என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டாட செல்வார்கள்.
- பண்டிகை நாட்களில் சிறப்பு ரெயில் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்து இருந்தனர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் சென்னையில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டாட செல்வார்கள்.
இந்த பண்டிகை நாட்களில் ரெயில்களிலும், பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். இந்த ஆண்டில் இந்த மாதத்தில் (அக்டோபர்) ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை வருகிறது.
ஆயுத பூஜை வருகிற 11-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 12-ந்தேதி விஜயதசமி, 13-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக உள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. இதனால், பண்டிகை நாட்களில் சிறப்பு ரெயில் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்து இருந்தனர்.
வருகிற 11-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு வாரத்தில் 5 நாட்கள் (திங்கட்கிழமை, வியாழக்கிழமை தவிர்த்து) பகல் நேர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரெயில் (வண்டி எண்.06190) செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் 5 நாட்களும் திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தஞ்சைக்கு 6.24 மணிக்கும். கும்பகோணத்திற்கு 6.58 மணிக்கும், மயிலாடுதுறைக்கு 7.28 மணிக்கும், சீர்காழிக்கு 7.52 மணிக்கும், சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்க ல்பட்டு வழியாக சென்னை தாம்பரத்திற்கு மதியம் 12.30 மணிக்கு செல்லும்.
அங்கிருந்து இந்த ரெயில் மறுமார்க்கமாக (வண்டி எண். 06191) மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு சீர்காழிக்கு இரவு 7.52 மணிக்கும், மயிலாடுதுறைக்கு 8.43 மணிக்கும், கும்பகோணத்திற்கு 9.18 மணிக்கும், தஞ்சைக்கு 10.13 மணிக்கும். இரவு 11.35 மணிக்கு திருச்சிக்கு செல்லும். இந்த ரெயிலில் 12 இருக்கை பெட்டிகள், 6 படுக்கை பெட்டிகள் உள்பட மொத்தம் 20 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. எனவே இந்த ரெயிலை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து மூவாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர் கவலை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தங்கம் விலை வார இறுதி நாளான இன்று மாற்றமின்றி விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,120-க்கும் ஒரு சவரன் ரூ.56,960-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து மூவாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:
04-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960
03-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,880
02-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800
01-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,400
30-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,640

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
04-10-2024- ஒரு கிராம் ரூ. 103
03-10-2024- ஒரு கிராம் ரூ. 101
02-10-2024- ஒரு பவுன் ரூ. 101
01-10-2024- ஒரு பவுன் ரூ. 101
30-10-2024- ஒரு பவுன் ரூ. 101
- சாலையோரங்களில் யானையை கண்டால் இறங்கி அதனை தனியாக விரட்டும் பணியில் ஈடுபடக்கூடாது.
- யானையை துன்புறுத்தும் செயல்களிலும் ஈடுபட வேண்டாம்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள், மான், காட்டு மாடு, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதுடன் மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
அதிலும் குறிப்பாக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை சிறுமுகை வனச்சரகத்துக்கு இடையே அமைந்து உள்ளதால், வனவிலங்குகள் இந்த ரோட்டை கடந்து வனத்தின் மறுபுறம் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலைகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி சாலையில் உள்ள முதல் வளைவு அருகே, ஒற்றை காட்டு யானை சாலையோரம் உலா வந்தது.
இதனை கண்ட வாகனஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு வனத்துறைக்கு தகவலளித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை வனத்துக்குள் விரட்ட முயன்றனர்.
இருப்பினும் அந்த யானை 2-வது வளைவு அருகே சென்று நீண்ட நேரம் சுற்றி திரிந்தது. பின்னர் வனத்துறையின் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் வாகனஓட்டிகள் நிம்மதி அடைந்து, தங்களின் வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:-
கோத்தகிரி சாலையில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது. எனவே கோத்தகிரி சாலை வழியாக செல்லும் வாகனஓட்டிகள் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் வாகனங்களை இயக்க வேண்டும்.
