என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • முதலமைச்சர் கோப்பைக்கான நிதியை உயர்த்துவதற்கான கோப்பில்தான் முதலில் கையெழுத்திட்டேன்.
    • தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் சென்ற 6 வீரர்களில், 4 பேர் பதக்கங்கள் பெற்றனர்.

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழா நடைபெற்றது.

    இதில், விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    துணை முதலமைச்சரான பின், நான் இட்ட முதல் கையெழுத்து முதலமைச்சர் கோப்பைக்கானது.

    முதலமைச்சர் கோப்பைக்கான நிதியை ரூ.82 கோடியாக உயர்த்துவதற்கான கோப்பில்தான் முதலில் கையெழுத்திட்டேன்.

    இந்தியாவிலேயே தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் சென்ற 6 வீரர்களில், 4 பேர் பதக்கங்கள் பெற்றனர்.

    இந்தியா விளையாட்டுத்துறையின் தலைநகரமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    • போட்டிக்கான தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது.
    • தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றது.

    இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என 5 வகை பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டன.

    மாநிலம் முழுவதில் இருந்தும் 11½ லட்சம் பேர் பங்கேற்றனர். மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இதில் வெற்றி பெற்றுள்ள 33 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் இன்று முதல் 24-ந்தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது. தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், கபடி, சிலம்பம், பளுதூக்குதல், கால்பந்து, ஆக்கி, குத்துச்சண்டை, நீச்சல், கிரிக்கெட், கூடைப்பந்து, கைப்பந்து, கேரம், வாள்வீச்சு, செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ் உள்பட 36 வகையான விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. இந்த முறை காட்சி போட்டியாக இ-ஸ்போர்ட்ஸ் இடம் பெறுகிறது.

    போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அணியினருடன் வரும் அலுவலர்களுக்கு டி-ஷர்ட் வழங்கப்படுகிறது. அத்துடன் அவர்களின் உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து செலவுகள் அவர்களின் சொந்த மாவட்டத்திலிருந்து கவனித்துக் கொள்ளப்படுகின்றன.

    இந்த ஆண்டுக்கான தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 5 மணியளவில் தொடங்கியது. போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமதி, டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல் ஆகியோர் தொடக்க விழாவில் ஜோதியை ஏந்தி சென்றனர்.

    மாவட்ட வாரியாக வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு நடத்தினர்.

    • பருவமழையின் நிச்சயமாக எந்த பாதிப்பும் இல்லாத நிலையை ஏற்படுத்துவோம்.
    • ஒவ்வொரு பருவமழைக்கும் முன்பே சிறப்பு மருத்துவ முகாம் தொடர்ச்சியாக போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் டெங்கு மரணங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்,

    ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை என மூன்று துறைகளையும் சேர்த்து மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.

    தமிழ்நாட்டில் இதற்கு முன் எந்த ஆட்சியிலும் இதுபோன்ற கூட்டம் நடைபெறவில்லை. கூட்டத்தில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.


    பருவமழையின் நிச்சயமாக எந்த பாதிப்பும் இல்லாத நிலையை ஏற்படுத்துவோம். ஒவ்வொரு பருவமழைக்கும் முன்பே சிறப்பு மருத்துவ முகாம் தொடர்ச்சியாக போடப்பட்டுள்ளது.

    நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் காய்ச்சலுக்கு உடனடியாக முகாம் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.அக்டோபர் 15 தேதியிலிருந்து மழை தொடங்கிய பிறகு தொடர்ந்து மருத்துவ முகாம் நடத்தப்படும்.


    டெங்கு, மலேரியா காய்ச்சல்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

    தமிழ்நாட்டில் எங்கே டெங்கு உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவரை காட்டச்சொல்லுங்க, அ.தி.மு.க. ஆட்சியில் தான் 2012ல் டெங்கு இறப்பு 66 பேர், 2017ல் 65 பேர் என பட்டியலிட்டார்.

