என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
    • செப்டம்பர் 3-ந் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.

    சென்னை:

    தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவா் சோ்க்கையில் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், சிறந்த விளையாட்டு வீரா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 22 முதல் 27-ந் தேதி வரை நடைபெற்றது. 22, 23 ஆகிய நாட்களில் சிறப்பு பிரிவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

    இதற்கு மொத்தம் 710 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த கலந்தாய்வு மூலம் 92 இடங்கள் நிரம்பின. கல்லூரியை தோ்வுசெய்து உறுதிப்படுத்திய மாணவா்களுக்கு 23-ந் தேதி இரவு இணைய வழியில் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

    இதைத்தொடா்ந்து, சிறப்பு பிரிவினருக்கான பொது கலந்தாய்வு 25-ந் தேதி தொடங்கி சனிக்கிழமை முடிவடைந்தது. மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணை இன்று (ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. இதைத்தொடா்ந்து வருகிற செப்டம்பர் 3-ந் தேதி வரை நடைபெறும் இக்கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

    இதேபோன்று தொழிற் கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. தொடா்ந்து வருகிற 10-ந் தேதி வரை நடைபெறும் இந்த கலந்தாய்வு ஒரே சுற்றாக நடத்தப்படுகிறது. கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை செயலா் டி.புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

    • மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
    • தமிழ்நாடு-புதுவை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்து பேசினர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசனை சென்னையில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் சந்தித்து பேசினர்.

    மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

    அப்போது மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, பொதுச்செயலாளர் அருணாசலம், புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் சந்திர மோகன் மற்றும் தமிழ்நாடு-புதுவை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    இதேபோல் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனையும் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினர்.

    • தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை.
    • திமுக மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கடலூரில் அதிமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    * தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை.

    * தமிழகம் கொலை மாநிலமாக மாறி உள்ளது கவலை அளிக்கிறது.

    * தருமபுரி தொப்பி வாப்பா பிரியாணி கடைக்குள்ளேயே புகுந்து இளைஞரை கொலை செய்துள்ளனர்.

    * மனிதர்களை கசாப்பு கடையில் ஆடுகளை வெட்டுவது போல் வெட்டுவது அதிகரித்துள்ளது.

    * காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவை தடுக்க வேண்டும்.

    * தமிழகத்தில் போதையால் கொலைகள் அதிகரித்து வருகின்றன.

    * அரசியல் பிரமுகர்கள், பெண்கள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை.

    * தமிழக மக்களின் கோபத்தை மறைக்கவே மத்திய அரசுக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தியது.

    * திமுக மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

    • பருவமழை தொடங்க இன்னும் 3 மாதங்களே உள்ளன.
    • மழைநீர் வடிகால்வாய்கள் துண்டிக்கப்பட்டு அடைப்புகள் ஏற்பட்டுள்ளன.

    சென்னை:

    மழைக்கால முன்னேற்பாடுகளை ஆண்டு தோறும் அரசு முன்னெடுத்து வருகிறது. இருந்தாலும் பருவ மழை காலம் சென்னை வாசிகளுக்கு போதாத காலமாகவே மாறி விடுகிறது.

    எப்படியாவது சென்னையை மிதக்க வைத்து மக்களை தவிக்க வைத்து விடுகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையில் பல இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் முதல் தளம் வரை தண்ணீரில் மூழ்கி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    இந்த ஆண்டு பருவமழை தொடங்க இன்னும் 3 மாதங்களே உள்ளன. பருவ மழையை எதிர்கொள்ள சென்னை தயாராக இருக்கிறதா? எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் வடிந்தோட வாய்ப்புகள் இருக்கிறதா? என்ற சந்தேகம் எல்லோரிடமும் ஏற்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில், மின் வாரியம், குடிநீர் வாரியம் என்று பல துறைகள் மேற்கொண்டு வரும் பணிகளால் இருக்கின்ற கால்வாய்களே அடைபட்டு கிடக்கின்றன. எனவே மழை வந்தால் தண்ணீர் எங்கே போகும் என்ற கேள்விதான் இப்போது சென்னை வாசிகளை பயத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த ஆண்டு பருவமழையை சந்திப்பது சவாலாக கூட இருக்கலாம் என்கிறார்கள்.

    சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 7 மண்டலங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகின்றன.

    மாதவரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், கோடம் பாக்கம், வளசரவாக்கம், சோழிங்க நல்லூர், தேனாம்பேட்டை ஆகிய 7 மண்டலங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் வடிகால்வாய்கள் துண்டிக்கப்பட்டும், அடைப்புகள் ஏற்பட்டும் உள்ளன.

    ஓட்டேரியில் நல்லா கால்வாயில் 250 மீட்டர் தூரத்துக்கு ஓடை துண்டிக்கப்பட்டுள்ளது. ரேடியல் ரோடும், ஓ.எம்.ஆர். ரோடும் இணையும் இடத்தில் மத்திய கைலாசில் இருந்து செல்லும் பாதையில் சுமார் 100 அடி தூரத்துக்கு மழைநீர் வடிகால்வாய் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இது தவிர ரூ.5,800 கோடி செலவில் நடைபெறும் மேம்பால சாலை பணிகள் துறைமுகத்தில் இருந்து மதுர வாயல் வரை நடக்கிறது. சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த மேம்பால சாலை பணிக்காக கூவம் ஆற்றில் 605 ராட்சத தூண்கள் கட்டப்படுகிறது.

    மழை நீர் ஆற்றுக்குள் செல்லும் பகுதிகள் பல இடங்களில் மண் கொட்டப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் கூவம் ஆறு பல இடங்களில் இவ்வாறு மண் கொட்டப்பட்டு இருப்பதால் சுருங்கி கிடக்கிறது.

    இது தவிர மின் வாரியம் சார்பில் புதைவட கம்பிகள் அமைக்கும் பணிகள், குடிநீரர் வாரிய பணிகள் பல இடங்களில் நடந்து வருகிறது. இதனால் நீர்வழித்தடங்கள் அடைபட்டு கிடக்கின்றன.

    மாதவரம் பால் பண்ணை சாலை, ஜவகர்லால் நேரு ரோடு, புரசைவாக்கம் நெடுஞ் சாலை, பர்ணபி சாலை, துரைப்பாக்கம் ரேடியல் சாலை உள்ளிட்ட சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுக்கலாம்.

    இந்த பழுதுகளை மாநக ராட்சி கண்டறிந்துள்ளது. அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து பருவ மழைக்கு முன்பு இந்த பகுதிகளில் தடையின்றி மழைநீர் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லா விட்டால் ஆபத்தை தவிர்க்க முடியாது.

    • ரேசன் அரிசி கடத்தல் சம்மந்தமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    • வாகனத்தில் 1000 கிலோ ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி சென்றது தெரிய வந்தது.

    தருமபுரி:

    உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார், உத்தரவின் பேரில் கோவை மண்டலம் போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், அறிவுறுத்தலின் பேரில் தருமபுரி மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் சம்மந்தமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பஞ்சபள்ளி அருகே நல்லம்பட்டி கொல்லபுரி மாரியம்மன் கோவில் எதிரில் கிருஷ்ணகிரி அலகு சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கு உட்பட்ட கர்நாடகா பதிவெண் கொண்ட ஆம்னி வேன் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் 1000 கிலோ ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி சென்றது தெரிய வந்தது.

    அவரிடம் விசாரணை செய்தபோது கர்நாடகா மாநிலம், ராம் நகர் மாவட்டம் கொல்லி கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சோமசேகரன் மகன் பிரமோத் (22) என தெரிய வந்தது. மேலும் கடத்தி வரப்பட்ட ரேசன் அரிசியை கர்நாடகா மாநிலம் ராம்நகரில் உள்ள டிபன் கடைகளுக்கு அதிக லாபத்திற்காக விற்பனை செய்ய கடத்தியதும் தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவுசெய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் வருகை இன்று திடீர் என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்த நிலையில் வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும் பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியி லும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். கருமேகம் திரண்டு மழை தூறி கொண்டிருந்ததால் இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சூரியன் உதயமான காட்சியை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். ஆனால் இன்று காலை மழை செய்து கொண்டிருந்ததால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை.

