என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    Premallatha Vijayakant
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய சீர்கேடாக மாறி இருக்கிறது - பிரேமலதா விஜயகாந்த்

    • கொலை செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது.
    • ரவுடிகளுக்கு எதுவும் புரிந்ததாக தெரியவில்லை.

    தமிழ்நாட்டில் அடுத்தடுத்து அரசியல் பிரமுகர்கள் வெட்டி படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு சீர்கேடாக மாறி இருப்பதாக தேமுதிக கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா...? தருமபுரியில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிரபல பிரியாணி கடைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த ஊழியரைச் சரமாரியாக வெட்டிக் கொன்றது."

    "தொடர்ந்து, சிவகங்கை அருகே பாஜக பிரமுகர் செல்வகுமார் நேற்றிரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இன்று அதிகாலை கடலூர் அருகே அதிமுக நிர்வாகி பத்மநாதன் வெட்டிக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, குமரி அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக் கொல்லப்பட்டார்."

    "இதைப் பார்க்கும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுப் போய்விட்டது. கொலை செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. புதிதாகப் பதவியேற்ற டிஜிபி திரு. அருண் அவர்கள், உடனடியாக இது போன்ற படுகொலைகள் தடுக்கப்படும் என்றும், ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொன்னால் தான் புரியும் என்று கூறினார்."

    "ஆனால் இன்று வரை எதுவும் தடுக்கப்படவும் இல்லை, ரவுடிகளுக்கு எதுவும் புரிந்ததாகவும் தெரியவில்லை. இன்னும் படுகொலைகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய சீர்கேடாக மாறி இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது."

    "டாஸ்மாக் கஞ்சா போதை வஸ்துக்கள் பயன்பாடு அதிகமாக இருப்பது தான் இதற்கு மிக முக்கிய காரணம், தேமுதிக இதை வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே தமிழக அரசு இதைக் கவனத்தில் கொண்டு போதை இல்லா தமிழகத்தை உருவாக்கவும், தமிழ்நாடு ஒரு கொலை நாடாக மாறாமல் இருக்க உடனடியாகத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×