என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கார்த்தி சிதம்பரம் கூட்டணிக்கு வேட்டு வைக்கப் பார்க்கிறார்.
    • மோதல் சமூக வலைத்தளங்களில் விசுவரூபம் எடுத்து வருகிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரசுக்குள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கார்த்தி ப.சிதம்பரம் ஆகியோரது கருத்துக்களால் மோதல் வெடித்துள்ளது. இருவருக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளதால் கட்சியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    புதுக்கோட்டையில் நடந்த காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்தில் கார்த்தி ப. சிதம்பரம் எம்.பி. பேசிய போது, கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக எந்த பிரச்சனையையும் கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது. மக்கள் பிரச்சனைகளை சுட்டிக் காட்ட வேண்டும். தேர்தலுக்காகத் தான் கூட்டணி. நமது பலத்தையும் நாம் நிரூபிக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதிலடி கொடுத்து முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறும்போது, `தி.மு.க. கூட்டணி இல்லாவிட்டால் கார்த்தி ப.சிதம்பரத்தால் டெபாசிட் கூட வாங்கி இருக்க முடியாது.

    தேர்தலுக்கு முன்பு தனது கருத்தை சொல்லி இருக்க வேண்டியதுதானே? உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தொண்டர்கள் சிலருக்கு பதவி கிடைப்பதை தடுக்க பார்க்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

    இளங்கோவன் கட்சியை அடகு வைக்க பார்க்கிறார் என்றும் கார்த்தி ப. சிதம்பரம் கூட்டணிக்கு வேட்டு வைக்கப் பார்க்கிறார் என்றும் தொண்டர்கள் காரசாரமாக விமர்சிக்கிறார்கள்.

    இந்த மோதல் சமூக வலைத்தளங்களில் விசுவ ரூபம் எடுத்து வருகிறது. மாறி மாறி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    இந்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்களால் காங்கிரசில் பரபரப்பு நிலவுகிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளரும், மாநில துணை தலைவருமான பொன். கிருஷ்ணமூர்த்தி கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கிறார். அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளை வழங்கியபோது கூடுதலாக தாருங்கள் என கார்த்தி சிதம்பரம் ஏன் கேட்க வில்லை?

    நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கவில்லை என்று கூறும் கார்த்தி சிதம்பரம் முதல்வரை சந்தித்து வலியுறுத்தி இருக்கலாமே.

    ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்து கொண்டு எதிர்கட்சி தலைவர் அண்ணாமலை கேட்கும் கேள்விகளை கார்த்தி கேட்பதில் லாபம் என்ன? காமராஜர் ஆட்சி அமைப் போம் என ஒரு வார்த்தை பேசிவிட்டு, கூட்டணி கட்சியை விமர்சித்து விட்டு மேடையை விட்டு இறங்கினால் காமராஜர் ஆட்சி அமைந்து விடுமா? காங்கிரஸ்தான் வளர்ந்து விடுமா? தி.மு.க. கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வகையில் பேசி வரும் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதேபோல் இளங்கோவன் ஆதரவாளரான மயிலை அசோக் கூறும்போது, கூட்டணி என்பதை விட நம் வலிமை என்ன என்பதையும் நாம் உணர வேண்டும். இளங்கோவனை இழிவாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

    காங்கிரஸ் பொது செயலாளர்களில் ஒருவரான விஜய இளஞ்செழியன் கூறியதாவது:-

    எங்கள் கூட்டணியில் தி.மு.க.தான் பெரிய கட்சி என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அவர்கள் துணையோடுதான் வெற்றியும் பெற்றோம் என்பது உண்மை என்பதை சுட்டிக் காட்டிய கார்த்தி சிதம்பரம் அதே நேரம் இந்த வெற்றிக்கு காங்கிரசின் பங்களிப்பும் முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது.

    பா.ஜ.க.வுக்கு எதிராக சிறுபான்மையினரின் வாக்குகளை திரட்டிக் கொடுத்தது காங்கிரஸ் என்பதை மறுக்க முடியுமா? என்பதைதான் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கார்த்தி சிதம்பரம் பேசினார். அவர் பொதுக் கூட்டத்தில் பேசவில்லை. இந்த கருத்துக்களை ஊழியர்கள் கூட்டத்தில் பேசாமல் எங்கு பேசுவது? இந்த யதார்த்த நிலவரங்களை சொன்னால்தானே தொண்டர்கள் உற்சாகம் அடைவார்கள்.