    காலை 8.30 மணிக்கு மழை நின்றதை தொடர்ந்து ½ மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதைத்தொடர்ந்து படகு துறையில் சுற்றுலா பயணிகள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள பாரத மாதா கோவில் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் வருகை இன்று திடீர் என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • காலி பணியிடங்களை நேரடித் தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்.
    • மே 1-ந் தேதியை கருப்பு நாளாக அறிவிக்கலாம்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பில், 700 ஓட்டுனர்களையும், 500 நடத்துனர்களையும் குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக தனியார் மனிதவள நிறுவனங்களிடம் இருந்து விலைப்புள்ளிகளும், தொழில்நுட்பப் புள்ளிகளும் கோரப்பட்டுள்ளன.

    அதாவது, மாநகரப் பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான ஓட்டுனர்கள், நடத்துனர்களை மாநகரப் போக்குவரத்துக் கழகமே தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, மனிதவள நிறுவனம் தேர்ந்தெடுத்து அனுப்பும் ஓட்டுனர்களையும், நடத்துனர்களையும் பயன்படுத்திக் கொள்ளும்.

    அவர்களுக்கான ஊதியத்தை நிரந்தர பணியாளர்களுக்கு இப்போது எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறதோ, அதைவிட குறைவான அளவில் கணக்கிட்டு, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் வழங்கும்.

    மாநகரப் போக்குவரத்துக் கழகம் வழங்கும் தொகையை பெற்றுக் கொள்ளும் நிறுவனம், அதில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு மிகக் குறைந்த தொகையை ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு வழங்கும். இது வழக்கமாக வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் பாதிக்கும் குறைவாகவே இருக்கும். ஊதியம் தவிர, ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட எந்த உரிமையும் வழங்கப்படாது.

    தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துனர்கள் நியமிக்கப்பட்டால், இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது. அவர்களால் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு வழங்குவதில் சிக்கல்கள் எழும். இந்த முறையை கைவிட்டு, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் ஓட்டுநர், நடத்துனர் காலிப் பணியிடங்களை, நேரடித் தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்'' என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    தொழிலாளர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதற்கு பதிலாக சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ந் தேதியையும், தொழிலாளர்கள் நாளான மே ஒன்றாம் தேதியையும் கருப்பு நாளாக அறிவித்து விடலாம். தொழிலாளர்களின் உரிமைகளையும், சமூகநீதியையும் படுகொலை செய்து வரும் தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ராஜ்குமாருக்கும், ஜாக்சனுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.
    • முன்விரோதத்தில் தான் தற்போது ஜாக்சன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    திருவட்டார்:

    குமரி மாவட்டம் திருவட்டார் மூவாற்றுமுகம் குன்னத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜாக்சன் (வயது 38). திருவட்டார் நகர இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவரான இவர் தற்போது சொந்தமாக டெம்போ வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி உஷாகுமாரி. இவர் திருவட்டார் பேரூராட்சியின் 10-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார்.

    நேற்று இரவு ஜாக்சன், அந்தப் பகுதியில் உள்ள ஆர்.சி. சர்ச் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அதில் 6 பேர் இருந்தனர். அவர்கள் ஜாக்சன் அருகே வந்து பேசினர். இந்த பேச்சு திடீரென வாக்குவாதமாக மாறியது.

    அப்போது 6 பேர் கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியை எடுத்து ஜாக்சனை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனை கண்ட கொலைக்கும்பல் மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.

    அவர்களை பிடிக்க அந்தப் பகுதியினர் முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜாக்சனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை ஜாக்சன் பரிதாபமாக இறந்தார்.

