என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மோஜன் ஜி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
    • மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு

    ருத்ர தாண்டம், பகாசூரன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் பல்வேறு விவகாரங்களில் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார். அந்த வகையில், பழனி பஞ்சாமிர்தம் பிரசாதத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மருந்துகள் கலக்கப்படுவதாக மோஜன் ஜி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

    மேலும், சர்ச்சை கருத்து பதிவிட்டு வெளியிட்ட இயக்குநர் மோஜன் ஜி கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவரது ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும், எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கும் முன் அதனை உறுதிப்படுத்த வேண்டும். கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    • உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கடந்த வாரம் உத்தரவிட்டு இருந்தது.
    • செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் தி.முக. ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த போது செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி பலமுறை மனுத்தாக்கல் செய்து வந்தார். எனினும், அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன. இதைத் தொடர்ந்து அவர் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கடந்த வாரம் உத்தரவிட்டு இருந்தது.

    அதன்படி ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், சாட்சியங்களை கலைக்கக்கூடாது, பாஸ்போர்ட்-ஐ ஒப்படைக்க வேண்டும், வாரத்தின் முதல் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து இருந்தனர்.

    செந்தில் பாலாஜி மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பான மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இது தொடர்பான விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நீதிமன்றத்திலும் ஆஜர் ஆனார்.

    அப்போது, அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். சாட்சி விசாரணைக்காக இன்று ஆஜரான நிலையில், அக்டோபர் 4 ஆம் தேதி செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணையை அக்டோபர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க செந்தில்பாலாஜி விடுத்த கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

    • 4 அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
    • செந்தில் பாலாஜி, ராஜேந்திரன், கோவி. செழியன், சா.மு. நாசர் ஆகியோர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர்.

    தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில், 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது.

    4 பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இதில், செந்தில் பாலாஜி, ராஜேந்திரன், கோவி. செழியன், சா.மு. நாசர் ஆகியோர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர்

    புதிய அமைச்சர்கள் 4 பேருக்கு நேற்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள கோவி செழியனுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் வைகைச் செல்வன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "நானும் கோவி. செழியனும் ஒரே நாளில் 'முனைவர்' பட்டம் பெற்றோம். எளியவன் நான் பள்ளிக்கல்வி அமைச்சராகப் பணியாற்றினேன்.

    இப்போது அவர் உயர்கல்வி அமைச்சராகி இருக்கிறார். எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..!

    பட்டியலினத்தவருக்கு உயர்கல்வி அமைச்சர் பதவி.. பாராட்டாமல் இருக்க முடியுமா..?" என்றார்.

    • செந்தில் பாலாஜி வழக்குடன் 23 வழக்குகளை விசாரித்து வருவதாக நீதிபதி அறிக்கை.
    • விசாரணையை அக்டோபர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவு.

    போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோடி செய்ததாக தொடர்ந்த வழக்கை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது.

    மனு விசாரணையின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், செந்தில் பாலாஜி வழக்குடன் 23 வழக்குகளை விசாரித்து வருவதாக நீதிபதி அறிக்கை அளித்துள்ளார் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அடுத்த விசாரணைக்குள் அளிக்க வேண்டும் என்றும் விசாரணையை அக்டோபர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • திட்டத்துக்கான டெண்டரை மாநில நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது.
    • 2 ஆண்டுகளுக்குள் இந்த சாலை செயல்பாட்டுக்கு வரும்.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வருவதால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை நகரம் முழுவதும் புதிய இணைப்பு சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 3 இடங்களில் புதிய இணைப்பு சாலைகள் அமைக்கப்படுகின்றன.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மெட்ரோ ரெயில் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை முழுவதும் புதிய இணைப்பு சாலைகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    சென்னை கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பாடிக்குப்பம் மெயின் ரோடு - பிள்ளையார் கோவில் தெரு இடையே 900 மீட்டர் தொலைவுக்கு இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது.

    இதன் மூலம் பூந்தமல்லி மற்றும் மதுரவாயல் நோக்கி செல்லும் வாகனங்கள், நெரிசல் மிகுந்த ஜவஹர்லால் நேரு சாலையை எளிதாக கடந்து செல்ல முடியும். இந்த சாலை விரிவாக்க திட்டத்தால், ரெயில் நகர் பாலம் வழியாக, பூந்தமல்லி உயர் மட்ட சாலைக்கு வாகன ஓட்டிகள் செல்ல முடியும்.

