என் மலர்
உள்ளூர் செய்திகள்
- யாராவது வதந்தியை பரப்புவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம்.
- மிரட்டல் விடுத்த செல்போன் குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை:
மதுரை நரிமேடு பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா மேல்நிலைப் பள்ளி நிர்வாகி ஒருவருக்கு செல்போன் வாயிலாக ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதேபோல் பொன்மேனி பகுதியில் உள்ள ஜீவனா மேல்நிலைப்பள்ளி, சிந்தாமணி பகுதியில் உள்ள வேலம்மாள் போதி காம்பஸ் உள்ளிட்ட பள்ளிகளுக்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் மூலம் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதில் வேலம்மாள் பள்ளி அருகிலேயே மருத்துவக்கல்லூரியும் அமைந்துள்ளது.
அடுத்தடுத்து வந்த தொடர் மிரட்டலையடுத்து மூன்று பள்ளிகளுக்கும் விரைந்து சென்ற வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் 6 தனியார் பள்ளிகளுக்கும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன்பேரில் மேற்கண்ட அந்த பள்ளிகளுக்கும் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார் சென்று சோதனை நடத்தி வருகிறார்கள்.
மதுரை மாநகரில் அதிகாலையில் செல்போன் மற்றும் இ-மெயில் மூலம் 9 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, யாராவது வதந்தியை பரப்புவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது வரை மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு தொடர்பான எந்தவொரு பொருட்களும் கிடைக்கவில்லை. மிரட்டல் விடுத்த செல்போன் குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த பள்ளிகளுக்கு இன்று காலை வழக்கம்போல் மாணவ, மாணவிகள் சென்றிருந்தனர். தகவல் கிடைத்ததும் பள்ளிகளுக்கு விரைந்து சென்ற பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
- பலர் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
- வானத்தில் மேகக்கூட்டங்கள் மலைபோல் காட்சி அளித்தது.
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இதுஒரு உலக புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு மட்டும் தான் காலையில் சூரியன் உதயமாகும் காட்சியையும், மாலையில் சூரியன் மறையும் காட்சியையும் ஒரே இடத்தில் இருந்து பார்க்க முடியும்.
ஆனால் இந்த அபூர்வ நிகழ்வை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியில் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்திருந்தனர்.
இந்தநிலையில் மாலை கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் சூரியன் மறையும் காட்சியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டு இருந்தனர். மாலை சரியாக 6.20 மணிக்கு சூரியன் மறைந்தது. சூரியன் மறையும்போது வானத்தில் அபூர்வ நிகழ்வு தோன்றியது.
வானத்தில் மேகக்கூட்டங்கள் மலைபோல் காட்சி அளித்தது. அதற்கிடையே சூரியன் மறையும்போது அதனுடைய பிரதிபலிப்பு வானத்தில் அபூர்வமாக காட்சியளித்தது.
செம்பழுப்பு நிறத்தில் தீப்பிழம்பு போல் வானத்தில் அந்த அபூர்வ நிகழ்வு தோன்றியது. இந்த அபூர்வ காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர். பலர் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
- விஜய் தான் உங்களை மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க என்னை அனுப்பி வைத்துள்ளார்.
- 32 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தவர்கள் நீங்கள்தான்.
பெரம்பலுார்:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பின்னர் நடைபெறும் முதல் மாநாடு என்பதால் இதை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இது குறித்து விஜய் ஏற்கனவே கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.
இதை தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்து வருகிறார். நேற்று அவர் பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டிற்கு குடும்பத்துடன் வர வேண்டும். கட்டுப்பாடு, ஒழுக்கத்துடன், பெண்களை மாநாட்டிற்கு பாதுகாப்புடன் அழைத்து வரவேண்டும்.
