திருமலை ராஜ் மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த காட்டு யானையை நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து சம்பவத்திற்கு வனத்துறை உயர் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு யானையின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி அதன் பின் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- வெளியூருக்கு சென்று இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்திக்க முடியவில்லை.
- ஜனவரியில் தான் கூட்டணி குறித்து ஆக்கப்பூர்வான பேச்சுவார்த்தை நடைபெறும்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுடன் தி.மு.க. கூட்டணி தலைவர் சந்தித்து பேசினார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ பரிசோதனை செய்து கொண்டார்.
தைலாபுரம் தோட்டத்தில் சிறிது நாட்கள் ஓய்வெடுத்த அவர் பின்னர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் தர்மபுரி, சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாசை சந்திக்க தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நேற்று மாலை நேரில் வந்தார்.
அப்போது அவர்கள் இருவரும் தமிழக அரசியல் நிலவரம் மற்றும் பா.ம.க. உட்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது பா.ம.க. செயல் தலைவரும், டாக்டர் ராமதாசின் மகளுமான ஸ்ரீகாந்தி, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
டாக்டர் ராமதாசை சந்தித்து விட்டு வெளியே வந்த ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் வெளியூருக்கு சென்று இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்திக்க முடியவில்லை.
இதனால் அவரை சந்தித்து நலம் விசாரித்தேன். பூரண குணமடைந்து உடல் நலத்துடன் ராமதாஸ் உள்ளார். அவர் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
கருத்து வேறுபாடு இல்லாமல் வலிமையான சக்தியாக பா.ம.க. ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை ராமதாசிடம் தெரிவித்துள்ளோம். பா.ம.க. தொண்டர்களின் விருப்பமும் அதுதான். நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என மனதார விரும்புகிறோம்.
தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருவது குறித்து தி.மு.க. தலைவர் மற்றும் பா.ம.க. நிறுவனர் பேசக்கூடிய விஷயம். தி.மு.க. கூட்டணியில் நாங்கள் ஒரு அங்கம்.
கூட்டணி பேசும் அதிகாரம் எங்களுக்கு கிடையாது. ஜனவரியில் தான் கூட்டணி குறித்து ஆக்கப்பூர்வான பேச்சுவார்த்தை நடைபெறும்.
பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் தவறுகள் நடைபெற்றுள்ளதால் தமிழகத்திலும் தவறுகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கூட்டியிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு தான் எங்களது நிலைப்பாடு. திருத்தப்பணி நடைபெறும் போது மக்கள் விழிப்புடனும், அரசியல் கட்சியினர் கூடுதல் கவனத்துடனும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் கரூரில் உயிரிழந்த 41 பேரின் உறவினர்களை மகாபலிபுரம் அழைத்து விஜய் சந்தித்தது குறித்த கேட்ட போது,
விஜய் அன்றைய தினமே அல்லது ஒரு சில நாட்களிலே அவர்களை சந்தித்திருக்க வேண்டும். விஜய்யின் செயல் விரும்பக்கூடியது அல்ல. கண்டிப்பாக அவர் கரூரில் சென்று சந்தித்திருக்க வேண்டும் என்றார்.
தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க காய்களை ராமதாஸ் நகர்த்தி வருவதாக கூறப்படும் நிலையில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. அவரை நேரில் சந்தித்து பேசி இருப்பது குறிப்பிடத் தக்கது.
- அணு உலைகளில் பராமரிப்பு பணி, எரிபொருள் நிரப்பும் பணி உள்ளிட்டவற்றின்போது மின் உற்பத்தி பணிகள் நிறுத்தப்படுவது வழக்கம்.
- அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும்.
நெல்லை:
நாட்டின் அணுசக்தித் துறையில் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணி கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில், புதிதாக 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த அணு உலைகளில் பராமரிப்பு பணி, எரிபொருள் நிரப்பும் பணி உள்ளிட்டவற்றின்போது மின் உற்பத்தி பணிகள் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பராமரிப்பு மற்றும் அணு எரிபொருளை மறுநிரப்பும் பணிகளுக்காக அணு உலை 2-ன் முழு உற்பத்தித் திறனான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அணு உலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தேசிய தொகுப்பில் பகிரப்பட்டாலும், மின் பகிர்வு ஒப்பந்தத்தின்படி தமிழகத்திற்கு அதிகபட்சமாக 562 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மின் உற்பத்தி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலத்திற்கு பிறகு அலகு 2-ல் மேற்கொள்ளப்படும் இந்த முழுமையான பராமரிப்பு பணிகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் பணி சுமார் 2 மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் துணை ஜனாதிபதிகாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார்.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா நேற்று பசும்பொன்னில் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் யாக வேள்வியுடன் தொடங்கியது.
