என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
    • இந்த வழக்கு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவு.

    வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருள் கடத்தியதாக, ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 9ம் தேதி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

    போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது, சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை, வழக்குப் பதிவு செய்தது.

    இதைதொடர்ந்து, தன் மீது தவறாகவும், உள்நோக்கத்துடனும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜாபர் சாதிக் தான் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன் வந்தது.

    அப்போது, சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை ரத்து செய்ய கோரிய ஜாபர் சாதிக்கின் மனு விசாரைணக்கு உகந்தது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதாடியுள்ளது.

    இந்நிலையில், மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த வாதங்களுக்காக விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்றால் மிகவும் மோசமாக இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.
    • சரியான நடவடிக்கைகளை 24 மணி நேரமும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

    ஜி.கே வாசன் வெளியிடுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    தமிழக அரசு ஆட்சி அதிகாரத்தை திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்துவதில் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் தி.மு.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்றால் மிகவும் மோசமாக இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.

    தமிழக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, பொது மக்களைப் பாதுகாக்க, அரசியல் கட்சியின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை என ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க தவறிவிட்டது.

    எனவே தமிழக அரசே, காவல் துறையே சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க தங்கள் துறையின் மூலம் முறையான, சரியான நடவடிக்கைகளை 24 மணி நேரமும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை தமிழக மக்கள் சார்பாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • பெண் வாகன ஓட்டுகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு காவிரி சாலை, கிருஷ்ணா தியேட்டர் அருகே நேற்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெண் வாகன ஓட்டிகள் லைசன்ஸ் பெற்று வாகனங்களை ஓட்டுகின்றனரா? என்பது குறித்தும், ஆர்.சி.புத்தகம், ஹெல்மெட் அணிதல், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக உள்ளனவா என்பது குறித்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    குறிப்பாக பெண் வாகன ஓட்டுகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 140-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்ட 70 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.80 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    மேலும் பெண் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிதல், டிரைவிங் லைசென்ஸ் பெறுதல், இன்சூரன்ஸ் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வரும் நாட்களில் இதுபோல ஆண், பெண் என பாரபட்சமின்றி வாகன சோதனை மேற்கொண்டு அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • இடிபாடுகளுக்குள் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
    • படுகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி.

    தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வந்த மகப்பேறு பிரிவில் ஒரு பகுதி விபத்துக்குள்ளானது.

    கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    படுகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • சென்னை ஐகோர்ட்டில் இன்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாக மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

    சென்னை:

    புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் அந்த சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. அப்போது இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சென்னை ஐகோர்ட்டில் இன்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வக்கீல்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் ஐகோர்ட்டு வளாகத்தில் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாக மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

    இந்தப் போராட்டத்தின் காரணமாக வக்கீல்கள் பலர் இன்று வழக்கு விசாரணைக்காக ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஏழில் வளவன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
    • பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்.

    முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மீண்டும் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபடுவதாக புகாரில் டெல்லி சிபிஐ காவல்துறை வழக்கை விசாரித்து வருகின்றது.

    முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஏழில் வளவன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    பின்னர் வழக்கில் முன்னாள் மற்றும் இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் வழக்கு விசாரணை சென்னையில் உள்ள பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

    • கைது செய்யப்பட்ட பாலு சமீபத்தில் தி.மு.க.விலிருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட பக்கநாடு கிராமம் குண்டு மலைக்கரடு பகுதியை சேர்ந்தவர் பாலு (வயது 36). லாரி டிரைவர்.

    இவர் சமீபகாலமாக தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை ஆடியோ பதிவாக சமூக வலைதளங்களில் பரப்பி வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த பூலாம்பட்டி போலீசார் இன்று அதிகாலை பாலுவை கைது செய்து அவரிடம் முதலமைச்சரை பற்றி அவதூறான கருத்துக்களை பரப்பியது தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட பாலு சமீபத்தில் தி.மு.க.விலிருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மேட்டுப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வினோத் (வயது30). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தனது குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். இதனால் வினோத் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார்.