    கடந்த அதிமுக ஆட்சியில்தான் தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கான டெங்கு மரணங்கள் ஏற்பட்டன. அதற்கு பின் ஒற்றை இலக்கு தான். 9 மாதம் கடந்து டெங்கு இறப்புகள் இந்த வருடம் 6 பேர் தான். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    • ரஜினிகாந்த் உடல்நிலை குணமாகி இன்று காலை மருத்தவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
    • நலம் விசாரித்தவர்களுக்கு நன்றி கூறி நடிகர் ரஜினிகாந்த் பதிவு வெளியிட்டுள்ளார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திறகு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கடந்த மாதம் 30-ந்தேதி சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு மகா தமனி வீக்கத்தை முற்றிலும் சரிசெய்யும் வகையில் 'ஸ்டென்ட்' -ஐ அந்த இடத்தில் பொருத்தி சிகிச்சை அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து ரஜினியை ஐசியூ-வில் வைத்து கண்காணித்து வந்த நிலையில், அவர் உடல்நிலை குணமாகி இன்று காலை மருத்தவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

    இந்நிலையில், நலம் விசாரித்தவர்களுக்கு நன்றி கூறி நடிகர் ரஜினிகாந்த் பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் மருத்துவமனையில் இருக்கும் போது, நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும், நலவிரும்பிகளுக்கும். பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    மற்றும் நான் நலம் பெற பிராத்தனைகள் செய்த, மனதார வாழ்த்திய என்மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதைத்தவிர, தனது நலன் குறித்து விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தனித்தனி பதிவுகளாக குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

    • வடகிழக்கு பருவமழை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
    • பருவமழை வருவதற்குள் கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆணையிட்டுள்ளார்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நெருங்கி வருவதால், சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    ஏற்கனவே, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை வெள்ள மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தபடுவதற்கு 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், வடகிழக்கு பருவமழை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    156 பேட்டரி ஸ்ப்ரேகள், 324 புகைப்பரப்பும் இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 64 புகைப்பரப்பு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய ஆலோசனை கூட்டத்தில், ஓட்டேரி, விருகம்பாக்கம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணி விரைந்து நடைபெற்று வருகிறது.

    நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, மின்சார துறை, நகர்ப்புற உள்ளாட்சி துறை பல்வேறு துறை அதிகாரிகளையும் வைத்து முதலமைச்சர் நேற்று ஆலோசனை நடத்தினார். பருவமழை வருவதற்குள் கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆணையிட்டுள்ளார்.

    1156 இடங்களில் 792 கிமீ தொலைவில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 6 நாட்களில் எல்லா பணிகளும் விரைவாக முடியும். 13 செ.மீ மழை பெய்த இடத்தில் கூட, எவ்வளவு நேரம் அங்கு மழைநீர் தேங்கியது என மணி நேரத்தை கணக்கில் வைத்து அங்கு என்ன செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை செய்துள்ளோம்.

    கொசஸ்த்தலை ஆற்று வடிகால் பணிகள், 24.08.2024-க்குள் முடித்திருக்க வேண்டும். அது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது வரை கொசஸ்தலை ஆற்றை நீர்வளத்துறையினர் தான் சீர் செய்து வருகிறார்கள். எங்கள் துறை பணி என்னவென்றால் மழைநீர் கால்வாய் குழாய்களை அதில் சேர்க்க வேண்டியது தான்.

    நாங்கள் குழாய் இணைப்பு சரியாக வைத்துள்ளோம். அவர்கள் வேலை முடிந்தவுடன் இணைத்து விடுவோம். இரண்டு மூன்று மாதங்களில் நிரந்தரமாகவே அது முடிந்துவிடும்.

    வானிலை ஆய்வு மையம் கூறும் சராசரி மழையின் அளவுக்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். திடீரென்று ஒரே நாளில் 30 செ.மீ, 45 செ.மீ மழை பெய்தால் என்ன செய்வது.? இயற்கையை வெல்ல யாராலும் முடியாது. ஆனாலும் அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக அரசின் சொந்த நிதி ரூபாய் 11,762 கோடி. வெளிநாட்டு நிதி நிறுவனம் மூலமாக ரூபாய் 6802 கோடி.
    • ஒரு பைசா கூட தமிழகத்திற்கு ஒதுக்காத மத்திய பா.ஜ.க. அரசு வெறும் ரூபாய் 7425 கோடி தான் ஒதுக்கியிருக்கிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளன.

    சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்திய பிறகு தற்போது மத்திய அரசின் 12 சதவிகித பங்களிப்பான ரூபாய் 7425 கோடியை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், கடும் நிதி நெருக்கடிகளுக்கிடையே சென்னை மாநகர மக்களின் போக்குவரத்தை எளிதாக்குவதற்கு இதுவரை தமிழக அரசு ரூபாய் 18524 கோடி செலவு செய்துள்ளது. இதில் தமிழக அரசின் சொந்த நிதி ரூபாய் 11,762 கோடி. வெளிநாட்டு நிதி நிறுவனம் மூலமாக ரூபாய் 6802 கோடி.

    ஆனால், மெட்ரோ ரெயில் திட்ட மொத்த மதிப்பீட்டு தொகையில் வெறும் 12 சதவிகிதத்தை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. மீதி 88 சதவிகிதத்தை தமிழ்நாடு அரசும், ஜிகா நிதி நிறுவனத்தில் பெறுகிற கடன் மூலமாகத் தான் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

    கடந்த 2023-24 நிதிநிலை அறிக்கையில் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய மொத்த தொகை ரூபாய் 19518 கோடி. 2024-25-ல் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 21,335 கோடி. இதில் ஒரு பைசா கூட தமிழகத்திற்கு ஒதுக்காத மத்திய பா.ஜ.க. அரசு வெறும் ரூபாய் 7425 கோடி தான் ஒதுக்கியிருக்கிறது.

    பொதுவாக பா.ஜ.க. ஆளும் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கி, பாரபட்சமாக நடந்து கொள்கிற போக்கைத் தான் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இத்தகைய மோடி அரசின் மாநில விரோத போக்கு கூட்டாட்சி முறைக்கு கடும் கேடு விளைவிக்கக் கூடியதாகும். இத்தகைய போக்கை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து மேற் கொள்ளுமேயானால் ஏற்கனவே தமிழக மக்களின் கடும் சீற்றத்திற்கு ஆளாகியுள்ள பா.ஜ.க.வை மக்கள் வெறுத்து ஒதுக்குகிற நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63000 கோடி நிதி வழங்குவதாக தகவல் வெளியானது.
    • தவறான தவலைப் பரப்பாதீர்கள் என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்.

    மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்தார்.

    அப்போது பேசிய அவர், "சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து, மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63000 கோடி நிதி வழங்குவதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு, மத்திய அரசு ரூ.63,246 கோடி நிதி வழங்கியுள்ளதாக பரவும் செய்தி தவறானது என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    சென்னை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கு ரூ.7,425 கோடி மட்டுமே. தமிழக அரசின் பங்கு- ரூ.22,228 கோடி, கடன் ரூ.33,593 கோடி பங்கிடப்பட்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்த நிலையில், தவறான தவலைப் பரப்பாதீர்கள் என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.

    • சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
    • பெற்றோர் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மரப்பாலம், வள்ளுவர் வீதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (32). பூக்கடைக்காரர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் ரகுமான் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றனர். அப்போது பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அப்துல் ரகுமான் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அப்துல் ரகுமான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

    • மதுக்கடைகள் தொடர்பான சட்டம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
    • மக்கள் பிரச்சனையில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை பாஜக கட்சி அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு பாஜக வழிகாட்டு குழு தலைவர் எச். ராஜா கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை மெட்ரோ திட்டத்திற்கு ரூ. 63 ஆயிரத்து 246 கோடி நிதியை வழங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கி உள்ளது. தமிழக முதலமைச்சர் கோரிக்கை வைத்திருந்தார். இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர், பிரதமருக்கு இந்த நிதியை தருவதற்கு கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் மத்திய மந்திரி சபை அந்த நிதியை வழங்க ஒப்புதல் வழங்கி உள்ளது.தமிழக பா.ஜ.க இதனை வரவேற்கிறது.

    தமிழகத்தில் ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கி உள்ளது வரவேற்கதக்கது.

    அக்டோபர் 2-ந் தேதி உளுந்தூர்பேட்டையில் நாடக மாநாடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில் தி.மு.க.-வி.சி.க.வின் கூட்டணி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறந்தது மாநில அரசு. மதுக்கடைகள் தொடர்பான சட்டம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. மதுவிலக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் கிடையாது.