சாலையோரங்களில் யானையை கண்டால் இறங்கி அதனை தனியாக விரட்டும் பணியில் ஈடுபடக்கூடாது. அதேபோல யானை அருகே சென்று செல்பி எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ முயற்சி செய்யக்கூடாது. மேலும் யானையை துன்புறுத்தும் செயல்களிலும் ஈடுபட வேண்டாம். மீறினால் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- நீர்வரத்தை பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பென்னாகரம்:
கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு, ஒகேனக்கல் வனப்பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் அவர்கள் பரிசல் சவாரி செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர். சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். இன்று வழக்கத்தை விட ஒகேனக்கல்லில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மீன் விற்பனையும் படுஜோராக நடந்தது.
நீர்வரத்தை பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- ஏற்காட்டில் சாரல் மழை பெய்து கொண்டு இருந்தது.
- மழையின் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை காலம் போல பகல் நேரத்தில் வெயில் அதிகளவில் இருந்தது. குறிப்பாக வழக்கத்தை விட சுட்டெரிக்கும் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் அவதிப்பட்டனர். இந்த நிலையில் திடீரென மாலை 4 மணியளவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. பின்னர் திடீரென மழை கொட்டியது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடி-மின்னலுடன் மழை கொட்டியது.
சேலம் அம்மாபேட்டை, உடையாப்பட்டி பகுதியில் சுமார் 30 நிமிடம் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக செந்நிறத்தில் ஓடியது. இதே போல் வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, ஏத்தாப்பூர், தம்மம்பட்டி, கரியகோவில், மேட்டூர், சங்ககிரி உள்பட மாவட்டம் முழுவதுமே பலத்த மழை கொட்டியது.
ஏற்காட்டில் நேற்று மாலை 3.50 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 20 நிமிடம் கொட்டியது. பின்னர் லேசாக மழை தூறிக்கொண்டே இருந்தது. பின்னர் மீண்டும் இரவு 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 8 மணி வரை ஒரு மணிநேரம் கனமழையாக நீடித்தது. தொடர்ந்து விடிய, விடிய, மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையும் ஏற்காட்டில் சாரல் மழை பெய்து கொண்டு இருந்தது.
தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்து வருவதால் ஏற்காட்டில் கடுமையான குளிர்நிலவி வருகிறது. இதே போல் பனிமூட்டமும் அதிகளவில் ஏற்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். சேலம் மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- சேலம்-6, ஏற்காடு-29, வாழப்பாடி-4.5, ஆனைமடுவு-29, ஆத்தூர்-41, கெங்கவல்லி-63, தம்மம்பட்டி-2, ஏத்தாப்பூர்-20, கரிய கோவில்-70, வீரகனூர்-40, நத்தகரை-28, சங்ககிரி-5.1, எடப்பாடி-2, மேட்டூர்-6.8, ஓமலூர்-3.5, டேனிஷ்பேட்டை-45.
இதே போல் நாமக்கல் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கொல்லிமலை, சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. பரமத்திவேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சுள்ளிப்பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகாதேவி ,கொத்தமங்கலம், சிறுநல்லி கோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், பெரியசோளிபாளையம், கபிலர்மலை, இருக்கூர், கோப்பணம் பாளையம், கொந்தளம், சேளூர், பிலிக்கல் பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், பாண்டமங்கலம், வெங்கரை, பொத்தனூர், பரமத்திவேலூர், பரமத்தி, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து கடும் இடி மின்னலுடன் கூடிய கனமழை சற்று வேகமாக விடிய விடிய பெய்தது . இதன் காரணமாக இரவு முழுவதும் குளிர்ந்த காற்று நிலவியது.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சேந்தமங்கலம் - 97, கொல்லிமலை - 84, நாமக்கல் - 88, திருச்செங்கோடு - 74, பரமத்திவேலூர் - 65.50, எருமப்பட்டி - 40, கலெக்டர் வளாகம் - 34, மோகனூர்- 31, மங்களபுரம் - 20, குமாரபாளையம் - 1.20, புதுச்சத்திரம் 17, ராசிபுரம் - 10.
- பொதுவாக ஆஸ்பத்திரி மற்றும் பொதுஇடங்களுக்கு வரும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை கீழே போட்டுவிட்டு செல்கிறார்கள்.
- தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த எந்திரத்தை ஆஸ்பத்திரி நிர்வாகம் வைத்து இருக்கிறது.