    நேற்று இரவு தனது வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது உள்ளே புகுந்த ஒரு கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வினோத்தை சரமாரியாக வெட்டினர்.

    அடுப்பறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவரது தாய் தனது மகனின் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்ப்பதற்குள் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் இருந்த வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் எஸ்.பி.பிரதீப், புறநகர் டி.எஸ்.பி. உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தாலுகா இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் போலீசார் வினோத்தின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. கொலை செய்யப்பட்ட வினோத் கடந்த 8.5.2020ந் தேதி திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த சுள்ளான் ரமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் சிறையில் இருந்து ஜாமீனில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் வெளியே வந்தார். எனவே பழிக்கு பழியாக சுள்ளான் ரமேசின் ஆதரவாளர்கள் இந்த கொலையை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த கொலை தொடர்பாக சூர்யா (19) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். இதில் மற்ற 4 பேரும் 17 வயதுக்கு குறைவான சிறுவர்கள் ஆவர். வீடு புகுந்து பழிக்கு பழியாக வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்

    மேட்டுப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொறியியல் கல்லூரியில் 1988-1989இல் 354 ஆக இருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சேர்க்கை 1989-1990இல் 685 ஆக உயர்ந்தது.
    • வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் மேலும் குறைந்திருக்கிறது.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில்,

    திமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்திலும், விக்கிரவாண்டி தொகுதியிலும் செயல்படுத்தப்பட்ட முத்தான திட்டங்கள் என்ற பெயரில் ஒரு பட்டியலை திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், கலைஞர் வழங்கிய 20 விழுக்காடு இடஒதுக்கீட்டால் ஏற்பட்ட பயன் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களில், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்பதை திமுக தலைமை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. தங்களால் இழைக்கப்பட்ட சமூக அநீதியை ஒப்புக்கொண்டதன் மூலம் இதுவரை திமுக போட்டு வந்த சமூகநீதி வேடம் கலைந்திருக்கிறது.

    கலைஞர் வழங்கிய 20 விழுக்காடு இடஒதுக்கீட்டால் ஏற்பட்ட பயன் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களில்,''தமிழ்நாட்டில் உள்ள வன்னியர் உட்பட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், சீர்மரபினருக்கும் 1989இல் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் 1988-1989 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 68 என்பது இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டபின் 1989-1990இல் 187 ஆக உயர்ந்தது. இவர்களில் வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 26 என்பது 74 ஆக ஏறத்தாழ மூன்று மடங்கு உயர்ந்தது.

    இதேபோல், பொறியியல் கல்லூரியில் 1988-1989இல் 354 ஆக இருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சேர்க்கை 1989-1990இல் 685 ஆக உயர்ந்தது. இவர்களில் வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 109 என்பது 292 ஆக ஏறத்தாழ 3 மடங்கு உயர்ந்தது" என்று கூறப்பட்டிருகிறது.

    திமுக வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கல்வியில் வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதை அப்பட்டமாக உணர்த்துகின்றன. 20% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, அந்த இட ஒதுக்கீட்டில் 187 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். அப்படியானால், வன்னியர்களுக்கு 10.50% என்றால், குறைந்தது 98 மருத்துவ இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 74 இடங்கள் மட்டும் தான் கிடைத்துள்ளன. இது வெறும் 7.91% மட்டும் தான்.

    அதேபோல், பொறியியல் மாணவர் சேர்க்கையில், 20% இட ஒதுக்கீட்டின் கீழ் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 685 இடங்கள் கிடைத்தன் என்றால், வன்னியர்களுக்கு 10.50% என்றால் 360 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், பொறியியல் கல்லூரிகளில் வன்னியர் மாணவர்களுக்கு கிடைத்துள்ள இடங்களின் எண்ணிக்கை வெறும் 292 தான். இது 8.52% மட்டும் தான்.

    இதன் மூலம் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை என்பதையும், வன்னியர்களுக்கு 10.50% க்கும் கூடுதலான இட ஒதுக்கீடு கிடைப்பதாக சட்டப்பேரவையில் திமுக அமைச்சர்கள் கூறியது அப்பட்டமான பொய் என்பதையும் திமுக தலைமை ஒப்புக்கொண்டுள்ளது.

