என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- டிரைவர் எதற்காக தாக்கப்பட்டார்? கையை கட்டி யார் தாக்கினார்கள்? என தெரியவில்லை.
மதுரை:
மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் உள்ள ஆம்னி பஸ் நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவரை ஜன்னலில் கையை கட்டி விட்டு அவரை மர்மநபர்கள் சரமாரியாக தாக்குகின்றனர்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரைவர் எதற்காக தாக்கப்பட்டார்? கையை கட்டி யார் தாக்கினார்கள்? என தெரியவில்லை.
இணையத்தில் பரவி வரும் வீடியோ தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்த வீடியோ தொடர்பாக மாட்டுத்தாவணி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
- பாட்டுப்பாடியும், கூச்சலிட்டும் ரகளையில் ஈடுபட்டனர்.
- வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவொற்றியூர்:
சென்னையில் ரூட்டு தல தகராறில் கல்லூரி மாணவர்களிடைய பஸ், ரெயில்களில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதேபோல் காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி, பள்ளி மாணவர்களும் ஆபத்தான நிலையில் பஸ்களில் தொங்கிய படி சாகச பயணம் செய்து வருகிறார்கள்.
இதனை கண்டிக்கும் டிரைவர், கண்டக்டரிடம் மோதலில் ஈடுபட்டு தாக்குல் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த நிலையில் வேப்பேரியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூர் நோக்கி சென்ற மாநகர பஸ்சில் (தடம் எண் 159ஏ) கும்பலாக ஏறினர். அவர்கள் பஸ்சுக்குள் செல்லாமல் படிக்கட்டிலும், ஜன்னல் கம்பியிலும் தொங்கியபடி பயணம் செய்தனர்.
சில மாணவர்கள் பசின் மேற்கூரையின் மீது ஏறி நின்று ஆட்டம் போட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். ஆனால் மாணவர்கள் பஸ்சில் இருந்து இறங்க மறுத்து தொடர்ந்து பாட்டுப்பாடியும், கூச்சலிட்டும் ரகளையில் ஈடுபட்டனர்.
டிரைவரும், கண்டக்டரும் மாணவர்களை எச்சரித்தும் கேட்டகாமல் தொடர்ந்து அட்டகாசம் செய்தனர். பஸ் நடுரோட்டில் நின்றதால் அப்பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பின்னர் மாணவர்கள் பஸ்சில் இருந்து இறங்கியதும் மீண்டும் பஸ் புறப்பட்டு சென்றது.
இந்த பஸ் புரசைவாக்கத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது பள்ளி மாணவர்கள் மேற்கூரை மீது ஏறி அட்டகாசம் செய்து உள்ளனர். இதனை அவ்வழியே சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது.
புரசைவாக்கம் பகுதியில் ஏராளமான தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள அனைத்து பஸ்நிலையங்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களிலும் பள்ளி மாணவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
எனவே இந்த இருவேளைகளிலும் பள்ளி அருகே உள்ள பஸ்நிறுத்தங்களில் போலீசார் கண்காணிபில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- நாளை தென்காசி, ஈரோடு ஆகிய தொகுதி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்படுகிறது.
- தேர்தல் வியூகங்களை இப்போதே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் வாரியாக கடந்த 10-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை முதல்கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இதுவரையில் 7 நாட்கள் நடந்த கலந்துரையாடலில் 23 தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
கூட்டணி குறித்து சரியான முடிவு எடுக்காதது தேர்தல் தோல்விக்கு காரணம் என்று பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க சரியான திட்டமிடல், தேர்தல் வியூகங்களை இப்போதே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இந்த நிலையில் 2-வது கட்ட கலந்துரையாடல் இன்று தொடங்கியது. மீத முள்ள 17 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளை இன்று முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
காலையில் தேனி பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டறிந்தார். சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், இந்நாள், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கும் தேனி தொகுதி தோல்விக்கு என்ன காரணம் என்பது பற்றி விவாதித்தார்.
