என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • முருகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
    • முருகருக்கு மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    திருவள்ளூர்:

    அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடக்கிறது.

    ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு முருகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

    இதில் பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்க கவசம். வைர கிரீடம் பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    ஆடி கிருத்திகை விழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள், பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.

    இந்த ஆடிக்கிருத்திகை விழா கடந்த 27-ந் தேதி ஆடி அஸ்வினியுடன் துவங்கி, நேற்று ஆடிப்பரணியும், இன்று ஆடிக் கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பம், நாளை இரண்டாம் நாள் தெப்பம், 31ம் தேதி மூன்றாம் நாள் தெப்பம் நடக்கிறது.

    இந்த 3 நாட்கள் தெப்ப உற்சவத்தில் முருகர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    இந்த விழாவில் பக்தர்களின் வசதிக்காக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி 120 இடங்களிலும், கழிப்பிட வசதி 160 இடங்களிலும், தற்காலிக குளியலறை வசதி 60 இடங்களிலும், பொது தகவல் அறிவிப்பு மையம் 10 இடங்களிலும், கண்காணிப்பு கோபுரங்கள் 24 இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் மலைக்கோவில், மலை அடிவாரம், மக்கள் அதிகம் கூடும் பகுதியில் 160 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

    திருத்தணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பாக சென்னை, வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், குடியாத்தம், ஆரணி, திருவண்ணாமலை, திண்டிவனம், விழுப்புரம், சோளிங்கர், செய்யார், வந்தவாசி, ஆம்பூர், பேரணாம்பட்டு, பள்ளிப்பட்டு, திருப்பதி, சித்தூர், புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து திருத்தணிக்கு 560 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    இந்த ஆடி கிருத்திகை விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொலை செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது.
    • ரவுடிகளுக்கு எதுவும் புரிந்ததாக தெரியவில்லை.

    தமிழ்நாட்டில் அடுத்தடுத்து அரசியல் பிரமுகர்கள் வெட்டி படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு சீர்கேடாக மாறி இருப்பதாக தேமுதிக கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா...? தருமபுரியில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிரபல பிரியாணி கடைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த ஊழியரைச் சரமாரியாக வெட்டிக் கொன்றது."

    "தொடர்ந்து, சிவகங்கை அருகே பாஜக பிரமுகர் செல்வகுமார் நேற்றிரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இன்று அதிகாலை கடலூர் அருகே அதிமுக நிர்வாகி பத்மநாதன் வெட்டிக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, குமரி அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக் கொல்லப்பட்டார்."

    "இதைப் பார்க்கும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுப் போய்விட்டது. கொலை செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. புதிதாகப் பதவியேற்ற டிஜிபி திரு. அருண் அவர்கள், உடனடியாக இது போன்ற படுகொலைகள் தடுக்கப்படும் என்றும், ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொன்னால் தான் புரியும் என்று கூறினார்."

    "ஆனால் இன்று வரை எதுவும் தடுக்கப்படவும் இல்லை, ரவுடிகளுக்கு எதுவும் புரிந்ததாகவும் தெரியவில்லை. இன்னும் படுகொலைகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய சீர்கேடாக மாறி இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது."

    "டாஸ்மாக் கஞ்சா போதை வஸ்துக்கள் பயன்பாடு அதிகமாக இருப்பது தான் இதற்கு மிக முக்கிய காரணம், தேமுதிக இதை வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே தமிழக அரசு இதைக் கவனத்தில் கொண்டு போதை இல்லா தமிழகத்தை உருவாக்கவும், தமிழ்நாடு ஒரு கொலை நாடாக மாறாமல் இருக்க உடனடியாகத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டின.
    • ஒகேனக்கல் காவிரி ஆற்றின் வழியாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

    அணையின் பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றின் வழியாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 111.20 அடியாகவும் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 52 ஆயிரம் கனஅடியாகவும் இருந்தது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்வரத்து 1.52 லட்சம் கனஅடியில் இருந்து 1.55 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

    இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 115.10 அடியை தாண்டியுள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்தபு 12 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 85.86 டிஎம்சியாக உள்ளது.

