என் மலர்
நீங்கள் தேடியது "ஒற்றை காட்டு யானை"
- சாலையோரங்களில் யானையை கண்டால் இறங்கி அதனை தனியாக விரட்டும் பணியில் ஈடுபடக்கூடாது.
- யானையை துன்புறுத்தும் செயல்களிலும் ஈடுபட வேண்டாம்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள், மான், காட்டு மாடு, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதுடன் மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
அதிலும் குறிப்பாக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை சிறுமுகை வனச்சரகத்துக்கு இடையே அமைந்து உள்ளதால், வனவிலங்குகள் இந்த ரோட்டை கடந்து வனத்தின் மறுபுறம் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலைகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி சாலையில் உள்ள முதல் வளைவு அருகே, ஒற்றை காட்டு யானை சாலையோரம் உலா வந்தது.
இதனை கண்ட வாகனஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு வனத்துறைக்கு தகவலளித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை வனத்துக்குள் விரட்ட முயன்றனர்.
இருப்பினும் அந்த யானை 2-வது வளைவு அருகே சென்று நீண்ட நேரம் சுற்றி திரிந்தது. பின்னர் வனத்துறையின் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் வாகனஓட்டிகள் நிம்மதி அடைந்து, தங்களின் வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:-
கோத்தகிரி சாலையில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது. எனவே கோத்தகிரி சாலை வழியாக செல்லும் வாகனஓட்டிகள் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் வாகனங்களை இயக்க வேண்டும்.
சாலையோரங்களில் யானையை கண்டால் இறங்கி அதனை தனியாக விரட்டும் பணியில் ஈடுபடக்கூடாது. அதேபோல யானை அருகே சென்று செல்பி எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ முயற்சி செய்யக்கூடாது. மேலும் யானையை துன்புறுத்தும் செயல்களிலும் ஈடுபட வேண்டாம். மீறினால் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஊருக்குள் சுற்றித்திரியும் யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- விடிய, விடிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அடுத்த கோரஞ்சல் பகுதி உள்ளது. கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது.
அவ்வப்போது ஊருக்குள் சுற்றித்திரியும் யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பவத்தன்று மாலை வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை யானை கோரஞ்சல் பகுதிக்குள் புகுந்தது.
யானை வந்ததை அறிந்ததும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வன ஊழியர்கள், வன காப்பாளர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் அங்கு முகாமிட்டிருந்த யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நாய் ஒன்றும் யானையை பார்த்து குரைத்து கொண்டே இருந்தது. பதிலுக்கு யானையும் நாயை நோக்கி துரத்தி வந்தது.
இதையடுத்து வனத்துறையினர் யானையை ஊருக்குள் வரவிடமால் வனத்தை நோக்கி விரட்டினர். அப்போது ஆக்ரோஷமான காட்டு யானை, வன ஊழியர்களை நோக்கி வேகமாக வந்தது.
யானை ஆக்ரோஷத்துடன் வருவதை பார்த்ததும் வன ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் யானை விடாமல் அவர்களை விரட்டியபடி ஓடி வந்தது.
மற்றவர்கள் வேகமாக ஓடிய நிலையில், ஒரு வன ஊழியரின் அருகில் காட்டு யானை வந்தது. அவர் சுதாரித்து அங்கிருந்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தார்.
ஆக்ரோஷம் குறைந்ததும் யானை அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டது. யானை எங்கு சென்றது. எங்கு நிற்கிறது என்பதை வனத்துறையினர் கண்காணித்தனர். தொடர்ந்து இரவு முழுவதும் அந்த பகுதிக்குள் யானை நுழைந்து விடாமல் விடிய, விடிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
வன ஊழியர்களை ஆக்ரோஷத்துடன் காட்டு யானை துரத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- காரின் கதவை திறந்து அங்கிருந்து ஓடியதால் டிரைவர் உயிர் தப்பினார்
- உயிர் சேதம் ஏற்படும் முன்பே யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
இதில் ஒற்றை யானை ஒன்று அவ்வப்போது சாலைக்கு வந்து, வாகன ஓட்டிகளை துரத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்போது வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை அந்த சாலையில் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.