முன்னதாக ஆலோசனை நடத்துவதற்காக தலைமை கழகத்திற்கு காலை 10.15 மணிக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். அவரை தொண்டர்கள் வரவேற்று உள்ளே அழைத்து சென்ற னர். மாலை 4 மணிக்கு ஆரணி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
நாளை தென்காசி, ஈரோடு ஆகிய தொகுதி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்படுகிறது.
- பட்டிதொட்டியெங்கும் சென்று அயராது உழைக்க வேண்டும்.
- 2026 சட்டசபை தேர்தல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புது வியூகம்.
சென்னை:
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் அமோகமாக வெற்றி பெற்றுள்ளதால் இதே வெற்றியை 2026 சட்டசபை பொதுத்தேர்தலிலும் பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார்.

இதற்காக தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் தி.மு.க.வில் அடுத்து என்னென்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து கட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்ய உள்ளனர்.
இதைத்தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டிருந்த பொறுப்பாளர்களை அழைத்து அவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு விருந்தளித்தார்.

தனது குறிஞ்சி இல்லத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் அவருடன் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, ஆஸ்டின், தாயகம் கவி ஆகியோரும் அமர்ந்து சாப்பிட்டனர்.
பின்னர் அவர்கள் குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, `தொகுதி பொறுப்பாளர்களின் பணிகளை வெகுவாக பாராட்டினார். இந்த பணி 2026 சட்டசபை தேர்தலுக்கும் தொடர வேண்டும். கிராமம் கிராம மாக சென்று தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை மக்கள் மத்தியில் பேச வைக்க வேண்டும் என்று கூறினார்.
இதுதவிர பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். கூட்டம் நடந்தது பற்றி உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
கழகத்தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள, 2026 சட்ட மன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், சட்டமன்றத் தொகுதி வாரியாக செயல்பட்டு வரும் தொகுதி பார்வையாளர்களை குறிஞ்சி இல்லத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினோம்.
பாராளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெற சிறப்புற பணியாற்றிய தொகுதி பார்வையாளர்களுக்கு அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம்.
மேலும், நம் திராவிட மாடல் அரசின் திட்டங்களையும்-சாதனைகளையும் பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று, 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்துக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத் தருகிற வகையில் அயராது உழைப்போம் என்று உரையாற்றினோம்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
- பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது.
- பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. சித்தர்களின் பூமி சிவகிரி என அழைக்கப்படும் சதுரகிரிக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
சதுரகிரி கோவிலில் வருடந்தோறும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 4-ந்தேதி ஆடி அமாவாசை ஆகும். இதனை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
வழக்கமாக 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக இந்த முறை 5 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைமேல் உள்ள கோவில் மற்றும் அடிவார பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் தாணிப்பாறைக்கு மதுரை, விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இதற்காக தாணிப்பாறையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மலைஏறும் பக்தர்கள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்து செல்ல கூடாது. 10 வயதிற்கு மேற்பட்டவர்கள், 60 வயதிற்குட்பட்டவர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது. ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்ப்பதால் அதற்கேற்ப போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- அனுமதியின்றி சவுடு மண் எடுத்து கொண்டிருந்த நபர்களை சுற்றி வளைத்தனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவில் அருகே நத்தம் பகுதியில் அனுமதியின்றி சவுடு மண் எடுப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா மற்றும் போலீசார் நத்தம் பகுதிக்கு நள்ளிரவில் ஆய்வுக்கு சென்றனர்.
அப்போது அங்கு அனுமதியின்றி சவுடு மண் எடுத்து கொண்டிருந்த நபர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்ததில், அந்த இடம் நத்தம் பகுதியை சேர்ந்த ஊராட்சி தலைவரின் கணவர் செந்தில்குமார் என்பவருக்குரியது என்பதும், அதில் செந்தில்குமார் அரசு அனுமதி இன்றி மண் எடுத்துள்ளதும் தெரிய வந்தது.

இதனை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவின்படி, செந்தில் குமார் மற்றும் ஆலவெளி பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் கார்த்திக், கதிராமங்கலம் பகுதியை சேர்ந்த நாகராஜன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 3 டிராக்டர்கள், ஒரு ஹிட்டாச்சி எந்திரம் 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
- பிற மாநிலங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என்ற தோற்றத்தை ஏற்படுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்.