    நீர்வரத்து இதே அளவில் வந்து கொண்டு இருந்தாலும், பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 2 நாட்களுக்கு நொடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக நீடித்தாலும், மேட்டூர் அணை இன்று நிரம்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

    • ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
    • தனுஷ் பிறந்தநாளை ஒட்டி ரசிகர்கள் அவர் வீட்டிற்கு முன்பு நேற்று குவிந்தனர்.

    தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் வசூல் மட்டும்13 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

    ராயன் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நேரத்தில் நேற்று தனது பிறந்தநாளை தனுஷ் கொண்டாடினார். பிறந்தநாளை ஒட்டி ரசிகர்கள் தனுஷ் வீட்டிற்கு முன்பு நேற்று குவிந்தனர். தனது வீட்டிற்கு முன்பு திரண்டிருந்த ரசிகர்கள் அனைவருக்கும் தனுஷ் நன்றி தெரிவித்தார். அந்த வீடியோ நேற்று இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், ஆடி கிருத்திகையை ஒட்டி, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் நடிகர் தனுஷ் கையில் ருத்ராட்ச மாலையுடன் மகன்களோடு உருகி நின்று சாமி தரிசனம் செய்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சோனு யாதவ் 3.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • நெல்லை சார்பில் அருண் கார்த்திக் 45 ரன்களை விளாசினார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றின் கடைசி கட்ட போட்டிகள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய திண்டுக்கல் அணி 19.4 ஓவர்களில் 136 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தது. திண்டுக்கல் அணிக்கு சிவம் சிங் 59 பந்துகளில் 70 ரன்களையும், அஸ்வின் 13 பந்துகளில் 15 ரன்களையும் சரத் குமார் 8 பந்துகளில் 9 ரன்களையும் எடுத்தனர்.

    நெல்லை சார்பில் சிறப்பாக பந்துவீசிய சோனு யாதவ் 3.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹரிஷ் மற்றும் சிலம்பரசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய நெல்லை அணி 17.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. நெல்லை சார்பில் அருண் கார்த்திக் 45 ரன்கள், அஜிதேஷ் 43 ரன்கள் மற்றும் என்எஸ் ஹரிஷ் 22 ரன்களை விளாசினர்.

    திண்டுக்கல் சார்பில் வருண் சக்கரவர்த்தி, ரவிசந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளையும், திரன் 1 விக்கெட் வீழ்த்தினர். 

    • நெல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த பாரம்பரிய நெல் திருவிழா நடத்தப்படுகிறது.
    • "மண் காக்கும் விவசாயிகளுக்கு மண் காப்போம் விருதுகள்" வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "பாரத பாரம்பரிய நெல் & உணவுத் திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி வேலூரில் இன்று (ஜூலை 28) நடைப்பெற்றது.

    வேலூர், ஶ்ரீபுரம் பொற்கோவிலில் அமைந்துள்ள ஶ்ரீ நாராயணி மகாலில் நடைப்பெற்ற இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஈஷா மண் காப்போம் இயக்கம் கடந்த 15 வருடங்களாக நம் மண்ணின் வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து வருகிறது. 

    இயற்கை விவசாயத்தை மென்மேலும் விரிவுப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு பயிருக்கும் ஏற்ற வகையில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக இது ஆடி பட்டம் காலம் என்பதால் நெல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த பாரம்பரிய நெல் திருவிழா நடத்தப்படுகிறது.

    இத்திருவிழாவின் நோக்கம் குறித்து மண் காப்போம் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஶ்ரீமுகா பேசுகையில் "இன்றைய காலத்தில், வீட்டுக்கொரு நீரிழிவு நோயாளியும், வீதிக்கு ஒரு புற்றுநோயாளியும் இருக்கின்றனர்.