    மற்றொரு இணைப்பு சாலையானது ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைகிறது. இந்த இணைப்பு சாலையானது, டி.ஜி.எஸ்.தினகரன் சாலையை, துர்காபாய் தேஷ்முக் சாலையுடன் இணைக்கும்.


    இதன் காரணமாக மயிலாப்பூர், கிரீன்வேஸ் சாலை மற்றும் சாந்தோம் வழியாக செல்லும் வாகனங்கள் அடையாறு மற்றும் கிண்டியை மாற்று பாதையில் சென்று அடையலாம். ரூ.37.8 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டத்துக்கான டெண்டரை மாநில நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது.

    இந்த 630 மீட்டர் இணைப்பு சாலை பணிகள் முடிந்ததும், துர்காபாய் தேஷ்முக் சாலை நடுவில் உள்ள தடுப்பு அகற்றப்பட்டு, ஒருவழி போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்படும்.

    இந்த 2 இணைப்பு சாலை திட்டங்களையும் ஒரு வருடத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    3-வது இணைப்பு சாலை, தற்போது பகுதி அளவில் பயன்பாட்டில் உள்ளது, இந்த சாலையானது பரங்கிமலை - மவுண்ட் பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தற்காலிகமாக செயல்பாட்டில் உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த சாலை முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொடிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை அந்தந்த கட்சிகள் உறுதி செய்ய வேண்டும்.
    • தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடிக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

    சென்னை:

    நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

    கடந்த ஆகஸ்டு 22-ந்தேதி விஜய் தனது கட்சியின் கொடி மற்றும் பாடல் ஆகியவற்றை அறிமுகம் செய்தார். விஜய் கட்சி கொடியில் மேலும் கீழும் ரத்த சிவப்பு நிறமும், மைய பகுதியில் மஞ்சள் நிறமும் இடம்பெற்றுள்ளன. கொடியின் நடுவில் வாகைப்பூவும் அதன் இருபுறமும் காலை உயர்த்திய நிலையில் 2 போர் யானைகளும், 28 நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.

    விஜய் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை, தங்கள் கட்சியின் சின்னம் என்றும், எனவே அதனை நீக்க வேண்டும் எனவும் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு கொடுத்தது.

    இந்த நிலையில் கட்சி கொடியில் யானை இடம் பெற்றுள்ள விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் கடிதம் எழுதியுள்ளது.

    அரசியல் கட்சிகளின் கொடிகளில் இடம்பெறும் சின்னங்கள், உருவங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதலோ, அங்கீகாரமோ கொடுப்பது இல்லை. கட்சிக்கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது. ஆனால் கொடிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை அந்தந்த கட்சிகள் உறுதி செய்ய வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சின்னமாக யானையை பயன்படுத்த முடியாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    நேற்றிரவும் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது.

    குன்னூர் மவுண்ட் ரோடு கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி. தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கீழ்புறம் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்றிரவு ஜெயலட்சுமி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்தார். இரவில் மழை பெய்து கொண்டே இருந்ததால் கதவின் இடுக்கின் வழியாக வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து ஜெயலட்சுமி எழுந்து வீட்டிற்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றுவதற்காக கதவை திறந்தார்.

    அப்போது கனமழைக்கு அவரது வீட்டின் முன்பு இருந்த மண் திட்டு எதிர்பாராத விதமாக சரிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் ஜெயலட்சுமி மண்சரிவில் சிக்கி, மண் முழுவதுமாக அவரை மூடியது. ரவி மற்றும் குழந்தைகள் வீட்டில் உள்ள அறையில் இருந்ததால் காயமின்றி உயிர் தப்பினர்.

    பயங்கர சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த கணவர் ரவி அறையை விட்டு வெளியில் வந்தார். அப்போது வீட்டின் நுழைவு வாயில் முழுவதும் மண் சரிந்தும், அதில் மனைவி சிக்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு கூடி மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து, வீட்டின் முன்பு இருந்த மண் திட்டுகளை அகற்றி ஆசிரியை ஜெயலட்சுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஆசிரியை ஜெயலட்சுமி சடலமாக மீட்கப்பட்டார்.

    இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வீட்டிற்குள் இருந்த ஆசிரியையின் கணவர் ரவி மற்றும் குழந்தைகளும் எந்தவித காயமும் இன்றி மீட்கப்பட்டனர். இரவில் மண்சரிந்து பள்ளி ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    குன்னூரில் பெய்த மழைக்கு காட்டேரி, டால்பின்நோஸ் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் விழுந்தன.

    குன்னூர் ஆப்பிள் பி சாலையில் நள்ளிரவில் மழைக்கு தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விடிய, விடிய பெய்த மழையால் மின்தடையும் ஏற்பட்டது.

    இதனால் குன்னூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரவு முழுவதும் இருளில் மூழ்கியதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    • செந்தில் பாலாஜி பிணையில் விடுதலை செய்யப்பட்டதில் யாருக்கும் வருத்தம் இல்லை.
    • தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பவர் ஏழரை கோடி தமிழ்நாட்டு மக்களுக்கும் பொதுவானவர்.

    சென்னை:

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    செந்தில் பாலாஜியின் தியாகம் பெரிது என்று புகழ்ந்துரைத்தது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், இப்போது அதற்கு பொழிப்புரை எழுதியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 15 மாத சிறை தண்டனை அனுபவித்தது தான் செந்தில் பாலாஜி செய்த தியாகம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் முதலமைச்சர் விளக்கமளித்திருக்கிறார். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்த ஒருவரை ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இந்த அளவுக்கு இறங்கிச் சென்று பாதுகாக்க முயல்வதும், போற்றுவதும் ஏற்றுக் கொள்ளவே முடியாதது.

    செந்தில் பாலாஜி பிணையில் விடுதலை செய்யப்பட்டதில் யாருக்கும் வருத்தம் இல்லை. எந்த வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் வழக்கு விசாரணைக் காலம் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று நினைப்பதே கொடூர மனநிலை. செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கும், அதனடிப்படையிலான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கும் முடிவடைய நீண்ட காலம் ஆகும் என்பதால், அதுவரை அவரை சிறையில் வைத்திருக்க முடியாது என்பதால் தான் அவருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அதன் பொருள் விடுதலை இல்லை. அதனால் செந்தில் பாலாஜியின் சிறை வாசம் தியாகமும் இல்லை.

    செந்தில் பாலாஜியின் வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து ஒட்டுமொத்த தமிழகமும் அறிந்ததை விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் நன்றாக அறிவார். 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 5 கோட்டங்களில் 1630 பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், நடத்துனர் பணிக்கு ரூ.1.75 லட்சம் தொடங்கி உதவிப் பொறியாளர் பணிக்கு ரூ.12 லட்சம் வரை செந்தில் பாலாஜி கையூட்டு வாங்கிக் குவித்ததாகத் தான் தமிழகக் காவல்துறை வழக்குத் தொடர்ந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் 2016 தேர்தலில் குளித்தலைத் தொகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் தெரிவித்த மு.க.ஸ்டாலின் அவர்கள், மேலும் சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து, செந்தில் பாலாஜி செய்த ஊழல்கள் ''ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல" என்று பாடல் பாடியதெல்லாம் வரலாறு.

    அந்தக் குற்றச்சாட்டுகளில் அடிப்படையில் தான் தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடத்தி வருகிறது. அந்த வழக்கில் கையூட்டாக வாங்கப்பட்ட பணம் ரொக்கமாக செந்தில் பாலாஜி கணக்கில் செலுத்தப்பட்டதன் அடிப்படையில் தான் அவர் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு, 471 நாட்களுக்குப் பிறகு பிணையில் வெளிவந்திருக்கிறார். இதில் என்ன தியாகம் இருக்கிறது. உண்மையாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டத்தின் பக்கமும், நியாயத்தின் பக்கமும் நிற்பவராக இருந்தால் மோசடி வழக்கில் தம்மிடம் உள்ள ஆதாரங்களையெல்லாம் கொடுத்து வழக்கை வலுப்படுத்தியிருக்க வேண்டும். மோசடி வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி செந்தில் பாலாஜிக்கு தண்டனை பெற்றுத் தந்திருக்க வேண்டும்.

    ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மாநகரக் காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு மோசடி வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூட முன்வரவில்லை. அதுமட்டுமின்றி, அவரை திமுகவில் சேர்த்து அமைச்சராக்கி அழகு பார்க்கிறார். அவருக்கு தியாகி பட்டம் சூட்டி உருகுகிறார். திராவிட மாடல் வாஷிங் மெஷின் அந்த அளவுக்கு ஊழல் கரையே தெரியாத அளவுக்கு வெளுத்து எடுத்திருக்கிறது. அரசு வேலை தருவதாக பல்லாயிரக்கணக்கானோரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தியாகி என்றால், அவரிடம் பணத்தைக் கொடுத்து தங்களின் சொத்துகளையும், வாழ்க்கையையும் இழந்து தவிக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் என்ன துரோகிகளா? என்பதை முதலமைச்சர் தான் விளக்க வேண்டும்.

    தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பவர் ஏழரை கோடி தமிழ்நாட்டு மக்களுக்கும் பொதுவானவர். நடுநிலை தவறாத நீதிபதியாக இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டியது தான் அவரது கடமை. ஆனால், அவரோ கடமையை மறந்து விட்டு மோசடி செய்தவருக்கு வழக்கறிஞராக மாறி அவருக்காக வாதாடிக் கொண்டிருக்கிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

    செந்தில் பாலாஜியை முதலமைச்சர் வலிந்து வலிந்து ஆதரிப்பதையும், புகழ்வதையும் பார்க்கும் போது செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடக்கும் என்றோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றோ தோன்றவில்லை. எனவே, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கும் மாற்றும்படி உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • பருவமழை முன்னேற்பாடுகள் கூட்டத்தை முதல்-அமைச்சர் இன்று நடத்தினார்.
    • வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்க உள்ளது. வருகிற 15-ந்தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.

    இதன் மூலம் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கை கள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, தலைமை செயலாளர் முருகானந்தம், வருவாய் பேரிடர் துறை செயலாளர், பொதுத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், போலீஸ் டி.ஜி.பி., தீயணைப்பு துறை இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    வடகிழக்கு பருவ மழை பேரிடர்களின் தாக்கத்தினை திறம்பட எதிர்கொள்ள தேவையான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

    இந்த வகையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் 14.9.2024 மற்றும் 21.9.2024 ஆகிய நாட்களில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி ஆணையர்களுடன் வடகிழக்கு பருவமழை குறித்த ஆயத்தப் பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தி அலுவலர்களுக்கு அவர் அறிவு ரைகளை வழங்கியிருக்கிறார்.

    சரியான நேரத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் வானிலை முன் எச்சரிக்கையினால் நாம் பெரிய அளவிலான சேதங்களை தவிர்க்க முடியும்.

    பேரிடர்களை எதிர்கொள்வதில், முன்னெச்சரிக்கை தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், நமது அரசு அதற்கு தேவையான உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

    பெய்த மழையின் அளவு எவ்வளவு? என்பதை அது பெய்கின்ற நேரத்தில் தெரிந்தால்தான், அணைகளில் நீர் திறப்பு மேலாண்மை, வெள்ள முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சரியாகச் செய்ய முடியும். அதற்காக, நாம் தற்போது 1400 தானியங்கி மழை மானிகளையும், 100 தானியங்கி வானிலை மையங்களையும் நிறுவி நிகழ்நேர தகவல்களை பெற்று வருகிறோம்.

    வானிலை முன்எச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு டி.என்.-அலாட் என்னும் கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளது.

    மழைக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது மீனவ தோழர்கள் தான். ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு புயல், கன மழை குறித்த தகவல்களை நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலமாக உரியநேரத்தில் கொண்டு சேர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    நாட்டிற்கு முன்னுதாரணமாக பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு, வார்டு, தெருவாரியான வெள்ள அபாய எச்சரிக்கை வழங்க சென்னை நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்குத் தேவையான உதவிகளை வழங்க முன்கூட்டியே திட்டமிட்டு மாவட்ட நிர்வாகம் செயல்படுவது மிக மிக அவசியமாகிறது.

    வெள்ளப் பேரிடர்கள் ஏற்படும் பொழுது தாழ்வான பகுதிகளிலிருந்து முன்கூட்டியே வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது மிக முக்கியம்.