    தி.மு.க.வினர் காங்கிரசாரை மதிப்பதில்லை என்ற ஆதங்கம் எப்போதுமே இருப்பதுதான். 2021 சட்ட மன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசச் சென்ற கே.எஸ். அழகிரி அறிவாலய வாசலிலேயே கண் கலங்கியது மறந்து விட்டதா?

    தி.மு.க.வினர் மதிக்கவில்லை என்று தொண்டர்கள் மத்தியிலும் கண்கலங்கினாரே. அவ்வளவு ஏன், இதே இளங்கோவன் பொறுப்பில் இருந்தபோது நாங்கள் சந்தைமடமா நடத்துகிறோம். ஆட்சியில் பங்கு கேட்க எங்களுக்கு உரிமை இல்லையா என்று கேட்டவர்தானே.

    இப்போது கார்த்தி சிதம்பரம் என்ன சொல்கிறார்? நாங்கள் எம்.பி., எம்.எல்.ஏ. ஆகிவிட்டோம். உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசை கை விட்டு விடக்கூடாது. கூடுதல் இடங்கள் கேட்டு வாங்க வேண்டும். தொண்டர்கள் நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். அதற்கு நாம் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். நமது பலத்தை கூட்ட வேண்டும் என்று தானே கூறுகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது?

    காங்கிரசை வளர்க்கவும் கூடாது. உரிமைகளை கேட் கவும் கூடாது என்று நினைக்கும் இளங்கோவனை போன்றவர்களால்தான் தருவதை பெறும் நிலையில் காங்கிரஸ் இருக்கிறது என்றார்.

    காங்கிரஸ் துணைத் தலைவர் இமயா கக்கன் கூறியதாவது:-

    டெபாசிட் வாங்க முடியாது என்றால் என்ன காரணம்? கட்சி பலமில்லை என்பது தானே. எனவே கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற கார்த்தியின் கருத்திலும் தப்பில்லை.

    கூட்டணியை கலந்துதான் பல செயல்கள் செய்ய வேண்டி இருப்பதால் கட்சியை வளர்ப்பதில் தொய்வு ஏற்படுகிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணிக்கு கை கொடுப்போம். அது லட்சியத்தை அடைய உதவும். மற்ற நேரங்களில் காங்கிரசை வளர்க்க வேண்டும். பலப்படுத்த வேண்டும்.

    2014 தேர்தலில் தனித்து நின்ற தி.மு.க.வும் வெற்றி பெற முடியவில்லை. காங்கிரசும் வெற்றி பெற முடியவில்லை. இதுதான் கட்சிகளின் நிலை என்பதை மறந்து விடக்கூடாது.

    • சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றிருப்பது சிறப்புக்குரியது.
    • வீராங்கனையின் வெற்றிக்கு துணை நின்ற பெற்றோரையும், பயிற்சியாளரையும் பாராட்டுகிறேன்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதலுக்கான இறுதிப்போட்டியில் மனு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

    இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கமாக வெண்கலப் பதக்கம் பெற்றிருக்கும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனு பாக்கர் தாய் நாட்டிற்கு உலக அளவில் பெருமை சேர்த்திருக்கிறார்.

    இவர் ஏற்கனவே சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றிருப்பது சிறப்புக்குரியது.

    வீராங்கனையின் வெற்றிக்கு துணை நின்ற பெற்றோரையும், பயிற்சியாளரையும் பாராட்டுகிறேன்.

    ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்திய நாட்டிற்கு முதல் பதக்கம் வென்று கொடுத்திருக்கும் மனு பாகெர் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனைப் படைத்துமென் மேலும் வளர, வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பழைய பொருட்களை தரம் பிரித்துக் கொண்டு இருந்தார்.
    • எந்திரம் வெடித்ததற்கான காரணம் குறித்து ஆய்வு.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே கடவூர் பசும்பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 49). பழைய இரும்பு வியாபாரி. நேற்று கிருஷ்ணமூர்த்தி வழக்கம் போல் கிராமங்களுக்கு சென்று பழைய பொருட்களை வாங்கிகொண்டு வீட்டிற்கு வந்து மதியம் குடும்பத்துடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.