    தற்போது மக்களுக்கு ஆரோக்கியம் மீதான தேடல் அதிகரித்துள்ளது. இயற்கை விவசாயம் தொடர்பாக நம்மாழ்வார் அய்யா மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோர் பல முன்னெடுப்புகளை செய்துள்ளனர்.

    அதுமட்டுமின்றி பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுப்பதற்காக பல அமைப்புகள் பல நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் ஈஷாவின் மண் காப்போம் அமைப்பும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதற்காக இப்படி ஒரு நிகழ்வை ஒருங்கிணைத்து உள்ளது" எனப் பேசினார்.

    அவரைத் தொடர்ந்து, நெல் மதிப்புக் கூட்டல் குறித்து தான்யாஸ் நிறுவனத்தின் நிறுவனர் தினேஷ் பேசுகையில் "ரூ.10 ஆயிரம் முதலீட்டுடன் தொடங்கிய இந்த நிறுவனம் இன்று மாதத்திற்கு 10 லட்சம் வரை மொத்த விற்பனை செய்கிறது.

    விவசாய பொருட்களை மதிப்பு கூட்டி விற்பதன் மூலம் நல்ல வருவாய் ஈட்ட முடியும். நாங்கள் பெற்ற அனுபவத்தை, அதாவது ஒரு விவசாய பொருளை எப்படி உற்பத்தி செய்து, மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துவது என்பதை மண் காப்போம் இயக்கத்தோடு இணைந்து பயிற்சியாக வழங்கி வருகிறோம். இன்று பாரம்பரிய அரிசிக்கான தேவை அதிகரித்துள்ளது" என்று பேசினார்.

    அவரைத் தொடர்ந்து 60 ஏக்கரில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து அசத்தலான வருமானம் ஈட்டி வரும் முன்னோடி நெல் விவசாயி திரு. வீர ராகவன் சிறப்புரை வழங்கினார்.

    மேலும் விவசாயத்தில் கால்நடைகளின் முக்கியத்துவம் குறித்து மரபு வழி கால்நடை மருத்துவர் டாக்டர். புண்ணியமூர்த்தி, "பூச்சிகளால் அதிகரிக்கும் நெல் மகசூல்" என்ற தலைப்பில் பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம், நெல் வயலில் மீன் வளர்த்து தனித்துவமான முறையில் விவசாயம் செய்து வரும் முன்னோடி விவசாயி பொன்னையா உள்ளிட்ட முன்னோடி விவசாயிகளும், வேளாண் வல்லுநர்களும் இந்நிகழ்வில் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை வழங்கினர்.

    இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக இயற்கை விவசாயத்தில் சிறப்பாக செயல்படும் பத்து விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, "மண் காக்கும் விவசாயிகளுக்கு மண் காப்போம் விருதுகள்" வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக பொதுமக்களையும், விவசாயிகளையும் இணைக்கும் வகையிலான விவசாயிகளின் நேரடி சந்தை நடைப்பெற்றது. இந்த சந்தையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெற்றன. இதில் பாரம்பரிய அரிசி வகைகள், நாட்டு காய்கறிகள் மற்றும் அதன் விதைகள், நம் மரபு திண்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் விளைப் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டன. 

    • தண்ணீர் சீறிப்பாய்ந்தபடி காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.
    • தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு, மடிக்கேரி, மைசூரு, மாண்டியா மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டுகிறது.

    இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில் கர்நாடகம் மற்றும் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் காவிரி ஆற்றின் குறுக்கே மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணை தனது முழுகொள்ளவை எட்டிவிட்டது.

    கே.ஆர்.எஸ். அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி உயரம் ஆகும். தற்போது 123.34 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 66 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    அதன்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நேற்று 1 லட்சத்து 31 ஆயிரத்து 234 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து இன்று 1 லட்சத்து 30 ஆயிரத்து 867 கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் சீறிப்பாய்ந்தபடி காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.

