என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: துணை ஜனாதிபதி, முதலமைச்சர் நாளை பசும்பொன்னில் மரியாதை
- இந்தியாவின் துணை ஜனாதிபதிகாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார்.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா நேற்று பசும்பொன்னில் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் யாக வேள்வியுடன் தொடங்கியது.
பொதுமக்கள் ஏராளமானோர் பால்குடம், ஜோதி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2-ம் நாளான இன்று அரசியல் விழாவாக நடைபெற்றது. இதில் தேவரின் அரசியல் பயணம் குறித்து சொற்பொழிவாளர்கள் பேசுகிறார்கள்.
நிறைவு நாளான நாளை (30-ந்தேதி) குருபூஜை விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள். இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் துணை ஜனாதிபதிகாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை, திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் முதன்முறையாக நாளை பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
இதற்காக இன்று மாலை மதுரை வருகை தரும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். இரவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர் நாளை காலை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பசும்பொன் செல்கிறார். அங்கு தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
மீண்டும் அதே ஹெலிகாப்டரில் மதுரை திரும்பும் சி.பி.ராதாகிருஷ்ணன், அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்படுகிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார்.
அங்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னர் கோவில்பட்டி சென்றார். இன்று காலை தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்கிறார். பின்னர் இரவு மதுரை வருகை தரும் அவர் அழகர்கோவில் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.
நாளை (30-ந்தேதி) காலை அங்கிருந்து புறப்பட்டு கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அண்ணா நகர் வழியாக சென்று தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பின்பு அங்கிருந்து காரில் புறப்பட்டு காலை 9.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி குருபூஜையில் கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகின்றனர். இதையடுத்து மதுரை வரும் விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
இதேபோல் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்கள்.
39 தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கருத்தில் கொண்டு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும், மதுரை முதல் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும், டிரோன்கள் பறக்க தடை விதித்து மதுரை, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
துணை ஜனாதிபதி, முதலமைச்சர் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