- 6 ஆண்டுகளும் காங்கிரஸ் திமுக கூட்டணியிலான மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று கூறுவாரா?
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்றைய தினம் தாக்கல் செய்துள்ளது. ஏழை எளிய மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும்படி, வெகு சிறப்பானதாக அமைந்துள்ள இந்த நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெறவில்லை என்று காரணம் கூறி, அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருப்பது நகைப்புக்குரியது.
நிதிநிலை அறிக்கை உரையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களுக்கான நலத்திட்டங்களைத் தவிர, பிற மாநிலங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என்ற தோற்றத்தை ஏற்படுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்.
திமுக, மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 2004 முதல் 2014 வரை பத்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது, தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில், 6 ஆண்டுகள், தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை. அந்த 6 ஆண்டுகளும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலான மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று கூறுவாரா?
பிரதமர் மோடி அரசு, கடந்த 2014 முதல் 2024ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகளில், நிதிநிலை அறிக்கையின் மூலமாகத் தமிழகத்திற்கு வழங்கிய நலத்திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட, திமுக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி, ஆட்சியிலிருந்தபோது அறிவிக்கப்படவில்லை என்பது, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியுமா?
மாநிலங்களின் நலனுக்காக, மத்திய அரசுடன் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு, தமிழகத்தின் தேவைகளை எடுத்துக் கூறி, நலத்திட்டங்களைப் பெறுவதை விட்டுவிட்டு, கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று நாடகமாடி, யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் முதலமைச்சர்?
தொகுதியின் தேவைகள் குறித்து பாராளுமன்றத்தில் பேசத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்த 5 ஆண்டுகளில், பாராளுமன்றத்தில் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகளைக் குறித்துப் பேசவே இல்லை என்பதுதான் உண்மை. தற்போது முதலமைச்சர்கள் கூட்டத்தையும் புறக்கணிக்க முடிவு செய்தால், பாதிக்கப்படுவது தமிழக மக்களே.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு நாள் விளம்பரத்துக்காக இது போன்ற வீண் நாடகங்களை அரங்கேற்றுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
- மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
சித்தோடு:
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கந்தம்பாளையம் பகுதியில் அரசு ஊராட்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை குறைந்து வந்தது. இதை தொடர்ந்து மாணவர் சேர்க்கை அதிகரிக்க அரசு பள்ளி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இதைத் தொடர்ந்து இந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் கந்தம் பாளையம் பகுதியை சேர்ந்த அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்களின் உதவியுடன் ஸ்மார்ட் கிளாஸ் மூலமாக ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதற்கு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
இதையடுத்து 30 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்த தொடக்கப்பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் 65 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தினமும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்களுடைய பணிநேரம் போக மீதம் உள்ள நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் ஆன்லைன் மூலம் ஆங்கிலத்தை கற்றுக் கொடுத்து வருகின்றனர்.
ஆன்லைன் மூலமாக வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களுடன் தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் ஆங்கிலத்தில் வகுப்புகளை கற்பதுடன் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்கள்.
இந்த அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளை விட ஒரு படி உயர்ந்து தனியார் பள்ளி மாணவர்களை விட கூடுதலாக ஆங்கிலத்தில் தங்களது பேச்சு, எழுத்து திறன்களை மேம்படுத்தி உள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பள்ளியில் உள்ள மாணவர்களின் ஒழுக்கத்திறனை மேம்படுத்தும் விதமாகவும் பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது எனவும், மாணவர்களின் வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும் அதனை கண்ட இடங்களில் தூக்கி வீசாமல் அதனை சேமித்து வைத்து பள்ளியில் ஒப்படைத்து வருகிறார்கள்.