    அதே போல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே 84 அடி நீர்மட்டம் உயரம் உள்ள கபினி அணை கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே தனது முழுகொள்ளளவையும் எட்டிவிட்டது. இந்த அணையில் 82.05 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு 32 ஆயிரத்து 867 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி 35 ஆயிரம் கன அடி நீர் கபிலா ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபிலா ஆற்று தண்ணீர் டி.நரசிப்புரா அருகே திருமாகூடலு பகுதியில் காவிரியில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வருகிறது.


    இன்று காலை 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரத்து 867 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் கரைபுரண்டபடி தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நீரானது தமிழக -கர்நாடகா எல்லையான பிலிகுண்டு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று இரவு 1 லட்சத்து 41 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    தொடர்ந்து ஒகேனக்கல்லில் இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த வெள்ளபெருக்கு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், உள்ளிட்ட அருவிகள் தெரியாத வகையில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் காவிரி ஆற்றங்கரையோரமுள்ள பகுதிகளான முதலை பண்ணை, சத்திரம், நாகர்கோவில், ஊட்டமலை, தளவகாடு ஆகிய பகுதிகளில் கரைகளை தொட்டு சென்று தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது. இந்த பகுதிகளில் தண்ணீர் வீடுகளில் சூழ்ந்து காணப்படுவதால், அங்குள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாற்று இடம் செல்ல முடியாதவர்களை ஒகேனக்கல்லில் உள்ள தனியார் மண்டபங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்கவும் அருவிகளில் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் தடை நீடித்து வருகிறது. மேலும் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், காவிரி கரையோரப் பகுதிகளில், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல்லில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலுமாக அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகளை போலீசார் சோதனை சாவடியிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் இரவு அணைக்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று மதியம் 1 லட்சத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை நேற்று 71-வது முறையாக 100 அடியை எட்டியது.

    நேற்று இரவு 1 லட்சத்து 23 ஆயிரத்து 184 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1 லட்சத்து 34 ஆயிரத்து 115 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 107.69 அடியாக உயர்ந்தது. நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரே நாளில் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அணையில் தண்ணீர் கடல் போல காட்சி அளிக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

    சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழாவை (ஆடி 18) மக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு இதுவரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் வருகிற 3-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா நடைபெற உள்ளது.

    இதையொட்டி மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் ஆகஸ்டு 3-ந் தேதி வரை ஒரு வார காலத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதன்படி இன்று மேட்டூர் அணையில் இருந்து ஆடிப்பெருக்குக்காக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1.65 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும், ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் கிருஷ்ணகிரி (பிலிகுண்டு), தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்ட கலெக்டர்களிடம் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் காவிரி கரையோர பகுதிகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வருவாய்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் காரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.

    • சேலம் வணங்கம்பாடியை சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
    • விபத்து குறித்து குன்றக்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் சூரக்குடியில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    மாடு முட்டியதில், சேலம் வணங்கம்பாடியை சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    மாடுபிடி வீரர் கார்த்திக் உயிரிழப்பை தொடர்ந்து வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது.

    விபத்து குறித்து குன்றக்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
    • அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் காவிரி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட 13 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது.

    மேலும் பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும்.

    தொடர்ந்து ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட்டு வரும். இந்த கால கட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டத்தில் உள்ள 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் மேட்டூர் அணையை நம்பியே உள்ளது.

    அணையில் 90 அடிக்கு மேல் தண்ணீர் இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து வினாடிக்கு 10ஆயிரம் கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருந்தால் மட்டுமே குறிப்பிட்ட நாளில், அதாவது ஜூன் 12-ந்தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலவியது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான கர்நாடக மாநிலம் குடகு, கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் ஜூன் மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனாலும் மழை தீவிரம் அடையாததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் ஜூலை மாதம் 2-வது வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்து வருகிறது.

    இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியது. அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 65ஆயிரத்து 867 கனஅடி தண்ணீர் இன்று வந்து கொண்டிருக்கிறது.