    இந்த பணிகளை தமிழ்நாடு அரசின் அனைத்து களப் பணியாளர்களும், பொதுமக்களுடன் இணைந்து அவர்களுக்கு அறிவுறுத்தி வெள்ளத்திற்கு முன்னரே நிவாரண மையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

    அவர்களுக்கு தேவையான தூய்மையான குடிநீர், கழிவறை, தடையற்ற மின்சாரம் உரிய நேரத்தில் உணவு ஆகியவற்றை வழங்க வேண்டும்.

    வெள்ளம் ஏற்பட்ட உடன் அரசு இயந்திரம் எவ்வளவு விரைவாக செயல்பட வேண்டுமோ அவ்வ ளவு விரைவாகச் செயல்பட வேண்டும். ஓர் உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட வேண்டும்.

    அதற்கு தேவையான நீர் இறைக்கும் எந்திரம், மர அறுப்பான்கள், ஜே.சி.பி., படகுகள் போன்ற கருவிகளை தாழ்வான பகுதிகளுக்கு அருகில் முன்கூட்டியே சென்று நிறுத்த வேண்டும்.

    பல்வேறு வெள்ளத் தடுப்பு பணிகளை, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்னரே விரைந்து முடிக்க வேண்டும். மாவட்டத்தைப் பற்றி முழுமையாக அறிந்த மூத்த அலுவலர்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்திருக்கிறோம். அவர்கள் மழைக்கு முன்னதாகவே தங்களது பணிகளை தொடங்கியாக வேண்டும்.

    சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த பகுதிகளில் ஆயத்தப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

    வெள்ளத் தடுப்பு பணிகளை மட்டுமல்ல, ஆண்டு தோறும் நாம் மேற்கொள்கின்ற தூர்வாரும் பணிகள், பாலங்கள், சிறுபா லங்களில் கழிவுகளை அகற்றுதல், நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்துதல், அறுந்து விழக்கூடிய நிலையில் உள்ள மின் கம்பிகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளும் சரியாக நடைபெற்று வருகிறதா? என்பதையும் ஆய்வின்போது கண்டறிய வேண்டும்.

    வெள்ளக் காலம் என்றாலே மாணவர்கள் ஆர்வத்தால் ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு சென்று விளையாடுவதால், உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

    இதனை தடுப்பதற்கு, பெற்றோர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    வெள்ளம், புயல் போன்ற பேரிடர்களில் தகவல் தொடர்பு, மின்சார வசதி போன்ற அத்தியாவசிய சேவைகளை முடிந்தவரை தடையின்றி வழங்கப்பட வேண்டும்.

    பாதுகாப்பான குடிநீர், பால், உணவுப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    வெள்ளத்தினால் நோய்த் தொற்று ஏதும் ஏற்டாமல் இருக்க உரிய பொது சுகாதார சேவை மற்றும் மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும்.

    அனைத்துத் துறை அலுவலர்க ளும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே இதனை உறுதி செய்ய முடியும்.

    பேரிடர் மேலாண்மையில், தன்னார்வலர்களது பங்கும் மிகவும் அவசியமானதாகும். எனவே தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கென முறையான செயல்திட்டத்தினை மாவட்ட நிர்வாகம் உருவாக்க வேண்டும்.

    எந்த ஒரு சவாலாக இருந்தாலும், அதில் ஈடுபடும் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஓரணியாக நின்று செயல்பட்டால், அதில் வெற்றி என்பது 100 சதவீதம் சாத்தியம்.

    பருவமழையினால் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு பொது மக்களின் துயர் துடைக்க அரசு நிர்வாகம் மொத்தமும் ஓரணியாக நின்று செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாக யாரும் எட்டிப்பிடிக்க முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருந்த நிலையில், கடந்த 21-ந் தேதி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதன் தொடர்ச்சியாகவும் விலை உயர்ந்து, ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்று சவரன் ரூ.56 ஆயிரத்து 760-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56 ஆயிரத்து 640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • தமிழகத்தில் நடைமுறைப் படுத்த திட்டமிட்டுள்ளார்கள்.
    • ரூ.1000 முதல் 2 ஆயிரம் வரை பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.