கட்சியின் தலைவர் விஜய் தான் உங்களை மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க என்னை அனுப்பி வைத்துள்ளார். எனவே மாநாட்டிற்கு அனைவரும் வர வேண்டும். கட்சியின் முதல் அரசியல் மாநாடு வெற்றி மாநாடாக தான் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
கட்சிக்கு உண்மையாக உழைப்பவா்களுக்கு மட்டும் தான் பதவிகள் வழங்கப்படும். அன்றையிலிருந்து இன்றைக்கு வரைக்கும் மக்களுக்கு சேவை செய்து கொண்டு நலத்திட்டம் கொடுத்த இயக்கம், கட்சி என்று சொன்னால் அது தமிழகம் வெற்றிக்கழகம் தான். இப்போது விஜய் உச்சத்தில் இருப்பதால் கட்சிக்கு பலர் வருவார்கள். அவர்களை வரவேற்கிறோம். வர வேண்டாம் என்று சொல்லவில்லை.
ஆனால், 32 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தவர்கள் நீங்கள்தான். உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் தலைவர் விஜய் வந்து நிற்பார். தமிழக வெற்றி கழகம் துணை நிற்கும்.
எனவே, சந்தேகப்பட வேண்டாம். எதுவாக இருந்தாலும் ரசிகர்களுக்கு பிறகுதான். காசு, பணம் இருந்தாலும் ரசிகர்களை மீறி எதுவும் நடக்காது. ஒரே ஒரு தொண்டனாக இருந்தாலும் சரி, தோழனாக இருந்தாலும் சரி, அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் கைவிடப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அரியலூரில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் புஸ்சி ஆனந்த் பேசுகையில், அடுத்த மாதம் நடைபெறும் மாநாட்டில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மாநாட்டுக்கு வரும்போது கவனமாக வருகை தர வேண்டும். 2026-ல் கட்சித் தலைவர் விஜய்யை தமிழக முதல்வராக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.
- தற்போது பூத்து குலுங்குவதால் மஞ்சள் போர்வை போர்த்தியது போல் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
- கேரளா சுற்றுலா பயணிகள் அதிகம் சூரியகாந்தி மலர்கள் பூக்கும் பகுதியில் முற்றுகை இடுகின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடியில் இருந்து சாம்பவர்வடகரை செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள வயல்வெளிகளில் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் சூரியகாந்தி மலர்களை பயிரிட்டு வருவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் பலர் சூரியகாந்தி மலர்களை பயிரிட்டனர். அது தற்போது பூத்து குலுங்குவதால் மஞ்சள் போர்வை போர்த்தியது போல் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
அதனை கண்டு ரசிக்க உள்ளூர் சுற்றுலா பணிகள் ஆர்வம் காட்டுவதை விட அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்த தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகள் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்டவற்றை பார்வையிட வரும்போது அப்படியே சூரியகாந்தி மலர்கள் பூத்துக் குலுங்கும். ஆய்க்குடி அருகே உள்ள கம்பளி பகுதியில் முற்றுகை இடுகின்றனர்.
தற்போது கேரளாவில் இருந்து தினமும் வரும் சுற்றுலா பயணிகள் சாலைகளில் கார்களை நிறுத்திவிட்டு வயல்களில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி மலர்களை ரசிப்பதற்கு செல்லும்போது அவர்களிடம் வயல் உரிமையாளர்கள் ஒரு நபருக்கு ரூ. 25 வசூல் செய்து வருகின்றனர்.
பணம் செலுத்தி சூரியகாந்தி மலர்களை ரசிக்கும் கேரளா சுற்றுலா பயணிகள் சூரியகாந்தி மலர்களின் நடுவே நின்று போட்டோ எடுத்து கொண்டாலோ அல்லது அதனை கண்களால் கண்டு ரசித்தாலோ செல்வம் பெருகும் என கேரளா பகுதி மக்களிடையே வழக்கமாக பேசப்பட்டு வருகிறது.