    இன்று மதியம் 12 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.20 அடியை எட்டி இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 47 ஆயிரத்து 896 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு விழா கொண்டாடும் வகையில் இன்று முதல் வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக நிரம்பி வரும் நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    இதற்கிடையே சென்னை தலைமை செயலகத்தில் இன்று மதியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து காணொளி காட்சி வாயிலாக டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி உள்ளிட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.

    அப்போது அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் காவிரி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கலெக்டர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். கடைமடை பகுதி வரை நீர் ஆதாரங்களை கொண்டு செல்ல வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கையை பொதுப்பணிதுறை, நீர்வளத்துறை சார்பாக செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    மேலும் மேட்டூர் அணை நீர்மட்டம் 109.20 அடியாக உயர்ந்து இருக்கிறது. நீர் இருப்பு 77.27 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் பாசனத்திற்கு எப்போது தண்ணீர் திறக்கலாம் என கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    மேட்டூர் அணைக்கு 1.14 லட்சம் கன அடிக்கு அதிகமாக வருவதால் அணையை இன்று மாலை 3 மணிக்கு திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன்படி, காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் நின்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    • 143 கோவில்களின் குளங்களைச் சீரமைப்பதற்கு ரூ.84.16 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
    • அன்னதானத் திட்டம் இதுவரை 756 கோவில்களில் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 7.5.2021 முதல் 31.1.2024 வரை மூன்றாண்டுகளில் 1,355 கோவில்களில் திருப்பணிகள் நிறைவுற்றுத் கும்பாபிஷேக விழாக்கள் நடைபெற்றுள்ளன.

    8,436 கோவில்களில் 18,841 திருப்பணிகள் ரூ.3,776 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு 5,775 திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    2021-2022-ம் நிதியாண்டில் 1,250 கோவில்களுக்குத் திருப்பணி நிதி தலா ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு ரூ.25 கோடி வழங்கப்பட்டது. கிராமப்புற மற்றும் ஆதி திராவிடர் கோவில் திருப்பணிக்கான நிதி உதவி ரூ.2 லட்சம் வீதம் மேலும், 1250 கோவில்களுக்கு அனுமதிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

    143 கோவில்களின் குளங்களைச் சீரமைப்பதற்கு ரூ.84.16 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. 3 கோவில்களில் புதிய திருக்குளங்கள் ரூ.2.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகின்றன.

    சமயபுரம், திருவெண்ணெய் நல்லூர், திருப்பாற்கடல், தாராபுரம், அரியலூர், சென்னை கீழ்பாக்கம் ஆகிய இடங்களில் 6 கோவில்களில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதிய ராஜகோபுரங்கள் கட்டப்பட்டு கும்பிஷேகம் விழாக்கள் நடைபெற்றுள்ளன.

    15 கோவில்களில் ராஜகோபுரங்கள் ரூ.25.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளன. பட்டுக்கோட்டை, வரகுணநாத சுவாமி கோவில், 3 நிலை ராஜகோபுரம் இறையன்பரின் நிதியுதவி ரூ.50 லட்சத்தில் கட்டப்படுகிறது.

    அன்னதானத் திட்டம் இதுவரை 756 கோவில்களில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு 82,000 பேர்கள் பயன்பெற்று வருகின்றனர். இவ்வாண்டு மேலும் 7 கோவில்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    கடந்த மூன்றாண்டுகளில் அறநிலையங்களுக்குச் சொந்தமான நிலம், கட்டிடம், மனை ஆகியவற்றில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பில் இருந்து ரூ.5577.35 கோடி மதிப்பிலான 6140.59 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது.

    கடந்த மூன்றாண்டுகளில் 1,59,507 ஏக்கர் நிலங்கள் நவீன ரோவர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு 64,522 கற்கள் நடப்பட்டுள்ளன. நில அளவைப் பணியில் 172 உரிமம் பெற்ற நில அளவையர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 4,189.88 ஏக்கர் நிலம் மீண்டும் கோவில் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது.