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக தமிழக அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று அதற்கான தடைகளை நிறைவேற்றியது. மத்திய அரசு மதுவிலக்கு சட்டம் கொண்டு வரவேண்டும் என சொல்வது போலி நாடகம்.

    மக்கள் பிரச்சனையில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தற்போது அரசு, மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் செயல் இழந்து கிடக்கிறது.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முழுமையாக பொய்யை மட்டுமே சொல்பவர். 4 லட்சத்து 76 ஆயிரத்து 581 ஏக்கர் கோவில் நிலங்கள் இருப்பதாக கூறிவரும் அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கை மூலம் அதனை மக்களிடம் காட்ட வேண்டும். தவறான தகவல்களை அமைச்சர் சேகர் பாபு பரப்பி வருகிறார். 2021 தேர்தலை விட 2024 தேர்தலில் தி.மு.க. 6 சதவீத வாக்கை இழந்துள்ளது. 2026-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைக்கும். அப்போது தி.மு.க.வின் ஊழல்கள் வெளியே கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ. மாணிக்கம் திறந்து வைத்தார்.
    • எம்எல்ஏ மற்றும் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்தில் புதியதாக திறந்து வைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் எழுத்துக்களை கண்டால் இது என்னடா தமிழுக்கு வந்த சோதனை என்று ஆதங்கப்பட வைக்கிறது.

    ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ. மாணிக்கம் திறந்து வைத்தார். அங்கன்வாடி மைய கட்டித்திற்குள் குழந்தைகள் கற்பிப்பதற்காக வரையப்படு இருந்த தேசிய கொடி, தேசிய தலைவர்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் பெயர்கள் பிழைகளுடன் எழுதப்பட்டு இருந்தன.

    கொய்யா பழத்துக்கு கோய்யா பலம், வெண்டைக்காய்க்கு வெட்டககாய், வாழை பழத்துக்கு வாழைபலம், தர்பூசனிக்கு தர்புசணி என்று எழுதப்பட்டு இருந்தது. ஆங்கில மாதங்களும் தவறாக எழுதப்பட்டு இருந்தது.

    இதனை கண்ட எம்எல்ஏ மற்றும் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கல்வி கற்க வரும் குழந்தைகளுக்கு இப்படியா தவறாக எழுதுவது என்று பெற்றோர் ஆதங்கப்பட்டனர். இதையடுத்து அவற்றை திருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக மின் கட்டணம் செலுத்த பொது மக்களுக்கு புதிய நிபந்தனை.
    • மின்வாரிய அலுவலகத்தில் செலுத்துவதற்கான அதிகபட்ச தொகை படிப்படியாக குறைக்கப்படும்.

    மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக மின் கட்டணம் செலுத்த பொது மக்களுக்கு புதிய நிபந்தனை விதித்து தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது.

    ரூ.4000க்கும் அதிகமான மின் கட்டணத்தை மின்வாரிய அலுவலகத்தில் இனி நேரடியாக செலுத்த முடியாது என்றும், ரூ.4000க்கும் அதிகமான மின் கட்டணத்தை இனி ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த முடியும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    மேலும், இனி வரும் மாதங்களில் ரூ.3000, ரூ.2000 என மின்வாரிய அலுவலகத்தில் செலுத்துவதற்கான அதிகபட்ச தொகை படிப்படியாக குறைக்கப்படும்.

    • மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் விளம்பர தட்டிகள், போர்டுகளை அகற்றினர்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே முதற்கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை என தொடர்ந்து பண்டிகை வர உள்ளதால் போக்குவரத்தை சரி செய்யும் வகையில் ஈரோடு மாநகர் பகுதியில் 2-வது கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

    கருங்கல்பாளையம் முதல் காளை மாட்டு சிலை வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா வரை ஆக்கிரமிப்புகள் மற்றும் பணி தொடங்கியது.


    இதற்காக மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் விளம்பர தட்டிகள், போர்டுகளை அகற்றினர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது வியாபாரிகள், போலீசார் மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நாளை ஈரோடு-மேட்டூர் ரோடு ஸ்வஸ்திக் கார்னர் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறுகிறது.

    ×