search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "house collapse"

    • தொகுப்பு வீடுகள் 1990-ம் ஆண்டில் கட்டப்பட்டவை. இந்த வீடுகள் கட்டப்பட்டு தற்போது 30 வருடங்களுக்கு மேலாகி விட்டது.
    • கடந்த 2021-ம் ஆண்டில் பெருமழை, வெள்ளம் வந்தபோது கட்டிடங்கள் அதிகளவில் சேதமடைந்தன.

    மதுரை:

    மேலூர் அருகே மேலவளவு ஊராட்சிக்கு உட்பட்ட கண்மாய்பட்டி பகுதியில் 1,990-ல் கட்டப்பட்ட காலனி தொகுப்பு வீடுகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று இரவு அந்தப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது முத்து புளியம்மாள் என்பவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வீட்டிற்குள் இருந்த முத்து புளியம்மாளின் 5 வயது மகன் சேவுகமூர்த்தி காயமடைந்தார். முத்து புளியம்மாளும், அவரது மகளும் காயமின்றி தப்பினர். சேவுகமூர்த்தி மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த டி.ஆர்.ஓ. சக்திவேல், ஆர்.டி.ஓ. ஜெயந்தி, மேலூர் தாசில்தார் செந்தாமரை, கொட்டாம்பட்டி யூனியன் அலுவலர்கள், மேலவளவு ஊராட்சி மன்றத்தலைவர் தங்கமலைச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    அப்போது பொதுமக்கள் தொகுப்பு வீடுகள் தற்போது சேதமடைந்த நிலையில் இருப்பதாகவும், இதனால் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    அதனை கேட்டுக்கொண்ட அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    இங்குள்ள தொகுப்பு வீடுகள் 1990-ம் ஆண்டில் கட்டப்பட்டவை. இந்த வீடுகள் கட்டப்பட்டு தற்போது 30 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இதனால் கட்டிடம் சேதமடைந்து பல வீடுகளில் மேற்கூரைகள் சுவர்கள் இடியும் நிலையில் உள்ளன. அதனால் இங்கு வசிப்பவர்கள் எந்த நேரமும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயத்தில் உள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டில் பெருமழை, வெள்ளம் வந்தபோது கட்டிடங்கள் அதிகளவில் சேதமடைந்தன. அப்போது அங்கு வசிப்பவர்களை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தங்க வைத்தனர். பின்னர் வெள்ளம் வடிந்தபின்பு மீண்டும் வீடுகளுக்கு வந்தோம். அப்போது முதல் கட்டிடங்கள் உறுதி தன்மையற்ற நிலையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் புதிய வீடுகள் கட்டித்தரும்படி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

    எனவே பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னதாக உயர் அதிகாரிகள் இங்குள்ள தொகுப்பு வீடுகளை பார்வையிட்டு புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வீட்டில் தங்கியிருந்தவர் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ஆலையை நடத்தி வந்துள்ளார்.
    • விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

    உத்திர பிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தை அடுத்த லோனி பகுதியில் இருந்த இரண்டு மாடிகள் கொண்ட வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததில், மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் பலத்த காயமுற்றனர்.

    இடிந்து விழுந்த வீட்டை அதன் உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்ததாக தெரிகிறது. வீட்டில் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தவர், அதில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ஆலையை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட விபத்து காரணமாகவே வீடு இடிந்து விழுந்துள்ளது.

    குடியிருப்பு பகுதியில் வீடு இடிந்து விழுந்த சத்தத்தை கேட்டு அங்கு விரைந்த அக்கம்பக்கத்தினர், இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசாருடன், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஏழு பேரை மீட்டனர். மீட்கப்பட்ட ஏழு பேரும் கடுமையாக காயமுற்றனர் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • வாடிப்பட்டியில் விடிய, விடிய பெய்த மழையால் தி.மு.க. கவுன்சிலரின் வீடு இடிந்து விழுந்தது.
    • எதிர்பாராத விதமாக மேற்கூரை மற்றும் முன்புற சுவர் இடிந்து விழுந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணி வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதில் பேரூராட்சி கவுன் சிலர் வீடு இடிந்து விழுந்தது.

    வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன் கோட்டை 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் நல்லம்மாள் (வயது 62). இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 5 மணிக்கு பக்கத்து வீட்டில் உள்ள மகனை பார்ப்பதற்காக எழுந்து சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக விடிய, விடிய பெய்த மழையால் மேற்கூரை மற்றும் முன்புற சுவர் இடிந்து விழுந்தது. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் வீட்டுக்குள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், வீட்டு உபயோக பொருட்கள் இடுபாடுகளுக்குள் சிக்கின.

