என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது.
- இன்றைக்கு தமிழகத்தின் அனைத்து அணைகளும் நிரம்ப செய்துள்ளது.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விவசாய மக்களுக்கு தேவையான தண்ணீரை கேட்டபோது கொடுக்காத கர்நாடகா, தானாக முன்வந்து அணைகளை திறந்து தண்ணீரை தந்துள்ளது.
இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது. ஒரு டி.எம்.சி. தண்ணீரை தினந்தோறும் தமிழகத்திற்கு தரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், உடன்படாத கர்நாடக அரசு இயற்கை அன்னையின் முன் மண்டியிட்டு உள்ளது. ஒரு டி.எம்.சி. தண்ணீர் தர மறுத்தபோது, ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடக்கூடிய சூழலை உருவாக்கி, இன்றைக்கு தமிழகத்தின் அனைத்து அணைகளும் நிரம்ப செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம் சென்றும் காவிரி விவகாரத்தில் எதையும் சாதிக்க முடியாத நிலையில், தமிழக அரசு இனிமேலாவது இயற்கை அன்னை நமக்கு கொடையாக வழங்கி வரும் தண்ணீரை சேமிக்க வேண்டும். யாருடைய தயவையும் எதிர்பாராமல் தொலைநோக்கு பார்வையோடு நமக்கு கிடைக்கும் தண்ணீர் வீணாக கடலில் கலக்காமல் தடுக்க, தடுப்பணைகளை அமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும். விவசாயத்திற்கும், தொழில்களுக்கும், குடி தண்ணீருக்கும் யாரிடமும் இனிவரும் காலங்களில் மண்டியிடாத தன்னிறைவு பெற்ற நாடாக தமிழ்நாட்டை இந்த அரசு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
- துணைபோன கல்வி நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- போலி ஆதார் அட்டையை சமர்ப்பித்து முறைகேடு.
சென்னை:
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் அங்கீகாரம் மற்றும் இணைப்பு சான்றிதழை புதுப்பிக்க வேண்டும்.
இதற்கு உள்கட்டமைப்பு பேராசிரியர்கள், பணியாளர்கள் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவற்றை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் அண்ணா பல்கலைக் கழக குழுவினர் ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள்.
இந்த நிலையில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 52 ஆயிரத்து 500 பேராசிரியர்களில் 1900 காலி இடங்கள் இருந்த நிலையில், அதை சரிகட்ட ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் தில்லு முல்லு செய்து வேலை பார்த்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம் எழுப்பிய குற்றச்சாட்டை வைத்து அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய விசாரணையில் இந்த ஆண்டு இணைப்புச் சான்றிதழ் பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், பல என்ஜினீயரிங் கல்லூரிகளில் போலி ஆதார் அட்டையை சமர்ப்பித்து முறைகேடாக பணி புரிந்தது போல் கணக்கு காட்டி இருப்பதை கண்டுபிடித்தனர்.
இந்த விவகாரம் தற்போது விசுவரூபம் எடுத்து இருக்கிறது. தில்லு முல்லு செய்த பேராசிரியர்கள் மற்றும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ.யின் குழு நடத்திய ஆய்வுகளில், போலி விவரங்களை கண்டறியாமல் விட்டது எப்படி? என்பது பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் பேராசிரியர் நியமன விவகாரம் குறித்து விரிவான தகவல் அளிக்குமாறு, கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டிருந்தார். உயர் கல்வித்துறையும் துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இதுகுறித்து துணை வேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளிக்கையில், தில்லுமுல்லு செய்து வேலை பார்க்கும் பேராசிரியர்கள் மீதும் அதற்கு துணைபோன கல்வி நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து இப்போது 3 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது. இதில் அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் முன்னாள் பேராசிரியர் குமாரவேல், ஏ.ஐ.சி.டி.இ. பிரதிநிதி சார்பில் உஷா நடேசன், அரசு தரப்பில் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் ஆபிரகாம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகம் தனது ஆரம்பக்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களை அறிக்கையாக தயாரித்து பல்கலைக்கழக வேந்தராக உள்ள கவர்னருக்கு சமர்ப்பித்து உள்ளது. அதே போல் உயர்கல்வித் துறை ஏ.ஐ.சி.டி.இ. ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அருவங்காடு வரை சென்ற மலை ரெயில் மீண்டும் வந்த வழியாக குன்னூருக்கு திரும்பியது.