சென்னை:
தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் மூலம் அரசு ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை தடுக்க ரூ.5 செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும் வகையில் எந்திரங்கள் வைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, தற்போது பிளாஸ்டிக் பாட்டில்களை பொது இடங்களில் போடுவதை தடுக்க தமிழக அரசு புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பொதுவாக ஆஸ்பத்திரி மற்றும் பொதுஇடங்களுக்கு வரும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை கீழே போட்டுவிட்டு செல்கிறார்கள். இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
அதை தடுக்கும் வகையில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில், எந்திரம் (இன்ஸ்டா பின்- ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்) ஒன்று புதிதாக வைக்கப்பட்டுள்ளது. தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த எந்திரத்தை ஆஸ்பத்திரி நிர்வாகம் வைத்து இருக்கிறது.
இந்த எந்திரத்தில் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை போடும்போது, அதில் உள்ள 'சென்சார்' மூலம் முகக்கவசம் இலவசமாக வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
'சோலார்' முறையில் இயங்கும் இதில் 300 பிளாஸ்டிக் பாட்டில்கள் சேமிக்கும் வகையில் உள்ளது. மேலும், இதில் ஒரு முறை 500 முகக்கவசம் வரையில் வைக்க முடியும். குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் மிகவும் ஆர்வமுடன் இந்த எந்திரத்தில் காலி பாட்டில்களை போட்டு, முகக்கவசத்தை பெறுவதை பார்க்க முடிகிறது. மேலும், இதுகுறித்து குழந்தைகள் நல ஆஸ்பத்திரி மக்கள் தொடர்பு அலுவலர் கங்காதரன் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதுகுறித்து, குழந்தைகள் நல ஆஸ்பத்திரி இயக்குனர் ரெமா கூறுகையில், 'காலி பிளாஸ்டிக் பாட்டில் போடும் எந்திரம் அமைத்த உடனே ஏராளமானோர் இதை பயன்படுத்தினர். தற்போது ஆஸ்பத்திரிக்கு வருபவர்களில் 75 சதவீதம் போ் காலி பாட்டில்களை இதில் போடுகின்றனர். விரைவில் அனைவரும் பயன்படுத்த தொடங்குவார்கள் என நம்புகிறோம்.
பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு மட்டுமே கொடுப்பதை விட, இதுபோன்ற எந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதால் பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வாக இருக்கும். புதிதாக ஒரு எந்திரங்களை பார்ப்பவர்கள் அது எவ்வாறு இயங்கும் என்பதை பார்ப்பதற்காக காலிபாட்டில்களை போடுவார்கள். அது நாளடைவில் அவர்களுக்கு காலி பாட்டில்களை பொது இடங்களில் போடக்கூடாது என்ற எண்ணத்தை உருவாக்கும்' என்றார்.
- காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
- கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி RA புரம் 2வது பிரதான சாலை TTK சாலை RK சாலை அண்ணாசாலையை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1. காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2. திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் இலக்கை அடைய சர்தார் படேல் சாலை காந்தி, மண்டபம் சாலை அண்ணாசாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதேபோல், பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, அவர்கள் தங்களுடைய இலக்கை அடைய அண்ணாசாலை தேனாம்பேட்டை காந்தி மண்டபம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
3. அண்ணா சிலையிலிருந்து MTC பேருந்துகள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை ரோடு. ரத்னா கஃபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை. ஆர்.கே.சாலை. வி.எம். தெரு, மந்தைவெளி. மயிலாப்பூர் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
4. இதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி RA புரம் 2வது பிரதான சாலை TTK சாலை RK சாலை அண்ணாசாலையை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
5. வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை. ஆர்.கே.சாலை. கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் 7 மணி முதல் 4 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் 17-ந்தேதி நடக்கிறது.
- திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன் ஆகியோரும் பேசுகிறார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் போற்றி வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்திட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமான அ.தி.மு.க. வருகிற 17-ந்தேதி 53-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
எனவே அன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை 4 நாட்கள் அ.தி.மு.க. 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும்; 17-ந்தேதி ஆங்காங்கே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கியும்; ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அ.தி.மு.க. 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் 17-ந்தேதி நடக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இதேபோல், திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எம்.புத்திசந்திரன் ஆகியோரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன் ஆகியோரும் பேசுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க போதிய அலுவவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆயுதபூஜை, விஜயதசமி உள்பட தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கடுவதாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 09/10/2024 மற்றும் 10/10/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிசாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 09/10/2024 (புதன்கிழமை) அன்று 225 பேருந்துகளும், 10/10/2024 (வியாழக்கிழமை) அன்று 880 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 09/10/2024 புதன்கிழமை அன்று 35 பேருத்துகளும் 10/10/2024 வியாழக்கிழமை) அன்று 265 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதாரைத்திலிருந்து 09/10/204 மற்றும் 10/10/2024 ஆகிய நாட்களுக்கு 110 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார புதன் கிழமை அன்று 6,582 பயணிகளும் வியாழக்கிழமை அன்று 22.236 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 21,311 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும். பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சென்னை முழுவதும் காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- 24 பேரை பணியிடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை முழுவதும் 24 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காவல் ஆய்வாளர்கள் 24 பேரை பணியிடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, காவல் ஆய்வாளர் எஸ்.புவனேஸ்வரி என்2 காசிமேட்டு காவல் நிலையத்தில் இருந்து கிண்டிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், காவல் ஆய்வாளர் ஆர்.ரஞ்ஜித் குமார்- மாம்பலம், எஸ், விவேகானந்தன் - தண்டையார்பேட்டை, முகமது புஹாரி- திருவான்மியூர், மணிவண்ணன்- மெரினா, அரோக்கிய மேரி- குற்றப் பதிவுப் பணியகம், ஆனந்தன்- அயனாவரம், அம்பேத்கர்- புலியந்தோப்பு, ஆனந்தபாபு- திருவொற்றியூர், வீரம்மால்- சவுந்தரபாண்டியனார் அங்காரி ஆகிய இடத்திற்கு மாற்ம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல் ஆய்வாளர் அருள் ராஜ்- மதுரவாயல், வசந்த ராஜா- காசிமேடு, ஞான சித்ரா- சிசிபி, ஸ்ரீநிவாசன்- கீழ்பாக்கம், கண்ணன்- கொருக்குபேட், கருணாகரன்- நுங்கம்பாக்கம், கே.எஸ்.ராஜா ஜேஜே நகர், ஜெயபிரகாஷ்- ஓட்டேரி, ஹரிஹரன்- பூக்கடை, ஜானி செல்லப்பா- மாதாவரம், ரெஜினா- விருகம்பாக்கம், பிரசித் தீபா- புழல், செல்வகுமாரி- வளசரவாக்கம், ஸ்ரீ ஜெயலாலி- எம்கேபி நகர் ஆகிய இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

- சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார்.
- ஹே மின்னலே பாடல் ஜி.வி. பிரகாஷின் 700-வது பாடலாக இது உருவாகியுள்ளது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் நிறுவனமான ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார்.
புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'ஹே மின்னலே' பாடல் இன்று வெளியாகியுள்ளது. இப்பாடல் ஜி.வி. பிரகாஷின் 700-வது பாடலாக இது உருவாகியுள்ளது.
இப்பாடலை கார்த்திக் நேதா வரிகளில் ஷ்வேதா மோகன் மற்றும் ஹரிச்சரண் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
- கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- பொது மக்கள் வசதிக்காக 75 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட இருக்கிறது.
இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு வருகிற 06 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று, சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், விமானப்படை சாகச நிகழ்ச்சிகளை காண வரும் பொதுமக்கள் நலன் கருதி, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக காலை 8:00 மணி முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு 120 பேருந்துகள் இயக்கப்படும். எனினும், வருகிற ஞாயிற்றுக் கிழமை விமானப்படை சாகச நிகழ்ச்சியை ஒட்டி, பொது மக்கள் வசதிக்காக 75 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட இருக்கிறது.
இதேபோன்று அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 25 சிற்றுந்துகளும் இயக்கப்பட உள்ளது. அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சென்னை பல்கலைக்கழகம் வரை 3 நிமிட இடைவெளியில் சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுதவிர, டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வி.எம். தெரு வரை 2 நிமிட இடைவெளியில் மொத்தம் 25 சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