    பெண் கவுன்சிலரின் கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவட்டார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், தக்கலை துணை சூப்பிரண்டு உதய சூரியன் வந்து விசாரணை நடத்தினர். இதில் சிதறால் அருகே உள்ள புன்ன மூட்டுவிளை வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (32) என்பவர் தலைமையில் வந்தவர்கள் தான் ஜாக்சனை வெட்டிக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    ராஜ்குமாருக்கும், ஜாக்சனுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவரும் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முன்விரோதத்தில் தான் தற்போது ஜாக்சன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இது தொடர்பாக திருவட்டார் போலீசில் உஷா குமாரி புகார் செய்தார். அதில், நேற்று இரவு எனது கணவர் ஜாக்சன், குழந்தைகளுக்கு பழம் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது வழியில் பாரதபள்ளியில் உள்ள அந்தோணியார் ஆலய குருசடியில் ஜெபம் செய்தார். அங்கிருந்து வெளியே வரும் போது முன்விரோதம் காரணமாக ராஜகுமார் என்ற விலாங்கன் மற்றும் கண்டால் தெரியும் 5 பேர் சேர்ந்து தகராறு செய்து தாக்குதல் நடத்தினர் என குறிப்பிட்டு உள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • மலைப்பகுதியில் காலையில் இருந்து மழை பெய்து வருகிறது.
    • மணி முத்தாறு அருவிகளில் கூட்டம் கூட்டமாக சென்று உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

    நெல்லை:

    கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், அண்டை பகுதியான தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பருவமழை ஓரளவுக்கு பெய்துள்ளது. இதனால் அணைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட மிக மிக குறைவாகவே பெய்திருந்தாலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கார் பருவ சாகுபடி விவசாயிகளுக்கு கை கொடுத்துள்ளது.

    அணைகளில் கடந்த ஆண்டை காட்டிலும் கணிசமான அளவு நீர் இருப்பு இருப்பதால் பாசனத்திற்காக அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பாபநாசத்தை ஒட்டி தாமிரபரணி ஆறு தொடங்கும் இடங்களில் நெல் நடவு பணிகள் முடிந்து விட்டது. அதனை தொடர்ந்து படிப்படியாக அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச் செவல், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு பணி முடிந்துவிட்டது.

    தற்போது நெல்லை கால்வாய் மூலமாக பயன் பெறும் கண்டியப்பேரி உள்ளிட்ட மாநகரின் பல இடங்களில் நெல் நடவு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    மேலும் மாநகரை கடந்து பாளையங்கால்வாய் மூலமாக பாசனம் பெறும் இடங்களில் தற்போது நெல் நடவு செய்யப்பட்டு வருகிறது.

    நேற்று சேர்வலாறு அணை பகுதியில் அதிக பட்சமாக 6 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. பாபநாசத்தில் 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அந்த அணையின் நீர்மட்டம் 115.45 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம்120.77 அடியாகவும் இருக்கிறது.

    அணைகளுக்கு வினாடிக்கு 415 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு 1,104 கனஅடி வெளியேற்றப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மலைப்பகுதியில் காலையில் இருந்து மழை பெய்து வருகிறது.

    இதனிடையே விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் களக்காடு தலையணை, பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணி முத்தாறு அருவிகளில் கூட்டம் கூட்டமாக சென்று உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று ராமநதி அணை பகுதியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடனா அணையில் 1 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்று காலையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில், விடுமுறையையொட்டி அங்கும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

    குற்றாலத்தில் பழைய குற்றாலம், மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    இந்த அருவிகளில் இருந்து வரும் நீரின் காரணமாக மாவட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டம் மானூர் பெரிய குளத்திற்கும் குற்றாலம் தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கற்றல் திறனை, செயல் திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
    • படிப்பதை தாண்டி செய்முறைகளை செய்வது அவசியம்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஸ்டெம்செல் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மைய திறப்பு விழா நடந்தது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று மையத்தை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில் மாணவர்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்துக்கு என்ன செய்ய போகிறோம் என்று நினைப்பவர்களாக உருவாக வேண்டும். கற்றல் திறனை, செயல் திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும். கற்றல் திறன் அதிகரித்தால் தேர்வு எழுதும்போது உதவியாக இருக்கும் என்றார்.

    தொடர்ந்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய அளவில் 5 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் முன்னிலையில் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் முதன்முறையாக ஆகஸ்டு 24-ந் தேதி திரவ, திட எரிபொருள் இருண்டும் கலந்து செய்யப்பட்ட ராக்கெட் சிறிய செயற்கைக் கோள்களுடன் விண்ணுக்கு அனுப்பும் முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் கிணத்துக்கடவு பள்ளியில் இருந்து 50 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    மாணவர்கள் பாடங்களை படிப்பதை தாண்டி செய்முறைகளை செய்வது அவசியம். மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு உலக அளவில் போட்டி உள்ளது. பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்ள வேண்டும். உலகளாவிய போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க அரசு உதவ முன் வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்திகுமார்பாடி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • சிறிதளவு நிலம் இருந்ததால் விவசாயம் செய்யலாம்.
    • நீரில் நெல் விவசாயம் செய்ய போகிறேன்.