அந்த பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சிக்காக விற்பனை செய்து அதில் வரும் நிதியை கொண்டு பள்ளிக்கு பின்பு சிறிய அளவிலான தோட்டம் அமைத்து அதில் செடிகளை வைத்து மாணவர்களே பராமரித்து வருவதாகவும் அவற்றில் இருந்து வரும் காய்கறிகளை பள்ளி சத்து ணவு திட்டத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் பள்ளி தலைமை ஆசிரியர் பெருமையுடன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் மூலமாக உதவி கரம் பெற்று ஏழை, எளிய மாணவர்களின் கல்வித்தரத்தை ஆங்கில வழியில் உயர்த்துவதுடன் மாணவர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்திடவும் அவர்கள் வரும் காலங்களில் மேல் படிப்பிற்கு உதவுவ தாகவும் பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
- பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திருமாவளவன் திட்டமிட்டு உள்ளார்.
- ஒரு மாவட்ட செயலாளர் வீதம் 234 பேரை நியமித்து கட்சியை பலப்படுத்த வியூகம் அமைத்துள்ளார்.
சென்னை:
விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் காணொலி மூலமாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதியிலும் விடுதலை சிறுத்தை வெற்றி பெற்று அரசியல் அங்கீகாரம் பெற்றுள்ளது.
25 ஆண்டுகளாக அரசியல் அங்கீகாரம் இல்லாமல் இருந்து வந்த விடுதலை சிறுத்தை கட்சி இதை ஒரு மாபெரும் திருப்புமுனையாக கருதுகிறது.
அதனைத் தொடர்ந்து கட்சியை பலப்படுத்த மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திருமாவளவன் திட்டமிட்டு உள்ளார்.
ஆகஸ்ட் 17-ந்தேதி திருமாவளவனின் 62-வது பிறந்தநாள் கொண்டாடுவது குறித்து இதன் மூலம் ஆலோசிக்கப்பட்டது. எப்போதும் போல் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி எழுச்சியுடன் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
செப்டம்பர் 17-ந்தேதி மது போதை ஒழிப்பு மாநாடு ஒன்றை கள்ளக்குறிச்சியில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து கூலி தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இனி இது போன்ற சம்பவம் நடக்க கூடாது என்பதற்காக இந்த மாநாட்டை நடத்த விடுதலை சிறுத்தை தீர்மானித்துள்ளது.
இந்த மாநாடு பெண்கள் மட்டுமே பங்கேற்க கூடிய மாநாடாக ஒருங்கிணைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சம் பெண்களை திரட்டி இந்த மாநாட்டில் பங்கு பெற வைக்க விடுதலை சிறுத்தை இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதே போல கட்சியை மறுசீரமைப்பு செய்யவும் திருமாவளவன் முடிவு செய்துள்ளார். 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க ஏதுவாக கட்சியின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தீவிரமாக உள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விடுதலை சிறுத்தைக்கு பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் தேர்தலை சந்திக்க திருமாவளவன் முடிவு செய்துள்ளார்.
எல்லா மாவட்டங்களிலும் விடுதலை சிறுத்தைக்கு பூத் கமிட்டி அமைக்க தொண்டர்கள் இருக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு இப்போதே அதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
அதற்காக சட்டசபை தொகுதி வாரியாக மாவட்ட செயலாளர்களை நியமிக்கவும் திருமாவளவன் முடிவு செய்துள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு வரை விடுதலை சிறுத்தை கட்சியில் 44 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே செயல்பட்டனர்.
இந்த ஆண்டு அதனை 90 ஆக மாற்றி பிற அரசியல் கட்சிகளுக்கு இணையாக மாவட்ட செயலாளர்களை நியமித்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார்.
வருகின்ற சட்டசபை தேர்தலை வலுவாக சந்திக்கும் வகையில் 234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளரை நியமிக்க அவர் முடிவு செய்துள்ளார். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மாவட்ட செயலாளர் வீதம் 234 பேரை நியமித்து கட்சியை பலப்படுத்த வியூகம் அமைத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற விகிதத்தில் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் திருமாவளவன் சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமித்து அதன் மூலம் தமிழகத்தில் உள்ள எல்லா பகுதிகளிலும் விடுதலை சிறுத்தையை காலூன்ற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டத்தை முன்னெடுக்கிறார்.