இதனாலேயே கேரளா சுற்றுலா பயணிகள் அதிகம் சூரியகாந்தி மலர்கள் பூக்கும் பகுதியில் முற்றுகை இடுகின்றனர். கேரளாவை சேர்ந்த புதிதாக திருமணமான தம்பதிகளும் ஆர்வமுடன் போட்டோ சூட் நடத்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
- ஒகேனக்கல் வனப்பகுதியில் தொடர் மழை பெய்ய தொடங்கியது.
- நீர்வரத்து இன்று அதிகாலை 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
பென்னாகரம்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலியால் ஒகேனக்கல்லில் இன்று நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடி அளவில் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து கடுமையாக சரிந்து வந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் நேற்று 4 ஆயிரம் கனஅடியாக சரிந்து வந்தது.
தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு, ஒகேனக்கல் வனப்பகுதியில் தொடர் மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிபடியாக அதிகரிக்க தொடங்கியது.
நேற்று இரவு 7 ஆயிரம் கனஅடியாக இருந்து நீர்வரத்து இன்று அதிகாலை 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 13000 கனஅடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலியால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிலிக்குண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
- தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை.
புதுக்கோட்டை:
வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மின்கட்டண உயர்வு, சொத்து வரி, தொழில் வரி, கட்டிட வரைபட அனுமதி கட்டண உயர்வு மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஆலோசனை நடத்தி வருகிறது
ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் வடநாட்டு தொழிலாளர்களை நம்பி தான் வணிகர்கள் உள்ளனர். அவர்கள் வரும்போது பான் மசாலா, குட்கா ஆகியவற்றோடு தான் வருகிறார்கள். இதனை தமிழகத்திற்குள் வரும் போதே அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
ஆன்லைன் வர்த்தகம் இனியும் தொடருமானால் 10 கோடி வணிகர்கள் காணாமல் போய்விடுவார்கள். விரைவில் பிரதமரை சந்திக்க உள்ளோம்
இதேபோல் தமிழகத்தில் உயர்த்தப்படும் மின் கட்டண உயர்வு சொத்து வரி கட்டிட வரைபட கட்டண உயர்வு தொழில் வரி ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்து உள்ளோம்.
வணிக வரித்துறை, உணவு பாதுகாப்பு துறை ஆகிய அதிகாரிகளால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு சில தவறான அதிகாரிகள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு லஞ்சம் பெறுவதற்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது மாற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பருவமழை முன்னேற்பாடுகள் கூட்டத்தை முதல்-அமைச்சர் இன்று நடத்தினார்.
- வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. அனேகமாக வருகிற 15-ந்தேதிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம். இதன் மூலம் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நடத்தினார்.
இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வருவாய் பேரிடர் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட துறை சார்ந்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம், வருவாய் பேரிடர் துறை செயலாளர், பொதுத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், போலீஸ் டி.ஜி.பி., தீய ணைப்பு துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்துவரும் மழைநீர் வடிகால் பணிகள் எந்த அளவுக்கு உள்ளது? அதை விரைந்து முடிக்க வேண்டும். வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
இதுதவிர பருவமழை யால் ஏற்படும் சேதங்களை கையாள தேவையான உபகரணங்களை கையி ருப்பில் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.
மரம் விழுந்தால் அதை வெட்டி அப்புறப்படுத்துவதற்கான எந்திரங்கள், மீட்பு பணிக ளுக்கான படகுகள், ஜே.சி.பி. எந்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவை யான அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.
சென்னையில் மழை வெள்ளத்தை தடுக்க அடையாறு, கூவம் ஆறுகளில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கடல் முகத்துவாரத்தை ஆழப்படுத்தவும் அறிவுரை வழங்கினார்.
கடந்த ஆண்டு கனமழையால் சென்னை மற்றும் தூத்துக்குடி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த 2 மாவட்டங்களிலும் வெள்ள தடுப்பு பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
- கடந்த 2 நாட்களாக குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
- சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் குன்னூர் பகுதிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கல்லார் முதல் குன்னூர் வரை அடர்ந்த வனப்பகுதிக்குள் ரெயில் பயணிக்கும்.