- தண்டவாளங்களில் கிடக்கும் மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதிலும் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்படுவதுடன் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் விழுந்தும் பாதிப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் குன்னூர் பகுதியில் நேற்று இரவு பலத்த காற்று வீசியது. இதில் குன்னூர்-ஊட்டி மலைரெயில் வழித்தடத்தில் அருவங்காடு, கேத்தி ஆகிய பகுதிகளில் 3 இடங்களில் மரங்கள் தண்டவாளத்தில் விழுந்து கிடக்கிறது. இதனால் அருவங்காடு வரை சென்ற மலை ரெயில் மீண்டும் வந்த வழியாக குன்னூருக்கு திரும்பியது.
தொடர்ந்து மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள், ஊட்டிக்கு அரசு பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த மலைரெயில் குன்னூர் வரை மட்டும் இயக்கப்பட்டது.
மலை ரெயில்பாதை வழித்தடத்தில் தண்டவாளங்களில் கிடக்கும் மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. எனவே குன்னூர்-ஊட்டி இடையே இன்று ஒரு நாள் மட்டும் மலை ரெயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- சுற்றுலாப் பயணிகளின் பைகளிளும் சோதனை.
- போதை வஸ்து பொருட்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு.
கொடைக்கானல்:
கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் நகர்ப்பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளை புறக்கணித்து விட்டு பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், கிளாவரை உள்ளிட்ட மேல்மலை கிராமங்களுக்கு படையெடுக்கின்றனர்.
இந்த கிராமங்களில் மலைமுகடுகளின் அருகில் மண் வீடு, ஏ பிரேம் ஹவுஸ், டூம் ஹவுஸ், டெண்ட் கூடாரங்கள் உள்ளிட்டவைகளில் ஆபத்தான முறையில் தங்கி வருகின்றனர். இங்கு போதை வஸ்து பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
இதனையடுத்து கொடைக்கானல் கோட்டாட்சியர் சிவராமன் தலைமையில், போலீசார், சுற்றுலாத்துறை, ஊரக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இணைந்து தனியார் தங்கும் விடுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
கூக்கால் மலைக்கிராமத்தில் மலை முகடுகளின் அருகில் உள்ள அரசு வருவாய் நிலத்தில் 4-க்கும் மேற்பட்ட மண் வீடுகள் அமைத்து சுற்றுலாப்பயணிகளுக்கு தங்கும் அறைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இங்கு நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா பொட்டலங்கள், போதை காளான்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த மண் வீட்டில் இருந்த சுற்றுலாப் பயணிகளின் பைகளும் சோதனை செய்யப்பட்டது.
மேலும் மண் வீட்டினை ஆபத்தான முறையில் தங்கும் விடுதியாக நடத்தி வந்த கூக்கால் கிராமத்தை சேர்ந்த தனராஜை கைது செய்து மண் வீடு அறைகளை பூட்டினர்.
மேலும் பூம்பாறை கிராமத்தில் விவசாய தோட்டத்தில் எந்த வித அனுமதியில்லாமல் இயங்கி வந்த ஏ பிரேம் ஹவுஸ்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெறும்.
எந்த வித அனுமதி இல்லாமல் இயங்கும் தனியார் விடுதிகளும், டெண்ட் கூடாரம், டூம் ஹவுஸ் உள்ளிட்டவைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சோதனையில் 10-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட 13 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது.
மேலும் பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும். தொடர்ந்து ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட்டு வரும். இந்த கால கட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டத்தில் உள்ள 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் மேட்டூர் அணையை நம்பியே உள்ளது.
அணையில் 90 அடிக்கு மேல் தண்ணீர் இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து வினாடிக்கு 10ஆயிரம் கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருந்தால் மட்டுமே குறிப்பிட்ட நாளில், அதாவது ஜூன் 12-ந்தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலவியது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான கர்நாடக மாநிலம் குடகு, கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் ஜூன் மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனாலும் மழை தீவிரம் அடையாததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் ஜூலை மாதம் 2-வது வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்து வருகிறது.
இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியது. அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 65ஆயிரத்து 867 கனஅடி தண்ணீர் இன்று வந்து கொண்டிருக்கிறது.
இன்று மதியம் 12 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.20 அடியை எட்டி இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 47 ஆயிரத்து 896 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு விழா கொண்டாடும் வகையில் இன்று முதல் வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக நிரம்பி வரும் நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இதற்கிடையே சென்னை தலைமை செயலகத்தில் இன்று மதியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து காணொளி காட்சி வாயிலாக டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி உள்ளிட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.
அப்போது அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் காவிரி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கலெக்டர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். கடைமடை பகுதி வரை நீர் ஆதாரங்களை கொண்டு செல்ல வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கையை பொதுப்பணிதுறை, நீர்வளத்துறை சார்பாக செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மேலும் மேட்டூர் அணை நீர்மட்டம் 109.20 அடியாக உயர்ந்து இருக்கிறது. நீர் இருப்பு 77.27 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் பாசனத்திற்கு எப்போது தண்ணீர் திறக்க லாம் என கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி னார்.
மேட்டூர் அணைக்கு 1.14 லட்சம் கன அடிக்கு அதிகமாக வருவதால் அணையை இன்று மாலை 3 மணிக்கு திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி 13 மாவட்ட கலெக்டர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
13 மாவட்டங்களை சேர்ந்த 5339 கி.மீ. நீளமுள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் கொண்டு வந்ததும் தெரியவந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு வந்த வடமாநிலத்தை சேர்ந்த சில வாலிபர்கள் கள்ளச்சாரயம் கடத்தி வந்ததாக கூடங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அழைத்து வரப்பட்ட சுமார் 20 பேரை சோதனை செய்தனர். அப்போது அதில் 5 பேரிடம் சுமார் 5 லிட்டர் கள்ளச்சாரயம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
உடனே அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அஜிக்குமார்(வயது 22), சத்போந்தர் ராம்(21), அவிநாத்குமார்(33), சந்தன்குமார்(29), நாகேந்திர ராம்(33) ஆகியோர் என்பதும், ஏற்கனவே சிலர் இதேபோல் சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- வட மாநில தொழிலாளியிடம் நான்கு வாலிபர்கள் கத்தி முனையில் மிரட்டியபோது கையும் களவுமாக பிடிபட்டனர்.
- நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பகுதிகளில் தொடர் வழிப்பறி மற்றும் செல்போன் திருட்டு நடைபெறுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் சென்றது.
இதன் பேரில், மாவட்ட எஸ்பி தங்கதுரை உத்தரவின் பேரில் ஓசூர் டிஎஸ்பி. பாபு பிரசாந்த் அறிவுறுத்தலின்படி பாகலூர் போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர் .
இந்த நிலையில், பாகலூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வட மாநில தொழிலாளியிடம் நான்கு வாலிபர்கள் கத்தி முனையில் மிரட்டியபோது கையும் களவுமாக பிடிபட்டனர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் பாகலூர் கோட்டை பகுதியைச் சேர்ந்த சத்தீஷ் (20 ), லிக்கித் (20), சூடாபுரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
- கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
- பதற்ற சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கையை அடுத்த வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் பா.ஜ.க கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். நடுவழியில் திடீரென வழிமறித்த மர்ம கும்பல் செல்வக்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், செல்வக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி, உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் டிஎஸ்பி சாய் சவுந்தர்யன் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசியல் பிரமுகர் வெட்டி கொல்லப்பட்டது, உறவினர்கள் போராட்டம் என தொடர்ந்து அந்த பகுதியில் பதற்ற சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சமீப காலங்களில் அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
- எவ்வளவு மது அருந்தினாலும் சப்பென இருப்பதாக ஆதங்கம்.
- உண்மையான சரக்கா? போலி சரக்கா? என்று பலர் புலம்பல்.
சென்னை:
டாஸ்மாக் கடைகளில் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா, பீர் என பலவகை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ட்ரோபிகானா வி.எஸ்.ஓ.பி. பிராந்தி, ஓல்டு சீக்ரெட் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி ஆகியவற்றை வாங்கி குடிக்கும்போது போதை உடனே ஏறுவதில்லை என்றும் எவ்வளவு மது அருந்தினாலும் 'சப்பென' இருப்பதாக பலர் ஆதங்கப்பட்டனர்.
