என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குமரி மாவட்டத்தில் மழைக்கு 55 வீடுகள் இடிந்தன
    X

    குமரி மாவட்டத்தில் மழைக்கு 55 வீடுகள் இடிந்தன

    • பேச்சிப்பாறை அணையிலில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கோதையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
    • அருவியில் குளிப்பதற்கு இன்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியிடப்படுகிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்த நிலையில், நேற்று மாவட்டம் முழுவதும் மீண்டும் மழை கொட்டி தீர்த்தது. தக்கலை, குளச்சல், இரணியல், குருந்தன்கோடு, சுருளோடு பகுதியிலும் மழை பெய்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலமோரில் 35.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணையிலில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கோதையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்கு இன்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பேசிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.85 அடியாக இருந்தது. அணைக்கு 1,243 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 50 கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 2,049 கனஅடி தண்ணீர் உபரி நீராகும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.20 அடியாக உள்ளது. அணைக்கு 871 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,050 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழைக்கு நேற்று ஒரே நாளில் 8 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

    குமரி மாவட்டத்தில் மழைக்கு இந்த மாதத்தில் இதுவரை 55 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 9 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 18 வீடுகளும், கல்குளம் தாலுகாவிலும் 9 வீடுகளும், விளவங்கோடு தாலுக்காவில் 5 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் 11 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 3 வீடுகளும் இடிந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் 15 மின்கம்பங்களும் சேதமடைந்தன. அவை அனைத்தும் சரி செய்யப்பட்டுவிட்டது.

    Next Story
    ×