    சென்னை:

    ரேசன் கடைகளுடன் இணைந்து வங்கி சேவைகளையும் சாதாரண மக்களுக்கு வழங்கும் வகையில் புதியத் திட்டம் ஒன்றை தமிழகத்தில் நடைமுறைப் படுத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    அரசு வழங்கும் ஓய்வூதியங்கள், பொங்கல் பரிசு போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

    இந்த பயனாளிகள் தங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை டெபிட் கார்டுகள் மூலம் ஏ.டி.எம்.களில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

    ஆனால் பல கிராமங்களில், மலைப் பகுதிகளில் ஏ.டி.எம்.கள் வசதி இல்லை. எனவே வங்கி சேவைகளை எளிதில் யாரும் பெற முடியவில்லை.


    அதே நேரம் 2014 முதல் பொங்கல் பரிசுத் தொகை சுமார் 33 ஆயிரம் ரேசன் கடைகள் மூலம் சிரமமில்லாமல் வழங்கப்படுகிறது. 5 ஆயிரத்து 604 கோடி பணத்தையும் விநியோகித்துள்ளது.

    தற்போது எளிதில் வங்கி ஏ.டி.எம்.களை அணுக முடியாத கிராமப்புற மக்களுக்கு உதவுவதற்காக ரேசன் கடைகளை டிஜிட்டல் முறையில் பணப்பட்டுவாடா செய்யும் மைக்ரோ ஏ.டி.எம். களாகவும் மாற்றுவதற்கான பணிகள் தொடங்கி இருக்கிறது.

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் கூறும் போது, ஏற்கனவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 4,500 அலகுகளில் 3,500 அலகுகள் மைக்ரோ ஏ.டி.எம்.களாக மாற்றப்பட்டு உள்ளன என்றார்.

    ரேசன் கடைகள் மைக்ரோ ஏ.டி.எம்.களாக மாறும்போது ஆதார் எண் அடிப்படையில் ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.

    அரசு புள்ளி விவரம்படி 34 லட்சம் பேர் முதியோர் உதவித்தொகை மாதம் ரூ.1000 பெறுகிறார்கள். அவர்களில் 2.7 லட்சம் பேர் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வழியாக பணம் பெறுகிறார்கள். அவர்களால் ஏ.டி.எம்.களை பயன்படுத்த முடியவில்லை.

    இந்த பயனாளிகள் இணையதள இணைப்புகள் கிடைப்பதில் இருக்கும் சிக்கல்கள், அதேபோல் கையடக்க கருவிகளில் பயோ மெட்ரிக் அங்கீகாரத்தை பெறுவதில் ஏற்படும் சிக்கல்களால் சிரமத்தை சந்திக்கிறார்கள்.

    இந்த புதிய நடைமுறையில் கிராமப்புற மக்களும் ரேசன் கடை ஏ.டி.எம்.கள் மூலம் பண சேவையை பெற முடியும்.

    • குடும்ப நலனையே பிரதானமாக கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முழுப்பொறுப்பை ஏற்க வேண்டும்.
    • இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

    சென்னை:

    அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சென்னை அசோக் நகரில் சாலையோரம் உரிய வழிமுறைகளை பின்பற்றாமல், முறையாக தடுப்புகள் வைக்கப்படாத நிலையில் இருந்த, மழைநீர் கால்வாயில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் தவறிவிழுந்து மரணமடைந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

    குண்டும் குழியுமான சாலைகள், நிரம்பி வழியும் கழிவு நீர் குழாய்கள், குடிநீர் குழாய்களில் கலக்கும் கழிவு நீர், நேற்று முன்தினம் பெய்த 10 செ.மீ. மழைக்கே பல் இளிக்கும் மழைநீர் வடிகால் அமைப்பு, வெள்ள நீரால் நிரம்பி வழிந்த சாலைகள், மழை நீரால் கொசு உற்பத்தி கேந்திரமாக மாறியுள்ள பல மாநகராட்சி பூங்காக்கள் என அவல நிலையில் வைத்திருக்கும் ஸ்டாலினின் திமுக அரசின் சென்னை மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேடே இத்துயரச் சம்பவத்திற்கு காரணம்.

    இம்மரணத்திற்கு தமிழக மக்கள் மீது சிறிதும் அக்கறையில்லாத, குடும்ப நலனையே பிரதானமாக கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முழுப்பொறுப்பை ஏற்க வேண்டும்.

    இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் அரசு நிவாரணம் வழங்கவும், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், இனி இதுபோன்ற நிகழ்வு எங்கும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    ×