இதற்கான பணியினை செப்டம்பர் மாத மது ஒழிப்பு மாநாடு முடிந்தவுடன் தொடங்கவும் டிசம்பர் இறுதி வரை மேற்கொள்ளவும் அவர் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஜனவரி மாதம் முதல் "அதிகாரத்தை நோக்கி மக்களோடு திருமா" என்ற சுலோகத்தை மையமாக வைத்து கட்சிப் பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது. ஜனவரியில் இருந்து திருமாவளவன் ஒவ்வொரு மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கவும் முடிவு செய்துள்ளார்.
வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கட்சியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்கவும் போட்டியிடவும் அவர் இப்போதே அடித்தளம் அமைக்கிறார்.
கடந்த தேர்தலை விட இந்த முறை கூடுதல் இடங்களை பெற்று அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவதன் மூலம் விடுதலை சிறுத்தை கட்சி தலித் அல்லாதவர்களுக்கும் பொதுவான ஒரு கட்சி என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் புதிய மாற்றத்தை கொண்டு வரவும் திருமாவளவன் திட்டமிட்டுள்ளார்.
இந்த லிங்கை கிளிக் செய்யவும்- எஸ்சி, எஸ்டி இனத்தவருக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க ஆட்சியில் இருந்த அரசுகள் தவறிவிட்டன- திருமாவளவன்
- கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 123.25 அடியாக இருந்தது.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.
சேலம்:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த 2 அணைகளும் நிரம்பியதை அடுத்து உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 70ஆயிரம் கனஅடிக்கு மேல் திறக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் வயநாடு பகுதிகளில் மழை குறைந்ததை அடுத்து கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியது.
கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 123.25 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 33ஆயிரத்து 241 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 11ஆயிரத்து 852 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் கபினி அணை நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு 18ஆயிரத்து 147 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 25ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
2 அணைகளில் இருந்தும் நேற்று 50ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 43ஆயிரத்து 147 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. கடந்த 1 வார காலமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.
இதன் காரணமாக வெளியே தெரிந்த நந்தி, கிறிஸ்துவ சிலைகள் தண்ணீரில் மூழ்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 86.85 அடியை எட்டி இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 69ஆயிரத்து 117 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 60ஆயிரத்து 771 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 49.12 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
அணைக்கு இதே அளவில் நீர்வரத்து இருந்தால் விரைவில் 100 அடியை தொட்டுவிடும். தற்போது அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
- கடந்த 10 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 15 அடி வரை உயர்ந்துள்ளது.
- முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இதேபோல் பில்லூர் அணையும் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 538 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 85.10 அடியாக அதிகரித்து உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 15 அடி வரை உயர்ந்துள்ளது.
குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 600 கனஅடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி என மொத்தம் 1,205 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.80 அடியாக உள்ளது. இதே போல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25 அடியாக உயர்ந்து உள்ளது.
ஈரோடு மாவட்ட முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- 24 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- செந்தில், ஏழுமலை, ரவி ஆகியோரின் நீதிமன்ற காவல் முடிவடைய இருந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 19-ந்தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் 161 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் மட்டும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிந்து இதுவரை 24 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கைதான சென்னையைசேர்ந்த கவுதம் சந்த், பன்ஷிலால், சிவக்குமார், கருணாபுரத்தைசேர்ந்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், இவருடைய மனைவி விஜயா, சின்னத்துரை, ஜோசப், கதிரவன், கண்ணன், மாதேஷ், சக்திவேல், சடையன், செந்தில், ஏழுமலை, ரவி ஆகியோரின் நீதிமன்ற காவல், நேற்றுடன் முடிவடைய இருந்தது.
இதையடுத்து இவர்கள் 15 பேரையும் காணொலி காட்சி மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கவுதம்சந்த் உள்பட 15 பேருக்கும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் எதிரொலி: 78 போலீசார் பணியிட மாற்றம் - இந்த லிங்கை கிளிக் செய்யவும்