    ரூ.257.28 கோடியில் மொத்தம் 73 திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. பக்தர்களின் நலனுக்காக 17 தங்கும் விடுதிகள் கட்டும் பணிகள் ரூ.70.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

    கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 48 குடியிருப்புகள் ரூ. 83.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகின்றன. 6 கோவில்களுக்குச் சொந்தமான பல மாற்று பொன் இனங்கள் உருக்கப்பட்டு, 344.334 கி.கி தங்கக் கட்டிகளாக மாற்றி, ரூ.191.65 கோடி மதிப்பீட்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு ஆண்டு ஒன்றுக்கு வட்டி வருவாய் ரூ.4.31 கோடி வரப்பெறுகிறது. மேலும், 11 கோவில்களுக்குச் சொந்தமான பல மாற்று பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டுத் தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

    ஒரு கால பூஜை திட்டத்தில் கோவில் ஒன்றுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் 2,000 கோவில்களுக்கு அரசு மானியம் ரூ.40 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தற்போது 17,000 கோவில்கள் பயனடைந்து வருகின்றன.

    ஒரு கோவிலுக்கு ஓர் அர்ச்சகர் வீதம் பதிவு செய்து, மாத ஊக்கத் தொகை ரூ.1.000 வீதம் வழங்கப்பட்டு ஜனவரி 2024 வரை 15,753 அர்ச்சகர்கள் பயனடைந்துள்ளனர். அர்ச்சகர்களின் வாரிசுதாரர்களுக்கு உயர்கல்வி உதவித் தொகையாக தலா ரூ.10,000 வீதம் நடப்பாண்டில் 400 மாணவர்களுக்குக் கல்வித் தொகை வழங்கப்பட்டுள்ளது. பழனி கோவிலில் கம்பிவட ஊர்தி இயக்கப்பட்டு வருகிறது.

    80 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பழனி மற்றும் இடும்பன் மலை இடையே கம்பிவட ஊர்தி, அனுவாவி, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய கோவில்களில் கம்பிவட ஊர்திகள் அமைத்திட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் ரூ.3.55 கோடி மதிப்பீட்டில் மின்தூக்கி அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    5 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து தினக்கூலி, தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாகப் பணிபுரிந்த 1,278 பணியாளர்கள் பணிவரன் முறை செய்யப்பட்டுள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணங்கள் நடத்தி வைக்கும் திட்டத்தின்கீழ், ரூ.50,000 மதிப்புள்ள சீர்வரிசைகளுடன் 1,100 இணைகளுக்கும், 128 மாற்றுத் திறனாளிகளுக்கும் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

    500 பக்தர்கள் ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவிலில் இருந்து காசி, விசுவநாத சுவாமி கோவிலுக்கு ஆன்மிகப் பயணமாக அரசு நிதி ரூ.125 லட்சம் செலவிலும், 1,000 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிகப் பயணமாக அரசு நிதி ரூ.1.50 கோடி செலவிலும் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். 2022-2023-ம் ஆண்டில் முக்திநாத் ஆன்மிக பயணம் சென்று வந்தவர்களுக்கு தலா ரூ.20,000 வீதம் பயண செலவாக வழங்கப்படுகிறது.

    கோவில்கள் மூலம் நடத்தப்படும் பயிற்சிப்பள்ளிகளில் தற்போது 212 மாணவர்கள் முழுநேரமாகவும், 80 மாணவர்கள் பகுதிநேரமாகவும் பயின்று வருகின்றனர்.

    11 பெண் ஓதுவார்கள் உட்பட 42 ஓதுவார்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்தகைய பல்வேறு பணிகளில் தமிழ்நாட்டின் அறநிலையத்துறை பணிகள் மிகச் சிறப்பாக நடைபெறுவதால் திராவிட மாடல் அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் பொது மக்கள் பாராட்டுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்க்க தனது நண்பர் ரங்காவுடன் பத்மநாபன் சென்றார்.
    • பாட்டு கச்சேரி நடந்தபோது பத்மநாபன் தரப்பினருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    பாகூர்:

    கடலூர் திருப்பாதிரி புலியூர் நவனீதம் நகரை சேர்ந்தவர் பக்தா என்ற பத்மநாபன் (வயது 45) பெயிண்டர் வேலை செய்து வந்த இவர் அப்பகுதி 25-வது வார்டு அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்து வந்தார். இவருக்கு சத்யா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    இவரது தந்தை தெருக்கூத்து கலைஞர் என்பதால் பத்மநாபனுக்கு தெருக்கூத்து மீது ஆர்வம் இருந்து வந்தது. அப்பகுதியில் எங்கு தெரு கூத்து நிகழ்ச்சி நடந்தாலும் பத்மநாபன் அங்கு சென்று நிகழ்ச்சியை பார்ப்பது வழக்கம்.