இது உண்மையான சரக்கா? அல்லது போலி சரக்கா? என்றும் பலர் புலம்ப தொடங்கினார்கள். இதுபற்றிய தகவல் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தெரியவந்தது. அவர்களும் இந்த 3 வித மதுபானங்களின் தரத்தை ஆய்வு கூடத்தில் பரிசோதித்து பார்த்தனர்.
அதில் 3 வித மதுபானத்திலும் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பீர் வகைகளுக்கு ஆயுள் காலம் 6 மாதம். ஆனால் போதை தரக்கூடிய மது வகைகளுக்கு ஆயுள் காலம் கிடையாது.
ஆனால் மதுவில் ஆல்கஹால் அளவு 42.84 சதவீதம் இருக்க வேண்டும். அதைவிட குறைவாகவோ, கூடுதலாகவோ இருந்தால் அதை கடைகளில் விற்க கூடாது.
இந்த நிலையில் வீரன் ஸ்பெஷல் பிராந்தி (பேட்ச் எண் 082/2024) வி.எஸ்.ஓ.பி. ட்ரோபிகானா (பேட்ச் எண். 013/2020), ஓல்டு சீக்ரெட் பிராந்தி (பேட்ச் எண். 837/2018) ஆகியவை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்ததால் அந்த மது பாட்டில்களை மது பிரியர்களுக்கு விற்க வேண்டாம் என்று டாஸ்மாக் நிர்வாகம் கடைக்காரர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அது மட்டுமின்றி இந்த மது வகைகள் விற்பனைக்கு உகந்தது அல்ல என்பதால் கடைகளில் இருப்பு இருந்தால் அதை மதுபான கிடங்குக்கு திரும்ப ஒப்படைக்குமாறு கடைக்காரர்களை டாஸ்மாக் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனாலும் பல கடைகளில் அதற்குள் மது பாட்டில்களை விற்பனை செய்துவிட்டனர். சில கடைகளில் மீதம் உள்ள மது பாட்டில்களை திரும்பப் பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் இருந்து கடை ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
- கேன் தவறி விழுந்ததில் கண்டெய்னர் லாரியில் தீப்பிடித்தது.
- ரசாயனங்கள் பற்றி எரிந்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மூலப்பொருட்கள் லாரிகள் மட்டும் லாரிகளில் கொண்டு வரப்படுவது வழக்கம்.
இதே பகுதியில் செயல் பட்டு வரும் தனியார் தொழிற்சாலைக்கு நேற்று நள்ளிரவில் கண்டெய்னர் லாரியில் கேன்களில் தின்னர் என்ற ரசாயனம் கொண்டுவரப்பட்டது. பின்னர் தொழிற்சாலை அருகே கண்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு அதில் இருந்து ரசாயன கேன்களை இறக்கி வேறு ஒரு லாரிக்கு தொழிலா ளர்கள் மாற்றி ஏற்றிக் கொண்டு இருந்தனர்.
அப்போது ஒரு கேன் தவறி விழுந்ததில் கண்டெய்னர் லாரியில் தீப்பிடித்தது. அங்கிருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தீ அதிக அளவில் பரவியதால் அருகில் இருந்த மற்றொரு லாரிக்கும் பரவியது. இதில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
அந்த இடத்தின் அருகி லேயே வாகனங்கள் நிறுத்து மிடம் உள்ளது. அதில் கண்டெய்னர் லாரிகள் உள்பட 40-க்கு மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த வாகனங்களி லும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது.
உடனடியாக அதிக அளவில் தீப்பற்றி எரிந்த லாரியை டிரைவர் சாமர்த்தியமாக வேகமாக ஓட்டி வந்து அருகில் உள்ள பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில் நிறுத்தினார். சிறிது நேரத் தில் அந்த லாரியில் தீ மளமள வென பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் பூந்த மல்லி, அம்பத்தூர், மதுரவாயல், ஜெ.ஜெ.நகர், ஆவடி, கோயம்பேடு, இருங்காட்டுக்கோட்டை , ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தொழிற்சாலை முன்பு நிறுத்தப்பட்டு இருந்த லாரியில் பற்றிய தீயை உடனடியாக அணைத்தனர்.