    பின்னர் தன் வீட்டிற்கு அருகில் உள்ள ஆஸ்பெட்டாஸ் கொட்டகைக்கு சென்று பழைய பொருட்களை தரம் பிரித்துக் கொண்டு இருந்தார்.

    அப்போது விவசாய பயிருக்கு மருந்து அடிக்கும் பழைய ஸ்பிரே எந்திரத்தில் இருக்கும் பித்தளை பொருட்களை எடுப்பதற்காக அதை சம்மட்டியால் அடித்தார். இதில் எதிர்பாராத விதமாக ஸ்பிரே எந்திரம் பயங்கரமாக வெடித்து சிதறியது. இதில் கிருஷ்ண மூர்த்தி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்த வெடி சத்தம் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டது. சம்பவத்தின்போது கிருஷ்ணமூர்தியின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சிதறின. கிருஷ்ணமூர்த் தியின் குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது கிருஷ்ண மூர்த்தி உடல் சிதறி இறந்து கிடந்ததை கண்டு அசிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்த கரூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் வடிவேல் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்குசென்று பழைய இரும்பு பொருட்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை டி.எஸ்.பி. செந்தில் குமார், தோகை மலை இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீ சார், கிருஷ்ண மூர்த்தியின் உட லைகைபற்றி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். எந்திரம் வெடித்ததற்கான காரணம் என்ன என்பது மர்மமாக உள்ளது.

    காற்றழுத்தம் காரணமா? அல்லது அதில் வெடி பொருட்கள் இருந்ததா? என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். பூச்சி மருந்து அடிக்கும் இயந்திரத்தின் ஸ்ப்ரே மோட்டாரில் ஆயில் பெட்ரோல் இருந்துள்ளதாக கூறுகின்றனர். இது குறித்து அறிவியல் தொழில்நுட்ப அதிகாரிகளை வரவழைத்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    பலி யான கிருஷ்ண மூர்த்திக்கு மல்லேஸ்வரி (44) என்ற மனைவியும், ஜெயக்குமார் (22), சிவமுருகன் (12) ஆகிய 2 மகன்களும் செல்வி (17) என்ற மகளும் உள்ளனர். ஸ்பிரே எந்திரம் வெடித்து வியாபாரி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
    • நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராக உள்ளார்.

    மாநகராட்சியில் மொத்தம் தி.மு.க.வில் 33 பேர், காங்கிரஸ்-1, அ.தி.மு.க.-8, த.மா.கா-1, பா.ம.க.-2, பா.ஜனதா-1, விடுதலை சிறுத்தைகள்-1, சுயேட்சைகள்-4 உறுப்பினர்கள் உள்ளனர். துணை மேயராக காங்கிரசை சேர்ந்த குமரகுருநாதன் உள்ளார்.

    மேயர் மகாலட்சுமி யுவராஜிக்கு சொந்த கட்சியான தி.மு.க. கவுன்சிலர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். மேயருக்கு எதிராக மொத்தம் 33 கவுன்சிலர்கள் இருந்தனர்.

    அவர்கள், மகாலட்சுமி யுவராஜ் மேயர் பதவியில் இருந்து விலககோரி மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனரிடம் புகார் மனு அளித்தனர். தி.மு.க. எதிர்ப்பு கவுன்சிலர்களை கட்சி மேலிடம் அழைத்து சமாதானம் செய்தும் அவர்கள் தங்களது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

    இதைத்தொடர்ந்து மேயருக்கு எதிராக இன்று (29-ந்தேதி) நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் அது தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் மொத்தம் உள்ள 51 கவுன்சிலர்களில் 30-க்கும் மேற்பட்டோர் சொகுசு பஸ்சில் காஞ்சிபுரத்தில் இருந்து சுற்றுலா சென்றனர்.

    அவர்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டுகளில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்து இருந்தது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் சரியாக காலை 10 மணிக்கு தனது இருக்கையில் வந்து அமர்ந்தார். அவரது இருக்கை அருகில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களிக்க பூட்டு போடப்பட்ட பெட்டியும் தயாராக இருந்தது.

    ஆனால் மாநகராட்சி கூட்டத்திற்கு கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. அதிகாரிகள் மட்டும் வந்திருந்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால் வெறிச்சோடி கிடந்தது.