    அதேபோல் நீரேத்தான் நவநீத பெருமாள் கோவில் கருவறை வரை 3 அடி உயரத்திற்கு மழைநீர் சூழ்ந்து தெப்பக்குளமாக காட்சியளித்தது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்து பின்னர் வடிந்தது.

    வாடிப்பட்டி பகுதியில் வயல்வெளிகள், தென்னந் தோப்புகளில் மழைநீர் தேங்கி வடிந்து செல்ல முடியாத அளவிற்கு குளம் போல் தேங்கி நிற்கிறது.

    கஜா புயல் எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் மழை பரவலாக பெய்தது. அப்போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    சேலம்:

    கஜா புயல் எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் நேற்று பரவலாக பெய்தது. இதில் தம்மம்பட்டி, வீரகனூர், ஆத்தூர் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்த மழையால் ஆத்தூர் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மக்காசோழப்பயிர்கள் தரையில் சாய்ந்தது. மாவட்டத்தில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டியை சேர்ந்த சின்னப்பையன். இவரது மனைவி சந்திரா (வயது 42). இவர்களது மகள் சத்யா (29)வுக்கு திருமணம் ஆகி விட்டது. மகன் பி.இ.படித்து வருகிறார்.

    சந்திரா நேற்றிரவு வீட்டருகே தென்னங்கீற்று முடையும் வேலையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த பகுதியில் பெய்த சாரல் மழையால் வீட்டின் சுவர் இடிந்து சந்திராவின் மீது விழுந்தது. இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த சேலம் ஆர்.டி.ஒ.(பொறுப்பு) ஜெகநாதன் மற்றும் வருவாய் துறையினர் அந்த பகுதியில் விசாரணை நடத்தினர்.

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டியில் 97 மி.மீ. மழை பெய்துள்ளது. வீரகனூர் 41, ஆத்தூர் 28, கெங்கவல்லி 27, ஆனைமடுவு 23, பெத்தநாயக்கன் பாளையம் 22, ஏற்காடு, கரிய கோவிலில் 20.2, சங்ககிரி 19, மேட்டூர் 14.6, காடையாம்பட்டி 12, ஓமலூர் 11, எடப்பாடி 8.6, சேலம் 6.9, வாழப்பாடி 2.5 மி.மீ. மழை என மாவட்டம் முழுவதும் 353 மி.மீ. மழை பெய்துள்ளது.
    திருவட்டார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவட்டார் அருகே மழையால் வீடு இடிந்து பெண் படுகாயம் அடைந்த சம்பவம் நடந்து உள்ளது.
    திருவட்டார்:

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நாகர்கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் இந்த மழை நீடிக்கிறது. குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளில் கனமழையாக பெய்து வருகிறது.

    திருவட்டார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவட்டார் அருகே மழையால் வீடு இடிந்து பெண் படுகாயம் அடைந்த சம்பவம் நடந்து உள்ளது. அந்த பெண்ணின் பெயர் அனிதா(வயது30). திருவட்டார் அருகே வேர் கிளம்பி கல்லங்குழி பகுதியைச் சேர்ந்தவர். அவரது கணவர் நெல்சன் ஆட்டோ டிரைவராக உள்ளார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று மாலை நெல்சன் ஆட்டோ ஓட்டுவதற்காக சென்று விட்டார். அவர்களது 2 குழந்தைகளும் பள்ளிக்கூடத்திற்குச் சென்று விட்டன. இதனால் வீட்டில் அனிதா மட்டும் தனியாக இருந்தார். இவர்களது வீட்டுக்கு பக்கத்தில் பழமையான ஓட்டு வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டின் உரிமையாளரான சிம்சன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் தற்போது அந்த வீடு பூட்டிக்கிடந்தது.

    தொடர் மழை காரணமாக சேதம் அடைந்து இருந்த அந்த வீடு திடீரென இடிந்து அனிதா வீட்டின் மேல் விழுந்தது. இதனால் அனிதாவின் வீட்டின் ஒரு பகுதியும் இடிந்தது. இந்த இடிபாடுகளுக்குள் அனிதா சிக்கிக்கொண்டார்.

    வீடு இடிந்த சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் உடனடியாக இடிபாடுகளை அகற்றி அனிதாவை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் இடிபாடுகள் அதிகமாக இருந்ததால் பொதுமக்களால் அனிதாவை மீட்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு அனிதாவை அவர்கள் மீட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயத்துடன் மயங்கி கிடந்த அனிதாவை உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    மேலும் வீடு இடிந்து பெண் படுகாயம் அடைந்தது பற்றி திருவட்டார் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. திருவட்டார் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×