யானை நிற்பதை பார்த்ததும் காரை ஓட்டி வந்தவர், காரை சிறிது தொலைவிலேயே நிறுத்தி விட்டார்.சாலையில் சுற்றி திரிந்த யானை மிகவும் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது.
திடீரென அந்த யானை, காரை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான காரின் டிரைவர், காரின் கதவை திறந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
காரின் அருகே வந்த யானை ஆக்ரோஷமாக, காரை அடித்து நொறுக்கியது. மேலும் காரை அப்படியே அலேக்காக தூக்கி நடுரோட்டில் வீசியது.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள் பார்த்து அச்சத்தில் உறைந்து போயினர்.
20 நிமிடத்திற்கும் மேலாக அந்த இடத்தை விட்டு நகராமல் யானை அங்கேயே நின்றபடி காரை சேதப்படுத்தியது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த ஆண்டு சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் அதிக அளவில் இடம்பெயர்ந்து உணவு தேடி மலை பாதைக்கு வருவதால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
குறிப்பாக ஒற்றை யானையின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. எனவே உயிர் சேதம் ஏற்படும் முன்பே காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
- டிரைவர் காரை ஓரமாக ஓட்டிச்சென்று அங்கிருந்து தப்பித்தார்.
- இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் நேரங்களில் அதிகப்படியான வெயிலின் தாக்கம் நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதிகள் உள்ள மரம் செடி கொடிகள் காய்ந்து வறட்சி நிலவி வருவதால் வனப்பகுதிகளில் உள்ள வன விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி சாலை பகுதிகளில் அவ்வப்போது உலா வருகிறது.
இதில் நேற்று மாலை கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை காட்டு யானை அந்த காரை வழி மறித்து தாக்க முயன்றது. சுதாரித்து கொண்ட காரின் டிரைவர் காரை சாலையின் ஓரத்தில் நிறுத்த முற்பட்டார். அப்போது பின்னால் வந்த மற்ற வாகன ஓட்டிகள் கூச்சலிடவே அந்த யானை அவர்களை பார்க்கும் நேரத்தில், டிரைவர் காரை ஓரமாக ஓட்டிச்சென்று அங்கிருந்து தப்பித்தார்.
சிறிது நேரம் அங்கு நின்றிருந்த அந்த யானை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனால் மலைப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் சுற்றி திரிந்து வருகின்றன.
- அரசு பஸ் மற்றும் லாரி, அதனை தொடர்ந்து மற்ற வாகனங்கள் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள், புலி, சிறுத்தை, மான், காட்டெ ருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் சுற்றி திரிந்து வருகின்றன. சில நேரங்களில் வாகனத்தை மறித்தும் வருகிறது.
இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் தட்டப்பள்ளம் பகுதியில் வழக்கம் போல் ஏராளமான வாகனங்கள் வந்து கொண்டிருந்தன.
அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று சாலையை நோக்கி வேகமாக வந்தது. சாலையின் நடுவே நின்று கொண்ட காட்டுயானை அந்த வழியாக வந்த அரசு பஸ் மற்றும் வாகனங்களை மறித்தது.
இதனால் அரசு பஸ் மற்றும் லாரி, அதனை தொடர்ந்து மற்ற வாகனங்கள் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
யானை நின்றதை பார்த்ததும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். ஒரு சில வாகன ஓட்டிகள் தாங்கள் வந்த வழியே செல்ல முற்பட்டனர். அப்போது சிலர் அலாரம் எழுப்பியதால் மிரண்டு போன காட்டு யானை திடீரென பஸ்சின் அருகே வந்து பஸ்சின் முன் கண்ணாடியை உடைத்தது. மேலும் லாரி மற்றும் கார் கண்ணாடிகளையும் உடைத்து எறிந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.
இதனால் பஸ்சில் இருந்து பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பயத்தில் உறைந்து போயினர். சற்று நேரம் அங்கேயே சுற்றிய யானை காட்டுப்பகுதிக்குள் சென்றது. யானை சென்ற பின்னரே வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை அங்கிருந்து வேகமாக இயக்கி சென்றனர். இதனால் இப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.