    திமுக வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் 1989-90 ஆம் ஆண்டுக்கானவை. அந்த ஆண்டிலேயே வன்னிய மாணவர்களுக்கு 8% என்ற அளவில் தான் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. அதற்கு அடுத்து வந்த ஆண்டுகளில், திமுக அரசு மேற்கொண்ட சமூக அநீதி நடவடிக்கைகள் காரணமாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பலர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற பெயரில் சாதி சான்றிதழைப் பெற்று 20% இட ஒதுக்கீட்டை சூறையாடினர். அதனால் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் மேலும் குறைந்திருக்கிறது.

    இப்படியாக வன்னிய மக்களுக்கு தொடர்ந்து சமூக அநீதி இழைத்து வரும் திமுகவுக்கு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வன்னிய மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

    • அரசின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் கூறப்பட்டுள்ளது.
    • மக்களை வேறு இடத்திற்கு மாற்றுவது மனித தன்மையோடு அணுகப்பட வேண்டிய விஷயம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மாஞ்சோலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த அமுதா, ஸ்டாலின் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மாஞ்சோலை மலைப்பகுதியில் உள்ள 8,374 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து 1928-ம் ஆண்டு தனியார் நிறுவனம் பெற்றது. மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் 700 குடும்பத்தினர் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தோம். 2028-ம் ஆண்டில் குத்தகை முடிகிறது.

    ஆனால் 4 ஆண்டுகள் முன்னதாகவே தனியார் நிறுவன குத்தகை ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதால் எங்களை அங்கிருந்து காலி செய்யுமாறு தெரிவித்தனர். பல தலைமுறைகளாக தேயிலை தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றிய எங்களை திடீரென காலி செய்யுறுமாறு கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எங்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தொகை வழங்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.

    பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நிலமும் இல்லை, சொந்த வீடும் இல்லை. மாஞ்சோலை எஸ்டேட் முகவரியில் மட்டுமே ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளதால், அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனால் 700 குடும்பங்களை சேர்ந்த 2,150 பேர் வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறோம்.

    எனவே எங்களுக்கு தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு வழங்கவும், கன்னியாகுமரி ரப்பர் தோட்ட கழகத்தில் வேலை வழங்கவும் வேண்டும். அதேபோல அங்கன்வாடி, பள்ளிகளில் சமையல் உதவியாளர், அலுவலக உதவியாளர் பணிகளை வழங்க வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த மனு மீதான விசாரணையானது உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    பல தலைமுறைகளாக மாஞ்சோலையில் வசித்து வந்த மக்களை வேறு இடத்திற்கு மாற்றுவது மனித தன்மையோடு அணுகப்பட வேண்டிய விஷயம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    இது தனியார் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள பிரச்சினை என அரசு தரப்பு கூறப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் அரசின் முடிவு குறித்து அறிந்தபின் நிரந்தர தீர்வு காணலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    அரசின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் கூறப்பட்டுள்ளது.

    மாஞ்சோலை விவகாரத்தில் தேயிலை தொழிலாளர்களை தோட்டத்திலிருந்து காலி செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது நீதிபதிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    • மீனாட்சி அம்மன் கோவில் ஆலய பிரவேசத்தை நடத்த பிள்ளையார் சுழி போட்டது வைத்தியநாத அய்யர்.
    • கோவில் அறங்காவலராக இருந்த எஸ்.ஆர்.நாயுடு மிக உறுதுணையாக இருந்தார்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பற்றி அறியாதவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு அன்னை மீனாட்சி அருள்பாலிக்கும் ஆன்மீக ஸ்தலமாகவும், தமிழர்களின் கலையை பறைசாற்றும் வானுயர்ந்த கோபுரங்களும், ஆச்சரியம் அளிக்கும் சிற்பங்களும் கொண்டதாக இக்கோவில் பெருமையுடன் விளங்கி வருகிறது.

    பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்குள் சென்று இறைவனையும், இறைவியையும் தரிசிக்க இன்று எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருக்கலாம்.