    நேற்று இரவு புதுவை மாநிலம் பாகூர் அருகே இருளன் சந்தையை அடுத்துள்ள தமிழக பகுதியான திருப்பனாம்பாக்கத்தில் நடந்த தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்க்க தனது நண்பர் ரங்காவுடன் பத்மநாபன் சென்றார்.

    இன்று அதிகாலை 5 மணி அளவில் தெருகூத்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பத்மநாபனும் அவரது நண்பர் ரங்காவும் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    இருளன் சந்தை பகுதியில் வந்தபோது பின்னால் வந்த கார் திடீரென பத்மநாபன் ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது.

    இதனால் பத்மநாபனும் அவரது நண்பர் ரங்காவும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். உடனே காரில் இருந்து ஒரு கும்பல் கத்தியுடன் கீழே இறங்கியது. இதனை பார்த்ததும் பத்மநாபனின் நண்பர் ரங்கா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    பின்னர் அந்த கும்பல் பத்மநாபனை சுற்றி வளைத்து வீச்சரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் பத்மநாபன் அதே இடத்தில் இறந்து போனார். பின்னர் அந்த கும்பல் காரில் தப்பிச்சென்று விட்டது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பல்வேறு தகவல்கள் தெரியவந்தது. கடந்த ஆண்டு திருப்பாபுலியூரில் பாட்டு கச்சேரி நடந்தபோது பத்மநாபன் தரப்பினருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    இந்த மோதலில் பாஸ்கரன் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பத்மநாபன் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த 9 மாதத்திற்கு முன்பு ஜாமீனில் பத்மநாபன் வந்திருந்தார்.

    அடுத்த மாதம் பாஸ்கரனுக்கு நினைவு நாள் வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாஸ்கரன் கொலைக்கு பழிக்குபழி வாங்க அவரது கூட்டாளிகள் பத்மநாபனை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குடோனில் சில பகுதி முழுவதும் தீக்கிரையாகின.
    • தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஜெயலாணி தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 50). இவர் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவரது குடோன் செல்சீனி காலனி பகுதியில் உள்ளது.

    இன்று காலை அவரது குடோன் அருகே உள்ள முட்புதரில் சிலர் தீவைத்து எரித்துள்ளனர். அப்போது பலத்த காற்று வீசியதால் முட்புதரில் வைக்கப்பட்ட தீ அருகே இருந்த பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனுக்கும் பரவியது.

    இதில் தீ மள மளவென பரவியதால் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்கள், பழைய வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவை எரிய தொடங்கின. இதன் காரணமாக கரும்புகை சுமார் 100 அடி உயரம் வரை கிளம்பியது. காற்று பலமாக வீசியதால் இந்த கரும்புகை தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் பரவியது. 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு புகைமூட்டமானது.

    குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த அந்தப்பகுதி மக்கள் தென்பாகம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ மளமளவென பரவியது. குடோனில் சில பகுதி முழுவதும் தீக்கிரையாகின.

    சம்பவ இடத்திற்கு தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கராஜ், முகிலன் மற்றும் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய மாவட்ட உதவியாளர் நட்டார் ஆனந்தி, சிப்காட் ராஜ், தலைமையிலான தீயணைப்பு துறையினர், தெர்மல் நகர், ஸ்பிக் நகர், உள்ளிட்ட இடங்களில் இருந்து 6 வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தீ விபத்தில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இருந்ததாகவும், அதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கழிவு பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×