    இயற்கை விவசாய முறையில் நெல் சாகுபடியில் போதிய வருவாய் இல்லை என்ற பொதுவான கருத்தை உடைக்கும் விதமாகவும், நெல் விவசாயத்தை வெற்றிகரமாக செய்ய முடியும் என்பதை உணர்த்தும் விதமாகவும் ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் "பாரத பாரம்பரிய நெல் -உணவு திருவிழாவை வேலூரில் வரும் ஜூலை 28 ஆம் தேதி நடத்துகிறது. இதில் ஏராளமான முன்னோடி நெல் விவசாயிகள், வேளாண் வல்லுநர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அதையொட்டி 'மீன் குட்டையில் நெல் சாகுபடி' எனும் புதுமையான கருத்தை தனித்துவமான சாகுபடி முறையால் சாத்தியப்படுத்தியிருக்கிறார் விவசாயி அன்பரசன். திருச்சி, பெல் பகுதி அருகே அமைந்துள்ளது இவரின் 7 ஏக்கர் பண்னை. கடந்த 9 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் வகைகளை சாகுபடி செய்து வரும் இவருடைய நிலத்தில் மாப்பிளை சம்பா, ஆத்தூர் கிச்சிலி சம்பா, தூயமல்லி, கறுப்பு கவுனி உள்ளிட்ட பல பாரம்பரிய நெல் வகைகள் இருக்கின்றன. மனிதர்களின் நல்வாழ்விற்கு நஞ்சில்லா விவசாயம் அவசியம் என்கிற நேர்மறையான சிந்தையோடு அவர் பேசத் தொடங்கினார்.

    அமெரிக்காவில் பணியாற்றி பின்பு அந்த ஊரும் தொழிலும் வேண்டாம் என இந்தியா திரும்பியவர், ஈஷா யோகா வகுப்புகளில் பங்கேற்றுள்ளார். இவரிடம் சிறிதளவு நிலம் இருந்ததால் விவசாயம் செய்யலாம் என முடிவெடுத்துள்ளார். பின்னர் ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் சுபாஷ் பாலேக்கரின் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுத்துள்ளார். அந்த வகுப்பு தான் தனக்குள் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது என்றும், அந்த வகுப்பின் மூலமே நஞ்சில்லா விவசாயம் செய்ய வேண்டும் என இயற்கை விவசாயம் செய்ய தொடங்கியதாகவும் கூறுகிறார்.

    "ஒரு தாவரம் என்றால் என்ன? அதன் தன்மை என்ன? உள்ளிட்டவை எனக்கு தெரியும் என்றாலும் மண்ணுக்கு கீழுள்ள பல்லுயிர்கள் எப்படி வேலை செய்கின்றன என்பது குறித்த ஆழமான விபரங்களை ஈஷா விவசாய இயக்கம் நடத்திய பயிற்சியின் மூலமாக தெரிந்து கொண்டேன். மேலும் ஒரு விவசாயி தோல்வி அடையாத வகையில் விவசாயம் செய்ய தேவையான தொழில்நுட்பங்களை கற்றுத் தருகிறார்கள். அந்த தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு என் நிலத்தில் செயல்படுத்தினேன்." என்றார்.

    அவரோடு நாம் பேசிய போது மீன் குட்டை ஒன்றை வெட்டி கொண்டிருந்தார். நெல் சாகுபடி நடுவே மீன் குட்டை வெட்டுவது ஏன்? என்ற நம் கேள்விக்கு, "5 அடியில் கரை கட்டி, ஒன்றே முக்கால் ஏக்கர் அளவில் குளம் வெட்டி வருகிறேன். வயலில் இருந்து 1 முதல் 1 முக்கால் அடி வரை மட்டும் தான் மண் எடுத்திருக்கிறேன். இதில் மீன் வளர்ப்பு செய்ய போகிறேன். இந்த குளத்திலேயே மீன் அமிலம், ஜீவாமிர்தம் எல்லாம் கலந்து விடுவேன். இதில் தேவையானவற்றை மீன்கள் எடுத்து கொள்ளும், மீதமிருப்பவற்றை நெல்லுக்கு பயன்படுத்தும் ஒரு முறையை நான் முயற்சித்து வருகிறேன்.