    ஆனால் சுதந்திரத்திற்கு முந்தைய காலங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய சில குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. சமூகத்திலும் பொருளாதாரத்திலும் தாழ்ந்த பல சமூகத்தினர் கோவிலுக்குள் சென்று சாமியை தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அந்த சமூகத்தினர் மீனாட்சி அம்மன் கோவில் கோபுர நுழைவாயில் முன்பு சூடம் ஏற்றி வெளியே நின்றுவாறு சாமி கும்பிட்டு செல்லும் நிலை இருந்தது. அனைவருக்கும் சமமான கடவுளை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் வழிபடுவதற்கு பல்வேறு காலகட்டங்களில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் 1938-ம் ஆண்டு வரை மீனாட்சி அம்மன் கோவிலில் மற்ற சமூகத்தினருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

    1939-ம் இந்திய சுதந்திர போராட்டம் தீவிரம் அடைந்திருந்த வேளையில் மதுரையிலும் அதன் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

    அனைத்து சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து சுதந்திரத்திற்காக வீதிக்கு வந்து போராடி வந்த அந்த வேளையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல மட்டும் பாகுபாடு காட்டுவது உறுத்தலாகவே இருந்தது.

    சுதந்திரம் அடைவதற்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவிலில் நிலவும் இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும் என சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தலைவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி மீனாட்சி அம்மன் கோவில் ஆலய பிரவேசத்தை நடத்த பிள்ளையார் சுழி போட்டது வைத்தியநாத அய்யர்.

    சுதந்திரப் போராட்ட தியாகி, வழக்கறிஞர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்ட இவர், மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நடைபெறும் சமூக தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார்.

    இதையடுத்து அவர் முத்துராமலிங்க தேவர், என்.எம்.ஆர்.சுப்புராமன் உள்ளிட்டவர்களை சந்தித்து ஆலய பிரவேசம் குறித்து எடுத்துக் கூறினார். இதற்கான ஆலோசனை கூட்டமும் நடந்தது. வைத்தியநாத அய்யர் நடத்தும் ஆலய பிரவேசத்திற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.

    கோவில் அறங்காவலராக இருந்த எஸ்.ஆர்.நாயுடு மிக உறுதுணையாக இருந்தார். கோவில் பட்டர்களின் எதிர்ப்புகளையும் மீறி ஆலய பிரதேசத்துக்கு ஆதரவு அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து 1939-ம் ஆண்டு ஜூலை 8-ந் தேதி இரவு 8 மணி அளவில் வைத்தியநாத அய்யர் தலைமையில் கக்கன், (முன்னாள் அமைச்சர்) முருகானந்தம், சின்னையா, பூவலிங்கம், சண்முகம் உள்ளிட்ட 6 பேர் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று கருவறையில் அம்மனை வழிபட்டனர். சாமி கும்பிட்டு வெளியே வந்த வைத்தியநாத அய்யர் பொதுமக்கள் மத்தியில் ஆலய பிரவேசம் நடைபெற்றதாக அறிவித்தார்.

    இந்த தகவல் மதுரை முழுக்க காட்டுத்தீ போல் பரவியது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து சமுதாய மக்களும் சென்று சாமி கும்பிட்டனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆலய பிரவேசம் நடந்து இன்றுடன் 85 ஆண்டு கள் நிறைவடைந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று எந்த பாகுபாடும் இன்றி அனைவரும் சாமி தரிசனம் செய்ய முடிகிறது. அதற்கு பலர் பல்வேறு எதிர்ப்புகளை மீறி போராட்டங்களை நடத்தி உரிமையை மீட்டெடுத்துள்ளனர். இதற்கு சாட்சியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரங்களும் பெருமையுடன் கம்பீரமாக வானுயர்ந்து நிற்கிறது என்றால் மிகையாகாது.

    • இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கருணாவூர் கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவனும், அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் (வயது 18) என்பவரும் உறவினர்கள்.

    இந்நிலையில் பச்சகுளம் கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவை காண்பதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்றிரவு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளானது பச்சகுளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பிரசாந்த் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி மாணவன் காயங்களுடன் சாலையில் கிடந்துள்ளார்.

    உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, தேவங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவில் திருவிழாவை காண்பதற்கு சென்றவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×