எனவே அந்த பகுதியிலுள்ள தண்டவாள பாதைகளில் அவ்வப்போது மழைக்காலங்களில் மண் சரிவு ஏற்பட்டு ரெயில் தண்டவாளங்கள் சேதமடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கல்லார்-குன்னூர் இடையேயான வனப்பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலை ரெயில் பாதையில் கல்லார் முதல் ஹில்கிரோ வரை அடுத்தடுத்து 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளங்கள் சேதம் அடைந்து உள்ளன.
இந்த நிலையில் மலைரெயில் தண்டவாள பாதைகள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கும் வகையில், ரெயில்வே ஊழியர்கள் ரோந்து மேற்கொண்டனர். அப்போது மேற்கண்ட பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை குன்னூருக்கு புறப்பட்டு சென்ற மலைரயில், கல்லார் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த ரெயில் மீண்டும் மேட்டுப்பாளையத்திதை வந்தடைந்தது.
தொடர்ந்து மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையிலான மலை ரெயில் போக்குவரத்து இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மேலும் சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- 3 பைபர் படகுகளையும் விசைப்படகில் கட்டி இழுத்துச் சென்றனர்.
- இரும்பு உருண்டை, ஐஸ்க ட்டி போன்றவற்றையும் வீசி தாக்குதல்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் எல்லையம்மன் கோவில்தெருவை சேர்ந்த சத்யராஜ் (வயது 40) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த சற்குணம் (35), செந்தில் (50) வில்பிரட் ஆகியோர் கடந்த 28-ந்தேதி காலை செருதூர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இதேபோல், செருதூர் வடக்குத்தெருவை சேர்ந்த கணேசமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அவரும் அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (40), ஆனந்தவேல் (38), அஜித் (24) ஆகியோரும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இதேபோல், செருதூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த செந்தில் (42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் டி.ஆர்.பட்டினத்தை சேர்ந்த மணிவண்ணன் (28), காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த அருள் வடிவேல் (40), சரவணன் பிள்ளை, சுனாமி குடியிருப்பை சேர்ந்த ரமேஷ் (38) ஆகியோரும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அப்போது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தோப்புத்துறையில் இருந்து கிழக்கே சுமார் 23 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் தங்களது படகை நங்கூரம் இட்டு நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது அங்கு 2 விசைப்படகுகளில் வந்த மீனவர்கள் இவர்களது வலையை அறுத்துவிட்டு சென்றனர்.
இதுகுறித்து கேட்டதற்கு தங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மேற்கண்ட 3 பைபர் படகுகளையும் அவர்களது விசைப்படகில் கட்டி இழுத்துச் சென்றனர். அதோடு மட்டுமின்றி இரும்பு உருண்டை, ஐஸ்க ட்டி போன்றவற்றையும் வீசி தாக்கி உள்ளனர்.
பின்னர், காயங்களுடன் மீனவர்கள் நேற்று மாலை கரை திரும்பினர். தகவல் அறிந்ததும் சக மீனவர்கள் உதவியுடன் காயமடைந்த செந்தில், வில்பிரட், சத்தியமூர்த்தி ஆகியோர் சிகிச்சைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்தரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
- நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
- சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், பல்வேறு பகுதிகளில் உள்ள நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் தற்போது தண்ணீரானது அதிக அளவில் கொட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீரானது தற்பொழுது ஆர்ப்பரித்துக் கொண்டு கொட்டி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது மழை குறைந்துள்ள நிலையில், தண்ணீரின் அளவு அருவிகளில் குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சொத்து வரி இரண்டு அரையாண்டு வீதம் வசூலிக்கப்படும்.
- சென்னை குடிநீர் வாரியத்தில், 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர்.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 13.74 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து, 2024 - 25ம் நிதியாண்டில், 2,000 கோடி ரூபாய் வசூலிக்க நிர்ணயம் செய்யப்பட்டது.