    சிறிது நேரத்திற்கு பின்னர் அதிருப்தி தி.மு.க. கவுன்சிலரான 34-வது வார்டு உறுப்பினர் பிரவீன் குமார் மாநகராட்சி கூட்டத்திற்கு வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர் இருக்கையில் அமராமல் நேராக கமிஷனர் செந்தில் முருகனிடம் சென்று கடிதம் ஒன்றை கொடுக்க முயன்றார். ஆனால் அதனை கமிஷனர் வாங்க மறுத்தார். மேலும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னர் கடிதத்தை வழங்கும் படி தெரிவித்தார்.

    ஆனால் கவுன்சிலர் பிரவீன்குமார் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட வில்லை. மேலும் அவர் தான் கொண்டு வந்த கடிதத்தை கமிஷனர் செந்தில் முருகன் இருந்த மேஜை மீது வைத்து விட்டு சென்றார். அதனை கமிஷனர் கண்டுகொள்ள வில்லை. அதனை எடுத்து பார்க்கவும் இல்லை.

    மேயர் மகாலட்சுமி யுவராஜிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து போர்க்கொடி தூக்கிய கவுன்சிலர்கள் மற்றும் மேயருக்கு ஆதரவான கவுன்சிலர்கள் யாரும் கூட்டத்தில் பங்கேற்காததால் தொடர்ந்து பரபரப்பான நிலை நிலவியது. மேயரும் கூட்டத்திற்கு வரவில்லை.

    மேயரை பதவி நீக்கம் செய்ய 5-ல் 4 பங்கு கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். ஆனால் உறுப்பினர்கள் யாரும் கூட்டத்தில் பங்கேற்காததால் நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் அது தொடர்பான விவாதம், வாக்கெடுப்புக்கு ஏற்கப்பட வில்லை. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் மகாலட்சுமி யுவராஜின் மேயர் பதவி தப்பியது.

    கட்சியின் தலைைமக்கு கட்டுப்பட்டு மேயர் மகாலட்சுமி யுவராஜிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சி முன்பு டி.எஸ்.பி.முரளி தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • காவிரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றனர்.
    • தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய் துறையினர் ஆகியோர் வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா, கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அந்த அணைகளுக்கு வரும் உபரி நீரை அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றி வருகிறது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை சற்று அதிகரித்து வினாடிக்கு 1 லட்சத்து 66 ஆயிரம் கன அடியாக தண்ணீர் இன்று 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி அளவில் நீர் திறந்து விடப்பட்டது.

    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 தினங்களாக தொடர்ந்து நீர்வரத்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீரானது நேற்று காலை 9 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 55,000 கன அடியாக அதிகரித்து காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மதியம் 1 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து 1 லட்சத்து 60,000 கன அடியாக அதிகரித்தது.

    இந்த நீர்வரத்தானது நேற்று மாலை வரை அதே நிலையில் நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று சரிந்து 1 லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    மேலும் கர்நாடகா அணைகளான கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் தமிழகத்திற்கு திறந்து விடும் உபரி நீர் 1 லட்சத்து 43 ஆயிரம் கன அடியாக சரிந்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தும் சரிய வாய்ப்பு உள்ளது என மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதன் காரணமாக பிலிக்குண்டுலு பகுதியில் தொடர்ந்து நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இன்று 3-வது நாளாக ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நாகர்கோவில், முதலை பண்ணை, பென்னாகரத்தில் உள்ள நாகமரை, ஏரியூர் ஆகிய காவிரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அதிகாரிகள் வெள்ளம் சூழந்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு பொதுமக்களை மக்கள் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள தனியார் திருமண மண்டபம் மற்றும் அரசு பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்கவும் அருவிகளில் மற்றும் காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் 14-வது நாளாக தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய் துறையினர் ஆகியோர் வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அருவிகளில் தண்ணீர் காட்டாற்று வெள்ளம்போல் விழுந்தது.
    • குளிக்க வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று காலை முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள முக்கிய அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று மாலையில் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்தது.