பொதுமக்கள் ஏராளமானோர் பால்குடம், ஜோதி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2-ம் நாளான இன்று அரசியல் விழாவாக நடைபெற்றது. இதில் தேவரின் அரசியல் பயணம் குறித்து சொற்பொழிவாளர்கள் பேசுகிறார்கள்.
நிறைவு நாளான நாளை (30-ந்தேதி) குருபூஜை விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள். இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் துணை ஜனாதிபதிகாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை, திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் முதன்முறையாக நாளை பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
இதற்காக இன்று மாலை மதுரை வருகை தரும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். இரவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர் நாளை காலை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பசும்பொன் செல்கிறார். அங்கு தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
மீண்டும் அதே ஹெலிகாப்டரில் மதுரை திரும்பும் சி.பி.ராதாகிருஷ்ணன், அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்படுகிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார்.
அங்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னர் கோவில்பட்டி சென்றார். இன்று காலை தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்கிறார். பின்னர் இரவு மதுரை வருகை தரும் அவர் அழகர்கோவில் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.
நாளை (30-ந்தேதி) காலை அங்கிருந்து புறப்பட்டு கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அண்ணா நகர் வழியாக சென்று தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பின்பு அங்கிருந்து காரில் புறப்பட்டு காலை 9.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி குருபூஜையில் கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகின்றனர். இதையடுத்து மதுரை வரும் விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
இதேபோல் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்கள்.
39 தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கருத்தில் கொண்டு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும், மதுரை முதல் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும், டிரோன்கள் பறக்க தடை விதித்து மதுரை, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
துணை ஜனாதிபதி, முதலமைச்சர் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
- நீண்ட நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவர்கள் சென்றுள்ளனர்.
நாகப்பட்டினம்:
வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கடந்த 18-ந் தேதி மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, நாகூர், பட்டினச்சேரி, நம்பியார் நகர், செருதூர், காமேஷ்வரம், விழுந்தமாவடி, ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை உள்ளிட்ட 25 மீனவ கிராமங்களில் உள்ள 700 விசை படகுகள், 3,000 பைபர் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று மோந்தா புயல் கரையை கடந்ததை அடுத்து நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டது.
இதனால் கடல் சீற்றம் குறைந்தது. எனவே கடந்த 11 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறையினர் அனுமதித்தனர்.
இதையடுத்து மீன்வளத்துறை மூலம் படகுகளுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று அதிகாலை நாகப்பட்டினம் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவர்கள் சென்றுள்ளனர்.
- மின்சார பேருந்தை பராமரிக்கும் பணியாளர்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் இல்லை.
- அதிக விலை கொண்ட பேருந்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் மிகப்பெரிய செலவு ஏற்படும்.
மின்சார பேருந்து இயக்கம் தனியாருக்கு அளிக்கப்பட்டதால் போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் என்ற அ.தி.மு.க.வினரின் புகாருக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அரசியல் காரணங்களுக்காக அ.தி.மு.க.வினர் தேவையற்ற புகாரை கூறி வருகின்றனர்.
* மின்சார பேருந்தை பராமரிக்கும் பணியாளர்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் இல்லை.
* மின்சார பேருந்தின் விலை அதிகம் என்பதால் அதனை தனியார் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது.
* பராமரிப்பு பணியாளர்கள் இல்லாததால் தயாரிப்பு நிறுவனமே பராமரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
* அதிக விலை கொண்ட பேருந்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் மிகப்பெரிய செலவு ஏற்படும்.