சொத்து வரி ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரை என இரண்டு அரையாண்டு வீதம் வசூலிக்கப்படும்.

முதல் அரையாண்டுக்குள் வரி செலுத்தாமல், அதை, இரண்டாம் அரையாண்டில் செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.
முதல் அரையாண்டில் செப்டம்பர் 28-ந்தேதி வரை 835 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
அதேபோல் சென்னை குடிநீர் வாரியத்தில், 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர்.
ஆண்டுக்கு 895 கோடி ரூபாய் வசூலாக வேண்டும். முதல் அரையாண்டில் 28-ந்தேதி வரை 375 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகி உள்ளது.
சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்திற்கு முதல் அரையாண்டு வரியை செலுத்த இன்று கடைசி நாள் ஆகும்.
- திடீரென கனமழை பெய்தது.
- ஏராளமான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 1 மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென மழை பெய்தது.
தொடர்ந்து நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் அடித்த நிலையில் நேற்று மாலையில் தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து இன்று அதிகாலை வரை யிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் ஏராளமான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.
நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இரவில் தொடங்கிய மழை நள்ளிரவு வரையிலும் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.
சேரன்மகாதேவியில் 29.60 மில்லிமீட்டர் மழை பெய்தது. அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர் பகுதிகளிலும் இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் இரவு முழுவதும் பயங்கர இடி-மின்னலும் காணப்பட்டது. அம்பையில் 40.40 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ராதாபுரத்தில் 21 மில்லிமீட்டரும், நாங்கு நேரியில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
அணை பகுதிகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 40 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் 23.80 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 251 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 98 அடியாக உள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.
மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளிலும் கனமழை பெய்தது. குறிப்பாக நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக நாலுமுக்கில் 26 மில்லி மீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 21 மில்லி மீட்டரும் மழை பெய்தது. காக்காச்சியில் 18 மில்லி மீட்டர், மாஞ்சோலையில் 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
மாநகரில் டவுன், பேட்டை, சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை சமாதானபுரம், மார்க்கெட் பகுதிகள், கே.டி.சி. நகர், என்.ஜி.ஓ. காலனி, டக்கம்மாள் புரம், மேலப்பாளையம் என மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவில் சென்ற வாகனங்கள் கடும் மழையால் சாலைகளில் ஊர்ந்தபடி சென்றதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
பாளை பகுதியில் விடிய விடிய பெய்த மழை காரணமாக இரவில் தொடங்கி இன்று அதிகாலை 3 மணி வரையிலும் மின்சார வினியோகம் இல்லை. அதன்பின்னரும் மின்சாரம் வருவதும், போவதுமாக இருந்தது. மாநகரில் பல்வேறு இடங்களிலும் கடுமையான மின்வெட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பாளை பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 84 மில்லிமீட்டரும், நெல்லையில் 49 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டியது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கியது.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. மழை நின்ற பின்னர் மீண்டும் மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.
தென்காசி, ஆய்க்குடியில் தலா 42 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது .மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 48.40 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சி நிலவியது.
கருப்பாநதி அணை பகுதியில் 67 மில்லிமீட்டர் மழை பெய்தது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 59 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வரும் 55 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 43 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 46 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலையில் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
காயல்பட்டினம் பகுதியில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. அங்கு அதிகபட்சமாக 93 மில்லிமீட்டர் மழை பெய்தது. கயத்தாறு, மணியாச்சி பகுதிகளில் 65 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 55 மில்லிமீட்டரும், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழையும் கொட்டியது. இடி-மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
விளாத்திகுளம், கீழஅரசடி, வேடநத்தம், குலசேகரப்பட்டினம், சாத்தான்குளம், கழுகுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. இரவில் விட்டு விட்டு சாரல் மழையாக மாறி பெய்தது. ஓட்டப்பிடாரம் பகுதியில் இரவில் பெய்த மழையால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியது.