    என் நிலம் ஒரு ஒருங்கிணைந்த பண்ணையாக இருக்க வேண்டும். "ஒருங்கிணைந்த" என்றால் ஒன்றின் கழிவு மற்றொன்றுக்கு பயன் பட வேண்டும். உதாரணமாக, மீன்கள் வளர்ப்பதால் அமோனியா வாயு உருவாகும். இந்த வாயு நெல் பயிருக்கும், மற்ற தாவரங்களுக்கும் தேவைப்படும். எனவே, ஒரு போகம் மீன் அறுவடை செய்த பின்பாக அதே குளத்து நீரை வென்சூர் வழியாக வயலுக்கு தேவையான இடுபொருளை வழங்குவேன். அதன் பின்பு அதே நீரில் நெல் விவசாயம் செய்ய போகிறேன்.

    மீன் அறுவடை முடிந்த பிறகு, 2 வருடத்திற்கு ஒரு முறை கீழே படிந்துள்ள மண்ணை நாம் அகற்ற வேண்டும். ஏனென்றால் மீன் வெளியிட்ட அமோனியா வாயு அந்த மண்ணில் இருக்கும். அந்த அமோனியா மீனை வளர விடாது. எனவே அந்த மண்ணில் நாம் நெல் சாகுபடி செய்தால் அந்த அமோனியாவை தாவரங்கள் தங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ளும். இதன் மூலம் அமோனியாவை எளிதில் நீக்க முடியும், அதே அமோனியாவை நெல்லின் அபார வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும். மேலும் அந்த மண்ணில் உழவு ஓட்ட வேண்டியதில்லை. அந்த குளத்தில் மீண்டும் நீர் நிரப்பும் போது அதிலுள்ள வைக்கோல் அழுகி மீண்டும் மீனுக்கே உரமாக மாறும். இப்படி என் நிலத்தில் எந்த பொருளும் வீணாகாமல் விவசாயம் செய்வதே என் நோக்கம்" என்றார்.


    மேலும் தொடர்ந்த அவர், நான் என் நிலத்தில் விளையும் நெல்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்கிறேன். ஓராண்டுக்கு முன்பு "உழவன் அன்பு" என்ற இயற்கை அங்காடி தொடங்கியிருக்கிறேன். இங்கே நான் விளைவிக்கும் அரிசியை விற்பனை செய்கிறேன். என் வாழ்வாதாரத்திற்கு அது போதுமானதாக உள்ளது. மேலும் இயற்கையாக விளையும் பொருட்களை உண்ண வேண்டும் என பேசுவபவர்கள் 10% என்றால் அதை வாங்கி உண்பவர்கள் 2% தான். இந்த பயன்பாட்டாளர்கள் அதிகரித்தால் லாபமும் அதிகரிக்கும்.

    விவசாயம் என்பது எல்லையற்றது. ஆரம்பத்தில் முல் முருங்கை செடி வைத்தேன். பின்பு பனை மரம் வைத்தேன், அதன் பின்பு நெல் விவசாயம் செய்ய தொடங்கினேன். இப்போது மீன் குளம் வெட்டுகிறேன். அதனை தொடர்ந்து ஈஷா பரிந்துரைக்கும் மரம் சார்ந்த விவசாயத்தை பின் பற்றி என் மீன் குட்டையின் வரப்பில் மரமும் நட்டிருக்கிறேன். பிற்காலத்தில் அந்த மரத்தில் மிளகை ஏற்றும் சாத்தியமும் உள்ளது." எனவே தொடர்ந்து முயற்சித்து கொண்டேயிருப்பேன். என்றார் உற்சாகமாக.