    ஒருகட்டத்தில் கடுமை யான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐந்தருவியில் 5 கிளைகளும் ஒருசேர காட்சியளிக்கும் அளவு தண்ணீர் காட்டாற்று வெள்ளம்போல் விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

    இதனால் நேற்று விடு முறை நாளில் குடும்பத்துடன் குளிக்க வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயினருவிகளில் வெள்ளப்பெருக்கை தூரத்தில் நின்று பார்த்து ரசித்துவிட்டு சென்றனர். தொடர்ந்து இரவு முழுவதும் மலைப்பகுதியில் மழை பெய்தவண்ணம் இருந்ததால் வெள்ளப்பெருக்கு குறைய வில்லை.

    இந்நிலையில் இன்று காலையில் மலைப்பகுதியில் சாரல் மழை சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவில் சற்று தண்ணீர் குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் குளிப்பதற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் விழுந்து வருகிறது. எனவே அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு இன்று 2-வது நாளாக தடை நீடிக்கிறது.

    அருவிகளுக்கு வரும் தண்ணீரின் அளவு சீராகும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் உடனடியாக குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 19,000 பேருந்துகள் மட்டுமே இயங்கும் அவலநிலை காணப்படுகிறது.
    • போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடு வழங்கப்படாதது ஏன்?

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கும் போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,

    தமிழ்நாடு முழுவதும் 10,000 வழித்தடங்களில், 1,40,000 தொழிலாளர்களுடன், நாள்தோறும் 2 கோடி ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செயற்பட்டு வந்த அரசுப்போக்குவரத்துத்துறையை முழுதாக சீரழித்துள்ளது திமுக அரசு. கடந்த 2017ஆம் ஆண்டு வரை 23,000 பேருந்துகள் இயங்கி வந்த அரசுப்போக்குவரத்துத்துறையில், தற்போது 4,000 பேருந்துகள் வரை குறைக்கப்பட்டு, வெறும் 19,000 பேருந்துகள் மட்டுமே இயங்கும் அவலநிலை காணப்படுகிறது. அதுமட்டுமின்றி இலவசப் பேருந்துகளால் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்ட திமுக அரசு ஆயிரக்கணக்கான தடங்களில் பேருந்துகள் சேவையை நிறுத்தி பெருங்கொடுமையையும் புரிந்துள்ளது.

    அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் காலியாகவுள்ள 25,000 பணியிடங்களுக்கு, புதிய தொழிலாளர்கள் நியமிக்கப்படாதது ஏன்? பணியின்போது உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகள் 8,000 பேருக்கு, கருணை அடிப்படையில் வழங்க வேண்டிய வாரிசு வேலையை வழங்க மறுப்பது ஏன்? 90,000 போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்காதது ஏன்? நிதிநிலையைக் காரணம் காட்டி பணப்பலன்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில், போக்குவரத்து ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி 13,000 கோடி ரூபாயையும் சிறிதும் மனச்சான்றின்றி திமுக அரசு எடுத்துக்கொண்டது ஏன்?

    இதர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடு வழங்கப்படாதது ஏன்? மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பினை ஒவ்வொரு ஆண்டும் ஈடுகட்டும் தமிழ்நாடு அரசு, போக்குவரத்துக் கழகத்தில் ஏற்படும் இழப்பினை மட்டும் ஈடுகட்ட மறுப்பதேன்? பேருந்துகள் தனியார்மயம், ஒப்பந்த அடிப்படையில் தனியார் ஊழியர்களை நியமிப்பது என போக்குவரத்துக் கழகங்களைச் சீர்குலைக்க முயல்வது ஏன்? என்ற கேள்விகளுக்கு திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது?

    உலக முதலீட்டாளர்களையெல்லாம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைத்துவந்து, பல இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றுள்ளதாக பெருமை பேசும் திமுக அரசு, போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தைக்கூட வழங்கமுடியாமல் திணறுவது ஏன்? இதுதான் திமுக அரசு ஏற்படுத்திய நூற்றாண்டு வளர்ச்சியா? மதுக்கடைகளைத் தவிர மற்ற அனைத்து அரசு நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரைவார்ப்பதுதான் திராவிட மாடல் சாதனையா? போக்குவரத்துத்துறையையில் தனியார் ஒப்பந்த ஊழியர்களை நியமித்தால் அவர்களின் உரிமைகளை யார் பாதுகாப்பது? இதில் எங்கே இருக்கிறது சமூகநீதி? போக்குவரத்துக் கழகத்தையே லாபத்தில் நடத்த திறனற்ற திமுக அரசு, பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் பல இலட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டி மக்களின் வறுமையைப் போக்கும் என்பதை எப்படி நம்ப முடியும்? 'எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத ஆட்சியை நடத்துகிறோம்' என்று கூறிவிட்டு, குறையைத் தவிர வேறு எதையுமே கூற முடியாத ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார் முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள்.

    கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள அகவிலைப்படி முழுதாக வழங்கப்படும், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகளை அளித்து அதிகாரத்தை அடைந்த திமுக, தற்போது அதனை நிறைவேற்ற மறுப்பது போக்குவரத்து ஊழியர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். பொதுப்போக்குவரத்தை முழுமையாக நம்பியுள்ள ஏழை-எளிய மக்கள், தொழிலாளிகள், தினக்கூலிகள், சிறு வியாபாரிகள், மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள், பெண்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படாமலிருக்க அரசு போக்குவரத்துக்கழகத்தைப் பாதுகாக்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.

    ஆகவே, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள அகவிலைப்படியை வழங்குதல், பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்துதல், கருணை அடிப்படையில் வாரிசு பணி வழங்க முன்னுரிமை, காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்புதல், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசே ஈடுகட்டுதல், இதர அரசுத்துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம், மருத்துவக் காப்பீடு, பணப்பலன் வழங்குதல், பேருந்துகளையும் - போக்குவரத்து பணியிடங்களையும் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவைக் கைவிடுதல் உள்ளிட்ட போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றித்தரவேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

    • அரசியலில் அனைவரும் இருக்க வேண்டும்.
    • விஜய் என்னை அழைத்தால் நிச்சயம் செல்வேன்.

    தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகராக வலம் வருபவர் அமீர். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமீர், விஜய் அழைத்தால் நிச்சயம் அவரது கட்சிக்கு செல்வேன் என்று பதில் அளித்துள்ளார்.

    திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் அமீர், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "கிராமங்கள் என்பது இந்தியாவின் முதுகெலும்பு. திரைத்துறையில் கிராமங்களை தவிர்த்துவிட்டு எந்த படத்தையும் எடுக்க முடியாது. அரசியலில் அனைவரும் இருக்க வேண்டும்."

    "நான் அரசியலுக்கு வந்தாலும் வரலாம். எனது உள் உணர்வு அதைத் தொன் சொல்கிறது. விஜய் என்னை அழைத்தால் நிச்சயம் செல்வேன். என்னை பொறுத்தவரை விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளது."

    "மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக தெரிகிறது. குறிப்பாக தமிழகத்தை புறக்கணித்ததை சில அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரித்தது வேதனை அளிக்கிறது. அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு சமமாக பார்க்க வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் அமைச்சர் பதவி வழங்கினால் எனக்கு மகிழ்ச்சி."

    "சட்டம் ஒழுங்கு மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் சரியாக தான் உள்ளது. ஆளும் கட்சியை எதிர்த்து அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கை பற்றி மட்டுமே கூற முடியும்," என்றார். 

    • இறுதிப் போட்டி சென்னையில் நடக்கிறது.
    • கோவை-திருப்பூர் அணிகள் நாளை மோதல்.

    திண்டுக்கல்:

    8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந்தேதி சேலத்தில் தொடங்கியது. அங்கு 9 ஆட்டங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவையில் 2-வது கட்டமாக 8 போட்டி நெல்லையில் 3-வது கட்டமாக 6 ஆட்டங்களும் நடத்தப்பட்டது.

    4-வது மற்றும் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேர்த்து 5 போட்டிகள் திண்டுக்கல்லில் நேற்றுடன் முடிவடைந்தது.

    லீக் முடிவில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது. 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் , திருப்பூர் தமிழன்ஸ் ஆகியவை 4 வெற்றி, 3 தோல்வியுடன் தலா 8 புள்ளிகள் பெற்றன.

    நிகர ரன்ரேட் அடிப்படையில் திருப்பூர் 2-வது இடத்தையும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது இடத்தையும் , திண்டுக்கல் 4-வது இடத்தையும் பிடித்தன. முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

    நெல்லை ராயல் கிங்ஸ் (7 புள்ளி), திருச்சி கிராண்ட் சோழாஸ் (6), மதுரை பாந்தர்ஸ் (5) சேலம் ஸ்பார் டன்ஸ் (2) ஆகிய அணிகள் 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    இன்று ஓய்வு நாளாகும். பிளே ஆப் சுற்று போட்டிகள் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது.

