என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பராமரிப்பு பணிகளுக்காக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தம்
    X

    பராமரிப்பு பணிகளுக்காக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தம்

    • அணு உலைகளில் பராமரிப்பு பணி, எரிபொருள் நிரப்பும் பணி உள்ளிட்டவற்றின்போது மின் உற்பத்தி பணிகள் நிறுத்தப்படுவது வழக்கம்.
    • அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும்.

    நெல்லை:

    நாட்டின் அணுசக்தித் துறையில் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணி கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில், புதிதாக 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த அணு உலைகளில் பராமரிப்பு பணி, எரிபொருள் நிரப்பும் பணி உள்ளிட்டவற்றின்போது மின் உற்பத்தி பணிகள் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பராமரிப்பு மற்றும் அணு எரிபொருளை மறுநிரப்பும் பணிகளுக்காக அணு உலை 2-ன் முழு உற்பத்தித் திறனான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அணு உலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தேசிய தொகுப்பில் பகிரப்பட்டாலும், மின் பகிர்வு ஒப்பந்தத்தின்படி தமிழகத்திற்கு அதிகபட்சமாக 562 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மின் உற்பத்தி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

    நீண்ட காலத்திற்கு பிறகு அலகு 2-ல் மேற்கொள்ளப்படும் இந்த முழுமையான பராமரிப்பு பணிகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் பணி சுமார் 2 மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×