    இவரைப் போலவே நெல் வயலில் மீன் வளர்த்து அசத்தி வருகிறார் புதுக்கோட்டையை சேர்ந்த இயற்கை விவசாயி பொன்னையா. இவர் ஒரு ஏக்கரில் மீன் வளர்ப்பினால் 2 லட்சம் மற்றும் நெல் விவசாயத்தில் 60 ஆயிரம் என்றளவில் வருவாய் பார்க்கிறார். நெல் வயலில் மீன் வளர்ப்பின் மூலம் சீனா, தாய்லாந்து விவசாயிகளை மிஞ்சும் வகையில் செயல்படும் இவர் வேலூர் மாவட்டம் ஶ்ரீபுரம் பொற்கோவிலில் உள்ள ஶ்ரீ நாராயணி மஹாலில் நடைபெற உள்ள "பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவு திருவிழாவில்' சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அந்நிகழ்வில் தன்னுடைய வெற்றி அனுபவங்களை மற்ற விவசாயிகளும் பயன் பெறும் வகையில் பகிர இருக்கிறார்.

    இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 8300093777, 9442590077 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    • மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
    • சம்பா சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, கர்நாடக காங்கிரஸ் அரசு மற்றும் மத்திய அரசுடன் ரகசியமாக கைகோர்த்து காவிரியில் நமக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கு நீரை முறையே வலியுறுத்திப் பெறாமல், டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் மட்டுமே இழைத்து வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக காவிரியில் போதிய தண்ணீர் திறந்துவிடப்படாததால், குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் போதிய தண்ணீர் இல்லாமல், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் பெரிதும் நஷ்டமடைந்தனர். குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யப்படாததால், விவசாயிகள் உரிய நிவாரணமும் பெற இயலவில்லை.

    சம்பா தாளடி காலங்களில் ஒருபுறம் நீரின்றி பயிர் கருகியது, மறுபுறம் மழை வெள்ளத்தால் பாதிப்பும் ஏற்பட்டது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை காலத்தே திறக்காததால், அறுவடை செய்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, முளைத்து பாதிக்கப்பட்டன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும் அரசு முழுமையாக வழங்கவில்லை.

    நடப்பாண்டில் கர்நாடக காங்கிரஸ் அரசிடம் காவிரியில் போதியத் தண்ணீரை பெறாததாலும், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாததாலும், மும்முனை மின்சாரம் வழங்கப்படாததாலும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.

    கடந்த ஒரு வார காலமாக இயற்கையின் கருணையால் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதால், கர்நாடக அரசு வேறு வழியின்றி உபரி நீரை காவிரியில் திறந்து விடுகிறது. அதன் காரணமாக மேட்டூர் அணை வெகு வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று 100 அடியை தாண்டியுள்ளது. எனவே, சம்பா சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

    சம்பா சாகுபடிக்குத் தேவையான குறுகிய கால மற்றும் நீண்ட கால விதை நெல் ரகங்கள் தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் தரப்பில் இருந்து தெரிய வருகிறது. எனவே, உடனடியாக இருவகை விதை நெல்களையும் தட்டுப்பாடின்றி வேண்டிய அளவு வழங்க வேண்டும். மேலும் தி.மு.க. அரசு சம்பா பாசனத்திற்கு தேவையான உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட விவசாய இடுபொருட்களையும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    கடந்த ஆண்டு குறுவை சாகுபடி பொய்த்து விட்டதால், பயிர் கடனை திருப்பி செலுத்த முடியாத விவசாயிகளுக்கு பயிர் கடன் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். சென்ற ஆண்டு பயிர் கடன் கட்டத் தவறிய விவசாயிகளுக்கு நடப்பு பருவத்திற்கு பயிர் கடன் வழங்கப்படமாட்டாது என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் உள்ளனர்.

    எனவே, இவ்வாண்டு சம்பா சாகுபடிக்கு, சென்ற ஆண்டு பயிர் கடன் கட்டத் தவறிய விவசாயிகளுக்கு, எந்த நிபந்தனையுமின்றி பயிர் கடன் வழங்க வேண்டும். மேலும், காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் குளம், குட்டை மற்றும் கடைமடை பகுதிகள் வரை செல்ல ஏதுவாக வாய்க்கால்கள், மதகுகளை பழுது நீக்கி சரி செய்யவும், கரைகளை பலப்படுத்தவும் வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×