    திண்டுக்கல்லில் நாளை இரவு 7.15 மணிக்கு நடை பெறும் முதல் தகுதி சுற்றில் (குவாலிபயர்-1) முதல் இடத்தை பிடித்த கோவை கிங்ஸ்-இரண்டாம் இடத்தை பிடித்த திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் இருக்கிறது. தோல்வி அடையும் அணி 2-வது தகுதி சுற்றில் (குவாலிபையர்-2) விளையாடும்.

    கோவை அணி 'லீக்' ஆட்டத்தில் திருப்பூரை 1 ரன்னில் வீழ்த்தி இருந்தது. இதனால் நம்பிக்கையுடன் விளையாடி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெறும் ஆர்வத்தில் இருக்கிறது. தோல்வி அடையும் அணி 2-வது தகுதி சுற்றில் (குவாலியைர்-2) விளையாடும்.

    நாளை மறுநாள் (31-ந் தேதி) திண்டுக்கல்லில் நடை பெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) ஆட்டத்தில் 3-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நான்காம் இடத்தை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி 'குவாலிபையர்-1' ஆட்டத்தில் தோற்கும் அணியுடன் குவாலிபையர்-2 போட்டியில் விளையாடும். தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.

    குவாலிபையர்-2 ஆட் டம் ஆகஸ்ட் 2-ந்தேதியும், இறுதிப் போட்டி 4-ந்தேதியும் சென்னையில் நடக்கிறது.

    • இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 7-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
    • பொது கலந்தாய்வு இன்று தொடங்கி செப்டம்பர் 3-ந்தேதி வரை நடை பெறுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 433 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது.

    நடப்பாண்டு கலந்தாய்வில் பங்கேற்க 2 லட்சத்து 9,645 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 99,868 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 10-ந்தேதி வெளியிடப்பட்டது.

    அதைத் தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது. சிறப்பு பிரிவில் 9,639 இடங்கள் இருந்த நிலையில் அதில் 836 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதில் 92 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.

    இதையடுத்து பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. 3 சுற்றுகளாக நடைபெறும் இந்த கலந்தாய்வில் முதல் சுற்று ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில்26,654 மாணவர்கள் பங்கேற்றார்கள். மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளை வருகிற 31-ந்தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும்.

    இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை ஆகஸ்ட் 1-ந்தேதி காலை 10 மணிக்குள் வெளியிடப்படும்.

    மறுநாள் 2-ந்தேதி மாலை 5-மணிக்குள் ஒப்புதல் அளித்து மாணவர்கள் இடங்களை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். மேலும் இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 7-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

    பொது கலந்தாய்வு இன்று தொடங்கி செப்டம்பர் 3-ந்தேதி வரை நடை பெறுகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org எனும் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர மாணவ-மாணவர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். அதனால் கடந்த ஆண்டை விட அதிகமான இடங்கள் நிரம்ப வாய்ப்பு உள்ளது.

    • சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.
    • சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரமோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆடிப்பூர பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு பராசக்தி அம்மன் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் கோமதி குணசேகரன், சினம் பெருமாள், மேலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர விழாவில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் மாடவீதி உலா நடைபெறும்.

    10-ம் நாள் கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். அதனை தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெறும். 

    • வடபழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    போரூர்:

    ஆடி கிருத்திகையை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இன்று அதிகாலை 3மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு பின்னர் பள்ளியறை பூஜை முடிந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    இதையடுத்து அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று இரவு 11 மணி வரை முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நண்பகல் 12 மணி வரை சந்தனகாப்பு அலங்காரத்திலும், அதைத்தொடர்ந்து மாலை 4 மணி வரை ராஜ அலங்காரமும், பின்னர் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்துடனும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

    பக்தர்கள் நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் ஆங்காங்கே குடி தண்ணீர் வசதி, முதியோர், கைக்குழந்தையுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை என பல்வேறு வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கோவில் வளாகத்தை சுற்றியும் கோவிலுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×