ஆனால் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியில் இருந்த ரசாயனங்கள் முழுவதும் பற்றி எரிந்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. பலமணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் லாரி முழுவதும் முற்றிலும் எரிந்து நாசமானது.
தீப்பற்றியதும் லாரியை டிரைவர் உடனடியாக சாலையோரம் கொண்டு வந்து நிறுத்தியதால் தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த மற்ற வாகனங்களுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.
தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த லாரியை சர்வீஸ் சாலைக்கு ஓட்டி வந்தபோது லாரியில் இருந்து சாலையில் கொட்டிய ரசாயனத்தால் சாலை முழுவதும் சிறிது நேரம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மேட்டூர் அணையில் தண்ணீர் கடல் போல காட்சி அளிக்கிறது.
- ஆலோசனை கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை:
மேட்டூர் அணைக்கு நேற்று இரவு 1 லட்சத்து 23 ஆயிரத்து 184 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1 லட்சத்து 34 ஆயிரத்து 115 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 107.69 அடியாக உயர்ந்தது. நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரே நாளில் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் தண்ணீர் கடல் போல காட்சி அளிக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பது குறித்து டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108 அடியை நெருங்கும் நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேட்டூர் அணை நீர் திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
- கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
- அதிகாலை முதலே பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
திருத்தணி:
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நேற்று ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. இன்று ஆடி பரணியை முன்னிட்டு அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலில் குவிந்து இருந்தனர். அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.
வெளியூர்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் மயில்காவடி, புஷ்பக் காவடி, பன்னீர் காவடிகள் சுமந்தும். உடலில் வேல், அம்பு அலகு குத்தியும் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

குழந்தைகள் முதல் முதியவர் வரை பம்பை உடுக்கை முழங்க கிராமியக் கலையோடு ஆடி பாடி சென்று முருகனை வழிபட்டனர். இதனால் மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காட்சி அளித்தது.
பக்தர்கள் காவடி செலுத்துவதற்கு தனி மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏற்கனவே காவடி செலுத்த கட்டணம் ரத்து செய்யப் பட்டு இருந்ததை பக்தர்கள் வரவேற்று உள்ளனர்.
பக்தர்கள் கூட்டத்தால் மலைக்கோவிலுக்கு செல்ல வாகனங்கள் அனுமதிக் கப்படவில்லை. கோவில் வாகனம் மட்டும் இயக்கப்பட்டது. பக்தர்கள் சரவணப் பொய்கை திருக்குளத்தில் புனித நீராடி படிக்கட்டுகளின் வழியாகவும் சென்று சுவாமியை தரிசித்தனர்.
வாகன நெரிசலை தவிர்க்க திருத்தணி நகரத்தின் நான்கு எல்லைகளிலும் அனைத்து பஸ்களும், வாக னங்களும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் வசதிக்காக அந்தந்த பகுதிகளில் இருந்து கோயில் சார்பில் பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தன.
ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு மலைக்கோயில், திருக்குளம், மலைப்பாதை, கோபுரம், உள்ளிட்ட அனைத்து பகுதி களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.
பக்தர்கள் நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்வ தற்கு கோவில் சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. பிரசாதம். குடிநீர். கழிப்பிட வசதிகள் சுகாதாரம் உள்ளிட்டவை சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
காவடி கொண்டு வரும் பக்தர்கள் திருக்குளத்தில் வீசி செல்லும் பூமாலைகளை அகற்றுவதற்கும், மலைக் கோயில். மலை பாதை பகுதிகளில் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் அகற்றவும் சுழற்சி முறையில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.
விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் இணை ஆணயர் அருணாச்சலம் (பொறுப்பு) அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதரன் மற்றும் அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ் பாபு, நாகன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் செய்து உள்ளனர்.
மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தமிழ்மாறன் மேற்பார்வையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முக்கிய இடங்களில் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைத்தும், கண்காணிப்பு காமிராக்கள் அமைத்தும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.