* புரிதல் இல்லாமல் அ.தி.மு.க.வினர் புகார் கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உச்சநீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை செல்லும் என்று கடந்த 10-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
- மக்களின் நம்பகத் தன்மையை இழந்து விட்ட தமிழக காவல்துறை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பகுஜன் சமாஜம் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. தமிழகத்தை உலுக்கிய மிக முக்கிய கொலை வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வர ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அடுத்தடுத்து திமுக அரசு முட்டுக்கட்டைகளை போடுவது கண்டிக்கத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நாளில் இருந்தே, அவரது கொலை வழக்கில் தமிழக காவல்துறை நடத்தி வரும் விசாரணை ஐயத்திற்கு இடமானதாகவே இருக்கிறது. அவரது கொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதை விட, உண்மைக் குற்றவாளிகளை பாதுகாப்பதில் தான் காவல்துறை தீவிரம் காட்டியது. உண்மைகள் வெளிவந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் அந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதைத் தொடர்ந்து தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வரும் வகையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி ஆணையிட்டது. அதைத் தாங்கிக் கொள்ள முடியாத தமிழக அரசு, உடனடியாக உச்சநீதிமன்றத்துக்கு சென்று சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என மேல்முறையீடு செய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை செல்லும் என்று கடந்த 10-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்யவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் அரசு விரும்பினால், சிபிஐ விசாரணையை ஏற்றுக் கொண்டு, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாத திமுக அரசு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை நிறுத்தி வைக்க ஆணையிட வேண்டும் என்று கோரி இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல்வாதிகள் சிலருக்கும், அதிகாரத்தில் இருப்பவர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதன் காரணமாகவே இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களை பலிகடாக்களாக மாற்றி விசாரணை வளையம் விரிவடையாமல் தடுக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் படுகொலை செய்யப்பட்டதில் தொடங்கி, சிபிஐ விசாரணையை தடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மேல்முறையீடு செய்திருப்பது வரை திமுக அரசின் அனைத்து செயல்பாடுகளும் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையிலேயே உள்ளன.
தமிழ்நாட்டில் அண்மைக்காலத்தில் நடைபெற்ற பல நிகழ்வுகள் தொடர்பான வழக்குகள் அடுத்தடுத்து சிபிஐ விசாரணைக்கும், சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணைக்கு மாற்றப்பட்டு வருகின்றன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு, நாமக்கல் மாவட்ட சிறுநீரகத் திருட்டு வழக்கு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தமிழ்நாடு காவல்துறை செயல்திறனையும், நம்பகத்தன்மையையும் இழந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது.
மக்களின் நம்பகத் தன்மையை இழந்து விட்ட தமிழக காவல்துறை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது. எனவே, இந்த வழக்கில் புதைந்து கிடக்கும் உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுவதையும், உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு முட்டுக்கட்டை போடக்கூடாது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனுவை திமுக அரசு திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நேற்று தங்கம் விலையில் அதிரடி சரிவை பார்க்க முடிந்தது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இப்படியே ஏறிக்கொண்டே போனால் யார் வாங்குவார்கள்? என்றெல்லாம் பேசப்பட்டது. அந்த வகையில் கடந்த 17-ந் தேதி விலை உச்சத்துக்கு சென்றது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. தினமும் காலை, பிற்பகல் என இருவேளைகளிலும் தாறுமாறாக விலை உயர்ந்து வந்தது.
இதே வேகத்தில் சென்றால், ஒரு சவரன் ரூ.1 லட்சத்தையும் தாண்டிவிடும் என்றெல்லாம் வியாபாரிகள் சொன்னார்கள். இப்படி இருந்த சூழல் அப்படியே தலைகீழாக மாறியது. கடந்த 18-ந் தேதியில் இருந்து விலை குறைந்து கொண்டே வருகிறது. விலை ஏற்றம் ராக்கெட் வேகத்தில் இருந்த நிலையில், தற்போது விலை இறக்கம் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கியுள்ளது.
கடந்த 22-ந் தேதி ஒரே நாளில் கிராமுக்கு ரூ.460-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 680-ம் குறைந்து ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கு வந்தது. அதனைத்தொடர்ந்தும் விலை கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டே இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று தங்கம் விலையில் அதிரடி சரிவை பார்க்க முடிந்தது.
விலை ஏற்றம் கண்டபோது தினமும் 2 முறை உயர்ந்து காணப்பட்டதோ, அதேபோல், தற்போது விலை சறுக்கலிலும் 2 முறை சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்திருந்தது. பின்னர் பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.225-ம், சவரனுக்கு ரூ.1,800-ம் சரிந்திருந்தது.
ஆக நேற்று முன்தினம் விலையை காட்டிலும், நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.375-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 75-க்கும், ஒரு சவரன் ரூ.88 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 135 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,210-க்கும், சவரனுக்கு 1,080 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.89,680-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.166-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
28-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 88,600
27-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,600
26-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
25-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
24-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
28-10-2025- ஒரு கிராம் ரூ.165
27-10-2025- ஒரு கிராம் ரூ.170
26-10-2025- ஒரு கிராம் ரூ.170
25-10-2025- ஒரு கிராம் ரூ.170
24-10-2025- ஒரு கிராம் ரூ.170
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 16 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது. இதனால் இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.






